Pages

Search This Blog

Showing posts with label வாழ்வியல் சிந்தனைகள். Show all posts
Showing posts with label வாழ்வியல் சிந்தனைகள். Show all posts

Wednesday, March 2, 2011

மருத்துவமனைகளைவிட மருத்துவ மனங்கள் முக்கியம்(வாழ்வியல் சிந்தனைகள்)

கோவையின் தொண்டறச் செம்மல் டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்களது மிகப் பரந்து வளர்ந்தோங்கி நிற்கும் மருத்துவ, கலை அறிவியல், கணினித் துறை, செவிலியத் துறை முதலிய பல்கலைக் கல்விக் கூடங்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சீரிய செயலாற்றல் மிக்க புத்தாயிரத்து இந்தியக் குடிமகன் என்ற விருது வழங்கி, அவர்களை ஊக்க, ஊட்டச் சத்தாக இளைய தலைமுறை யினருக்குக் காட்டி எழுச்சியூட்டக் கூடிய தனித்தன்மையான விழா எடுத்து பெரு மிதம் சேர்க்கிறார்.

இவ்வாண்டு ஆந்திராவின் மிகப் பெரிய நிருவாகியும், சேவையாளருமான வெங்கட் சங்கவள்ளி எம்.பி.ஏ. அவர் களுக்கும், எனக்கும் விருது அளித்துப் பெருமைப்படுத்தினார்.

எனக்கு இது மிகவும் சங்கடமாக அமைந்தபோதிலும், 26 ஆண்டுகளுக்கு முன் (1985 வாக்கில்) எனக்கு கோவை யில் மாரடைப்பு (Heart Attack) முதன் முதலில் நள்ளிரவில் திடீரென்று வந்த நிலையில், அவரது கே.ஜி. மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரு டைய அருமையான சேவை, கவனிப்பு கண்காணிப்பு மூலம் நான் மீண்டும் புதுவாழ்வு பெற்றேன் என்பதால் அவரது விருப்பத்தை அன்புக் கட்டளையாகவே ஏற்று மறுப்பேதுமின்றி ஒப்புக் கொண்டு சென்றேன் - இணையரோடு.

அவ்விழா எளிமை, இனிமை, விருந் தோம்பல், உற்சாகம், மாணவ சமுதாயத் தின் எடுத்துக்காட்டான கட்டுப்பாடு - இவைகளின் எடுத்துக்காட்டாக நடை பெற்ற விழாவாகும்!
கூட்டுக் குழு வெற்றி (Team Spirit) என்பது அன்னார் அருமைச்செல்வன் அசோக் பக்தவத்சலம் தலைமையில் அவரது சக கூட்டுப் பணித் தோழர்கள் உற்சாகத்துடன் தொண்டாற்றி மகிழ்ந் தனர்!

அதில் பாராட்டு விருது பெற்ற பெருந்தகையாளர் வெங்கட் சங்கவள்ளி அவர்கள் ஆந்திராவின் நிறுவனமான சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் வளர்ந்தோங்கிட மூல காரணமானவர்.

அவர் தந்த திட்டம்தான் இப்போது தமிழ்நாட்டில் நாம் கலைஞர் ஆட்சியில் மக்கள் உயிர் காக்கும் திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆந்திராவில் அறிமுகப்படுத்த காரணமானவராக கருத்துரை கூறியவர் என்று அறிமுகப் படுத்தினார்.

திரு. வெங்கட் அவர்கள் பேசும்போது ஒரு முக்கிய தகவலைக் கூறினார் - வியத்தகு செய்தி.

இந்த ஆம்புலன்ஸ் சர்வீஸ் துவக்கப் பட்டதிலிருந்து சுமார் 65,000 தாய்மார் களின் மகப்பேறு (பிரசவங்கள்) நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 40 லட்சம் பேர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டி ருப்பதாகவும் குறிப்பிட்டு, கேட்டவர்களை மிகவும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக் கினார்கள்!

அதற்கு முதலில் கிராமங்களில் உள்ள தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் கயிற்றுக் கட்டிலில் வைத்து பல மைல் தூக்கிச் சென்று, வழியிலேயே சரியான மருத்துவ வசதி கிட்டாத தினால் இறந்தவர்கள் பலர் என்பது இப்பொழுதும் மாற்றப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் - திருவாரூர் - மயிலாடு துறை சாலையில் உள்ள கங்களாஞ் சேரியிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் பக்கத்து மற்றும் சுற்று கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கே பெரிதும் விவசாயிகளான அன்றாடம் பணிபுரியும் இருபாலர் -பெரிதும் தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதர - சகோதரிகள் நிறைந்த பகுதி என்ற நிலையில் நான் கண்ட காட்சி மனதை மிகவும் நெருடச் செய்தது!

கயிற்றுக் கட்டிலில் வைத்து பிரசவ வலியால் துடிக்கும் ஏழை - எளிய தாய்மார்களை திருவாரூருக்கோ, நாகூருக்கோ அழைத்துச் செல்லும் (தூக்கிச் செல்லும்) காட்சியைக் கண்டு, அந்தப் பகுதியில் எப்படியாவது ஒரு மகப்பேறு மருத்துவமனை தொடங்கிடத் திட்டமிட்டு, இன்று சோழங்கநல்லூரில் (திருவாரூர்) அந்த கங்களாஞ்சேரி - நாகூர் சாலையில் நிலத்தைப் பெற்று பெரியார் மருத்துவமனை பல படுக்கை வசதிகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது; (அரசுகளின் எந்த உதவியும் இதற்குக் கிடையாது; இன்னமும் கிட்டவில்லை என்றாலும்) சிறப்பாக நடைபெறுகிறது.

மருத்துவ வசதிகள் எங்கணும் சிறப் புடன் நடைபெற மருத்துவமனைகள் மட்டும் போதாது; மருத்துவ மனங் களும் தேவை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்த கிராமப்புற இளைஞர்கள் (இருபால்) கூட, கிராமங்களில் போய் தங்கி மருத்துவ சேவை செய்ய முன் வர மறுக்கிறார்கள் - அரசு சம்பளம் விகிதம் தந்தாலும்கூட மருத்துவர்கள் கிடைப்பதில்லை.

இதற்கொரு திட்டம் 108 ஆம்புலன்ஸ் போன்று அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும் போலும்!

என்ன செய்வது! பணமே வாழ்க்கை என்றாகிவிட்டதால் குணம் விடை பெற்று, பணம் ஆட்சி செய்து, மக்களை பிணம் ஆக்கும் கொடுமை நீடிக்கிறது!

நிலைமை மாறும் - கலைஞர் போன்ற மனிதநேயர்கள் ஆட்சியில். அதற்கும் ஒரு விடையும் - விடியலும் கிடைக்கும் என்று நம்புவோமாக!

Monday, November 8, 2010

வாழ்வியல் சிந்தனைகள்


சிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் அவர்கள் எழுதிய பட்டுக்கோட்டையார் என்னும் நூலிலிருந்து ஒரு முக்கிய பகுதியை தினமலர் 24.10.2010 ஞாயிறு இதழுடன் இணைப்பில் திண்ணை என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருக்கிறது!

அதை அப்படியே தருகிறேன்:

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யர் ஒருவர், பட்டுக்கோட்டையாரை ஒரு படத்துக்குப் பாட்டு எழுத ஒப்பந்தம் செய்தார். பாடல், ரிக்கார்டிங்கும் ஆகிவிட்டது. ஆனால், அதற்கான ஊதியத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

ஒரு நாள் அய்யரின் வீட்டுக்குப் போனார் பட்டுக்கோட்டையார்; அய்யரும் இருந்தார். வணக்கம் சொல்லிவிட்டு முக்கியமான செலவுகளுக்காக சிரமப்படுகிறேன். இன்று எப்படியாவது பணம் கொடுத்தாக வேண்டும்..... என்றார்.

அய்யரோ, பணம் இன்னிக்கு இல்லே நாளைக்கு வேணும்னா வந்து பாருங்கோ.... என்றார். அய்யரைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார் பட்டுக்கோட்டையார்.

என்ன நின்னுட்டே இருக்கேள்.... போய்விட்டு நாளைக்கு வாங்கோன்னேன்! இல்லே நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும் என்று கூறிவிட்டு, அய்யர் உள்ளே போய்விட்டார்.

முதலில் நாளைக்கு வாங்கோ என்றிருந்த மரியாதை கடைசியில் நின்னுண்டே இரும் என்றும், வாரும் போரும் என்றும் குறையத் தொடங்கி விட்டதைப் புரிந்துகொண்டதும் வந்தது கோபம். பிறகென்ன, அது கவிதைக் கனலாக உருவெடுத்தது! உடனே சட்டைப் பையிலிருந்து தாளையும் பேனாவையும் எடுத்து, ஏதோ எழுதினார். மேஜையின் மீது வைத்துவிட்டு வீட்டுக்கு, விர்ரென்று வந்துவிட்டார். வந்து கொஞ்சநேரம் கழிந்ததும், அந்தக் கம்பெனியிலிருந்து ஒரு ஆள் பணத்துடன் வந்துவிட்டான். அவர் துண்டு சீட்டில் எழுதி வைத்த கவிதை இதுதான்:

தாயால் வளர்ந்தேன்.

தமிழால் அறிவுபெற்றேன்

நாயே....... நேற்றுன்னை

நடுத்தெருவில் சந்தித்தேன்.

நீ யார் என்னை நில்லென்று

சொல்ல

இதைப் படித்துவிட்டுத்தான் அந்த அய்யர் உடனே பணத்தைக் கொடுத்தனுப்பி விட்டார்!

தன்மானம் இழக்காத, தலைவணங்கா பாட்டுக்கோட்டை ஒரு புத்துலகம் காண விழைந்த தனிப்பெரும் புரட்சியாளன் அல்லவா?

கவிதை வரிகள் சாட்டை அடிகளாகி, அந்தச் சொடுக்குகள் உருவாக்கிய கைமேல் பலன் கண்டீர்களா? தினமலரின் திண்ணை இப்போது இது பற்றி பேசவும் முன்வந்துள்ளதே!

*******

தன்மானக் கவிஞர் பொன்னிவளவன் கவியரசர்-தனிப்பெரும் ஆற்றலாளர்-சுயமரியாதை முத்து-தவறான பழக்கத்தின் விளைவு. அவர் இன்று வரலாறாகிவிட்ட கொடுமை!

எங்களுடன் மிசா கைதியாக சிறைப்பிடிக்கப்பட்ட கவிஞர், எங்களுடன் மிகவும் பாசத்துடன் பழகுவார். தி.மு.க வில் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகவும், தி.மு.க. முக்கியஸ்தருமாக இருந்த பண்பாளர், பழகுதற்குரிய நட்பாளர் பொன்.சொக்கலிங்கம், அவர்களும் மிசாவில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தார்!

அங்கே எங்களைக் கொடுமை செய்த ஜெயில் சூப்ரெண்டென்ட் வித்தியாசாகர், ஜெயிலர் கயூம் போன்ற பல அதிகாரிகள் இவரையும் கொடுமையுடன் நடத்தி (அடிக்கவும் செய்தவர்கள்) மிகவும் பயமுறுத்திவிட்டனர். இனிமேல் நீங்கள் இங்கிருந்து திரும்பிப் போகவே முடியாது; வாழ்நாள் முழுவதும் இங்கேதான் உங்கள் வாழ்க்கை என்பது போன்று பலருக்கு அச்சத்தை ஊட்டி, தி.மு.க.வை விட்டு விலகிவிட ஓர் ஏற்பாடு அந்த அதிகாரிகள் மூலம்.

பலவீனமும் பயமும் கவ்விக்கொண்டது பலரது மனதில். இயல்புதானே! எல்லோருக்கும் ஒரே மாதிரி உறுதியிருக்குமா? நண்பர் பொன்.சொக்கலிங்கம் அண்ணாவுடன் மெய்க்காப்பாளர் போல அந்தப் பகுதிக்கு வரும் போதெல்லாம் இருந்தவர்தான்.

என்ன செய்வது? நாள், மாதங்களாகிய நிலை. மனந்தளர்ந்து பக்தி வேஷம், பட்டை பூசி, குங்குமப் பொட்டு வைத்து நடைஉடை ஆகிவிட்டார்.

இதைக்கண்டு கவியரசர் பொன்னிவளவனுக்கு கடுங்கோபம்! நாங்கள் கோபப்படுவதில்லை- இத்தகையவர்களை சிறையில் பார்க்கும்போது; அனுதாபப்படுவது தவிர வேறு வழியில்லையே என்றுதான் நினைத்து அவர்களிடமும் பழகவே செய்தோம்!

கவியரசர் பொன்னிவளவன் திடீரென்று ஒரு கவிதை எழுதி, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மதிய வேளையில் ஓங்கி உரக்க சத்தமாகப் படித்துவிட்டார்! அக்கவிதையில் அவரைச் சொடுக்கினார்.

பட்டையடித்தாலும் அதன் நடுவே நன்றாய்

பளபளக்கச் சிவப்பு நிறக் குங்கு மத்தில்

பொட்டு வைத்தாலும் தாடி வளர்த்திட்டாலும்

பொழுதெல்லாம் திருவருட்பா பாடினாலும்

விட்டுவிட முடியாது எனச்சிறைக்குள்

விடப்பிடியாய் வைத்துள்ளார் சொக்கலிங்கம்

பட்ட துயர் போதாதா? நாளைக்கும் நீ பற்ற வைக்க வேண்டுமா டீ அடுப்பு? -புலவர் பொன்னிவளவன்

14.4.1976இல் எழுதிய கவிதையை பொன்.சொக்கலிங்கம் கேட்டு சிரித்தார்! எல்லோருக்கும் இடுக்கண் வந்தபோது இது நகுவதற்கு மருந்தாகிவிட்டது! தன்மானப் பெரும்புலவன் பொன்னியை நினைக்கிறேன்; கண்கள் குளமாகிறது!

Wednesday, October 27, 2010

முதுமை இளமையாக -வாழ்வியல் சிந்தனைகள்

கடந்த 13 ஆம் தேதி அன்று சென்னை யிலிருந்து துபாய் வழியாக குவைத் சென்றடைய மறு விமானத்தில் பயணித்த போது, நியூயார்க் டைம்ஸ் International Tribune என்ற ஆங்கில நாளேட்டில் மிகவும் தரமான பலரது கட்டுரைகள் பலவற்றை படித்து இன்புறக் கூடிய நல்வாய்ப்பு கிடைத்தது!

இதற்கிடையில், முற்பகல் (உள்ளூர் நேரம்) 12 மணியளவில் சென்னையிலி ருந்து சென்ற நாங்கள், மாலை 4 மணிக் குத்தான் தொடர்பு விமானம் என்றவுடன் எங்கள் விமானத்திலிருந்து வெளியே வந்து அடுத்த விமானம் உள்ள நுழைவு வாயிலுக்குச் செல்ல நாங்கள் நடந்தோம்.

காலை நடைபயிற்சி செய்யவில்லையே என்ற ஏக்கம் தீருமளவுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தோம்.

கழிப்பறைகள்தான் எவ்வளவு தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன!

நடந்து செல்லும்போது உயரமான கட்டடத்தின் இடையில் அதனைத் தாங்கும் உலோகத் தூண்கள் மதுரை திருமலை நாயக்கர் மகாலின் தூண்களைவிட சுற்றளவிலும் பெரிது!

வழவழப்பான ஒளிவீசும் தரைகள் - படுத்து உறங்க வசதியானவை என்பதற்கு ஒப்ப அவ்வளவு நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. அந்தந்த நுழைவு வாயில் (கேட்) எதிரே ஏராளமான இருக்கைகள் - அமருவதற்கு. அதன்கீழே நிம்மதியாக பல பயணிகள் காலை தாராளமாக நீட்டிப் படுத்து திருவரங்கப் பெருமாள்போல்(!) உறங்கிடும் நிலை கண்டு வியந்தோம். (ஆடாமல், அசையாமல் நன்றாக தூங் கியதால் அந்த உவமை!) அந்தப் பள்ளி கொண்ட - அரங்கநாதர்கள் கொண்ட தூக்கம், எந்த ஓசையாலும் எளிதில் எழுப்ப முடிவதில்லை. காரணம், இருபுறமும் கொஞ்சம் தள்ளி, சுங்கத் தீர்வையற்ற கடைகள் - அதற்கு நடந்து செல்லும் பயணிகள் - இடையிடையே ஒலி பெருக்கி அறிவிப்புகள் - இவற்றைப் பொருட்படுத் தாது உறங்கியவர்களைக் கண்டு வியந்து நடந்தோம்!

என்னே அழகுடன் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம்! மூன்றாவது தளம் (Third Terminal) அவர்களது எமிரேட்ஸ் விமான சேவை தளம் ஆகும்!

பாலைவனத்தில் - மணல் மேடுகள் நிறைந்தவிடத்தில் இப்படி ஒரு மாநகரம் - உலகமெங்கிலுமிருந்து பணத்தைக் கொண்டு வந்து கொட்டிச் செலவிட்டு மகிழவும், தொழில் வளர்ச்சிக்கான பல் வகை தொழில்களைப் பரிமாறும் அளவுக்கு செய்தது அறிவின், ஆய்வின், பகுத்தறி வின் சாதனை அல்லவா?

அந்த அறிவு வளர வளர எப்படியெல் லாம் மனிதர்களின் வாழ்க்கை மாறப் போகிறது என்பது வருங்காலப் புதிர்களில் ஒன்றாகவே அமைவது உறுதி!

மற்ற கோள்களில் மனிதர்கள் குடியேறும் காலம் மனித குலத்தை நோக்கி விரைந்து வருகிறது!

மனிதர்களுக்கு வயது ஏற, ஏற, நினைவு வன்மை குறையத் தொடங்கு கிறது. இந்த மறதி - ஞாபக சக்தி குறைவு. மிக மோசமானால், அதுதான் அல் ஷைமர்ஸ் (Alzimers) நோயாகவும், அம்னீஷியா, டெம்னீஷியாவாக பலருக்கு பல்வகை தாக்குதல் நோய்களாக உரு வெடுத்து, அவர்களை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கோ(!) அல்லது அவர்களைப் போலவே ஆக்கிடும் கொடுமையில் தள்ளி விடுகிறது!

இந்த முதுமை மறதி நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்படுபவர்கள் - அதைத் தடுத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை இங்கிலாந்து, அமெரிக்கப் பல்கலைக் கழக ஆராய்ச் சியாளர்கள் ஆய்வு செய்து, பல்வேறு பரிசோதனைகளை - பல முதியவர்களை வைத்து - நடத்தி சில முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்!

சிலர் வயதாகியும் நல்ல நினைவாற் றலுடன் இருப்பதற்கு - முதல்வர் கலைஞர் 87 வயதிலும் நினைவாற்றலுக்குப் பரிசு பெறத் தகுதியானவராகக் காட்சி அளிக்கிறார். அதுபோலவே தந்தை பெரியார் அவர்களும்கூட. தந்தை பெரியார் அவர்கள் 95 வயதிலும் தக்க நினைவாற் றலுடன் இறுதிவரை வாழ்ந்தார்கள். அவரது மூன்று மணிநேரப் பேச்சில் - உவமை - கதை என்ற லூப் லைனில் சென்று, மீண்டும் தொடர்பு அறாத மெயின் லைனுக்கு வரத் தயங்கவே மாட்டார்கள் என்பது கேட்டோர் வியந்த செய்தி.

தொடர்பு விட்டுவிடாமல் எடுத்து வைத்த செய்தி மீது பேசிக்கொண்டே செல்வார்கள். யாரையாவது ஒருமுறை பார்த்தால், அதைப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவு கூறுவார்கள். சிலரை குடும்பப் பெயர் சொல்லி அழைப்பார்கள் - உறவினர்களைப்பற்றி ஞாபகமாக பெயர் சொல்லி விசாரிப்பார்கள். அவர்கள் ஆச்சரியத்தால் அதிர்ந்தே போவார்கள்.

இப்படி நினைவு சக்தி அவர்களுக்கு இருப்பதற்கு மூல காரணம், மூளைக்கு சதா வேலை கொடுப்பதுதான். எப்படி உடற்பயிற்சியில் உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றனவோ, அதுபோலவே, மூளை - சிந்தனையால் மிகுந்த நினைவு ஆற்றலை - வளத்தைப் பெறுகிறது என்பது அறிவியல் ரீதியான, உளவியல் ரீதியான முடிவுகளாக மேற்கண்ட பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்!

சிலர் குறுக்கெழுத்துப் போட்டி (Cross Word Puzzles), சொடுக்கு (Sodukku) முதலியவைகளில் ஈடுபட்டு மூளையை கூர்தீட்டிக் கொள்ள முயலுகின்றனர்.

ஆனால், அந்தச் சொற்கள், கணிதத்திற்கு அதிக பயன் என்பது இந்த ஆய்வாளர்களின் முடிவாகும்!

எனவே, எப்போதும் நீங்கள் உங்கள் சிந்தனைக்கு ஓய்வு கொடுக்காதீர்கள் - நேற்று முன்னாள் யாரை யாரைச் சந்தித் தோம்; என்ன உணவு, பதார்த்தங்களை உண்டோம் - எத்தனை வகைகள் - எந் தெந்த நிகழ்வுகள் - படித்த செய்திகள், கேட்ட கருத்துகள் - இவைகளை வரிசைப் படுத்தி நினைவூட்டிக் கொள்ளுங்கள். அதுவே மூளைக்கு நல்ல பயிற்சி. படித்தவைகளை அசை போடுங்கள் - உட்கார்ந்து நினைவுபடுத்தி எழுதிப் பாருங்கள் - முதுமை இளமையாகும்!

மனம் உடைந்துபோக வேண்டாம்!
http://www.viduthalai.periyar.org.in/20101027/news08.html

Thursday, October 21, 2010

வாழ்வியல் சிந்தனைகள்

தத்துவஞானி சாக்ரட்டீசின் கேள்வி கள் சிந்தனையைத் தூண்டும் சிறந்த அறிவின் ஏவுகணைகள் இதோ:
வாள் முனையின் சக்தியால் ஜன நாயகத்தைப் பலர் விரும்புவது எந்த வகையில் நியாயம்?
கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை நம்புவது ஏன், எதற்கென்று கேட்காமல் அதற்குக் கீழ்ப்படிவதில் பொருள் உண்டா?
அழகான சுவர்களில் வண்ண வண்ணச் சித்திரங்கள், போருக்கு எப் போதும் தயாராக இருக்கும் அத்தீனிய நாட்டுக்கப்பல்கள், பளபளவென பிர காசிக்கும் அழகுச் சிலைகள் - இவற் றால் என்ன பயன்? அதனை உருவாக் கியவர்கள் - செய்தவர்கள் மகிழ்ச்சியான வாழ்வு வாழாமல் இருந்தால்?
இப்படிக் கேட்ட சாக்ரட்டீஸ் மேலும் கூறுகிறார்:
அறிவைத் தேடுவது அனைத்திலும் முக்கியமானது - நாம் சுவாசிக்கும் உயிர்க் காற்றைப்போல; எனவே, அறிவுக்கே முன்னிடம் தாருங்கள்.

மனித வாழ்க்கையின் முக்கிய அடிப்படையான அம்சங்கள் எவை நம்மை மகிழ்வுடன் இருக்க உதவுகின்றன? எது நமக்கு நன்மை தருகிறது? அன்பு என்றால் என்ன? பயம் - அச்சம் என்றால் என்ன? இவற்றுக்கிடையே நமது வாழ்க் கையை நாம் மிகச் சரியாக அமைத்துக் கொள்வது எப்படி?

இன்றைய உலகியல் வாழ்விலும் சாக்ரட்டீசின் இந்தக் கேள்விகள் முக் கியத்துவம் வாய்ந்தவையாகத்தானே உள்ளன?

உலகம் நவீனமயமாகி இருந்தாலும் மனிதனின் வாழ்க்கைப் பரிமாணம் மாறவில்லை. கவலை, மகிழ்ச்சி, துன்பம், அச்சம் இவற்றால் அவனது வாழ்வு அல்லாடுகிறதா - இல்லையா?

உலகத்தில் உள்ள பலவற்றையும் பற்றிப் பட்டியல் போட்டுப் பார்ப்பதால் என்ன லாபம்?

அவற்றை நேசிக்க வேண்டாமா? அவைமீது அன்பை, பாசத்தை, பரிவைக் கொட்டவேண்டாமா?

அன்பு என்ற ஒன்றுதான் எனக்குப் புரிகிறது. (சாக்ரட்டீசின் மனிதநேயம் அவரை வானத்திற்கும் மேலே உயர்த்திக் காட்டவில்லையா?)

அர்த்தமற்ற அலங்காரப் பேச்சுகள் - வாதங்கள் மிகவும் வெறுக்கத்தகுந்தவை. உண்மையைப் புறந்தள்ளிவிட்ட ஆடம்பர வார்த்தை ஜாலங்கள், நல்ல சமுதாயத் திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்கள் ஆகும்.

இன்றைய தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளை சாக்ரட்டீஸ் இன்று இருந்து சாடுவதுபோல் இல்லையா?

- எதையும், எதற்கு என்று ஆராயாத வாழ்க்கை, வாழத் தகுதியற்ற வாழ்க்கை யேயாகும்.

சாக்ரட்டீசின் வாழ்வு முடிந்த பிறகே அவரது அறிவுரைகளின் பயணம் அன்றுமுதல் இன்றுவரை நாடு தழுவிய ஒளியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது!

மேற்கு மட்டுமல்ல, கிழக்கும்கூட அவரது அறிவாயுதத்தால் ஈர்க்கப்பட்டு நிற்கிறது.

அதனால்தானே யுனெஸ்கோ என்ற அய்.நா.வின் கலாச்சார அமைப்பு தந்தை பெரியாருக்கு விருது வழங்கி சிறப்பித்த போது, தந்தை பெரியார் அவர்களை மிகப் பொருத்தமாக ஞசடியீநவ டிக வாந நேற யபந; ளடிஉசயவநள டிக வாந ளடிரவா நயளவ யளயை... என்று தொடங்கி வர்ணித்தது!

புது உலகின் தொலைநோக்காளர், தென் கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ் என்றுதான் பொருத்தமாக வர்ணித்தது!

எழுதப் படிக்கத் தெரியாத அந்த மேதை சாக்ரட்டீஸ் - பகுத்தறிவு, பட்டறி வால் உலகின் அறிவின் ஏழு தூண்களில் ஒன்று என்று அல்லவா அழைக்கப் படுகிறார்!

சாக்ரட்டீஸ் - பெரியார் - தம் மண்டைச் சுரப்பை, சிந்தனை ஊற்று களை - உலகம் தொழுகிறது!

http://www.viduthalai.periyar.org.in/20101021/news10.html

Thursday, October 7, 2010

பிள்ளை வளர்ப்பும் தென்னை வளர்ப்பும் வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி

குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புற வாய்ப்பில்லாதவர்கள் என்று பிள்ளைகளைப்பற்றி வள்ளுவர் தம் குறளில் எழுதினார்!

இன்றும் குழந்தைகளோடு நாம் பழகும்போதும், அவர்தம் மழலை அமுதை நாம் உண்ணும்போதும் பிறகு அதுபற்றி எண்ணும்போதும் எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.

தஞ்சை வல்லத்தில் குழந்தைகளுடன் நான்கு நாள்கள் இருந்தபோது எத்துணை இன்பம்! எவ்வளவு மகிழ்ச்சி!! அடடா எழுத்தில் வடித்திட முடியாதே!

ஆனால், தற்போதுள்ள சமுதாயச் சூழலில் படிப்பு வளர வளர பாசம் குறைந்து வருவதோடு - பெற்றோர்களிடம்கூட பெரியவர்களானவுடன் உறிஞ்ச வேண்டியவைகளை உறிஞ்சிக்கொண்டு, பிறகு தூக்கி வீசிடும் நன்றி (கெட்ட) நாயகர்களாக, நாயகிகளாக வாழும் அவலம் நம் குடும்பங்களில் அன்றாடக் காட்சிகளாக அரங்கேறிக் கொண்டே இருக்கிறது!

தென்னையை வைத்தால் இளநீறு

பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு!

என்பது வெறும் திரைப்படப் பாடல் அல்ல!

அங்கிங்கெனாதபடி எங்கெங்கு காணினும் அவலக் காட்சிகள்!

ஆசையோடு, வாரி அணைத்தவர்களுக்குக் கிடைக்கும் கடைசி காலப் பரிசு, அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாகி விடுவதோடு நில்லாமல், அவர்கள் மனம் சிதறு தேங்காய்போல சிதறிச் சில்லுகளாக நொறுங்கிவிடும் கோரக் காட்சிகளை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்!

சொல்லி அழக்கூட முடியாத சோகப் படலத்தின் உச்சத்தில் எரிதழலாய் மாற்றப்பட்டு விடுகின்றனர்!

பெரிய நிலைக்குத் தம் பிள்ளைகள் வரவேண்டும் என்பதற்காக அந்தப் பெற்றோர்கள் செய்த அரும் பெரும் தியாகங்கள், பொய்யாய், பழங்கதையாய், கனவாகிப் போகின்றன ஒரு நொடிப் பொழுதில்!

மனிதம் ஆள வேண்டிய இளம் வாலிப உள்ளங்களில் மமதையும், மடை திறந்த வெள்ளம் போன்ற சுயநலமும் குடியேறி கோலோச்சி வரும் கொடுமையால் பாதிக்கப்பட்ட முதியோர், ஏன்தான் வாழ்கிறோம்; எப்போது நமக்கு முடிவு வருமோ என்று நொந்து நூலாகி வெந்து சாம்பல் நிலைக்கு சாய்ந்து கொள்ளுகின்றனர்!

...காடுவரை பிள்ளை என்பதெல்லாம் அந்தக் காலம்; நம்மை (சுடு) காட்டுக்கு அனுப்ப முந்துறும் பிள்ளைகளே - முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாள் கழித்துப் பெற்ற பிள்ளைகள்!

எனவே நல்ல வாழ்வியல் - பகுத்தறிவு சிந்தனையாளர்களே! உங்கள் குடும்பத்தவரை நம்புவதைவிட, நெருக்கமான உயிர்காக்கும் தோழர்கள், தோழிகளோடு வாழுங்கள் - உங்கள் வாழ்விணையர்களையே பெரிதும் நம்புங்கள்.

இறுதிவரை உங்கள் கால்களில் நீங்கள் நில்லுங்கள் - உங்களது பிள்ளைப் பாசம், பரிவுக்கும்கூட உச்சவரம்பு தேவை- இந்தப் புது யுகத்தில் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற முன்னேற்பாட்டுடன் முதுமையை சந்தியுங்கள்!

தொண்டறம் மூலம் மகிழ்ச்சியை அடையுங்கள். ஊர்நலம், உலக நலம் ஓம்புவது உங்கள் வழியானால், உங்களைப் பாதுகாக்க, உங்கள்மீது பாசம் கொட்ட கோடிக் கைகள் உண்டு என்பதை மறவாதீர்கள்!

நல்ல நண்பர்கள் - கைம்மாறு கருதாத நட்பாளர்கள் - உடுக்கை இழந்தவன் கைபோல உதவுவதற்கு எப்போதும் முன்வருபவர்கள்; அவர்களை அடையாளம் கண்டு அபயம் தேடத் தவறாதீர்கள்!

Friday, September 24, 2010

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி -குற்றத்தின் மூலவேர் எங்கே?

கேரள மாநிலம் ஆலப்புழை அருகே சேத்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜோன் என்பவர். இவர் ஓட்டல் ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுமா. இவர் வயது 38. இவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவலக எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்குமுன்பு வேலையில் இருந்து இவர் விலகிவிட்டாராம்!
ஜோன் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் 3 ஆவது குழந்தை சஜின். பிறந்து 8 மாதங்களே ஆகிறது. இந்தக் குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருப்பானாம்!
இது இந்தத் தாய்க்கு (சுமாவுக்கு) எரிச்சலை ஏற்படுத்தியதாம்! தினமும் குழந்தை அழுவதும், சத்தம் போடுவதும் இந்தத் தாயை ஆத்திரமடையச் செய்ததாம்!
சம்பவ நாள் அன்று மற்ற 2 குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டன! கணவர் ஜோன் பணிக்குப் போய்விட்டார். வீட்டில் இந்தப் பெண்மணி மட்டும் தனியே இருந்தார்; அப்போது குழந்தை சஜின் அழத் தொடங்கியது. இதனால் கோபமடைந்த சுமா, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். என்றாலும், அதன் அழுகை நின்ற பாடில்லை. இதனால் சுமா கோபத்தில் வெறி பிடித்தவராக மாறினார்!
பெற்ற குழந்தை - பிஞ்சு குழந்தை என்றுகூட பாராமல், வீட்டிலிருந்த வாஷிங்மெஷினில் சஜினைப் போட்டு அமுக்கினார். இதனால் குழந்தை மேலும் கதறியது. ஆனால், நெஞ்சை கல்லாக்கிக் கொண்ட சுமா, துடிக்கத் துடிக்க தனது குழந்தையை வாஷிங்மெஷினில் மூழ்கடித்தாராம்! இதில் சிறிது நேரத்திலேயே குழந்தையின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.
குழந்தையைக் கொலை செய்த பின்பு வீட்டை விட்டு வெளியே வந்த சுமா ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு சேத்தலை காவல் நிலையம் சென்று சரணடைந்தாராம்!
போலீசாரின் விசாரணையில் கடந்த 4 மாதங்களுக்குமுன்பு (இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால்) தனது கை நரம்பை தானே அறுத்துத் தற்கொலைக்கு முயன்றவராம்!
இச்செய்தியைப் படிக்கும் மனிதாபிமானம் உள்ள எவருக்கும் கண்களில் நீர் வடியத்தான் செய்யும்!
நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும் என்ற அறிவுரைப்படி, இதற்கு மூலகாரணம் கோபமா? ஆத்திரமா? பாதிக்கப்பட்ட மனநிலையா? என்று எளிதில் முடிவுக்கு வர இயலாது! மூன்று பிள்ளைகளைப் பெற்ற தாய்க்கு அவர்களை சரிவர பராமரிக்க முடியாத அளவுக்கு - இவ்வளவுக்கும் வசதி வாய்ப்புள்ள உயர் நடுத்தர குடும்பம் அது! இல்லாவிட்டால் வாஷிங் மெஷின் அவ்வீட்டில் இருக்குமா?
வாஷிங் மெஷின் இதற்காகவா பயன்படுவது? எவ்வளவு கொடூரமான தாயும்கூட இப்படி ஒரு கொடுஞ்செயலை மனதறியச் செய்ய முன்வரமாட்டார்! பாதிக்கப்பட்ட மனநிலையா? எல்லையற்ற கோபமா? எரிச்சலா? எளிதில் விடை காண இயலாது.
அற்பத்தனமான காரணங்களுக்காக முன்கோபத்தால் இப்படிப்பட்ட கொலைகள் திடீர் என்று க்ஷண நேரத்தில் நடந்துவிடுவதுண்டு!
1976 ஆம் ஆண்டு மிசாவில் நாங்கள் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது எங்களிடம் சுமுகமாக பழகிய ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர், மிக நன்றாக திருக்குறள்பற்றி என்னிடம் விளக்கம் கேட்டு மிக நீண்ட நேரம் உரையாடுவார். சுமார் 55 வயதுள்ளவர். பண்புடன் நடந்துகொள்வார்.
எனக்கு மிகவும் ஆச்சரியம்! இவர் எப்படி ஆயுள் தண்டனை கைதி ஆனார் என்று அறிய விருப்பம்; ஒரு நாள் அவரிடமே கேட்டேன். நீங்கள் குறளில் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறீர்களே, பின் எப்படி குற்றம் புரிந்தீர்கள்? எப்படி ஆயுள் தண்டனை கைதியானீர்கள்? என்று.
அவர் சொன்னார், எல்லாம் க்ஷண நேர அதிதீவிர ஆத்திரம் பீறிட்ட கோபத்தினால் ஏற்பட்ட கொடுமை. மனைவிபற்றி தாறுமாறாகப் பேசியவன்மீது ஓங்கிப் பாய்ந்து அடித்தேன்; அவன் இறந்து போனான். அது கொலையாயிற்று - திட்டமிட்டு நடந்திராத குற்றம் அது! அதன் பிறகு சிறையில் வந்த பிறகுதான் திருக்குறள் - பொறையுடைமை எல்லாம் படித்தேன்! இப்போது ஞானம் பெற்றுள்ளேன். என்ன செய்வது அய்யா? காலங்கடந்த ஞானோதயம். கணமேனும் காத்தல் அரிதான சினத்தின் சீற்றம் என்றார்!
மேற்காட்டிய தாய்க்கு கோபமா? மனநிலை கெட்டுப் போனதாலா? பொறுமையற்ற நிலையா? மூன்று பிள்ளைகளைப் பெற்றதாலா? இப்படிப்பட்ட மன நோயாளிக்கு அவரது துணைவர் சரியான சிகிச்சை அளிக்கப் போதுமான முயற்சிகளை எடுக்காததாலா இந்தத் துன்பஇயல் கொடுமை நிகழ்வு?
எளிதில் விடை காண முடியாது!
பெற்றால் மட்டும் போதாது; பேணி வளர்க்கவும், வாய்ப்பும் உருவாகவேண்டும். பல தாய்கள் வறுமையால் நல்ல தங்காள் ஆகிறார்கள் - ஆனால், இங்கே வறுமையில் வளமை இருந்தது என்றாலும், வளமையின் வாழ்வைப் புலப்படுத்தும் கருவியே கொலைக் கருவியாகி விடுவதா?
என்னே மானிட சமூகத்தின் பாழ்பட்ட பகுத்தறிவு! இக் கொடுமைக்குத் தீர்வுதான் என்ன?

Monday, September 20, 2010

சோம்பலை விரட்டி, சுறுசுறுப்பாக வாழுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, மூளைக்கு வேலை கொடுக்க முந்திடும் வாழ்க்கையை வாழுவோம், வாரீர்

வாழ்க்கையில் வயது முதிரும் நிலையில் பல்வேறு நோய்கள் நம் உடலை நோக்கி படையெடுத்து, வெற்றி பெற முயலுகின்றன. ஆனால், அவைகளுக்கு இடம் தராத அளவு நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலில் குறையாதபடி, நல வாழ்வில் நாம் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பர்த் மாநிலத்தில் உள்ள எடித்கோவான் பல்கலைக் கழகத்தின் முதுமை மற்றும் அல்ஷைமர்ஸ் என்ற மறதி நோய் சிகிச்சைத் துறை மருத்துவரான பேராசிரியர் ரால்ஃப் மார்ட்டின் சென்னையில் நேற்று ஓர் அறக்கட்டளை ஆய்வு சொற்பொழிவு நிகழ்த்தியதில் பல அரிய தடுப்பு முறைகளை முதுமை உளறலான மறதி நோயான அல்ஷைமர்ஸ் நோய் முதியவர்களைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று கூறியுள்ளார்.
65 வயது தாண்டிய சுமார் 3000 பேர்களை வைத்து நடத்திய ஓர் ஆராய்ச்சி சர்வேயில் கண்டறிந்த உண்மைகளை டாக்டர், பாடம் நடத்துதைப்போல வெளியிட்டுள்ளார்.
1. அதிகமான காய்கறிகளை உண்பவர்களுக்கு இத்தகைய மறதி நோய்கள் எளிதில் வருவதில்லை - 6 ஆண்டுகள் படிப்படியாக வரும் நிலையே ஏற்படுகிறது.
2. மாதுளைப் பழம், கிரீன் டீ (Green Tea) மீன், ஊரசஉரஅ போன்றவைகள் இந்த வகையில் தடுப்பான்களாகப் பயன்படுகின்றன.
3. வந்துவிட்டால் அதைத் தடுக்கப் போதிய மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட வாழ்க்கை முறைகளைக் (Life Style Changes) கடைப்பிடிக்கவேண்டும்.
4. அதிக ரத்தக் கொதிப்பு - Hypertension, உடல் எடை கூடுதலான நிலை, இதய நோயாளிகள், இவர்களுக்கு இந்த மறதி நோய் ஹ.னு. (அல்ஷைமர்ஸ் டிசீஸ்) வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
5. மனதிற்கு சதா வேலை கொடுத்து, மூளையை சுறுசுறுப்படையச் செய்தல், (பல முதியவர்களை கிராஸ்வேர்ட் பஸில் (Cross Word Puzzle) - குறுக்கெழுத்துப் போட்டிகள், கூட்டல், கழித்தல் கணக்குகளை சொடுக்கு (Soduku) என்பதை விடாமல் போடுவது மனதிற்கு - மூளைக்கு நல்ல வேலை கொடுப்பதற்காகவேயாகும்!
ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் என்ற பிராண வாயு பெருகிடும் நிலை, மற்றபடி அடிக்கடி சமூக குடும்ப நிகழ்வுகள் முதலியவைகளில் ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் ஈடுபடுவோருக்கு இந்த மறதி நோய் எளிதில் தாக்காது என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய உண்மையாகும்!
தந்தை பெரியார் அவர்களது நினைவாற்றல் கடைசிவரை அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவரை மிகச் சிறப்பாக இருந்தது வியக்கத்தக்கதல்லவா?
நம் முதலமைச்சர் கலைஞருக்கு இந்த 87 வயதிலும், நமது நிதியமைச்சர் இனமானப் பேராசிரியருக்கு 89 வயதிலும் மறதி நோய் வராமல் உள்ளது என்பதற்கு மூலகாரணம் அவர்கள் சதா சிந்தித்து வாழுகிறார்கள்; துணிச்சலுடன் பிரச்சினைகளைச் சந்தித்து அவற்றுக்குத் தீர்வு காண முயலுகிறார்கள் என்ற அவர்கள் உடல் உழைப்புடன் கூடிய மூளை உழைப்பும் இணைந்த கூட்டணியால்தானே!
எனவே, சோம்பலை விரட்டி, சுறுசுறுப்பாக வாழுமாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, மூளைக்கு வேலை கொடுக்க முந்திடும் வாழ்க்கையை வாழுவோம், வாரீர்!

weather counter Site Meter