அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்போம்!
அண்ணா ஒரு பல்கலைக் கொள்கலன்!
வாராது வந்த மாமணி வையத்து வரலாற்றில்!
சுயமரியாதைக் கொள்கை - லட்சியங்களின் சொக்கத் தங்கம்!
முற்றிய கதிர்நெல் தலை சாய்ந்து அடக்கத்தோடு இருப்பதைப்போல, அறிவால், அனுபவத்தால், ஆற்றலால் முதிர்ந்த முத்தான அண்ணாவின் அடக்கமும், எளிமையும், அய்யாவிடம் அவர் கற்றுக்கொண்ட பண்புகளின் வெளிப்பாடு - பகுத்தறிவுவாதிகளின் இலக்கணம்.
அண்ணாவுக்குத்தான் எத்தனை எத்தனை பல்வேறு பரிமாணங்கள்!
கொள்கையாளர் அண்ணா - ஆற்றல் வாய்ந்த பேச்சாளர் -
அறிவார்ந்த அழகுநடை எழுத்தாளர்.
முத்தமிழின் மூன்றாம் பகுதியாம் நாடகத் தமிழில் நல்ல பகுத்தறிவைக் குழைத்துக் கொடுத்ததோடு, நடிப்புக் கலையிலும் அவர் தனித் திறமையாளர்.
ஏடு நடத்தி நாடு திருந்திட தியாகம் செய்தவர்.
கலைஞர் உள்பட ஏராளமான தன்னிகரில்லாத் தம்பியர்களைத் தக்க பயிற்சியளித்ததோடு, தம் இதயத்தில் குடியேற்றிய குணாளர்.
திரைப்படம் என்பது வைதீகபுரியின் வாசம். அதனால் நம் சமுதாயம் நாசம் என்பதையே மாற்றி, அதையும் பகுத்தறிவின் நேசம் என்று ஆக்கிக் காட்டிய ஒரு புதிய பெர்னாட்ஷா!
ஆட்சிக்கட்டிலில் தி.மு.க.வை அமர வைக்க அரசியல் வியூகம் வகுத்த தலைசிறந்த ராஜதந்திரி ஆவார். நாடாளுமன்றத்தில் தமது நாவசைவைக் கேட்டுச் சுவைக்க வைத்த - அனைத்துக் கட்சியினரையும் ஈர்த்த - இணையற்ற பார்லிமெண்டேரியன்.
ஓராண்டு ஆட்சியில் கூட, மாற்ற முடியாத மகத்தான முப்பெரும் சாதனைகளை முத்திரையாகப் பதிப்பித்த ஒப்பற்ற முதலமைச்சர்!
புராண இதிகாசக் குப்பைகளை இலக்கியப் பூச்சுப் பூசி, புலவர் பெருமக்கள் காட்டியபோது தன் வாதத் திறமை யால் அவ்வல்லுநர்களையும் வாதாடி வென்று காட்டிய பெரியாரின் பெருந்தொண்டர் - தோழர்! சுயமரியாதைக் கொள்கைப் போர் முரசு!
நல்ல வாய்ப்பாக கலைஞர் முதலமைச்சர்
இரண்டு ஆண்டுகளாக அவர்தம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிட நல்லதோர் வாய்ப்பாக அவர்தம் ஆற்றல்மிகு தம்பி கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறை ஆட்சியில் இருந்த காரணத்தால், அருமையான வகையில் முத்திரை பதிப்பித்த விழாவாக நடத்திக் காட்டினார்கள்!அண்ணா மக்களுக்குத் தந்த வாக்குறுதியை - ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கும் எந்த ஆட்சியும் செய்தறியாத ஆணையைப் பிறப்பித்து - ஏழை மக்கள் பசியால் இனி வாட மாட்டார்கள் - வறுமை விரட்டப்பட்டது என்று வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிட்ட வரலாறு படைத்த முதல்வர் கலைஞர்!
நாணயத் தலைவருக்கு நாணயம் வெளியீடு!
அண்ணாவின் நூற்றாண்டில் அவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது - நா நயம் படைத்த அண்ணாவின் நாணயம் உலகறிந்தது என்பதைக் காட்டிட, கலைஞர்தம் முயற்சியில் மத்திய அரசு அதனைச் செய்து மகிழ்ந்தது!தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அண்ணா பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன!
அண்ணா பெயரில்
பொருத்தமான நூலகம்
இவ்வாண்டு 102 ஆம் ஆண்டில் 127 கோடி ரூபாய் செலவில், எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் ஒன்பது மாடி அடுக்குக் கட்டட நூலகம் மிக வியக்கத்தக்க வகையில், இந்தியாவின் இரண்டாவது நூலகமாக, ஆசியாவின் குறிப்பிடத்தக்க நூலகமாக கலைஞர் ஆட்சி உருவாக்கியதை, இன்று (15.9.2010) மாலை கலைஞர் திறந்து வைத்து அண்ணா வுக்குப் பிடித்தமான அறிவுப் பசி தீர்க்கும் அரிய சாதனையும், சரித்திர சாதனையாக நிகழவிருப்பது பாராட்டத்தக்கது! ஒரே நேரத்தில் 1200 பேர் அமர்ந்து படிக்கும் வசதி - நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கமாகக்கொண்டது இந்நூலகம். கலைஞர் ஆட்சி சாதனை மகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்!பொருத்தமான நூலகம்
மீண்டும் கலைஞர் ஆட்சியை அமர்த்துவோம்!
அண்ணா வெறும் படம் அல்ல - பாடம் என்பதை உணர்ந்து அண்ணாவை அவர்தம் பகுத்தறிவுப் பாடங்களை - இன உணர்வு எழுத்துகளை - அவர்வழி நடைபோடும் கலைஞர் ஆட்சியை கண்ணை இமை காப்பதுபோல் காத்து, 2011 இல் மீண்டும் இதே பகுத்தறிவு - இன உணர்வுள்ள கலைஞர் தலைமையில் உள்ள பொற்கால ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி - அண்ணா வழியில் அத்தனை லட்சியங்களையும் நிறைவேற்றி, தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக் கினாரே அண்ணா - அதனைத் தொடரும்படிச் செய்வதே அண்ணாவுக்கு நாம் செலுத்தும் ஆக்க ரீதியான மரியாதையாகும்! அதையே சூளுரையாக ஏற்போம்!சொன்னதை செய்து சொல்லாததையும் செய்த, செய்யும் ஆட்சி இந்தியாவில் வேறு எங்குமில்லையே!
கி. வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.
15.9.2010
No comments:
Post a Comment