Pages

Search This Blog

Showing posts with label விடுதலை தலையங்கம். Show all posts
Showing posts with label விடுதலை தலையங்கம். Show all posts

Saturday, October 9, 2010

அரக்கர்களை அழிப்பதுதான் இந்துப் பண்டிகைகள்-சரி யார் இந்த அரக்கர்கள் ?

தீபாவளியானாலும், சூரசம்ஹாரம் ஆனாலும், இராமாயணக் கதையானாலும் அவற்றின் அடிப்படை நீரோட்டம் என்பதெல்லாம் அரக்கர்களை - அசுரர் களை - அழிப்பதுதான்.

யார் இந்த அரக்கர்கள் - அசுரர்கள்? வரலாற்று ஆசிரியர்கள் பி.டி.சீனிவாச அய்யங்காரிலிருந்து பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர் உள்பட கூறியிருப்பது எல்லாம் - இந்த அரக்கர்கள், அசுரர்கள் என்பவர்கள் எல்லாம் திராவிடர்கள்தாம்; ஆரிய, திராவிடப் போராட்டமே இராமாயணம் என்று விரிவாக எழுதி வைத்துள்ளனர். மகாவிஷ்ணு என்னும் இந்து மதக் கடவுள் எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர் களை - அரக்கர்களைக் கொல்லத்தான். இரணியனை, இராவணனைக் கொன்றதும் அப்படியே! இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நவராத்திரி என்பதும் அரக்கர்களை அழித்ததாகக் கூறப்படும் கதைதான். மாலைமலர் வெளியிட்டுள்ள நவராத்திரி சிறப்பு மலர் என்ன கூறுகிறது?

அரக்கர்களான சும்பன், நிசும்பன் ஆகிய இருவரும் சகோதரர்கள். அக்கிரமத்தின் உச்ச கட்டமாய் அட்டகாசம் புரிந்த இவர்களது ஆட்சியில் மக்கள் மிகவும் துன்புற்றனர். இது பற்றி சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் தேவர்கள் முறையிட்டனர். மூம்மூர்த்தி களும் மகாசக்தியை தோற்றுவித்து. தங்களது ஆயுதங்களை அளித்தனர். சக்தி அழகிய பெண் உரு வத்தில் பூலோகத்தில் வலம் வந்தாள். அரக்க சகோத ரர்களின் வீரர்களான சண்டன், முண்டன் இருவரும், அழகிய பெண் உருவத்தில் இருக்கும் சக்தியைப் பார்த்தனர். தங்களது அரசர்களுக்கு ஏற்றவள் இவள் தான் என எண்ணி சக்தியிடம் தங்களது அரசர்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத் தினர். அப்போது சக்தி, யார் தன்னை போரிட்டு வெல்கிறார்களோ, அவர்களைத்தான் மணப்பேன் என்று சபதம் செய்திருப்பதாகக் கூறினான்.

இதைக்கேட்டு கோபமான சண்டனும், முண்டனும், தேவர்கள், அரக்கர்கள் அனைவருமே எங்களது அரசர் களுக்கு அடிமை; சாதாரண பெண்ணான நீ எம் மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வந்து விடு என்று மிரட்டினார்கள். அதற்கு சக்தி, இதை உங்கள் அரசர் களிடம் போய் சொல்லுங்கள், அவர்கள் என்ன செய் கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினாள். ஆத்திர முற்ற சும்பனும், நிசும்பனும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினார்கள். அவர்கள் அனைவரையும் சக்தி அழித்தாள். அதில் ஒரு அரக்கன் பெயர் ரக்தபீஜன். இவனது உடலிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு ரக்தபீஜனாக உருவெடுத்தது.

உலகமே ரக்தபீஜர்களாக நிறைந்தது. உடனே சக்திதேவி, சாமுண்டி என்ற காளியை தோற்றுவித்து, வாயை அகலமாகத் திறந்து ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். தேவியின் கட்டளையை சாமுண்டி நிறைவேற்ற, இறுதியில் தனது ரத்தமெல்லாம் வெளியேற ரக்த பீஜன் இறந்தான். சும்பன், நிசும்பனையும் சக்தி தேவி அழித்து தர்மத்தை நிலை நாட்டினாள். இதையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

- என்கிறது மாலைமலர் சிறப்பு மலர்.

இதில் அறிவுக்குப் புறம்பான சமாச்சாரங்கள் இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். அரக்கர்கள் என்பவர்கள் யார்? அவர்களையும் படைத்தவர்கள் இவர்கள் கூறும் கடவுள்கள்தானே! அவர்களை ஏன் படைக்க வேண்டும் - பின் அந்தக் கடவுள்களே சண்டையிட்டு அழிக்க வேண்டும்?

இவற்றிற்கு எந்தக் கொம்பனாலும் விடை சொல்ல முடியாதுதான். பக்தியின் பெயரால்தான் மூடத்தனமாக நம்பும் நம்பிக்கையைப் பயன்படுத்தி இப்படி எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள். மக்களும் நம்பி, பண்டிகைகளாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்பொழுது பூதேவர் என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர் என்று தந்தை பெரியார் அவர்கள் இராமாயணக் குறிப்புகள் எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்பொழுது நடப்பது கூட அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஆச்சாரியாரே (ராஜாஜியே) வழிமொழிந் தும் கூறியிருக்கிறார்.

தேவர்கள் - அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று திருவொற்றியூரில் (18.9.1953) பேசியிருக்கிறார்.

காந்தியாரைக் கொன்றதற்காக யாரும் மலர்ச் சியுடன் விழா கொண்டாடுவதில்லை. வேண்டுமானால் பார்ப்பனர்கள் கொண்டாடலாம் - அதன் நோக்கம் வேறு.

பாதிக்கப்பட்ட சமூகம் அத்தகைய நாள்களில் சில உறுதி மொழிகள் எடுத்துக் கொள்வதுதான் பொருத்த முடையதாக இருக்க முடியும்.

அன்றைக்குச் சூழ்ச்சியால் எங்கள் இனத்தவர் களை அழித்த பார்ப்பனர்களே, இனியும் உங்கள் சூழ்ச்சிக்குப் பலியாக மாட்டோம் - பணிந்து விடவும் மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்வது தான் தன்மானத்திற்கும், பகுத்தறிவிற்கும் அழகே தவிர, பாதிப்புக்குக் காரணமானவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்டவனும் குதூகலிப்பது, களியாட்டம் போடுவது, விழா கொண்டாடுவது நமது இழிவை நாமே போற்றுவதாகவும், பாதிப்புக்குக் காரணமானவர் களுக்கு மேலும் வசதி செய்து கொடுப்பதுமேயாகும்.

திராவிடர்கள் சிந்திப்பார்களாக!

Friday, October 8, 2010

ஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவது - எல்லாம் காலாவதியான சரக்கு

ஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவது - எல்லாம் காலாவதியான சரக்கு! இப்பொழுதெல்லாம் அந்த வேறுபாடுகள் காணாமற் போய்விட்டன என்று விரிந்து பரந்த விசால மனம் தங்களுக்கு உண்டு என்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக நீட்டி முழங்கும் நெடுமரங்கள் நம் நாட்டில் உண்டு.

ஜில்லிட்டுப் போன அந்த மனிதர்களுக்குக் கொஞ்சம் சூடுகாட்டி, உண்மையை உணர்த்துவதற்கு ஓர் ஆதாரம்தான் பார்ப்பனர்கள் நடத்தும் தாம்ப்ராஸ் என்னும் மாத இதழ்.

இம்மாத இதழில் பார்ப்பன அமைப்பான தாம்ப்ராஸின் தலைவர் திருவாளர் என். நாராயணன் எழுதியுள்ள தலையங்கக் கட்டுரை ஒன்று போதும் - பார்ப்பனீயத்தை உதறித் தள்ளிவிட்டுப் பிராமணர் என்ற அகந்தையை அகற்றிவிட்டு மனிதர்களாக ஆகி விட்டார்களா, இல்லையா என்று தெரிந்துகொள் வதற்கு.

இன்றைக்குப் பல பிராமணக் குடும்பங்களில் அவரவர்கள் அகத்தில் உரையாடுகின்ற பொழுது பிராமண பாஷை பயன்படுத்தப்படுவதில்லை. பூஜை அறை என்றும், சுவாமி அறை என்றும், பெருமாள் உள் என்றும் ஒவ்வொரு அகத்திலும் இருந்து வந்து, அன்றாடம் காலையில் குடும்பத்தலைவரோ, குடும்பத் தலைவியோ அல்லது ஓர் குடும்ப உறுப்பினரோ ஸ்லோகங்கள் சொல்லி, ஸ்வாமி நமஸ்காரம் செய்து நைவேத்யம், கற்பூர ஹாரத்தி காண்பித்து பூஜை செய்யும் பழக்கமோ, பெரியவர்களும், சிறியவர்களும் கூட்டாக அமர்ந்து கொண்டு ஸ்லோகங்கள் சொல்லும் வழக்கமோ இன்று கடைபிடிக்கப் போவதில்லை என்று தாம்ப்ராஸ் ஏடு குறைப்பட்டுக் கொள்கிறது.

இன்றைய சமூகச் சூழலில், பொருளாதார வளர்ச்சி யில், நுகர்வோர் கலாச்சாரச் சூழலில் பார்ப்பனக் குடும்பங்களில், தாம்ப்ராஸ் கூறும் - அவர்கள் கண்ணோட்டத்தில் குறைபாடுகளாகக் கருதப்படும் நிலைமை உண்மையாகக்கூட இருக்கலாம்.

அத்தகைய பழக்கவழக்கங்கள், ஆச்சார அனுஷ் டானங்களை அன்றாடம் அவர்கள் கடைப்பிடிக்க வில்லை என்பதற்காக - பார்ப்பன உணர்வைத் துறந்துவிட்டார்கள் என்று பொருளல்ல - எந்தச் சம்பிரதாய அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க மறந்தாலும், ஆவணி அவிட்டப் பூணூலை மட்டும் புதுப்பித்துக் கொள்ள மறந்துவிடுவதில்லை - தவிர்ப்பதும் இல்லை.

பயணக் காலங்களில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் இதனைச் சரியாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. சூட்டு - கோட்டு அணிந்திருந்தாலும், அந்தப் பூணூலை அணிவதை மட்டும் தவிர்ப்பதில்லை.

அன்றாட அனுஷ்டானங்களை அவர்கள் அனுசரிப்பதில்லை என்பதைக் குறையாகக் கூறி அவற்றை அனுசரிக்கவேண்டும் என்று அவர்களின் அமைப்பான தாம்ப்ராஸ் வலியுறுத்துவதன் நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வீட்டில் பிராமண பாஷையை ஏன் பயன்படுத்து வதில்லை - அது தவறு - அந்தப் பாஷையைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று பாடம் படிப்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?

பல பிராமண குடும்பங்கள் அவர்களது அன்றாட வாழ்க்கை முறையில் பெரும் Technical Correction செய்யப்படவேண்டிய நிலையில் இருக்கின்றன.

வெகு வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையால் ( Life Style ) நமது கலாச்சாரம், பாரம்பரியம் மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை மனதிலே கொண்டு, நாம் தக்க நடைமுறைகளைக் கடைப்பிடித் தால்தான் நம் கலாச்சாரப் பாரம்பரிய வாழ்க்கை நமது இளைய தலைமுறையினரால் தொடரப்படும்; காப்பாற்றப்படும் என்றும் தாம்ப்ராஸ் ஏடு எழுதுகிறது.

இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? அவர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதில் அவர்கள் கவலை செலுத்துகிறார்கள் என்பதுதானே?

கட்டிக் காக்கப்படும் கலாச்சாரம் என்றால் அதன் பொருள் என்ன? ஜாதியில் உயர்ந்தவர்கள் என்பதைத் தவிர அவர்களின் கலாச்சாரம் என்ன?

வீட்டிலே சமஸ்கிருதத்தைப் பேசவேண்டும் என்று வற்புறுத்துவதன் நோக்கம் என்ன?

நாம் தமிழர்கள் அல்ல; நாம் இனத்தால் ஆரியர்கள் - அதனை மறந்துவிடவேண்டாம் என்று எச்சரிப்பது தானே?

தாக்குதலுக்கு அவர்கள் உள்ளாகி வருகின்றனர் என்பதன் உட்பொருள் என்ன? ஜாதி வேண்டாம் - சமநிலை உருவாக்கப்படவேண்டும் என்று கூறுவது அவர்களைப் பொறுத்தவரை தாக்குவதாக கொள் கின்றனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.

அவர்களுக்கென்று உள்ள அமைப்பானது அவர்களைப் பழைய சனாதனத்தில்தான் கட்டிப் போட விரும்புகிறது - பார்ப்பனக் கலாச்சார வேலியைத் தாண்டி வெளியில் வந்துவிடக் கூடாது என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று எழுதும், கூறும், நம்பும் தமிழர்கள் இந்த நிலைகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கக் கடமைப்படவில்லையா?

ஆவணி அவிட்டத்தை நிறுத்தும்வரை - அவர்கள் எந்த வேடம் தரித்தாலும் அவர்கள்மீது ஆழமாகப் பதிந்த உயர்ஜாதி ஆணவ முத்திரை அழியப் போவதில்லை.
http://www.viduthalai.periyar.org.in/20101008/news04.html

Thursday, October 7, 2010

தார்மீகம் பேசும் பா.ஜ.க.வின் யோக்கியதை

தார்மீகம் பேசும் பாரதீய ஜனதா கட்சியின் யோக்கியதை கருநாடக மாநிலத்தில் அங்க மச்ச அடையாளங்களுடன் வெளிரிப்போய்விட்டது. எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைந்த நாள் தொட்டே, அங்கு உள்கட்சிக் குழப்பம் - பதவிச் சண்டை சிண்டைப் பிடித்துக்கொண்டு பகிரங்கமாகவே நடைபெறத் தொடங்கிவிட்டது.

அமைச்சர்கள் நீக்கம், புதிய அமைச்சர்கள் சேர்க்கை என்பது அங்கு வாடிக்கையான வேடிக்கையாகவே ஆகி விட்டது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி கருநாடக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. நான்கு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். ஆறு புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.

தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கருநாடக எல்லையைத் தாண்டி தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த சொகுசு ஓட்டலில் தங்கினர். 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துவிட்டனர். ஆளுநரும் அதனை ஏற்றுக்கொண்டு வரும் 12 ஆம் தேதி மாலைக்குள் தமது பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களையும், முதலமைச் சருடன் கருத்து மாறுபாடு கொண்ட அமைச்சர்களையும் சரி கட்ட பல முனைகளிலும் கடும் முயற்சியை மேற்கொண்ட எடியூரப்பாவிற்கு இறுதியில் தோல்வி முகம்தான்.

மறுபடியும் சிலருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். உப்பு அதிகமாகப் போய்விட்டது என்று தண்ணீர் ஊற்றுவதும், தண்ணீர் அதிகமாகப் போய்விட்டது என்று உப்பை அள்ளிப் போடுவதும் போன்ற பரிதாப நிலைக்கு, தடுமாற்றத்திற்கு, பெரும் குழப்ப நிலைக்கு ஆளாகிவிட்டார் கருநாடக முதலமைச்சர்.

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் ரூ.30 கோடி கொடுத்து தம் பக்கம் இழுப்பதாகப் பரபரப்புக் குற்றப் பத்திரிகை படித்திருக்கிறார். பா.ஜ.க.வின் யோக்கியதைக்கு இதைவிட வேறு சான்று தேவைப்படாது.

தொடக்கத்தில் ரெட்டி சகோதரர்களால் (இருவருமே அமைச்சர்கள்) பிரச்சினை பேருரு எடுத்தது. கட்சியின் மேலிடம் நேரடியாகத் தலையிட்டு ஒட்டு வேலை செய்துவிட்டுப் போனார்கள். விளக்கெண்ணய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை என்ற நிலைதான் அங்கு.

அமைச்சர் ஒருவர் நண்பர் வீட்டில் தங்கி இருந்தபோது, நண்பரின் மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதைவிட வேறு கேவலம் எங்கேயிருக்கிறது? அடேயப்பா, பக்தியை இவர்கள் போல் கண்களில் ஒற்றிக் கொள்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? தெய்வ பக்தி, தேச பக்தி இரண்டும் இரண்டு கண்கள் என்பார்கள். இவர்களின் தெய்வ பக்தி, தங்கி இருந்த வீட்டுக்கே ரெண்டகம் செய்வதுதானா? இவர்கள்மீது குற்றம் சொல்லி என்ன பயன்? இவர்கள் நம்பும், வழிபடும் இந்து மதக் கடவுள்களின் யோக்கியதைகளே இந்தத் தரத்தில்தானே இருக்கின்றன? சின்ன வயதில் வெண் ணெய்யைத் திருடினான் என்றும், வாலிப வயதில் பெண்ணைத் திருடினான் என்றும் தங்கள் கடவுள்கள்பற்றிப் பெருமையாக பேசும் இவர்களின் புத்தியும், செயல்பாடுகளும் இவற்றை மீறி இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவிருந்த காட்டா சுப்பிரமணிய நாயுடு நில மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டார். இதுபற்றி மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கும்போதே, சம்பந்தப்பட்ட அமைச்சரின் மகன் சாட்சியத்தைக் கலைக்க லஞ்சம் கொடுத்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டு, இப்பொழுது சிறைக் கொட்டடியில் கிடக்கிறான்.

தென்மாநிலத்தில் கருநாடகத்தைப் பிடித்துவிட்டோம்; அடுத்தடுத்து தென்னக மாநிலங்களில் எங்கள் ஆட்சி வரும் என்று இறுமாப்போடு பேசிக் கிடந்தவர்கள், கைக்குக் கிடைத்த அந்த ஒரே ஒரு மாநில ஆட்சியைக்கூடத் தக்க வைத்துக்கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுவிட்டது. பொதுமக்கள் வெறுப்படையக் கூடிய செயல்பாடுகள்தான் நாள்தோறும் - நாள்தோறும்.

கோயில் கோயிலாகச் சென்று கும்பிடு தண்டம் போட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மூட நம்பிக்கையில் கிடந்துழலுகிறார் முதலமைச்சர் எடியூரப்பா.

கருநாடக மாநிலத்தில் உள்ள கோயில்கள் போதாது என்று தமிழ்நாட்டுக் கோயில்களுக்கெல்லாம் சென்று கும்பிடு தண்டம் போட்டு, நன்கொடைகளை வாரி இறைத்து வருகிறார்.

தம்மைச் சுற்றியுள்ள சொந்தக் கட்சிக்காரர்கள்மீது நம்பிக்கையை இழந்து, குழவிக் கற்கள்மீது நம்பிக்கை வைப்பவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் - வெட்கக்கேடு.

சோ ராமசாமிகளும், குருமூர்த்திகளும் என்னதான் முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும், உண்மைதான் விஞ்சி நிற்கும் - அதுதான் இப்பொழுது கருநாடக மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது!

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், எடியூரப்பாவின் கீழ்க்கண்ட ஒப்புதல் வாக்குமூலமே பா.ஜ.க.வின் யோக்கிய தைக்குப் போதுமானது.

ஓட்டுக்காக அரசியலில் புகுந்து பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள செய்யக் கூடாத பணிகளைச் செய்து வருகிறோம்.

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம். மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலைதூக்கிய போதும், அமைச்சரவையின் பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினா மாவை ஏற்றுக்கொண்ட போதும், நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுயநலத்திற்காக அரசியலில் மூழ்கி உள்ளதால், மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம் என்று கூறியவர் வேறு யாருமல்லர் - கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா - மறைந்த கரு நாடக மாநில முதலமைச்சர் அனுமந்தய்யாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார் (தினமலர், 4.12.2009).

தனக்குத்தானே இப்படி ஒரு நடத்தைச் சான்றிதழைக் கொடுத்துவிட்டார்; வேறு விளக்கமும் தேவையோ!
http://www.viduthalai.periyar.org.in/20101007/news07.html

Monday, October 4, 2010

இமயமலையை இலைச் சோற்றில் மறைக்க முயலும் தினமணிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் அடையாளம் காண் பார்களாக!

இலைச்சோற்றில்இமயமலையை மறைக்கும் வேலை(1)
பொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு அமைய வேண்டும் என்பதற்கான நியாயங்களைக் கற்பித்து தினமணியில் (2.10.2010) விரிவான சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
1) ஜாதியால் ஆதிக்க வர்க்கம், ஆளப்படுகிற வர்க்கம் என இருந்த காலத்தில், ஆதிக்க வர்க்கத்திற்கு இணையாக ஆளப்படும் வர்க்கமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார நிலைகளில் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், உன்னதமான தலைவர்களால் உருவாக் கப்பட்டதுதான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு. இது அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது.
அன்றைய கால கட்டத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, முக்கிய பதவிகள் போன்றவற்றில் உயர் ஜாதிப் பிரிவினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இதனால் அன்று ஜாதிவாரியாக இடஒதுக்கீட்டுக்கான அவசியம் இருந்தது. ஆனால், இப் பொழுது கல்வி, வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் போன்ற வற்றில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனை வருமே ஏற்றத் தாழ்வு இன்றி இடம் வகித்து வருகின்றனர். சமூகத்திலும் ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு பார்க்கப்படாமல் அந்தஸ்திலும் உயர்ந்துள்ளனர்... உயர் வகுப்பினர் பலர் கல்வி, வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் போன்றவற்றில் பின் தங்கிய நிலைக்குச் சென்று கொண்டிருக் கின்றனர் என்று காரணம் கற்பித்து, பொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தினமணியின் சிறப்புக் கட்டுரை கூறுகின்றது.
ஒரு உண்மையைக் காலம் தாழ்ந்து தினமணி ஒப்புக் கொண்டுள்ளது. ஜாதி ஆதிக்கம் ஒரு காலத்தில் இருந்தது; அவர்கள் மற்றவர்களை அடக்கி யாண்டனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது - இது உண்மையான உள்ளத்தின் மாற்றமாக இருக்குமேயானால் அதனை வரவேற்கவே செய்கிறோம்.
அந்தக் காலத்தில் ஏற்றத் தாழ்வு இருந்து வந்தது உண்மைதான். இப்பொழுது ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு கிடையாது என்று அடித்துக் கூறும் தினமணியை நோக்கி நாம் எழுப்பும் வினாக்கள் உண்டு.
(அ) இந்து மதப்படி, இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டதா?
(ஆ) ஆதிக்க ஜாதி என்று தினமணி அடிகோடிட்டுக் காட்டுகிறதே- அந்த ஜாதியினர் ஆண்டுதோறும் பூணூலைப் புதுப்பிப்பதும், தங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு பூணூல் கல்யாணம் நடத்துவதும் ஏன்? ஜாதி ஆதிக்க உணர்வு அவர்களிடம் இல்லை என்று தினமணியால் தீர்க்கமாகக் கூற முடியுமா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி ஆதிக்கச் சமுதாயத்தில் எவ்வளவு மகத்தானது - மாற்றத்துக்கான அடிப்படையானது. அதனை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று கொண்டிருப்பது - ஏன்?
சங்கராச்சாரியார்கள் வக்காலத்து வாங்குவது - ஏன்? திருமணம் என்று வரும்போது இன்னும் எத்தனைப் பேர் ஜாதிக் கடலைக் கடந்து நீந்தி வருகின்றனர்? இதற்கு அடுத்த கட்டுரையில் தினமணி பதில் சொல்லுமேயானால் அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கக் காத்துக் கிடக்கிறோம்.
இரண்டாவதாக, தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் டோரும் கல்வி, வேலை வாய்ப்புகளில் மிகவும் முன்னேறி விட்டனர்; எனவே அவர்களுக்கு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையில்லை என்னும் தினமணியின் கருத்துக் குறித்து...
இவர்கள் முன்னேறி வருகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத் தயார்; அதே நேரத்தில் அந்த சதவிகிதம் அவர்களின் மக்கள் தொகைக்கு நிகராக எட்டப்பட்டுள்ளதா?
மத்திய அரசுத் துறைகளில் குரூப் 1 என்ற பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிட்டியுள்ள சதவிகிதம் 13; பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ளது. 5.4 சதவிகிதம். குரூப் பி பிரிவில் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்றுள்ள விழுக்காடு 14.5; பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்திருப்பது 4.2 சதவிகிதம் சி பிரிவில் தாழ்த்தப்பட்டோருக்கு 16.4 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோரில் 6.4 சதவிகிதம். டி பிரிவில் தாழ்த்தப்பட்டோர் 18.3; பிற்படுத்தப்பட்டோர் 5 சதவிகிதத்தை அனுபவிக்கிறார்கள்.
உண்மை இவ்வாறு இருக்க தினமணி உண்மையைத் தலை கீழாகக் காட்டும் புரட்டு வேலையில் ஏன் ஈடுபட வேண்டும்?
இதில் குறிப்பிட்டு ஓங்கி அடித்துச் சொல்லும் மிகப் பெரிய உண்மையைக் காவிக் கொடியில் மறைக்கப் பார்க்கிறது தினமணி.
அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த தேதியிலிருந்து (1950 சனவரி 26) இடஒதுக்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகத் தகுதி உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, அவ்வாறு அளிக்கப் பட்டதா? அவ்வாறு அளிக்காமல் சதி செய்தோர் யார்?
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட காகா கலேல்கர் ஆணையத்தின் சிபாரிசுகள் புதை குழிக்குப் போனதன் பின்னணியில் இருந்த பொல்லா மனிதர்கள் யார்? அதுபற்றி எல்லாம் தினமணி எப்பொழுதாவது கண்டு கொண்டது உண்டா?
மண்டல் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த விடாமல் தடுத்தவர்களைத் தடி கொண்டு தாக்கியதுண்டா தினமணி?
1990இல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதானே முதன் முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் (அதிலும் கல்வியில் இல்லை) 27 விழுக்காடு இடஒதுக்கப் பட்டதுண்டு- இந்தச் சமூக நீதி ஆணைக்காக தமது ஆதரவை விலக்கிக் கொண்டு அந்த ஆட்சியைக் கவிழ்த்ததே பா.ஜ.க. - நினைவிருக்கிறதா?
அந்த ஆணையையும் எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே 1992இல் தானே செயல்படுத்தப்பட்டது. கல்வியில் இடஒதுக்கீடு என்ற சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்றுவரை எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள்?
இமயமலையை இலைச் சோற்றில் மறைக்க முயலும் தினமணிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் அடையாளம் காண் பார்களாக!

Saturday, October 2, 2010

காந்தியார் பிறப்பும் - காமராசர் மறைவும்

இன்று காந்தியார் அவர்களின் பிறந்த நாள் (1869). பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் நினைவு நாள் (1975).

இந்த இரு தலைவர்களும் நாட்டு மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்கள்; பொதுத் தொண்டில் அப்பழுக்கற்ற மாமணிகளாக ஒளி வீசியவர்கள்.
இவர்களை இந்நாளில் நினைப்பது என்றால், மாலை மரியாதைகள் மட்டுமல்ல - மனிதகுலம் சிந்திக்கவேண் டிய கூறுகள்பற்றி சிந்திப்பதுதான் சீலமானதாகும்.

காந்தியாரின் பிறந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காந்தியார் என்று நினைக்கும்பொழுது, அவரின் இந்த அகிம்சை அனை வருக்கும் நினைவிற்கு வருவது இயல்பானதுதான். அதேநேரத்தில், அந்த அகிம்சா மூர்த்தி வன்முறையால் தான் மறைய நேரிட்டது என்பது கவனிக்கத்தக்க சான்றாகும். மத நம்பிக்கையாளரான காந்தியார் மதவாத நம்பிக்கையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
காந்தியாரின் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ அவரைக் காப்பாற்றவில்லை என்பது ஒரு சிந்தனை. மத நம்பிக்கையாளர்கள் மனிதநேயக் காரர்கள் அல்லர்; நன்னெறிகளை நம்பிக் கடைப்பிடிப் பவர்களும் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு - உன்னதமான ஒரு மாமனிதரை திட்டமிட்டுக் கொலை செய்ததாகும்.

நான் ஒரு சனாதன இந்து என்று காந்தியார் அவர்கள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருந்தும், நம்பியிருந்தும், அந்த இந்துவை இந்துத்துவா சக்திகள் விட்டு வைக்கவில்லை.

இந்துத்துவா என்பது இந்துக்களை ஒற்றுமைப் படுத்தக் கூடியது - இந்து மக்களுக்குப் பாதுகாப் பானது என்பது கடைந்தெடுத்த பொய் என்பது தெற்றென விளங்கிவிட்டது. ஒரு சனாதன இந்துவை - ஒரு சனாதன இந்துக் கும்பலே கொன்று முடித்து, இனிப்பு வழங்கியதன்மூலம் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் வேறு கோணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் ஆகிவிடவில்லையா?

இந்துவாக உள்ள ஒருவர் நியாயவாதியாக, பொதுத்தன்மை வாய்ந்தவராக இருக்க முடியாது. அப்படியிருந்தால், அத்தகையவரை இந்துத்துவா காவிகள் காவு கொடுத்துவிடுவார்கள் என்பதும் காந்தியார் கொலை நாட்டு மக்களுக்குச் சொல்லித் தரும் சொக்கத்தங்கமான பாடமாகும்.

காந்தி இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார் காந்தி. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று கூறியுள்ளார் தந்தை பெரியார் (விடுதலை, 13.1.1965).

இந்துத்துவா என்று சொல்லும்பொழுது இந்து மதத்தின் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதையும்விட, வருணாசிரமத் தன்மையில் முதல் இடத்தில் உரிமைகளை அனுபவிக்கக் கூடிய பார்ப் பனர்களின் நலனைச் சார்ந்ததைத்தான் முக்கியமாகக் கருதப்படுகிறது.
பார்ப்பனர்களைப்பற்றி காந்தியார் தெளிவாகக் கணிக்கத் தொடங்கினார்.
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினரும் ஜாதி இந்துக்களானால், அவர்கள் சிறுபான்மைக் கட்சியினர் ஆவார்கள். பிரிட்டீஷார் வெளியேறி, இந்தியாவில் சுதந்திரத்தை நிலைநாட்டிய பின், இருந்த இடம் தெரியாமல் அவர்கள் அழிந்து போக வேண்டியதுதான் (திராவிட நாடு, 12.2.1947) காந்தியாரின் இந்தக் கணக்குக்குப் பிறகும், பார்ப்பன சக்திகள் விட்டு வைப்பார்களா? பார்ப்பனர்களின் கடந்தகால வரலாற்றை நன்கு உணர்ந்தவர்கள் இதனை இம்மியளவு அய்யமின்றி உணர்ந்து கொள்வார்களே!
அழிந்து போவார்கள் என்று சாபமிட்டவரை அழித்துவிட்டனர் பார்ப்பனர்கள்.
பச்சைத் தமிழர் காமராசரைப் பொறுத்தவரை - அவரும் மதவாத சக்திகளால் கொலை செய்யப்பட வேண்டியவராகவே இருந்தார். குறிப்பாக பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலே காந்தியாரைக் கொன்ற கா(லி)விக் கும்பல் கொலை செய்ய எத்தனித்ததா இல்லையா? (7.11.1966).
இந்தக் கொலைக் கும்பலில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், சங்கராச்சாரியார், சாதுக்கள் இடம்பெற்றி ருந்தனரே!
காந்தியாரின் பிறந்த நாள் - காமராசரின் மறைவு நாள் தரும் சிந்தனை என்ன?
மதவெறியை மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்! என்றார் தமிழர் தலைவர் கி. வீரமணி.

Thursday, September 30, 2010

சிங்க இளைஞனே, சிலிர்த்தெழு!-திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல்

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற (29.9.2010) திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல், கலந்துகொண்ட இளைஞரணியினருக்கு மட்டு மல்ல, கழகத் தலைவர் உள்பட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், நன்னம்பிக்கையினையும் ஏற்படுத்திவிட்டது.
ஓர் இயக்கத்தின் - ஓர் அமைப்பின் எதிர்காலம் என்பது அந்த இயக்கத்தின், அந்த அமைப்பின் இளைஞர்கள் தம் பலத்தைப் பொறுத்ததே!
அதுவும் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம்பற்றிச் சொல்லவே தேவையில்லை. நான் இளைஞர்களை நேசிக்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியது இந்த அர்த்தத்தில்தான்.
இன்றைய சமூக அமைப்பில் அரசியல் என்பது பளபளப்பானது - கலைத்துறை - சினிமாத் துறை என்பது கவர்ச்சிக்குரியது. இந்த இரண்டையும் தாண்டி கொள்கை, கோட்பாடு, இலட்சியம் கண் ணோட்டத்தோடு திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்கள் படையெடுக்கிறார்கள் என்றால், அது ஒன்றும் சாதாரணமானதல்ல.
இம்மாதம் சீர்காழியில் நடந்த மண்டல மாநாட்டில்கூட பொறுக்குமணி போன்ற இளைஞர் கள் கழகத்திற்கு வந்து சேர்ந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மற்றும் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் கிடைத்துள்ள செய்தி இதனை உறுதிப்படுத்துகிறது.
இளைஞர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல் என்று தமிழர் தலைவர் கூட்டத்தில் தெரி வித்தது - கவனிக்கத்தக்கது - கருத்தூன்றிச் சிந்திக்கத் தகுந்ததாகும்.
மதப் போர்வையில் நாட்டில் நடக்கும் சண்டை, சச்சரவுகள், கலவரங்கள் (உலகம் எங்கும் கூட) ஜாதிப் பிரச்சினைகள், தீண்டாமைக் கொடுமைகள், ஊடகங்களின் போக்குகள், கலைத் துறைகளின் காமக் களியாட்டங்கள், சமூகநீதிக் களத்தில் மத்திய தேர்வாணைக் குழுவின் தில்லுமுல்லுகள், இது தொடர்பாக நீதிமன்றத்தின் போக்குகள், மதவெறியைக் கிளப்பிவிட விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் நடத்தும் விஷம வேலைகள் - இவற்றை எல்லாம் எதார்த்தமாகக் காணும் இளை ஞர்கள் மத்தியில் புதிய சிந்தனை மின்னல் சிறகடிக் கிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்மையில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளும், சமூகநீதித் தத்துவங்களும், கலாச்சாரக் கண் ணோட்டமும், மனிதநேயக் கண்ணோட்டமும், ஜாதி ஒழிப்புப் பார்வையும்தான் - இன்றைய சிக்கல் களுக்குச் சரியான தீர்வுகளாக இருக்க முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கை இளைஞர்களை இயக்கத்தின் பக்கம் இழுத்து வருகிறது என்றே கருதவேண்டும்.
மற்ற மற்ற மாநிலங்களில் மதவாத சக்திகள், குறிப்பாக இந்துத்துவா சக்திகள் நாளும் நடத்தி வரும் வன்முறைகள், அமைதியைக் குலைக்கும் முயற்சிகளைத் தெரிந்துகொண்டுள்ள இளைஞர் கள், தமிழ்நாடு இந்தத் தன்மையிலிருந்து விலகி அமைதிப் பூங்காவாக மணம் வீசிக் கொண்டிருப்ப தற்குக் காரணம் - தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், சிந்தனைகள் இங்குப் பலமாக வேர்ப் பிடித்திருப்பதுதான் என்ற முடிவுக்கு வந் துள்ளனர். மக்கள் மத்தியில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் பூக்கப் புயல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பது திராவிடர் கழகமே என்று தெரிந்துகொண்ட நிலையில், இந்த இயக்கம்தான் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்பதை உள்வாங் கிக் கொண்டு, கழகத்தை நோக்கி வருகிறார்கள்.
குறிப்பாக, கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களை நாம் இலக்காகக் கொண்டு உரிய பிரச்சார யுக்திகளை வகுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
மாணவர் கழகத் தோழர்களே, இளைஞரணி வீரர்களே! உங்கள் கவனம் தமிழின இளைஞர் களின் மூளையின்மீதே இருக்கட்டும்! அதன்மீது பூட்டப்பட்ட மூட விலங்குகளிலிருந்து அவர்களை விடுவிப்பதில் சதாகவனம் செலுத்துங்கள்.
ஏடுகளைக் கொண்டுபோய் போடுங்கள்; நூல்களைக் கொடுத்து உதவுங்கள்; கொள்கைப் பிரச்சார இடத்திற்கு அழைத்து வாருங்கள்; இவற்றை முறையாகச் செய்துவிட்டால், அந்த மாணவர்கள், இளைஞர்கள் பெரியார் திடலின் முகவரி தேடிப் பறந்து வருவார்கள் - இதில் அய்யத்திற்கே இடமில்லை.
சிங்க இளைஞனே சிலிர்த்தெழு! தன்மானச் சிங்கமாம் நம் தலைவர் தந்தை பெரியார் அவர் களின் கொள்கை என்ற ஆயுதத்தைக் கையில் எடுங்கள்! செயல்படுங்கள்!! வெற்றி நமதே!!!
http://www.viduthalai.periyar.org.in/20100930/news04.html

Monday, September 27, 2010

நாயினும் கேடா தாழ்த்தப்பட்டோர்?

மத்தியப் பிரதேசம் போபாலில் நடைபெற்றுள்ள சம்பவம், இந்தியாவில் இந்து சமூக அமைப்பில் இந்த 2010 ஆம் ஆண்டிலும்கூட நாடு எந்த அளவிற்குக் கீழிறக்கத்தில் இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டே!
ராம்பால்சிங் என்ற ராஜபுத்திர ஜாதியைச் சேர்ந்தவர் ஷெரு என்ற கலப்பு இனத்தைச் சேர்ந்த நாயை வளர்த்து வந்துள்ளார்.
சுனிதா ஜாடவ் என்ற தாழ்த்தப்பட்ட பெண் ரொட்டித் துண்டு ஒன்றை அந்த நாய்க்குப் போட அந்த நாயும் வாலை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாகச் சாப்பிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண் போட்ட ரொட்டித் துண்டை தனது வளர்ப்பு நாய் சாப்பிட்டதைப் பார்த்துவிட்ட அந்த உயர்ஜாதிக்காரர் ஆத்திரப்பட்டார், வாய்க்கு வந்தவாறு அந்தத் தாழ்த்தப்பட்ட பெண்ணைத் திட்டித் தீர்த்துள்ளார். செருப்புத் தைக்கிற பெண்ணே, நீ எப்படி என் நாய்க்கு உங்க வீட்டு ரொட்டியைப் போடலாம்? என்று திட்டியுள்ளார்.
அதோடவாவது அவர் சீற்றம் தணிந்து போய்விட வில்லை! ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. நாய் ஜாதி விலக்குச் செய்யப்பட்டது. இனி அந்த நாய் உயர்ந்த ஜாதிக்காரரான அந்த ராஜபுத்திரர் (ராஜ்புட்) வீட்டில் இருக்கக் கூடாது; தாழ்த்தப்பட்டவர் வீட்டில்தான் - சேரியில்தான் இருக்கவேண்டும். அதோடு மட்டுமல்ல; அந்தத் தாழ்த்தப்பட்ட பெண் ரூ.15 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என்று ஊர்ப் பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூறினார். (இதுதான் ஊர்ப் பஞ்சாயத்தின் நிலைமை!).
அர்த்தமுள்ள இந்து மதம் குறித்து வாய் கிழியப் பேசுவோர் இந்தக் கேவலமான செயல்பாட்டுக்கு என்ன வெங்காய விளக்கம் - விளக்கெண்ணெய் சப்பைக்கட்டு சொல்லப் போகிறார்கள்?
இவ்வளவுக்கும் அந்த நாய்க்கூட கலப்பின வகையைச் சார்ந்ததுதான். நாய் கலப்பு ஜாதியைச் சார்ந்தது என்றால், அங்கு ஜாதி பார்க்கப்படுவதில்லை. ஆனால், அந்த ஜாதி மறுப்பு நாய்க்கு ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ரொட்டித் துண்டைப் போட்டால் அங்கு மட்டும் ஜாதி பார்க்கப்படுகிறது என்றால், இதன் பொருள் என்ன?
தன்னை வளர்க்கும் எஜமான் என்ன ஜாதி? தனக்கு ரொட்டித் துண்டைப் போட்ட அந்தப் பெண் என்ன ஜாதி என்று அந்த நாய் பொருட்படுத்தவில்லை.
ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் - செல்வந்தன் மட்டும் ஜாதி பார்க்கிறானே! ரொட்டித் துண்டில்கூட ராஜபுத்திர ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று பிரிவு இருக்கிறதோ!
வட மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் மிக வெளிப்படையாக நடந்து வருகின்றன. மதவாத சக்திகள் அங்கு காலூன்றி நிற்கின்றன! செத்துப் போன பசுமாட்டின் தோலை உரித்த அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சங் பரிவார்க் கும்பலால் படுகொலை செய்யப்படவில்லையா?
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவிருந்த பாபுஜெகஜீவன்ராம், வாரணாசியில் டாக்டர் சம்பூர்ணா னந்து சிலையைத் திறந்தார் என்பதற்காக - காசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயர்ஜாதி ஆணவம் பிடித்த மாணவர்கள், அந்தச் சிலையை கங்கைத் தண்ணீரை ஊற்றிக் கழுவவில்லையா? காரணம் பாபுஜெகஜீவன்ராம் செருப்புத் தைக்கும் ஜாதியைச் சேர்ந்தவராம்!
பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வைக் கற்பிக்கும் இந்த இந்து சமூக அமைப்பின் வருணக் கொடுமை அமைப்பு முறையை ஒழித்துக் கட்டுவதற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கின்றனர் இந்த நாட்டில் உள்ள படித்த மேதாவிகள்? எழுத்தாளர்களான அறிவு ஜீவிகள்? இவர்களில் பெரும்பாலோர் மேல்ஜாதி ஆணவக்காரர்கள் என்பதுதானே இதற்குக் காரணம்? ஊடகங்கள் எல்லாம் உயர்ஜாதிக்காரர்களின் உடைமையாக இருப்பது இன்னொரு முக்கியக் காரணம் இல்லையா?
சரி, அவர்கள்தான் இதற்காகக் குரல் கொடுக்க வில்லை; குரல் கொடுக்கக் கூடிய - போராடக் கூடிய அமைப்புகளுக்காவது ஆதரவுக் கரம் நீட்டுவதுண்டா? ஆதரவு தெரிவிக்காததோடு மட்டுமல்ல; குறுக்குச்சால் ஓட்டி குற்றப் பத்திரிகை வாசிக்காமல் இருக்கிறார்களா?
இந்தியா வளர்கிறது - ஒளிர்கிறது என்பதன் இலட்சணம் இதுதானா? இதில் கடைந்தெடுத்த வெட்கக்கேடு - இது தொடர்பாக பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண் காவல் துறையிடம் புகார் கொடுத்தால் அதனை உடனடியாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கூட காவல்துறை தயாராக இல்லை!
இதுதான் இந்தியாவில் தீண்டாமை ஒழிப்பின் யோக்கியதை - நிருவாக இயந்திரத்தின் அடிநாதம்!
தந்தை பெரியார்தம் கருத்துகளும், அண்ணல் அம்பேத்கர்தம் சிந்தனைகளும் மக்கள் மத்தியில் பரவினாலொழிய - வேர்பிடித்தாலொழிய - இதற்குப் பரிகாரம் காண முடியாது.
வெறும் தீண்டாமை ஒழிப்பு என்ற ஏட்டுச் சுரைக்காய் சட்டத்தை வைத்துக்கொண்டு இருக்கும்வரை இதற்கு நிரந்தரத் தீர்வும் காணப்பட முடியவே முடியாது.
தீண்டாமை ஒழிப்பு என்பதற்குப் பதில், ஜாதி ஒழிப்பு என்று திருத்தி, அதனைச் செயல்படுத்திட கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்படாதவரை, பார்ப்பனர்களும், ராஜபுத்திரர்களும், உயர்ஜாதியினரும் இங்கே துள்ளித் திரியத்தான் செய்வார்கள். மற்றவர்கள் நாயினும் கேடாக மதிக்கப்படும் அவலம்தான் தொடரும் - எச்சரிக்கை!

Sunday, September 26, 2010

இந்தியா முழுமையும் சமஸ்கிருதப் பள்ளிகளா?


மதுரைப் பதிப்பு மாலை முரசு ஏட்டில் (21.9.2010) கீழ்க்கண்ட சேதி இடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பண்டைக் காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்த சமஸ்கிருத மொழி படிப்படியாக தனது செல்வாக்கை இழந்தது. இருப்பினும் செம்மொழி என்ற தகுதியுடைய சமஸ்கிருத மொழி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்வதால், சமஸ்கிருத கல்விக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதையடுத்து, முதலாவதாக மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் சமஸ்கிருதப் பள்ளி தொடங்கப்படுகிறது.
இதில் 55 சதவிகித இடங்கள் அகில இந்திய பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக ஒதுக்கப் பட்டுள்ளன. 15 சதவிகித இடங்கள் ஏழை, எளிய மாணவர் களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் பொதுப் பிரிவின்கீழ் வருகின்றன. பொதுவாக 25 சதவிகித இடங்களை நலிந்த பிரிவினருக்கு ஒதுக்குவது வழக்கம்.
ஆனால், சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களில் 15 சதவிகித இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதால், இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெறலாம். அதன் வாயிலாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது பட்டியலில் இந்தியாவில் 22 மொழிகள் இருக்கின்றன. இதில் சமஸ்கிருதம் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், இம்மொழி செத்த மொழியாகக் கருதப்படும் (Dead Language) நிலையில் உள்ளது.
இந்தியா (1999) பப்ளிக்கேஷன் டிவிஷன் (Ministry of Information and Broadcasting, Govt of India) இந்தியாவில் 18 மொழிகள் பேசும் மக்களின் புள்ளி விவரங்களை வெளி யிட்டுள்ளது. 1971 இல் 2212 பேர், 1981 இல் 6106 பேர், 1991 இல் 49,736 பேர், 1971 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் சூநபடபைடெந என்றும் 1991 இல் வெறும் 0.01 சதவிகிதம் என்றும் அதிகாரப்பூர்வமான மத்திய அரசின் தகவலாக வெளியிடப் பட்டுள்ளது. 1971 மற்றும் 1981 இல் புறக்கணிக்கத்தக்க (Negligible) என்ற சொல்லையே இந்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்ப்பனர்கள் உள்பட நாட்டு மக்களால் புறக்கணிக்கப் பட்ட செத்த மொழிக்கு உயிரூட்டும் வேலையில் மத்திய அரசு ஏன் இறங்கியுள்ளது என்பது முக்கியமான கேள்வியாகும்.
பெரும்பான்மை மக்களின் பணம் சிறுபான்மைப் பார்ப் பனர்களின் தாய்மொழி என்கிற காரணத்தாலும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அச்சமூகத்தவர் என்பதாலும்தானே இந்த விரயம்?
குடிஅரசான பத்து ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும் என்று இந்திய அரசமைப்பின் 45 ஆம் பிரிவு அறுதியிட்டுக் கூறியிருந்தும், பல பத்தாண்டுகள் பறந்தோடியும் அந்த நிலை எட்டப்படவில்லை.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மறுபடியும் 86 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இன்றைய நிலையில்கூட, இந்தியாவில் எழுத்தறிவு என்பது 64.84 சதவிகிதம்தான்; இதில் பெண்கள் 54.16 சத விகிதம்தான்.
கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விடுபவர்களில் பழங்குடியினர் 87.7 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட வர்கள் 86.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோர் 75.1 விழுக்காடு என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. (செப்டம்பர் 8, 2006, எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி).
இந்த வெட்கம் கெட்ட நிலையில், கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை என்ற பழமொழிக்கேற்ப, செத்துச் சுண்ணாம்பாகிப் போன ஒரு மொழியைக் கற்பிக்க இந்தியா முழுமையும் கல்விக் கூடங்கள் திறக்கப்படுகின்றன என்றால், இதன் பொருள் என்ன?
1925 இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொன்னாரே - வெள்ளைக்காரன் வெளியேறிய சுதந்திர இந் தியாவில் டெமாக்கிரஸி இருக்காது; மாறாக பிராமினோ கிரஸிதான் இருக்கும் என்றாரே - அதுதானே இதன் பொருள்?
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒரு ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து, கோடிக் கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழுதார்கள். திராவிடர் கழகம்தான் அப்பொழுதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தது. தமிழையும் அவ்வாறு அறிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார். முதலமைச்சர் கலைஞர் அவர்களும் வேண்டுகோள் விடுத்தார். கடைசிவரை அந்தப் பார்ப்பன நந்தி அசைந்து கொடுக்கவில்லையே.
இப்பொழுது மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காங்கிரஸ் தலைமையில், மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது. ஆட்சி மாறினாலும், அடிப்படையில் பார்ப்பனத் தன்மை என்கிற நங்கூரம் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு அடை யாளமாக இதனைக் கருதவேண்டியுள்ளது.
55 சதவிகித இடங்கள் அகில இந்தியப் பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக இத் தகைய சமஸ்கிருதப் பள்ளிகளில் இடங்கள் ஒதுக்கப்படுமாம்.
ஈரோட்டு நுண்ணாடியைக் கொண்டு பார்த்தால், இதில் நெளியும் கிருமிகள் யாவை என்பது எளிதில் விளங்கிவிடுமே.
மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் இடம்பெற்றிருக்கும் வேலை வாய்ப்பு 12 சத விகிதத்தைத் தாண்டாத நிலையில், மீதி உள்ள இடங்களை ஆக்கிரமித்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர் களுக்குத்தான் இந்த 55 விழுக்காடு இடங்கள். பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளுக்கு 55 விழுக்காடு என்று நேரடியாகச் சொல்லாமல் - கொஞ்சம் சுற்றி வளைத்து மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் அதிகாரிகள் வீட்டுப் பிள்ளைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள இதர கட்சிகள் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்குமாக! தடுத்து நிறுத்துமாக!

weather counter Site Meter