Pages

Search This Blog

Monday, September 20, 2010

மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு வேண்டு மானாலும் மன்னிக்கலாம். ஆனால், அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும் அது மன்னிக்க முடியாததேயாகும்

அறிவியல் கண்டுபிடித்த சாதனங்களைப் பயன் படுத்தி - அறிவியலுக்கு விரோதமான மூடச் சரக்குகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். தொலைக்காட்சியோ, அச்சு இயந்திரங்களோ எந்த ஆண்டவன் சக்தியாலும் கொடுக்கப்பட்டவையல்ல.
விஞ்ஞானிகளின் கடும் உழைப்பாலும், தோல்வி களைக் கண்டு துவண்டுவிடாமல் மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகளினாலும் கண்டுபிடிக்கப்பட்டவை.
இன்னும் சொல்லப்போனால், பல அறிவியல் கண்டுபிடிப்புகள், மதவாதிகளின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தே வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? விஞ்ஞானத் தைப் பயன்படுத்தி அஞ்ஞான அழுக்கு மூட்டைகளை, மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஒவ்வொரு நொடியும் பரப்பி வருகிறார்கள். இதனைவிட அறிவு நாணயமற்ற செயல் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.
இதுகுறித்து தந்தை பெரியார் கூறும் கருத்து மிகவும் முக்கியமானவை.
மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு வேண்டு மானாலும் மன்னிக்கலாம். ஆனால், அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும் அது மன்னிக்க முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வதென்னவென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாய் ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள்ளுகிறேன் (விடுதலை, 4.4.1968) என்று கூறுகின்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இன்னும் ஒருபடி மேலே சென்று நான் ஒரு நிமிடம் அரசனாகவிருந்தால் அறிவை நாசப்படுத்துவோருக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
காரணம், மனிதனிடம் இருக்கும் மூளை அபார மானது. அதுதான் அறிவியல் கருவிகளைக் கண்டு பிடித்து மனித வாழ்வில் பெரும் மாற்றங்களை அளித்து வருகிறது.
கணினி உலகம் என்று சொல்லுகிறார்கள். அதனைக் கண்டுபிடித்ததும் மனித மூளைதானே! அத்தகு ஆற்றல்வாய்ந்த மூளை மனிதர்களிடத்தில் இருந்தாலும், கடவுள், மதம், சாத்திரங்களின் காரணமாக அதன் செயல் முடக்கப்படுகிறது - விலங்கிடப்படுகிறது என்றால், அது எவ்வளவுப் பெரிய அபாயகரமான குற்றச்செயல்! அதனால் அத்தகைய வர்க்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்று கூறுகிறார்.
மூட நம்பிக்கைகளை விஞ்ஞான ரீதியாகத் திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், பகுத்தறிவுவாதிகள், அறிவியல்வாதி களாகிய நமக்கு அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி அவற்றை முறியடிக்கும் மகத்தான கடமை இருக்கிறது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் இத்திசையில் பல ஆக்க ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தேவைப்படும் புது முயற்சிகளிலும் ஈடுபட்டும் வருகிறது.
விடுதலை 8 பக்கங்களாக ஆக்கப்பட்டு, திருச்சி யிலும், மற்றொரு பதிப்புக் கொண்டு வரப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ற தன்மையுடன் நவீன கருவிகளைப் பயன்படுத்தி அச்சிடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலே இணைய தளத்தில் வெளிவந்த முதல் ஏடு விடுதலைதான் - பெரியார் வலைக்காட்சி, பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தொடங்கப்பட்டுச் சிறப்பாக இயங்கி வருகின்றன.
இவ்வாண்டு தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளில் இத்திசையில் மேலும் இரண்டு அறிவியல் சாதன அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பெரியார் பண்பலை (பெரியார் எஃப்.எம்.) இந்த இணையதளத்தின் மூலமாக 24 மணிநேரமும் தந்தை பெரியார் கருத்துகளை ஒலி வடிவில் (சவுண்ட்) பரப்பும் பண்பலை வானொலி இதுவாகும். இதன் இணைய தள முகவரி www.periyar.fm என்பதாகும்.
தந்தை பெரியார் அவர்களின் உரைகள், பகுத் தறிவுப் பாடல்கள், திராவிடர் இயக்க வரலாறு, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் போன்றவை 24 மணிநேரமும் ஒலிபரப்பப்படும்.
அதேபோல, விடுதலை இணைய தளப் பதிப்பு என்பது இதுவரை விடுதலை நாளேட்டில் வருபவை மட்டும் இடம்பெற்றிருந்தது. இப்பொழுது தொடங்கப்படும் விடுதலை-இன் (viduthalai.in) எனும் இப்புதிய தளம் உடனுக்குடன் செய்திகளை வழங்கும் இணைய தளமாக இயங்கும்.
இதன் முகவரி www.viduthalai.in என்பதாகும்.
இவற்றின் தொடர்ச்சியாக பெரியார் தொலைக் காட்சி நிறுவுவது என்பதே நமது விழுமிய குறிக் கோளாகும். இவ்வாண்டு தந்தை பெரியார் விடுதலை மலரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா செய்தியாக இதனைக் குறிப்பிட்டுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். அந்தப் பெரிய அரிய அவசியத் தேவையான முயற்சிக்குக் கட்சிகளைக் கடந்து தமிழர்கள் உதவிக் கரத்தை நீட்டவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
http://www.viduthalai.periyar.org.in/20100920/news08.html

No comments:


weather counter Site Meter