Pages

Search This Blog

Wednesday, September 15, 2010

அண்ணா வாழ்க!

அறிஞர் அண்ணாவின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று. அவர் வாழ்ந்த காலம் குறைவானதாக இருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் காலத்தைக் கடந்து நிற்கக் கூடியவை.
தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் ஒளி வாங்கிய நிறைமதியாக வாழ்ந்தவர் அவர். அவர் கற்றதையும், அறிந்ததையும், ஆற்றலையும், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களின் தத்துவச் சீலங்களை மக்கள் மத்தியில் - குறிப்பாக இளையோர் மத்தியில் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தினார் - அதில் பெரும் வெற்றியையும் கண்டார்.
அவர் அரசியலுக்குச் சென்றிருக்கலாம் - ஆட்சியையும் பிடித்திருக்கலாம்; ஆனாலும், அவர் வசந்தம் என்று கருதியது - களித்தது - தந்தை பெரியார் அவர்களுடன் காடு மேடுகளில் சுற்றிப் பயணம் செய்த அந்தப் பகுத்தறிவு - சுயமரியாதைப் பணி காலகட்டத்தைத்தான்.
மெத்த படித்த அறிஞர்கள் எல்லாம் அவருடன் கருத்து வகையில் மோதிப் பார்த்தனர். நாவலர் சோமசுந்தர பாரதியாரும், சொல்லின் செல்வன் ரா.பி. சேதுப்பிள்ளையும் - அண்ணாவிடம் வாதாடிப் பார்த்தனர் - கம்பராமாய ணத்தையும், பெரிய புராணத்தையும் கொளுத்துவதா - கூடாதா என்ற பொருள்பற்றி. அதில் அண்ணாவின் அறிவார்ந்த கருத்துகளும், எடுத்துக்காட்டுகளும்தான் மேலோங்கி வென்றன.
தன்மான இயக்கம் - திராவிடர் இயக்கத்தின் அறி வார்ந்த பணியால், மத நம்பிக்கையாளர்களும், பக்தி மார் கத்தாரும் கடவுள், மதம் சார்ந்த கருத்துகளை முன் வைத்துக் காப்பாற்ற வக்கின்றி, அவற்றிற்கு விஞ்ஞான ரீதியான வியாக்கியானங்களைக் கற்பிக்கவேண்டிய நிர்பந் தத்துக்குத் தள்ளப்பட்டனர் - ஆனாலும், அறிவாயுதத்தின் முன் அவற்றால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அய்யா என்ற வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக அண்ணா விளங்கினார். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ் கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக் சாண்டர் இவர்கள் எல்லாம் ஆயுத பூஜை செய்தவர்கள் அல்லர். நவராத்திரி கொண்டாடியவர்கள் அல்லர். நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூஜை, ஆயுத பூஜை இல்லை.
ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? மேனாட்டான் கண்டுபிடித்த அரசு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து மகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே என்ற அண்ணாவின் எழுத்தில் நையாண்டியும், கேலியும் இழைய படிப்பவர்களின் மூளைப் பகுதியையும் அதேநேரத்தில் சுத்திகரிக்கும் வேலையையல்லவா செய்தது - செய்கிறது!
18 ஆண்டுகள் தமது ஒரே தலைவரைப் பிரிந்திருந் தாலும் அரசியலில் புகுந்து ஆட்சியைப் பிடித்த நேரத்தில், அவர் மனக்கண்முன் ஒளிவிட்ட உருவம் தந்தை பெரியார் தானே! அவர் உடலால் பிரிந்திருந்தாலும், அவர்தம் இதயத்தில் மிகவும் அழுத்தமாகப் பதிந்திருந்த தலைவர் தந்தை பெரியார்தான் என்பதற்கு இதுதான் அடையாளம்.
ஆட்சிக்குச் சென்றாலும், அவசர அவசரமாக அவர் இயற்றிய சட்டங்கள் - பிற்பித்த ஆணைகள் - அவர் அய்யா வின் தலைசிறந்த மாணாக்கர் என்பதை நிரூபித்ததே! அரசு அலுவலகங்களில் மதச் சின்னங்கள் - கடவுள் படங்கள் நீக்கம் - சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம் - சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் - தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை - இருமொழி மட்டுமே என்ற சட்டம் உருவாக்கம் இவை யெல்லாம் எதைக் காட்டுகின்றன? அரசியலிலும் அய்யாவின் சிந்தனைகள்தான் அவரை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன என்பதைத்தானே காட்டுகின்றன.
அண்ணாவுக்குக் கிடைத்த பெருமையெல்லாம் எனக்குக் கிடைத்த பெருமை என்று தந்தை பெரியார் சொன்னதும், நான் கண்ட கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று அண்ணா சொன்னதும், திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எப்பொழுதும் கவனத்தில் பதித்துக் கொள்ளவேண்டிய வைகளாகும்.
அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசால் பன்னாட்டுத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மிகவும் பொருத்தமான நினைவுச் சின்னம் ஆகும்.
இதன்மூலம் அண்ணா பெருமை பெறுகிறார் என்பதைவிட, அண்ணாவுக்கு மிகப் பொருத்தமான இந்த அறிவார்ந்த பெருமைமிகு சின்னத்தை எழுப்பிய தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் கலைஞர் அவர்களும், கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களும் பெருமை பெறுவார்கள் என்பதில் அய்யமில்லை.
ஒரே நேரத்தில் 1200 பேர்கள் படிக்கக் கூடிய நூலகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.172 கோடி மதிப்பீட்டில், எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்பது தளங்களைக் கொண்ட நூலக உலகமாக ஒளிவீசுகிறது - 12 லட்சம் நூல்கள் இடம்பெறப் போகின்றன.
தமிழ்நாடு பெருமையாகப் பேசப்படும் அம்சங்களில் கோட்டூர்புரம் அண்ணா நூலகம் முக்கிய இடம்பெறும் என்பதில் அய்யமில்லை.
ஒரு நூலைப் படித்து முடிப்பதற்காக தனக்கு நடக்க விருந்த முக்கிய அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாமா என்று மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்ட புத்தகத் தேனீ - பிரியர் அறிஞர் அண்ணா அவர்களுக்குச் சிறப்பு வாய்ந்த ஒரு நூலகத்தைவிட வேறு எது பெருமைக்குரிய - பொருத்தமான நினைவுச் சின்னமாக இருக்க முடியும்?
இளைஞர்களே, கண்ட விஷயங்களில் எல்லாம் காலத்தைக் கரியாக்குவதற்குப் பதிலாக, அறிவுத் தேடுதலில் உங்களின் விலை மதிக்க முடியாத காலத்தைச் செலவழியுங்கள் என்று அண்ணாவின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாளில் கேட்டுக்கொள்கிறோம்!
வாழ்க அண்ணா!

No comments:


weather counter Site Meter