Pages

Search This Blog

Tuesday, September 28, 2010

சீர்காழி கூறும் சிந்திக்கத்தக்க தீர்மானம்

1992 ஆம் ஆண்டு முதல் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு பிரச்சினை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ராமஜென்மபூமி என்ற பெயராலே இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை இடித்த பிரச்சினையாகும்.
சீர்காழியில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் இதுகுறித்துத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமன் ஜென்ம பூமி என்று சொல்லி ஏற்கெனவேயிருந்த 450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீதான வழக்கு 18 ஆண்டு காலமாக நிலுவையில் இருப்பதும், குற்றவாளிகள் பெரிய பதவிகளில் அலங்கரிப்பதும் நாட்டின் ஒட்டுமொத்தமான நிருவாகம், நீதி, மதச் சார்பின்மை இவற்றின் மீதான நம்பிக்கையை வெகு மக்கள் இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கினை விரைந்து முடித்து, உண்மையான குற்றவாளிகள் எந்தவகையிலும் தப்பிக்க முடியாத அளவுக்கு வழக்கினை செறிவாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறிக்கொண்டு மத அமைப்புகள் உரிமை கோரி போராடுவதும், வழக்குத் தொடுப்பதும் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது என்பதையும், அதன்படி பார்த்தால், பெரும்பாலான இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் புத்தர் விகார்களாக இருந்து, பிற்காலத்தில் வன்முறை யாலும், மன்னர்களின் அதிகாரத்தாலும் இந்துக் கோயில்களாக திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு அசைக்க முடியாத அனேக ஆதாரங்கள் உள்ளன என்பதையும் இம்மாநாடு வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு சுட்டிக் காட்டுகிறது. 1947 ஆகஸ்ட் 15 நாளை மய்யப் புள்ளியாக வைத்து, அதற்குமுன் இருந்த நிலை தொடரப்படவேண்டும் என்று அரசு ஏற்கெனவே முடிவு செய்த கருத்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
மக்கள் பிரச்சினைகள் ஏராளம் உள்ள 110 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில், மதப் பிரச்சினைகள், கோயில் பிரச்சினைகளை முன்னிறுத்தி, மக்களின் கவனத்தை ஒரு பக்கம் திருப்புவது, அரசின் கவனத்தை இன்னொரு பக்கம் திருப்புவது, அரசுக்குச் செலவினங்களை ஏற்படுத்துவது, சட்ட ஒழுங்குப் பிரச் சினையைக் கிளப்புவது என்பதெல்லாம் தேவையானவை தானா?
கடவுள், மதம் என்பவை எல்லாம் தனிப்பட்ட மனிதனின் பிரச்சினையாகக் கருதி வீட்டுச் சுவருக்குள் வைத்துக் கொள்ளாமல் வீதிக்குக் கொண்டுவரும்போதுதான் தேவையில்லாத சிக்கல்களும், பிரச்சினைகளும் வெடித்துக் கிளம்புகின்றன.
பாபர் மசூதியை இடிப்பதற்குமுன், எல்.கே. அத்வானி குஜராத் மாநிலம் சோமநாதபுரத்தில் உள்ள சோமநாதர் கோயிலிலிருந்து ரத யாத்திரை ஒன்றை நடத்தினார்; அது ரத்த யாத்திரையாக உருவெடுத்து நாடெங்கும் கலவரத் தீயை ஏற்படுத்தி, ஏராளமான மக்களின் உயிர் பலியானது.
ஒரு செம்பு நிறைய ரத்தத்தைச் சேகரித்து, அத் வானிக்குத் திலகமிட்ட பாசிச நிகழ்வுகளும் நடை பெற்றதுண்டு.
தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில்தான் அதன் அடிச்சுவடு தெரியாமல் அமைதித் தென்றல் வீசியது.
வட மாநிலங்களில் அமளிதுமளி ஏற்பட்டது. பிகாரில் ரத யாத்திரை தடை செய்யப்பட்டது.
மத்தியில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் தலைமையிலான ஆட்சிக்கு வெளியிலிருந்து கொடுத்து வந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கிக் கொண்டது. (மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்களை வி.பி. சிங் அரசு அளித்ததுதான் உண்மையான காரணமாகும்).
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சோமநாதபுரத்தில் அத்வானி ரத யாத்திரை தொடங்கிய அந்த செப்டம்பர் 25 ஆம் தேதியன்று, அத்வானி சோமநாதபுரத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு செய்வது வழக்கமாகும்.
இவ்வாண்டும் அவ்வாறே சென்றுள்ளார். பா.ஜ.க.வி லிருந்து விலகியவரும் - பாபர் மசூதி இடிப்புக் குற்றப் பத்திரிகையில் உள்ளவருமான செல்வி உமாபாரதியும் அவருடன் சோமநாதபுரம் சென்றுள்ளார். இது கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளது. பல்வேறு விமர் சனங்களும் எழுந்துள்ளன.
பழைய புண்ணைக் கிளற வேண்டாம் என்று காவல் துறையினரை பத்திரிகைத் தொடர்பாளர் மணீஷ்திவாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கக் கூடிய ஒரு காலகட்டத்தில், அத்வானி சோமநாதபுரத்திற்குச் சென்றுள்ளது - சங் பரிவார்க் கூட்டத்தின் மனோபாவத் தினை வெளிப்படுத்தக் கூடியதாகும். இந்தத் தீர்ப்பு எப்படியிருந்தாலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், மக்கள் பிரச்சினையைவிட கோயில் பிரச்சினைதான் பா.ஜ.க. வுக்கும், அதன் பரிவாரங்களுக்கும் முக்கியமானதாக உள்ளது.
இந்த அமைப்புகளால் மக்கள் நலனுக்குத் தேவையான உகந்த எந்த நன்மைகள்பற்றியும் எண்ணிப்பார்க்கப்படவும் முடியாது - அந்த வகையில் செயல்படவும் முடியாது என்பதை வெகுமக்கள் உணர்வார்களாக!

No comments:


weather counter Site Meter