எழுச்சி வரலாறு படைத்த கழக இளைஞரணி கலந்துரையாடல்
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதைக் கோயில்களை அகற்றுக!
இல்லையென்றால் சம்மட்டியோடு புறப்பட கழக இளைஞர்கள் தயார்!
தமிழர் தலைவரின் போராட்ட அறிவிப்பு
தஞ்சாவூர், செப். 30- உச்சநீதிமன்ற ஆணைப்படி நடைபாதைக் கோயில்கள், பொது இடம் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கோயில் களை, வழிபாட்டுச் சின்னங்களை அரசு அகற்ற வேண்டும்; இல்லையென்றால், கழக இளைஞரணித் தோழர்கள் சம்மட்டியோடு புறப்படத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று மாலை நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி தோழர்களின் கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
திராவிடர் கழக இளைஞரணி மாநிலம் தழுவிய பொறுப்பாளர்களின் கூட்டம் தஞ்சாவூர் புதுப் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டிருந்தனர். கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து தனிப் பேருந்தில் வருகை தந்தனர். அரியலூர், செந்துறைப் பகுதிகளிலிருந்து இரண்டு வேன்களில் வந்திருந்தனர் என்றால், பார்த்துக் கொள்ளலாமே!
ஒரு புதிய உத்வேகத்துடன் இளைஞர்கள் பங்கு கொண்டது பெரும் உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது. வல்லத்தில் நடை பெறும் குழந்தைகள் பழகு முகாமில் கலந்துகொண்ட போது முதுமை தலை தெறிக்க ஓடியது என்றும், இங்கு இளைஞர் சேனை யின் எழுச்சியைக் காணும் போது இளமை திரும்புகிறது; புது முறுக்கு ஏறுகிறது என்றும் தமிழர் தலைவர் குறிப்பிட்டார் என்றால், கூடியிருந்த கூட்டத்தின் எண்ணிக்கையையும், அது காட்டிய எழுச்சியையும் எளி திற் தெரிந்துகொள்ளலாமே!
இளைஞரணி உறுப்பினர் படிவத்தை, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் பா. வைரம், செ. தமிழ்சாக்ரடீஸ் ஆகியோர் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணியின் பொறுப்பாளர்கள் கொட்டு முரசாக - கோடையிடியாகக் கொள்கை நாதம் கிளப்பினர். தங்கள் தங்கள் பகுதிகளில் நடைபெற்ற கழக நிகழ்ச்சிகளையும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மாட்சியையும் மிகுந்த உற்சாகத்தோடு தெரிவித்தனர்.
சரியாக மாலை 6 மணிக்குக் கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாகப் புதுப் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்குக் கழகத் தலைவர் கி. வீரமணி மாலை அணிவித்தார். மாவட்டக் கழகத் தலைவர் - வழக் குரைஞர் அமர்சிங், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் ஆகியோர் கழகத் தலை வருக்குச் சால்வை அணி வித்து வரவேற்றனர்.
வன்னிப்பட்டு தமிழ்ச் செல்வன் கடவுள் மறுப்புக் கூற மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கடந்த காலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் செயல்பாடுகளைத் தெரிவித்து அடுத்த ஓராண்டுக்கான திட்டங்களையும் தெரிவித்தார்.
-----------------------------------------
இளைஞர்களே!
இளைஞர்கள் இயக்கத்துக்கு நிதி சேர்க்கத் தயங்கக்கூடாது - கூச்சப்படக்கூடாது. மக்கள் கொடுக்கத் தயார்! ஆனால், நாம்தான் அவர்களிடம் செல்லத் தயாராக இல்லை!
இன்னொன்று முக்கியமானது; ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கப் போகும்போது தந்தை பெரியார் நூல்களைப் பத்து நிமிடமாவது படித்துவிட்டுத்தான் தூங்கவேண்டும். அப்படிப் படித்தால், நிம்மதியாகத் தூக்கமும் கூட நன்கு வரும்.
தஞ்சை - இளைஞரணி கூட்டத்தில்
தமிழர் தலைவர், 29.9.2010
-----------------------------------------
தொடர்ந்து பேசிய கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் மாவட்டத்திற்கு ஆயிரம் இளைஞரணி தோழர்களைச் சேர்ப்போம் என்ற உறுதிமொழியினை அளித்தார்.
துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குண சேகரன் தம் உரையில், கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்தும் சக்திகளுக்கு உடனுக்கு உடன் பதிலடி கொடுப்போம் என்றார். நான் யாரையும் அடிக்க மாட்டேன்; அதேநேரத்தில் என்னை அடித்தால், கொல்ல நினைத்தால், அவனைக் கொல்லும் வேலையில் நான் சாவேன் என்றாரே தந்தை பெரியார் - அதனையும் நினைவூட்டினார்.
தலைமை நிலைய செயலாளர்
வீ. அன்புராஜ்
திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ் தமது சுருக்கமான உரையில் குறிப்பிட்ட தாவது:
பெரியார் சமூகக் காப்பு அணி புதுப்பிக்கப்பட வேண்டும்.
மாவட்டத்துக்கு 5 தோழர்களைத் தேர்வு செய்து வரும் டிசம்பர் மூன்றுமுதல் ஜனவரி 3 வரை இந்தப் பயிற்சி நடைபெறும். அவர்களுக்குப் பத்து நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்றுநர்களுக்கு 4 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.
மாவட்டம்தோறும் இளைஞரணி தோழர்கள் திரட்டப்பட்டு அடுத்த மாநாட்டில் ஒரு லட்சம் பேரைக் காட்டவேண்டும் என்று கூறினார்.
பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன்
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிடர் கழகத்தின் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை வேறு எந்தக் கட்சியிடத்தும் கிடையாது. இந்தப் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைதான் தன்னை நாத்திகனாக ஆக்கியதாக தந்தை பெரியார் கூறுகிறார்.
இந்தப் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கைதான் தமிழர்களுக்குக் கல்வி வாய்ப்பையும், வேலை வாய்ப்பையும் கொண்டு வந்து கொடுத்தது. இந்தக் கொள்கையை கையில் எடுத்துக் கொள்ளாத எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் வேர் ஊன்ற முடியாது.
பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புக் கொள்கையும் சரி, மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரமும் சரி, அவற்றை திராவிடர் கழகம் செய்யும்போதுதான் மக்கள் மத்தியில் எடுபட முடியும்.
திராவிடர் கழகம் - அதன் தலைமை, விடுதலை இவற்றின்மூலம்தான் இக்கொள்கைகளைச் சாதித்து வெற்றியாக்கிக் காட்ட முடியும் என்று தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் எடுத்து விளக்கினார். திராவிடர் கழக மாநில இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் 50 நிமிடங்கள் உரையாற்றினார்.
இளைஞர்களுக்குக் கொள்கை உணர்வு ஊட்டக் கூடியதாகவும், கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கம் இவற்றைப் போற்றக் கூடியதாகவும், போராட்ட அறிவிப்பாகவும் அந்த உரை அமைந்திருந்தது.
1931 இல் சென்னிமலையில் தந்தை பெரியார் ஆற்றிய அருமையான உரையை எடுத்த எடுப்பிலேயே எடுத்துக்காட்டி உரையைத் தொடங்கினார்.
நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெறவேண்டுமானாலும், அவை வாலிபர்களாலேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெறும் வார்த்தைகளல்ல. இதில் உண்மையில்லாமலுமில்லை.
ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது. உலகப்பற்று, சுயநலம், பேராசை, மனோராஜியமாகிய களிம்பும், துருப்பும் பிடியாமல் மூளையுடன் சுத்தமாயிருப்பதாகும். இளங்கன்று பயமறியாதென்ற பழமொழிக்கொப்ப அவர்களுக்கெந்தக் காரியத்திலும் பயமென்கிற தடையானது கிடையாது. அன்றியும் வாலிபர்களின் உள்ளமானது பக்கத்தில் தோன்று வதைப் பயமின்றி சடுதியில் பற்றுவதாகும், பற்றி விட்டாலோ தங்குதடைகளின்றி படரக்கூடிய வேகமுடையதாகும். இந்தக் காரணங்களால் வாலிபர்களே புதிய புதிய காரியங்களால் பயனேற்பட உதவக்கூடியவர்களென்று சொல்லப்பட்டு வருகின்றது.
எந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமானாலும், சுய நலமற்ற தன்மையும், பயமற்ற தன்மையும், எதையும் தியாகம் செய்யும் உள்ளமும் வேண்டியதவசியமாகும். இந்தக் குணங்கள் வாலிபர்களிடமே தான் பெரிதும் காண முடியுமேயொழிய உலக வாழ்க்கையிலீடுபட்ட பெரியவர்களென்பவர்களிடத்தில் காணமுடியாது.
தந்தை பெரியார் இளைஞர்களுக்கு எடுத்துக்கூறிய இந்தப் பகுதி அழுத்தமானதும், இலட்சிய நோக்கு மிகுந்ததாகவும், மிகவும் தேவையானதுமாகும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை. குறிப்பாக இளைஞர்களின் மனப்போக்கு எத்தன்மையில் இருக்கும் என்று அய்யா அவர்கள் கணித்ததை, எடை போட்டுள்ளதை எண்ணிப் பார்த்தால் மலைக்க வேண்டியதாக உள்ளது. இந்தப் பத்தியத்துடன் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் அப்பழுக்கற்ற நடைபோடவேண்டிய திராவிடர் கழக இளைஞர்களுக்கு தமிழர் தலைவரின் இந்த எடுத்துக்காட்டு மேலும் இலட்சிய உறுதியையும், செயல்பாட்டுத் தளத்தில் உறுதியான காலூன்றுதலையும் கொடுக்கும் என்பதில் அய்யமே கிடையாது.
தனி மனித ஒழுக்கத்தின் சின்னங்களாக நமது தோழர்கள் திகழவேண்டும். கட்டுப்பாடு என்றால் திராவிடர் கழகத் தோழர்களைப் பாருங்கள் என்று மற்றவர்கள் கூறும் வண்ணம் நம் நடத்தை நன்னடத்தையாகத் திகழவேண்டும் என்று குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், பெரியார் சமூகக் காப்பு அணியை இந்த அடித்தளத்தில் உருவாக்கவேண்டும்; மீண்டும் புதுப்பிக்கவேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்றைய தினம் கிரிக்கெட் மைதானத்தில் பித்துப் பிடித்துக் கிடக்கிறார்கள்.
கிரிக்கெட் என்றால் அது மிகப்பெரிய அளவு சூதாட்டத்தின் - சுரண்டலின் ஊற்றாகவே ஆகிவிட்டது. இந்தப் பைத்தியத்திலிருந்து நமது தமிழின இளைஞர்களை மீட்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
பெரியார் வீர விளையாட்டுக் கழகம் அதற்காகத்தான் தொடங்கப்பட்டது. சென்னை, தஞ்சை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வெகு சிறப்பாகவும் நடத்தப்பட்டது.
சிலம்பம், சடுகுடு என்ற தமிழர்களுக்கே உள்ள விளையாட்டுகளுக்கும், பயிற்சிக்கும் ஊக்கம் தரப்படவேண்டும். உடல் வலிமை பெற்றால் மனமும் வலிமை பெறும். உடல் பலமும், உள்ள வளமும் மனிதனுக்குத் தேவையாகும்.
----------------------------------------------------
பாராட்டும் - சிறப்பும்!
கோவை வட்டாரத்திலிருந்து தனிப் பேருந்துமூலம் இளைஞர்களைத் திரட்டி வந்த கோவை மண்டல திரா விடர் கழகத் தலைவர் ம. சந்திரசேக ரன் தமிழர் தலைவருக்குச் சால்வை அணிவித்தார்.
செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு அவர்களுக்கு திரா விடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீஸ் (சென்னை) சால்வை அணிவித்தார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங் குன்றன் அவர்களுக்கு இளைஞரணி துணைச் செயலாளர் சேலம் பா. வைரம் சால்வை அணிவித்தார். தலைமை நிலைய செயலாளர் வீ. அன்பு ராஜ் அவர்களுக்குச் செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு அவர்கள் சால்வை அணிவித்தார்.
பட்டுக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக பொறுப்பாளரான வ. மணி (வயது 82) அவர்களுக்குக் கழகத் தலைவர் கி. வீரமணி சால்வை அணி வித்துச் சிறப்பு செய்தார்.
கோவையிலிருந்து இளைஞர் களைத் திரட்டிவர கிரியா ஊக்கியாக இருந்த செந்தில் அவர்களுக்கு (பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் மகன்) தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்ட தோழர்களுக்குத் தமது சொந்த பொறுப்பில் இரவு உணவு அளித்து உவந்த சுருதி சர்க்கரை நோய் சிகிச்சை மய்ய இயக்குநர் குடந்தை டாக்டர் சித்தார்த்தன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணி வித்துப் பாராட்டினார்.
கழகத் தலைவருக்கும், உடன் வந்தோருக்கும் பவர் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்த் - தமது இல்லத்தில் இரவு சிற்றுண்டி அளித்து உபசரித்தார்.
----------------------------------------------------
நமது இளைஞர்கள் வாரத்துக்கு ஒரு நாள் இயக்கப் பணிக்காக ஒதுக்கிடவேண்டும். திருமணங்களை அய்ந்து ஆண்டுகளுக்கு ஒத்திப்போட வேண்டும்.
நம் தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா வகையிலும் பக்குவப்படுத்தி சரியான திசையில் அவர்களைப் பயணிக்க வைக்கும் பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது - கழக இளைஞரணியினருக்கு இருக்கிறது.
மிகுந்த உற்சாகத்தோடு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கிறீர்கள்; நீங்கள் காட்டும் உற்சாகம் எங்களை உற்சாகப்படுத்துகிறது.
ஆட்சியில் வரலாம்; போகலாம்; ஆனால், மீட்சி என்பது கருஞ்சட்டைப் பட்டாளத்தின்மூலம்தான் முடியும்.
உத்வேகத்துடன் கூடியுள்ள நீங்கள் உற்சாகத்துடன் திரும்பவேண்டாமா? கழகம் என்றால் பிரச்சாரம்! கிளர்ச்சி!! பிரச்சாரம் நல்ல வகையில் பட்டிதொட்டியெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உங்களைப் போராட்ட உணர்வுடன் அனுப்பி வைக்க விரும்புகிறேன்.
நடைபாதைகளில், பொது இடங்களில், அரசுக்குச் சொந்தமான இடங்களில், அரசு வளாகங்களில், அலுவலகங்களில் கோயில்கள், கடவுள் சிலைகள், வழிபாட்டுச் சின்னங்கள், படங்கள் ஆகியவை சட்ட விரோதமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமாக வைக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது; தீர்ப்பும் வழங்கிவிட்டது. இத்தகு கோயில்களை, வழிபாட்டுச் சின்னங்களை அகற்றவேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவர் ஒருமனதாகத் தீர்ப்புக் கூறிவிட்ட பிறகு, இன்னும் நடைபாதைக் கோயில்களை, பொது இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இவற்றை அரசு உடனடியாக அகற்றிடவேண்டும். இதுகுறித்துத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
அவ்வாறு செய்வதில் அரசுக்குத் தயக்கம் இருக்குமேயானால், அவற்றை அகற்ற சம்மட்டியுடன் புறப்பட நாங்கள் தயார்! தயார்!! (பலத்த கைதட்டல்).
இது ஒன்றும் சட்ட விரோத செயல் அல்ல; இன்னும் சொல்லப் போனால், சட்டத்தைக் காப்பாற்றும் செயலாகும்.
அரசுக்குத் தொந்தரவு கொடுக்க அல்ல; அரசின் செயலுக்குத் துணையாக இருக்கவே இந்தப் போராட்டம்.
வரும்போது இருந்த உற்சாகத்தைவிட, போகும்போது பல மடங்கு உற்சாகத்துடன் புறப்படவேண்டும் அல்லவா - இந்தப் போராட்ட அறிவிப்பு இதற்குப் பயன்படும் என்று குறிப்பிட்டார்.
--------------------------------------------------
ஈரோடு வழிகாட்டுகிறது!
தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஈரோடு நகரத்தில் தோழர்கள் மேற்கொண்ட முயற்சி மற்ற வர்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது.
திராவிடர் கழக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் தோழர் பா.வைரம் கலந்துரையாடல் கூட்டத்தில் இதுகுறித்துத் தெரிவித்ததாவது:
உள்ளூர்த் தொலைக்காட்சியில் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சி களை ஒளிபரப்பிடச் செய்த ஏற்பாடுதான் அது. அரை மணிநேரம் கேட்கப்பட்டது. பெரியார் விழா நிகழ்ச்சிகளை மட்டுமல்லாது பெரியார்பற்றி பலரிடம் பேட்டி கண்டு வெளியிட்டனர். தந்தை பெரியார் பொன்மொழிகளை ஒளிபரப்பி னர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது. அடுத்த ஆண்டு முழு நாளை பயன்படுத்திக் கொள் ளுங்கள் என்று உள்ளூர்த் தொலைக் காட்சி உரிமையாளர்கள் கூறினார்கள் என்ற தகவலை தோழர் பா. வைரம் எடுத்துக் கூறினார். கழகத் தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈரோடு திருநாவுக்கரசு அவர்களின் முயற்சிதான் இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் வைரம் குறிப்பிட்டார்.
இதைப்பற்றிப் பாராட்டிய தலைமை நிலைய செயலாளர் வீ. அன்புராஜ், ஒவ்வொரு ஊரிலும் இதே போன்ற முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார். முயற்சி உடையோர் இகழ்ச்சியடையார் அல்லவா!
--------------------------------------------------