திருச்சிராப்பள்ளி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழக வளாகத்தில் 750 மாணவர்கள் தங்கும் விடுதிகளில் (ஹாஸ்டல்) உள்ளனர்.
சில நாள்களுக்குமுன் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை 2 ஆம் ஆண்டு மாணவர் கேலி (ராகிங்) செய்துள்ளார். இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டு இரு பிரிவாகப் பிரிந்து மோதல் நிலை உருவானது. அறையின் கதவுகள் உடைக்கப்பட்டன; இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் 48 மாணவர்கள் துணைவேந்தரால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திலும் மாணவி ஒருவர் கேலி செய்யப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்துகொண்டதாக சில நாள்களுக்கு முன் சேதி வெளிவந்தது. (துணைவேந்தர் இதனை மறுத்துள்ளார்).
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வது எதற்காக? கீழ்த்தரமான அருவருக்கத்தக்க வகையில், எல்லை கடந்து சக மாணவர்களைக் கேலி என்ற பெயரால் துன்புறுத்துவதுதானா?
பெற்றோர்கள் அரும்பாடுபட்டு கடன் வாங்கிக்கூட தங்கள் பிள்ளைகளுக்குப் பணம் அனுப்பி வைக்கின் றனர். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மாண வர்கள் இவ்வாறு நடந்துகொள்வது தலைகுனியத் தக்கதும், வெட்கக்கேடும் ஆகும்.
நம் நாட்டின் கல்வி நிலை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதும் வருந்தத்தக்கதாகும். வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்சாகக் கல்வியிருக் கிறதே தவிர, ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற் றுக் கொடுப்பதற்காக அல்ல; நம் நாட்டுக் கல்வி முறை யில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும்.
தேர்வு நேரத்தில் படித்தால் போதும் - வெற்றி பெற்றுவிடலாம்; மற்ற நேரங்களில் கண்ட மாதிரி சுற்றித் திரியலாம். பொழுது போக்கலாம் என்ற நிலை இருந்துவிடக் கூடாது.
முழு நேரமும் கல்வியில் கவனம் செலுத்தும் அளவுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தால்தான் அவர்கள் சரிபட்டு வருவார்கள் போலத் தோன்றுகிறது. மாணவர்கள் விளையாட்டு மைதானத்திற்குப் போக வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.
மாணவர்களின் சுற்றுச் சார்பும் ஆரோக்கியமான தாக இல்லை. சின்னத்திரை, பெரிய திரை, ஏடுகள், இதழ்கள் முதலிய ஊடகங்கள் நன்னெறி காட்டுவன வாக அமையவில்லை.
மாணவர்கள் ஆசிரியைகளைக் கேலி செய்வது, மாணவன் ஆசிரியையைக் காதலிப்பது, மாணவி ஆசிரியரைக் காதலிப்பது, கல்யாணம் செய்துகொள் வது, சக மாணவிகளைச் சீட்டியடித்துக் கூப்பிடுவது, இரு அர்த்தமுள்ள பாடல்களைப் பாடுவது என்பன வெல்லாம் சினிமா ஊக்குவிக்கும் ஊட்டச் சரக்கு களாக இருக்கின்றனவே.
இதழ்கள் மட்டும் என்ன வாழ்கிறது? அட்டைப் படங்கள் எல்லாம் அரைகுறை உடையுடன் கூடிய சினிமா நட்சத்திரங்கள்தானே! உள் பக்கங்களிலும் சினிமா தொடர்பான மசாலாக் கொத்துகள்தானே!
சினிமா நடிகர், நடிகை என்றால் அகில உலக அறிவாளிகள் போலவும், சிந்தனையாளர்கள் போலவும், புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் போலவும் நினைத்து, அவர்களின் அந்தரங்க வாழ்வு பற்றி பேட்டி கண்டு பக்கம் பக்கமாகப் போட்டு இடத்தை நிரப்பினால் அதன் விளைவு பருவ வயதினரைத் தடுமாறத் தானே செய்விக்கும்?
கேலி செய்தால் தண்டனை உண்டு என்பதுபற்றி நல்ல வகையில் விளம்பரம் செய்யப்படவேண்டும்.
கேலியைக் கேலி செய்யும் வண்ணமும், விழிப் புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும் தொலைக்காட்சி களில் விளம்பரம் செய்துகொண்டே இருக்கவேண்டும்.
திரைப்படங்களிலும், சின்னத் திரைகளிலும் கேலி செய்யும் காட்சிகள் தடை செய்யப்படவேண்டும். புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் அன்புடன் வரவேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண்டும்.
விடுதிகளில் மேற்பார்வை என்பது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கவேண்டும். சில ஆண்டுகள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை கடுமை யாக மேற்கொண்டால், நாளடைவில் தானாகவே இந்த நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய்விடும்.
கல்லூரிகளில், விடுதிகளில் நடக்கும் குறைபாடு களைத் தெரிவிப்பதற்கு புகார்ப் பெட்டிகளை வைக் கலாம்! அவற்றை உடனுக்குடன் பரிசீலித்துத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
மனிதனின் கல்வி நாகரிகத்தை வளர்ப்பதாகவும், ஊக்குவிப்பதாகவும் அமையவேண்டுமே தவிர, அநாகரிகத்தை நோக்கி உசுப்பித் தள்ளுவதாக இருக்கக் கூடாது. திருச்சி - அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கதே
1 comment:
தங்கள் பதிவுகளுக்குப் பதில்,கேள்வி என்று கும்மாளம் அடிக்கும் கும்பல் பெரியாரின் "பெண் ஏன் அடிமையாணாள்" என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.அந்தக் கும்பலின் கேள்விகளுக்கு அருமையாகப் பதில் சொல்லியிருக்கின்றார்.ஒவ்வொரு பெண்ணும் ,ஆணும் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.பெண் விடுதலையென்பது அவர்கள் கல்வியில் பெண்கள் முன்னேறி,பொருளாதாரத்தில் விடுதலை பெற்று,ஆண்களின் அடிமைத் தளையிலிருந்து விடு பட்டு ஆணும் பெண்ணும் நண்பர்களாக,சம் உரிமையுடன் வாழ்வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.பெண் பொருளாதாரத்திலெ உயர்ந்த நிலையில்,அவர்கள் அவர்ர்களுக்குப் பிடித்த நண்பர்களுடன் வாழ்வது சமூகத்திற்குப் பிடிக்காவிட்டாலும் நடந்து கொண்டுதான் உள்ளது.வாழ்க்கைத் துணை நலம் என்று அவர் சொல்வதே துணைவர்களாக இருக்க வேண்டும்.இருவருக்கும் சம உரிமை வேண்டும். என்பது தான்.பிடித்தால் சேர்ந்துவாழ்,பிடிக்காவிட்டால் உங்கள் அறிவுக்கு உகந்ததைச் செய்து கொள்.சமுதாயம் அந்த அளவுக்கு மாறிவருவதும் இன்று கண் முன்னே காணக்கூடியது தான்.கல்லென்றாலும் கணவன்,புல்லென்றாலும் புருஷன் என்பதெல்லாம் மலையேறி விட்டது.
Post a Comment