Pages

Search This Blog

Saturday, September 18, 2010

மரணத்தின் இரகசியம்? தந்தை பெரியார்

இயற்கை யெய்துதல் என்கிறதின் தத்துவம், அதாவது மனிதனின் அவயவங்கள் தத்தமது வேலை-களைச் செய்யும் சக்தியை இழப்பதோடு, மனிதனின் காற்றை உள்ளே வாங்கி, வெளியேவிடக்கூடிய காற்று வாங்கிப் பொறியின் இயக்கம் நின்று போய் விடுகிறபோது தான் மனிதன் இயற்கை யெய்தினான் அல்லது முடிவெய்தினான் செத்துப்போய் விட்டான் என்று சொல்லப்படுகிறது.
இது மனிதனுக்கு மட்டுமல்லாமல் மிருகங்கள் முதல் புழு, பூச்சி, கிருமி, புல், பூண்டு, தாவரங்கள் முதலியன-வின் தன்மையும் இந்தப்படியேதான் இருக்கின்றன. என்னவெனில், இயற்கை-யெய்துதல் என்பதின் பொது விதியாக இருக்கின்றது. இயற்கை எய்துதல் என்பதன் பொருள் என்னவென்றால், காணப்படும் பொருள், ஜீவன் உள்பட எல்லாமே தோன்றுதலும், தோன்றியவை யாவும் மறைவதுமான குணத்தை இயற்கையாகக் கொண்டவை. ஆனதால் மாற்ற மடைந்ததையும், மறைந்ததையும் இயற்கை எய்திற்று என்கிறோம்.
ஆத்மா உலகத்தில் ஏறக்குறைய எல்லா மதத்தார்களும், ஆஸ்திகர்களும் ஆத்மா என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்றும், அது சூட்சுமத் தன்மை, அதாவது கண்களுக்குத் தென்படாதது என்றும், மனிதன் செத்த பிறகு மனிதன் ஆத்மாவோடு இருந்த காலத்தில் அந்தச் சரீரத்தால் செய்யப்பட்ட காரியங்களின் பலாபலன்களை அது அனு-பவிக்கிறது என்றும் மக்கள் கருதுகிறார்கள். உலகத்திலே ஆத்மா என்கிறதைப்பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள் பவுத்தர்கள் தான். அவர்கள் மதத்தில்தான் ஆத்மா என்கிற ஒன்று இல்லை. மனிதன் இறந்தால் அத்தோடு அந்த மனித சம்பந்தமான யாவும் தீர்ந்தது என்ற கருத்து இருந்து வருகிறது. இந்தப் பவுத்தர்கள் இன்று உலகில் 70 கோடிப்பேர்கள் இருக்கிறார்கள்.
ஒரு கடியாரத்திற்கு அதன் சாவியின் அதாவது, விசைத் தகட்டின் வளைவு சக்தி இருக்கும்-வரையிலே கடிகாரம் இயங்கு-கிறது, மணி காட்டுகிறது. அந்தச் சாவியின் சக்தி நின்ற உடனே கடிகாரமும் நின்று-விடுகிறது. அப்போது அந்தக் கடிகாரத்தின் ஆத்மா மேலே போயிற்றென்றா சொல்ல முடியும்? முடியாதே. கடிகாரத்தின் விசை தீர்ந்து அசைவு நின்றுவிட்டது என்பதுதானே உண்மை. அதுபோலத்தானே மனிதர்களின் அசைவு சக்தி, இயக்க சக்தி அற்றுப்போனால், செத்துப்-போனால் வெறும் பிணம் ஆகி-விட்டான் என்கிறோம்.
இந்து மதத்தில் மனிதன் சாவைப் பற்றியும் ஆத்மாவின் தன்மையைப்பற்றியும் ஏராளமான புளுகு மூட்டை உண்டு. இவைகளெல்லாம் ஒரு கூட்டத்தார் நோகாமல், பாடுபடாமல் வாழ்வதற்காக, நம்முடைய முட்டாள்தனத்தையே கைமுதலாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட சங்கதிகளாகும். ஆத்மா, மோட்சம், நரகம் என்-கின்ற சொற்கள் தமிழ்ச் சொற்களே அல்ல. தமிழிலும் அவைகளுக்கு ஏற்ற சொற்களே கிடையாது.
சாதாரணமாக, இந்து மதத்திலே ஆத்மா-வைப்--பற்றி பலவிதக் கருத்துகள் கூறப்-படுகின்றன. அவற்றில் ஒன்-று என்னவென்றால், ஒரு ஆத்மாவானது இன்னொரு உடலில்போய் ஒட்டிக் கொண்ட பிறகுதான் ஒரு உடலை விடுகிறது என்பது ஆகும். அப்படி இருக்கும்-போது இறந்தவர்களுக்கு ஆக நாம் செய்யும் திதி, தினம், சடங்கு எதற்கு ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். இரண்டாவதாக, இறந்தபின் உடனேயே அவரவர்களின் வினைப்பயனுக்கேற்ற மாதிரியில் மறுபிறவி எடுத்து விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அப்படிப் பார்த்தாலும் உடனே பிறவி எடுத்து இந்த லோகத்துக்கு வந்து விடுகின்ற ஆத்மாவுக்கு நம்முடைய திதியைக் கொண்டு என்ன பலன் ஏற்படப் போகிறது? மற்றொரு கொள்கை என்னவென்றால், செத்தவன் ஆத்மா உடனே மோக்ஷத்திற்கோ, நரகத்துக்கோ போய் விடுகிறது என்று சொல்லப்படுகிறது. அந்தப்படி நரகத்துக்கோ, மோட்சத்திற்கோ போய்விட்ட ஆத்மாவுக்கு நாம் செய்வது, கொடுப்பது எப்படிப் பயன்படும்? பார்ப்பானுக்குச் சலிக்காமல் கொடுப்-பதுமாகிய காரியத்தைச் செய்தால், மேலுல-கத்தில் இருக்கும்_இங்கிருந்து போன உயிருக்கு நல்ல கதி-கிடைக்கும் என்றால், இங்கே இருக்கிற எல்லோரும் செய்கிற அயோக்கியத்தனங்களை எல்லாம், பித்தலாட்டங்களையெல்லாம் செய்துவிட்டு, தான் இறந்தபின் தனக்கு ஆக தானம் முதலியவைகள் ஏராளமாகப் பார்ப்-பானுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு அயோக்-கியத்தனங்களைக் கொஞ்சங்கூட அஞ்சாமல் செய்யக்கூடும் அல்லவா? அப்படியானால் கடவுள் ஒரு ஏமாந்த முட்டாளா? .
போகிற உலகத்திற்குப் புண்ணியம் கொண்டு செல்லவேண்டும் என்பதற்குத்தான் மனிதன் கடவுளை வணங்குகிறான். ஆத்மா என்கிற நம்பிக்கை இருப்பதினால்தான் அந்த ஆத்மா செய்திருக்கிற காரியங்களுக்கு ஏற்ற முறையில் அவைகள் வாழ இருலோகங்கள் அதாவது மோட்ச, நரகலோகங்கள் கற்பிக்கப்பட்டும், அந்தந்த ஆத்மாக்களுக்குத் தீர்ப்புக்கூறும் கடவுளர்களும் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஆத்மா என்கிற நம்பிக்கை இல்லா-விட்டால் சாதாரணமாகவே கடவுள் நம்பிக்கை எடுபட்டுப்போய்விடும். மன்னிப்புப் பெறலாம் என்கின்ற நம்பிக்-கையும் போய்விடும். மனிதர்கள் யாவரும் யோக்கியமாய் நடப்பார்கள். எவரும் பணம் சேர்க்க மாட்டார்கள். இறந்தவர்களின் நினைவு கொண்டாடுவது, அவர் அவர்களின் படத்தை வைத்துப் பூஜை செய்வதோ, அல்லது அவர்களுக்கு என்று ஆடம்-பரமான காரியங்களை நடத்துவதோ அல்ல. அவர்களின் நினைவுகொண்டாடுவது என்பது அவைகள் எல்லாம் செய்கிறவர்களின் செல்வத்தையும் அதோடு சேர்த்து அவரவர்-களின் முட்டாள்தனத்தையுந்தான் குறிக்கும்.
இறந்தவரின் பெயர் விளங்கச் செய்ய வேண்டும்; அதுதான் நாம் செய்யக்கூடிய காரியமாய் இருக்க வேண்டும்.
(பெத்துநாயக்கன் பேட்டையில் பெரியார் அவர்கள் 06.09.1950அன்று பேசியது)
- விடுதலை 07.09.1950

No comments:


weather counter Site Meter