தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம்
சீர்காழியில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கப்பட்டது. உடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழக முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர் (சீர்காழி, 27.9.2010).
சீர்காழி மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் அளிக்கப்பட்டது. தராசில் தமிழர் தலைவர் அமர்வதற்குமுன் மாநாட்டு வரவேற்புக் குழுவினரும், பல்துறையைச் சேர்ந்த பொதுமக்களும் சால்வை போர்த்தி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். தராசின் ஒரு தட்டில் தமிழர் தலைவர் அமர, மறுதட்டில் ரூபாய் நாணயங்கள் கொட்டப்பட்டன. சம அளவு வந்தபோது, தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! என்று பொதுமக்கள் முழக்கமிட்டனர். அதன் தொகை ரூபாய் 15 ஆயிரம் ஆகும். திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு இத்தொகை அளிக்கப்படும் என்று, மாநாட்டில் கழகத் தலைவர் அறிவித்தார்.
மாலை 5 மணிக்கு சீர்காழி தென்பாதியி லிருந்து மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி - மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் மு. நடராசன் தலைமை யிலும், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், கழகப் பொதுக் குழு உறுப்பினர் வீ. மோகன் ஆகியோர் முன்னிலையிலும் புறப்பட்டது.
புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை சாலை, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக மாநாடு நடை பெற்ற பழைய பேருந்து நிலையத்தை வந் தடைந்தது. பேரணி தொடங்கப்பட்ட இடத் திலும், பேரணி அணிவகுத்து வந்த பாதை களின் இருபுறத்திலும் ஏராளமான பொது மக்கள் கூடிநின்று, பேரணியில் இடம்பெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
மூட நம்பிக்கைகளைச் சுட்டு எரிக்கும் முழக்கங்களைக் கழகத் தோழர்கள் வழி நெடுக ஒலித்து வந்தனர்.
அலகு குத்தி கார் இழுத்தல்
சாமி சக்தியால்தான் முதுகில் அலகு குத்தி கார் இழுக்க முடியும் என்ற மூட நம்பிக்கையின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் கழகத் தோழர்கள் திருக்குவளை கவியரசன் (திருவாரூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர்), தஞ்சைத் தோழர்கள் தேவா, ராஜா ஆகியோர் முதுகில் அலகு குத்தி கடவுள் மறுப்பு வாசகங்களை முழங்கிய வண்ணம் அம்பாசிடர் காரை இழுத்து வந்த காட்சியைக் கண்டு பொது மக்கள் அதிசயப்பட்டனர்.
அலகுக்காவடி
ஜெயங்கொண்டம் பெரியார் பெருந் தொண்டர் கே.பி. கலியமூர்த்தி, உரத்தநாடு வினோத், கண்கொடுத்தவனிதம் செந்தில் குமார், தஞ்சை ராஜேஷ் ஆகியோர் அலகுக் காவடி எடுத்து, மூட நம்பிக்கை ஒழிப்பு கருத்துகளை முழங்கி வந்தனர்.
அரிவாள்மீது ஏறி நின்று அசத்தல்!
கரம்பக்குடி தோழர் முத்து சில்லத்தூர் சிற்றரசு குழுவினர், பளபளக்கும் கூரிய அரிவாள்மீது ஏறி நின்று, கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று ஓங்கி ஒலித்தனர்.
திருவாரூர் மாவட்ட கழக மகளிர் பாசறை அமைப்பாளர் சி. செந்தமிழ்ச்செல்வி தலைமை யில் மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்தனர். தீச்சட்டி இங்கே - மாரியாத்தாள் எங்கே என்று அவர்கள் முழக்கமிட்டு வந்த காட்சியை பெண்கள் பார்த்து வியந்தனர். தோழியர்கள் சரசுவதி, சைனம்பூ, சூரனூர் அஞ்சம்மாள், சூரனூர் இராசாங்கம் ஆகியோர் தீச்சட்டி ஏந்தி வந்தனர்.
திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், மாநில மாணவரணி செயலாளர் ரெ.ரஞ்சித் குமார், தோழர்கள் திராவிட எழில், சாமி. அரசிளங்கோ, பர்தீன், ராஜேஷ் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து வழிநடத்தி வந்தனர்.கட்டுக்கோப்போடு போக்குவரத்திற்கு இடையூறின்றி இருவர் இருவராக அணி வகுத்து தலைமைக் கழகம் அளித்த கொள்கை முழக்கங்களை பூமியதிர முழங்கி வந்த நேர்த்தியைக் கண்டு பொதுமக்கள் பாராட் டினர்; இளைஞர்கள் எழுச்சி பெற்றனர்.
சீர்காழியில் திராவிடர் கழக மண்டல மாநாட்டில் நடைபெற்ற மாபெரும்
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி காட்சிகள் (27.9.2010)
மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி காட்சிகள் (27.9.2010)
சீர்காழியில் நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்க திரண்டிருந்தோர் (27.9.2010)
விடுதலை :28/09/2010
http://www.viduthalai.periyar.org.in/20100928/news26.html
No comments:
Post a Comment