Pages

Search This Blog

Sunday, April 22, 2012

திராவிடம் என்பது கற்பனையா?(2)

 PART 1 - http://naathigam.blogspot.in/2012/04/blog-post_14.html
திராவிடம் என்பது கற்பனை; அது ஒரு மாயை; கால்டுவெல் பாதிரிக்கு பிராமணர்மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே திராவிடம் என்பதனை விளம்பரப்படுத்தித் தனக்குப் புகழ் சேர்த்துக் கொண்டார். திராவிட இயக்கத்திற்கு இப்போது நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? _ என்று பார்ப் பனர்களும் அவர்தம் அடிவருடிகளும் கேள்விக் கணை தொடுத்திருக்கிறார்கள்.

அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்ட வர்களும், தமிழ் இன எதிரிகளும், வரலாறு தெரியாத - _ வடிகட்டிய தற் குறிகளைப் போலப் பேசி வருகின்றனர். வரலாற்றை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது வரலாறு தெரிந்தவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் சிலர் உளறி வருகிறார்கள்.

அண்மையில் செய்தியாளர்களிடம் ஒரு தலைவர், குடியரசுக் கட்சியில் பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று எழுதினார் என்று பேசுகிறார். குடிஅரசு இதழுக்கும், குடியரசுக் கட்சிக்கும் வேறுபாடு தெரிய வேண்டாமா? அதுவும் கட்சியில் எப்படி எழுதுவது? இவர்களின் வரலாற்றறிவு எப்படிப்பட்டது தெரியுமா? இளம் தலைவர் பேசுகிறார், நாம் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் ஆளப் பிறந்தவர்கள்
பல்லவர்கள்
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து வந்தவர்கள். சமற்கிருதத்தைத் தாய் மொழி எனப் போற்றியவர்கள். அதற்கு இலக்கியம் படைத்துக் கொடுத்தவர்கள். பல்லவர் பெயர்களைப் பார்த்தாலே தெரியுமே! அவர்களில் ஒருவன் கூடத் தமிழன் இல்லை என்பது! தமிழ் மக்களின் செல்வத்தையெல்லாம் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கிய வர்கள் பல்லவர்கள்! நீங்கள் அவர்கள் வழி வந்தவர்களா?

நாட்டை ஆள வேண்டும் என்ற நசையோடு அலையும் இவர்கள் அந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டாமா? அந்த நாட்டு மக்களின் மொழியைப் பிழையின்றிப் பேச வேண்டாமா? இந்த விளக்கெண்ணெய் வேலைக்கிடையில், திராவிடம் என்பது மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம்; சங்க இலக்கியத்தில் திராவிடம் என்பது இல்லை என்று வேட்டியை உருவித் தலையில் கட்டிக் கொண்டு வீதி வீதி யாய்ப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் தோன்றியது எப்போது?

ஆரியர் _ -திராவிடர் என்ற வேற் றுமையை விதைத்தவர் கால்டுவெல் தான்; திராவிடம் என்ற கற்பனையான ஒரு சொல்லைப் படைத்தவரும் அவர்தான்! என்று இப்போது பார்ப்பனர் புதுக்கரடி விடுகிறார்கள். இப்படியெல்லாம் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் பேசுவார்கள், வெட்கமில்லாமல் பொய்யுரைப்பார்கள் என்பதை அறிந்தோ என்னவோ கால்டுவெல் பெருமகனார் தொலை நோக்குப் பார்வையோடு தமது கருத்துக்களை வெளியிட்டார்.

திராவிடம் என்பது எனது படைப்பல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பண்டைய வடமொழி ஆசிரியர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களேயன்றி நானில்லை என்று அறிஞர் கால்டுவெல் கம்பீரமாக நின்று உண்மையை வெளிப்படுத்து கிறார்.

மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில் சத்திரியக் குடியினர், படிப்படியாக ஆரியப் பழக்க வழக்கங்களிலிருந்து வழுவிப் பார்ப்பனர் தொடர்பை விட்டு விலகிக் கீழ்ச் சாதியினர் ஆனார்கள். அவர்கள் பவுண்டரர்கள், ஒட்ரர் திராவிடர், காம்போசர் என்று கூறப் பட்டுள்ளது. மேற்குறித்த குடியினரில் தென்னிந்தியாவிற்குரியவர் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களேயாவர். இதனால் தென்னாட்டு மக்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்குத் திராவிடம் என்ற குறியீடு எடுத் தாளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்றும் மகாபாரதத்திலும் திராவிடம் என்ற சொல்லாட்சி இப்பொருளிலேயே பயின்று வந்துள்ளது என்றும் டாக்டர் கால்டுவெல் விளக்கமாகத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம்முடைய நூலில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆதலின் கால்டுவெல் கண்காணியாரின் (பாதிரி யார்) காலத்திற்குப் பல நூற்றாண் டுகளுக்கு முன்பிருந்தே திராவிடம் என்ற சொல்லாட்சி, பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமை புலனாகின்றது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது:

திராவிடம் என்ற சொல் பார்ப்பனர்கள்மீது ஏற்பட்ட வெறுப்பினால் தோன்றியதல்ல மாறாகப் பார்ப்பனர் தமிழ்மக்கள்மீது கொண்ட வெறுப்பினால் அவர்களை இழிபிறப்பினர் என்று சுட்டுவதற்காகத் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைப் பார்ப்பனர் நூலாகிய மனுதருமம் தெளிவுபடுத்துகிறது.

திராவிடம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது. மாமன்னர் அசோகன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் இச்சொல் தென்னாட்டு மக்களை (தமிழர்களை) குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்வாய்ந்த ஓர் இனத்தையும், இடத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் திடுமெனத் தோன்றியிருக்க முடியாது. மக்கள் வழக்காற்றில் அச்சொல் பயின்று பயின்று பண்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தோன்றியதாகப் பார்ப்பனர் கொண்டாடும் மனுதரும சாத்திரம் திராவிட மக்களைச் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்திக் கூறுகிறது. திராவி டத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று சுட்டுகிறது. மனுதருமம் (சுலோ 44 அத்தியாயம் 5) ஆனால் மாமன்னன் அசோகன் காலத்துக் கல்வெட்டு, தென்னாட்டையும், தென்னாட்டு மக்களையும் பெருந்தன்மையோடு திராவிடம் என்ற சொல்லால் குறிக்கின்றது. மாமன்னன் அசோகன் வட இந்தியாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியின்கீழ் வைத்திருந்தவன். கலிங்கம் (ஒரிசா) வரைதான் அவனால் தெற்கே படையெடுத்து வர முடிந்தது. கலிங்கத்திற்குத் தெற்கில் தமிழர்கள் வலிமையோடிருப்பதையறிந்து தெற்கே வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கலிங்கப் போருக்கு முன்பே கைவிட்டவன் மாமன்னன் அசோகன். அவன் திராவிட மக்களை மதித்தவன் பேரரசன்! ஆனால் நாடோடிகளான ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று இழிவு படுத்திக் கூறியவர்கள்.

திராவிடம் என்ற சொல் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்தாளப்பட்டுள்ள தாகவும் இச்சொல் தமிழர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள தாகவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.

மனுவின் காலத்திற்குப்பின்னர்

மனுவின் காலத்திற்குப் பின்னர் வந்த வடமொழி ஆய்வாளர் பலரும் திரா விடம் என்ற சொல்லைத் தொன்னாட்டு மொழியினத்தைக் குறிப்பதற்கே எடுத்தாண்டுள்ளனர் என்பதையும் இந்திய பாகத மொழிகளைத் தொகைப் படுத்தி இனம் பிரித்த பண்டைய ஆராய்ச்சியாளர்கள் திராவிடி எனும் பெயரால் திராவிட மொழியினத்தைச் சேர்த்துள்ளனர் என்பதையும் கால்டு வெல் எடுத்துக்காட்டுகிறார். மேலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகக் கருதப்படும் சிறந்த வடமொழி அறிஞரான குமரிலபட்டர் என்பார் திராவிடாதி பாஷா என்ற சொற் றொடரைக் கையாண்டுள்ளதாகவும் அறிஞர் கால்டுவெல் குறிப்பிடுகிறார். இவ்வாறு எண்ணற்ற சான்றுகளை எடுத்துக்காட்டித் திராவிட என்ற சொல் மிகப் பழங் காலந்தொட்டே தென் னாட்டு மக்களையும் மொழியையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக வடமொழியாளர்களால் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது என்று கால்டுவெல் நிறுவுகிறார்.

மேலும் இந்தியத் தொல்குடியினரில் ஒருவராகிய சத்திய விரதர் என்ப வரைப்பற்றிக் குறிப்பிடும்போது பாகவத புராணம் திராவிட மன்னர் என்று குறிப்பிடுவதாகவும் கால்டுவெல் கூறுகிறார்.

திராவிடச் சங்கம்:

சமணமும், பவுத்தமும் மனிதநேயம் கொண்ட -_ இயற்கை நெறிபோற்றும் அமைப்புகள் அறிவு நெறிப்பட்ட கருத்துக்களைப் பவுத்தரும், சமணரும் மக்களிடையே பரப்பிவந்தனர். இவை இரண்டும் தமிழகத்தில் ஒரு காலத்தில் உயர்ந்த நிலையில் சிறப்புற்றிருந்தன. இவற்றை அழிப்பதற்காக வைதீகப் பார்ப்பனர்கள் இடைவிடாத முயற்சி களை மேற்கொண்டு செயல்பட்டு வந்தனர்.

மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து அவர்களை அடிமைப்படு குழியில் தள்ளிவிட்டனர் வைதீக வெறியர்கள். கோயில்கள் என்ற இருட்சிறையிலிருந்து மக்கள் விடுபட முடியாமல் அல்லற்பட்டனர். மேல் உலகம், சொர்க்கம், நரகம், விதி, மறு பிறவி முதலான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை மீளாத் துயரில் பார்ப்பனீயம் ஆழ்த்திவிட்டது. இந்நிலையில், கி.பி. நான்காம் நூற்றாண்டில் வச்சிரநந்தி என்ற சமணத் துறவி மதுரையில் திராவிடச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

மக்களின் வாழ்வியல் முறைகளுக்கு எதிரான பார்ப்பனர்களின் வைதீகப் பழக்க வழக்கங்களை முறியடிப்ப தற்காகவும் மக்களிடையே அன்பு நெறியை வளர்ப்பதற்காகவும் அறிவு நெறி சார்ந்த கருத்துக்களையும், மனித நேயத்தையும் பரப்புவதற்காகவும், மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு மக்கள் முன்னேற்றம் காண முன்வர வேண்டும் என்பதற்காகவும் வச்சிர நந்தி ஒரு சங்கத்தை ஏற்படுத் தினார். அதற்கு அவர் திராவிடச் சங்கம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் காணப்படும் திராவிடம் என்ற சொல், தென்னாட்டு மக்களையும் (தமிழர்கள்) தென்னாட்டையும் குறித்து நின்றது. வச்சிரநந்தியின் திராவிடச் சங்கம் திராவிடம் என்பதற்கு ஒரு மெய்யியல் அடிப்படையை அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது
திராவிடம் என்றால்,

1. மக்கள் வாழ்வியலுக்கு எதிரான ஆரியப் பார்ப்பனரின் வைதீகத்தை எதிர்ப்பது

2. மனிதநேயத்தை மக்களிடையே வளர்ப்பது.

3. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவது.

4. அறிவுநெறி சார்ந்த வழிமுறை களை மக்களுக்கு வகுத்துக் கொடுப்பது.

5. மூடநம்பிக்கைகளிலிருந்து மக் களை விடுவித்து அவர்களை நல் வழிப்படுத்துவது.

6. மக்களிடம் இயற்கையான அன்புநெறியை வளர்த்து ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களைப் பயன்படுத்துவது.

என்று பொருள்படுவதை நாம் அறிய முடிகிறது. இத்தகைய இயற்கை யான, எளிமையான கருத்துக்களால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். சமணத்தின் மதிப்பு மக்களிடையே உயர்ந்தது.

திருஞானசம்பந்தரின் திருவிளையாடல்:

வச்சிரநந்தியின் காலத்திற்குப் பின்வந்த சீர்காழி திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பனர், தமிழ்நாட்டில் சமணர் தொகை பெருகுவதைக் கண்டு மனம் வெதும்பி அவர்களை அழிப் பதற்கான முயற்சியை மேற்கொண்டான். மக்கள் நலப் பணியாளர்களாக விளங்கிய எண்ணாயிரம் சமணர்களை (அத்தனைப் பேரும் தமிழர்கள்) தேர்வு செய்து பாண்டிய மன்னன் துணை யோடு அவர்களை வைகையாற்றங் கரையில் கழுவிலேற்றிக் கொன்றான் திருஞானசம்பந்தன். (இந்தக் கழுவேற்று நிகழ்வின் நினைவாக ஆண்டுதோறும் வைகைக் கரையில் கழுவேற்றித் திருவிழா கொண்டாடப்பட்டுவருவதை வரலாற்று ஆய்வாளர் பலர் பதிவு செய்துள்ளனர்).

திராவிட சிசு!

இந்தப் படுகொலைப் பழியிலிருந்து ஞானசம்பந்தனைக் காப்பாற்றப் பார்ப்பனர் பல முயற்சிகளை மேற் கொண்டனர். எப்படியேனும் அவனுக்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும் என்று அரும்பாடுபட்டனர். ஒரு நாள் ஞானசம்பந்தன் எங்கோ போய்விட்டுத் தன் இருப்பிடம் திரும்புகையில் தெரிந்தோ தெரியாமலோ ஆதி திராவிடர் வாழும் சேரிவழியாக வந்துவிட்டான். உடனே அவனைச் சுற்றியிருந்த பார்ப்பனர்கள் இதைக் கருவியாகப் பயன்படுத்தி மண்ணுக்கும், விண்ணுக்கும் எகிறிக் குதித்துப் பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு, சம்பந்தப் பெருமாள் பெரிய புரட்சியே செய்துவிட்டார், சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பிறந்தவர் என்று கூச்சல் போட்டு ஞானசம்பந்தனுக்கு நற்பெயர் பெற்றுத் தர முயன்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் ஆதிசங்கரர் திருஞான சம்பந்தனைத் திராவிடச் சிசு என்று அழைத்துக் கொலைகாரன் என்ற பெயர் மறைவதற்கு உதவி செய்தார் ஆதிசங்கரர்! ஆனால் எந்தப் பார்ப்பனரும் திராவிடச் சிசு என்று ஞானசம்பந்தரை இன்றுவரை அழைப் பதில்லை! அவர்கள் திராவிடத்தை வெறுப்பவர்களாயிற்றே!

இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியது திராவிடம் என்ற சொல் சாதி ஒழிப்பைக் குறித்து நிற்பது என்பதைத்தான்! ஆதிதிராவிடர் வாழும் சேரித் தெருவில் நடந்து வந்ததே பெரும் புரட்சியாகி விட்டது. அவன் எதற்காக அங்கே போனான் என்பது ஆய்விற்குரியது. என்றாலும் திராவிடம் என்பது சாதி ஒழிப்பைக் குறித்து நிற்கும் ஒரு குறியீடாகி விட்டது. திராவிடன் என்றால் சூத்திரன் என்று நம்மை இழிவுபடுத்திய பார்ப்பனியம் தனக்குத்தானே சூத்திரப் பட்டத்தைச் சூட்டிக் கொண்டு ஆப்பசைத்த குரங்கின் கதை போல அதனை விடவும் முடியாமல் பாராட்டிச் சொல்லவும் முடியாமல் தடுமாறியது. தந்தை பெரியார் பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்று கூறியதை நாம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கி.பி. 1850 வரையில் அதாவது அறிஞர் கால்டுவெல் காலத்திற்குச் சற்று முன்புவரை வாழ்ந்த சமற்கிருத அறிஞர் பலரும் தென்னிந்திய மொழி களைத் திராவிட மொழிகள் என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்தி மொழி நூலறிஞரான பாபு இராசேந்திரலால் மித்ரா என்பவர் 1854ஆம் ஆண்டில் திராவிடி என்ற சொல்லைத் திராவிட மொழிகளைக் குறிப்பதற்குப் பயன் படுத்தி வந்துள்ளார். 1891இல் பேரா சிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்று மனங்குளிரப் பாடுகிறார். வங்கக் கவிஞர் தாகூர் திராவிட உத்கலவங்கா என்று பாடு கிறார். இப்பாடல் இந்தியாவின் தேசியப் பாடலானது எப்படி என்பதைப் பார்ப்பனர் விளக்குவார்களா?

சிந்துவெளி நாகரிகம்

திராவிட இனம்பற்றிய ஆய்வும் மொழிபற்றிய ஆய்வும் இன்று உலக அளவில் விரிவடைந்து விட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதனை அறிவுலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆரியர் -_ திராவிடர் உண்மையைச் சமூகவியல், அடிப்படையிலும் அறிவியல் அடிப் படையிலும் தந்தை பெரியார் மிக விரிவாக விளக்கியிருக்கிறார். திராவிடர் என்பதற்குத் தந்தை பெரியார், தந்துள்ள கருத்துரைகளுக்கு மறுப்புரைக்க இன்றுவரை எவரும் முன்வரவில்லையே! ஆகவே திராவிடம் என்பது கற்பனை என்போர் கருத்துக் குருடர்கள்! அவர்கள் மனம் மாசுபடிந்தது!

திராவிடம் என்பது ஒரு குறியீடு:

திராவிடம் என்பது ஒரு குறியீட்டுச் சொல்; அசோக மாமன்னன் காலத்தில் திராவிடம் என்பது தென்னகத்தையும், தமிழ்த் தொல்குடி மக்களையும் குறித்தது. வச்சிரநந்தியின் காலத்தில் மக்கள் நலப் பணி என்ற மெய்யியல் கோட்பாட்டைக் குறித்தது. கால்டுவெல் காலத்தில் திராவிடம் என்பது திராவிட மக்கள் பேசிய மொழித் தொகுதியைக் குறித்தது. நீதிக்கட்சித் தலைவர்களின் காலத்தில் பார்ப்பனரல்லாத தென்னாட்டு மக்களைக் குறித்தது. தந்தை பெரியார் காலத்தில்தான் திராவிடம் என்ற சொல் அதன் முழுப்பொருண்மையைப் பெற்றுச் சிறப்படைந்தது.

கடல் என்பது ஒரு குறியீடு (ஷிஹ்னீதீஷீறீ), நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரைச் சுட்டிக்காட்டி, அவர் ஒரு பெரிய கடல் என்றால் அளந்தறிய முடியாத கடலின் ஆழத்தைப்போன்று அவர் ஆழ்ந்த அறிவு உடையவர் என்று பொருள்; கடலின் அகற்சியைப் போன்று விரிந்த அறிவுடையவர் என்று பொருள். அருமைப்பாடு மிக்க பல பொருள்களை (முத்து, பவளம், சங்கு) கடல் தன்னகத்தே கொண்டு விளங்குவதைப் போலப், பல்கலை பயின்ற தெளிவும் பன்னூற் பயிற்சியும், பட்டறிவுச் செல்வமும் நிறையப் பெற்றவர் என்று பொருள்.

இதைப் போன்றே திராவிடம் என்பது ஒரு குறியீடு. அது கடலைப்போல் பன்முகப் பொருளாற்றல் கொண்டது. திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும்; இனத்தைக் குறிக்கும்; இயக்கத்தைக் குறிக்கும்; தமிழோடு உறவுடைய பல மொழிகளின் தொகுப்பான ஒரு மொழித் தொகுதியைக் குறிக்கும். தமிழை மட்டுமே குறித்து நிற்கும் இடமும் உண்டு. கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, தன்மானம், சாதி ஒழிப்பு, சம உரிமையுடன் கூடிய சமஉடைமை, அறிவியல் நெறி முதலான பல்வேறு பொருள்களை உணர்த்தும் பன்முகப் பொருளாற்றல் கொண்ட, வலிமை வாய்ந்த ஒரு குறியீட்டுச் சொல்லாகத் திராவிடம் திகழ்கிறது இத்தகைய பொருள்களையும் இச்சொல்லுக்குள் அடக்கி, அதனைச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போல ஆக்கியவர் தந்தை பெரியார் அவர்களேயாவார்கள். இதன் பொருளை உணராத மொழித்திறம் முட்டிய மூங்கைகள் குன்றுமுட்டிய குருவியைப் போல இடர்ப்படுவர் என்பது உறுதி.

தோழர்களே! வரலாற்றை உற்று நோக்கிப் படியுங்கள். நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்துவர எந்த இயக்கம் உற்றுழி உதவியது என்பதை எண்ணிப் பாருங்கள்!

திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் பயின்று வரவில்லை, அதனால் அதனை ஏற்க முடியாது என்கிறார் மருத்துவர் அய்யா! ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டு, தொல்காப்பியத்தில் இல்லை; கலித்தொகையைத் தவிர்த்த பிற சங்க இலக்கியங்களில் இல்லை. தொல்காப்பியத்தில் பயின்று வரும் பல அரிய சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை. அதனால் இவற்றையெல்லாம் நீக்கி விடலாமா? பாட்டாளி என்ற சொல்கூடச் சங்க இலக்கியத்தில் இல்லையே! அதைவிட்டு விடுவீர்களா!

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாட வேண்டிய அவசியம் என்ன என்கிறார்கள். அய்யா! 1912ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆண்டுடன் திராவிடர் இயக்கத்திற்கு அமைப்பு வழியில் நூறாண்டுகள் ஆகிவிட்டன. 1912_-க்கும் 2012_க்கும் இடையில் நூறு ஆண்டுகள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்களேன்! கணக்கிலும் தடுமாற்றமா? நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடாமல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தா கொண்டாடு வீர்கள்!

திராவிடத்தால் எழுச்சி பெற்ற இளைஞர்கள் அரசியல் அதிகா ரத்தையும், ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்றினார்கள். ஆசிரியர் அலுவலர், மருத்துவர், பொறியாளர் என்று பல்கிப் பெருகிய அவர்கள் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அடுத்த தலைமுறை அறிவியல் வளர்ச்சியை உற்றுநோக்கித் தகவல் தொழில் நுட்பத்தை, தன் வயப்படுத்திக் கொண்டுவிட்டது. இன்று உலகெங்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் இளைஞர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! இத்தகைய புரட்சிக்கு யார் காரணம்? தந்தை பெரியாரின் கல்விக் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா இது! தேர்தலில் தோற்றுப் போன வுடன், பதவிகள் பறிக்கப்பட்டவுடன், பார்ப்பனர்களைப் போல பேசுவதும் அவர்கள் உதவியை நாடுவதும் நன்றி மறந்த செயல்!
 http://viduthalai.in/page2/31986.html

No comments:


weather counter Site Meter