
முதல்வர் கருணாநிதியின் யோசனைப்படி மாணவர்கள் , ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறார்கள், முதியோர், பொது மக்கள் என சமுகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய வகையில்அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 180 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம் உள்பட மொத்தம் 9 தளங்களில் மொத்தம் 3.8 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் உருவாகியுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 5,000 பேர் படிக்கலாம்.
கீழ்த்திசை நூலகத்தில் அரிய ஓலைச் சுவடிகள் முதல் ஆன்லைன் புத்தகங்கள் (இ-புக்ஸ்), பத்திரிகைகள் வரை சுமார் 12 லட்சம் புத்தகங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
மாற்றுத் திறனாளிகள் (பார்வைத் திறன் இல்லாதவர்கள்), சிறுவர்களுக்கான பிரிவுகள் சிறப்பு கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் மரத்தின் கீழ் அமர்ந்து படிக்கும் வகையில் செயற்கை மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் ஆன்லைன் மூலம் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சிறுவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறிய மேடையும், அவர்கள் விளையாடுவதற்காக பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன.
சுவர்களில் கார்ட்டூன் ஓவியங்களும் இடம் பெறவுள்ளன.
பார்வைத்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்காக பிரெய்லி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ புத்தகங்கள், பேசும் புத்தகங்கள் ஆகியவை இடம் பெறும்.
நூலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கென கழிப்பறை வசதிகள், ரேம்ப் மற்றும் லிப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 1,200 பேர் அமரும் அரங்கமும், 800 பேர் அமரக் கூடிய திறந்தவெளி அரங்கமும் இடம் பெற்றுள்ளது. இங்கு இலக்கிய நிகழ்ச்சிகள், நாடகங்கள், புத்தக வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தலாம்.
இது தவிர 150 பேர் அமரும் மாநாட்டு அரங்கமும் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த நூலகத்தில் வெளியிலிருந்து புத்தகங்களைக் கொண்டு வந்து படிக்கவும் வசதிகள் உண்டு.
இந்த நூலகத்தை முதல்வர் கருணாநிதி இன்று மாலை திறந்து வைக்கிறார்.http://thatstamil.oneindia.in/news/2010/09/15/rs-180-cr-anna-centenary-memorial-library.html
No comments:
Post a Comment