Pages

Search This Blog

Showing posts with label உலக மகளிர் தினம். Show all posts
Showing posts with label உலக மகளிர் தினம். Show all posts

Tuesday, March 8, 2011

பெண்களே, புதிய உலகினைப் படைக்க பெரியார் பாதையில் பயணம் செய்யுங்கள்-கி. வீரமணி

உலக மகளிர் நாளாகிய இன்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று உலக மகளிர் நாள் - என்பது மகளிர் உரிமை பற்றி வெறும் பெண்களுக்கான புகழுரை, சம்பிரதாயமாக வாழ்த்துகளைக் கூறுதல் என்ப தோடு, முடிந்துவிடக் கூடாது.

உண்மையில் உலகின் சரி பகுதி மக்கள் தொகையான மகளிர் - மனிதத் தன்மையோடு, சம உரிமை சமவாய்ப்புடன் நடத்தப்படுகிறார்களா இந்த 21ஆம் நூற்றாண்டில்கூட என்ற சுயசிந்தனைப் பரிசோதனைக் கேள்விகளை எழுப்பி, அதற்குத் தக்க விடைகளை - விடியலை செயல் வடிவத்தில் காணுவதே சரியான பகுத்தறிவாளர் அணுகு முறையாகும்.

பெண்ணுரிமைக்காக பெரியார்போல் போராடியவர் உண்டா?

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களைப் போன்று பெண்ணுரிமைக்குப் போராடி வெற்றி கண்டு, பழஞ் சமுதாயத்தைப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் உலக வரலாற்றில் எவருமிலர்.

வரலாற்றில் அது இருட்டடிக்கப்பட்ட பகுதியாகும்! இன்னமும் பெண்ணாகப் பிறந்த அந்த மனித ஜீவனுக்கு வாழ்வுரிமை கிடைக்காமல், தாய்ப்பாலுக்குப் பதில் கள்ளிப்பாலும் எருக்கம்பாலும் தந்து கொல்லப்படும் நிலைதானே!

கருணைக் கொலையைக்கூட மறுக்கும் நமது நீதி அமைப்புகள் - இந்தப் பெண் குழந்தை கருவிலேயே அழிக்கப்படுவதைக்கூட (சட்டத்தின் தவறான பயன்பாட்டினை) தடுக்க முன் வருவ தில்லையே!

என்னே கொடுமை!

பாலியல் கொடுமைகள், வன்புணர்ச்சி, வக்கிரச் செயல்கள் பிஞ்சுகளைக்கூட விட்டு வைக்காத நஞ்சு பாய்ச்சிடும் நரிமனங் கொண்டோரிடமிருந்து நாரியர் பாதுகாக்கப்படாத நிலை.

தந்தை பெரியார் எதையும் தனது வாழ்விணையர் மூலமே துவக்கி, செயல் முறை விளக்கமாக்கி, செல்வாக்கு பெற்றனர். போராட்டக் களம், சிறைச் சாலை இவற்றை நோக்கி அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோரை அனுப்பிடத் தவறவில்லையே!

படித்த பெண்களுக்கு இரு மடங்கு வேலை

படித்த பெண்கள், இன்னும் இரு மடங்கு பணி செய்வோராகவே உள்ளனர். அலுவலகம், வீடு, கணவர், குழந்தை வளர்ப்பு என்பனபோன்ற சுமை களை முதுகொடியும்வரை செய்துவிட்டு, இயந்திரங் களாகிய பின்பும், சுகமான வாழ்க்கையைத் தேடும் சுமைதாங்கிகளாகியல்லவா வாழுகிறார்கள்?

இது புறத்தோற்றத்தில் வளர்ச்சி - நம் நாட்டு அகத்தில் வீழ்ச்சி - என்ன செய்வது!

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற பண்புகள் பற்றி பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தோர், அதுபோல ஆணுக்கு வைத்ததுண்டா? பயிர்ப்பு என்றால் அருவருப்பு, அசிங்கம், அசுத்தம் என்று தமிழ்ப் பேரகராதிகள் கூறுகின்றனவே.

அதன் பின்பும் பெண்களுக்கு அக்குணநலன்கள் தேவையா? என்ற கேள்வியைக் கேட்டவர் பெண் ணியப் புரட்சியின் இமயமான ஈரோட்டு ஏந்தல் தானே!

எனவே, உண்மையான விடுதலை நகை நட்டு, பட்டுச் சேலை படாடோபம், ஒப்பனைகள் நிறைந்த ஒய்யார வாழ்வில் இல்லை என்பதை அன்னை நாகம்மையாரும் அன்னை மணியம்மையாரும் வாழ்ந்தே காட்டினார்கள்! வசதி படைத்தவர்களிடம் எளிமை குடியேறும் போதுதான் அது அதன் உண்மை மதிப்பைப் பெறுகிறது!

பெரியார் கூறுவதைக் கேளுங்கள்!

எனவே மகளிர் தோழியர்களே, நீங்கள் தந்தை பெரியார் கூறியபடி,
(1) அலங்காரப் பொம்மைகளாகவோ
(2) வெறும் சமையல் கருவிகளாகவோ
(3) பிள்ளை பெறும் இயந்திரங்களாகவோ வாழாமல், மனித சமுதாயத்தின் மான வாழ்விற்கு, உரிமை வாழ்விற்கு, உறுதி கூறும் புதியதோர் உலகு படைக்கப், புரட்சியாளர்களாகப் புறப்பட சூளுரைத்து,

சுயமரியாதைபுரியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!

மனிதம் ஆளட்டும்! மடமை மாளட்டும்!

இது இந்நாளில் எம் செய்தி!

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

http://viduthalai.in/new/page1/4973.html

மகளிர் நாள் சிந்தனைகள்!

மார்ச் 8 - உலகம் முழுவதும் மகளிர் உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் நியூயார்க் நகரில் 1857 மார்ச்சு 8ஆம் நாள் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமையைக் கண்டித்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1903ஆம் ஆண்டிலும் அதே மார்ச் 8ஆம் நாள் அதே  நியூயார்க் நகரில் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் கூடுதலாக பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை தேவை என்பதை வலியுறுத்தினர்.

1910ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் கிளாரா ஜெட்சின் என்பவர் தலைமையில் கோபன்ஹேகனில் சோசலிசப் பெண்களின் இரண்டாவது பன்னாட்டு மாநாடு நடை பெற்றது. அந்த மாநாட்டில்தான் மார்ச் எட்டை உலக பெண்கள் நாளாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி அளவு பெண்களாக இருந்து வந்தனர். அண்மைக் காலமாக அதில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதற்குக் காரணம்  பெண்கள் என்றால் வீட்டுக்கும், நாட்டுக்கும் சுமை என்கிற கருத்தோட்டமாகும்.

ஏன் பெண்கள் அவ்வாறு சுமையாகக் கருதப்படு கிறார்கள்?  ஆண்களுக்கு உரிய அத்தனை உரிமைகளும், வாய்ப்புகளும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் எப்படி சுமையாக இருக்க முடியும்?

கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, சிவில் உரிமைகள் எல்லாம் ஆணுக்கு நிகராகப் பெண்களுக்கு இருந்திருக்குமேயானால், பெண்களால் வீட்டுக்கும், நாட்டுக்கும் பெரும் நன்மைகள் கிட்டியிருக்குமே!

அதற்கான வாய்ப்புகளைப் பெண்களுக்குக் கொடுக்காமல், ஆண்களைச் சார்ந்தேதான் எல்லா நிலைகளிலும் பெண்கள் இருந்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தால், கண்டிப்பாக ஒரு சுமையான பண்டமாகத்தான் பெண்கள் இருக்கக்கூடிய நிலை ஏற்படும்.

ஆண் - பெண் ஏற்றத் தாழ்வு என்பது சற்று மாறு பாட்டாலும் பொதுவாக உலகெங்கும் ஆண் ஆதிக்க நுகத்தடியில் பெண்கள் பூட்டப்பட்டு இருக்கின்றனர் என்பது உண்மை.

இதில் மதங்களின் பங்கு மிக அதிகமாகும். பிறப் பிலேயே பெண்கள் அடிமைத் தன்மை கொண்டவர்கள் என்று அனேகமாக எல்லா மதங்களுமே சித்திரிக்கின்றன.

பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று இந்து மதத்தின் பெருமைக்கெல்லாம் கிரீடமாகக் கூறப்படும் கீதை கூறுகிறது.

சமூகத்தில் நிலவும் இந்த அடிப்படைச் சிந்தனை ஓட்டத்தின் ஊற்றுக் கண்களை நிரந்தரமாக மூடச் செய்யாமல் பெண்ணுரிமை என்பது முயற்கொம்பே!

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள்தான் பெண்ணடிமைத் தனம் என்ற கட்டை உடைக்கக் கூடியவை!

தந்தை பெரியார் அளவுக்குப் பெண்ணுரிமைபற்றிச் சிந்தித்தவர்களோ, பேசியவர்களோ, எழுதியவர்களோ யாரும் கிடையாது.

அதற்கு அடுத்த நிலையில் களத்தில் நின்று போராடியவர்; சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்திற்குத் தனக்குப்பின்னால் தலைமையேற்க ஒரு பெண்ணை தந்தை பெரியார் உருவாக்கிச் சென்றதும் இந்த இடத்தில் எண்ணத் தகுந்ததாகும்.

அந்தத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களும் தலை சிறந்த தலைமையை வெளிப்படுத்திச் சென்றார்கள்.

வாய்ப்பே கொடுக்காமல் பெண்கள் என்றால் பலகீனமானவர்கள் என்ற ஒரு சிந்தனை ஓட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த எண்ணத்தை உடைத்துத் தரைமட்டமாக்க வேண்டும்.

தோற்றத்தில்கூட ஆண் - பெண் என்று தெரியாத நிலையும், பெயரை வைத்துக்கொண்டுகூட பாலினத்தைத் தெரிந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கக் கூடாது என்றும் தந்தை பெரியார் சொன்னதெல்லாம் எத்தகைய உயர் எண்ணங்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பல உரிமைகள் பெண்களுக்குக் கிடைத்திருப்பது உண்மை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும், அவர் கண்ட இயக்கமும்தான்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே பெண்களுக்குச் சொத்துரிமை என்ற சட்டம் 1989-90-களில் தமிழ்நாட்டில்  இயற்றப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை என்பது நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் கிடைத்தது.

பெண்கள் வளர்ச்சிக்காக பெண்களின் பெயர்களை முன்னிலைப்படுத்தி, பெண்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துவதும் திராவிட இயக்கமான மானமிகு கலைஞர் அவர்களின் தலைமை யிலான திமுக ஆட்சியாகும்.

நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில்கூட இந்தக் கண்ணோட்டத்தில் பெண்கள் செயல்படுவார்கள் -  செயல்படவும் வேண்டும்.

பெண்கள் மத்தியில் திமுக அரசு செய்துள்ள சாதனைகள், முக்கியமாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண் உரிமைகளை முன்னிறுத்தக் கூடிய ஆட்சியே நாட்டுக்குத் தேவை!

http://viduthalai.in/new/page-2/4977.html

உலக மகளிர் தின வாழ்த்து செய்தி-முதல் அமைச்சர் கலைஞர்

``தமிழக பெண்கள் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் பெற வேண்டும்`` என்று முதல்-அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள, உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்ப தாவது:-

மகளிர் சமுதாய முன்னேற்றத்தை வலியுறுத்திடும் உலக மகளிர் நாள் விழா 8-3-2011 அன்று மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்க நாட்டில், நியூயார்க் நகரில் நெச வாலைகளில் பணிபுரிந்த மகளிர் பலர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8ஆம் நாள். பின்னர் அந்நாளே உலக மகளிர் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக் கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

தந்தை பெரியாரும் - அறிஞர் அண்ணாவும்


தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியா ரும், பேரறிஞர் அண்ணாவும் அறிவுறுத்திய சமத் துவ, சமதர்மக் கொள்கைகளின்படி, பெண்கள் சமுதாயம் ஆண்களுக்கு இணையாக முன்னேற்றம் காண்பதற்குக் கல்வியறிவு பெற்று, வேலை வாய்ப்புகள் எய்தி, பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காகத் தி.மு.க. அரசு இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டிடும் வகையில் பல்வேறு பெண்கள் நலத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

1973இல் இந்தியாவிலேயே முதல் முறையாக காவல் துறையில் மகளிர் பணி நியமனம் செய்யப் பட்டு; மகளிர் பலர் இன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளாக விளங்குகின்றனர்.

மகளிர் வளர்ச்சித் திசையில் திமுக ஆட்சி

1989இல் தொடங்கப்பட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 682 மகளிரை உறுப்பினர்களாக கொண்ட ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 493 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மூலம் 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கி கிராமப்புற மகளிர் பொருளாதார முன்னேற்றம் காண வழி வகுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பத்தாம் வகுப்புவரையேனும் படிக்க வேண்டும் என்பதற்காக 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1989இல் 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996இல் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில்; 2001இல் பொறுப் பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முடக்கி வைத்திருந்தது.

ஆனால், ஏழை - எளிய மகளிரின் முன்னேற்றம் கருதி தி.மு.க. அரசு 2006இல் பொறுப்பேற்றபின் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி திட்ட நிதியை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதுடன், 2008இல் 20 ஆயிரம் ரூபாய் எனவும், 2010இல் 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி கடந்த அய்ந் தாண்டுகளில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 538 ஏழை மகளிர் திருமணங்களுக்கு 832 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கி மகளிர் நலம் காத்துள்ளது.

ஏழை மகளிர் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டுமெனக் கருதி 1989இல் அறிமுகப்படுத்திய ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் 2007இல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மகளிர் பயனடைகின்றனர்.

இவைமட்டுமல்லாமல், 1990இல் அரசு வேலை வாய்ப்புகளில் மகளிர்க்கு 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம்; அதே ஆண்டில் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குத் சமஉரிமை அளித்திடும் தனிச் சட்டம்; 1996இல் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்;

2006இல் தி.மு.க. அரசு பொறுப்பேற்றபின் ஏழை, எளிய தாய்மார்கள் மனம் மகிழ இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கும் திட்டம்;

டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி யுதவித் திட்டத்தின்கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண் களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம்; 50 வயது கடந்தும் திருமணமாகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் என்பன உள்பட பல்வேறு திட்டங்களைப் புதிது புதிதாக உருவாக்கி நடைமுறைப்படுத்தி பெண்கள் சமுதாயம் முன்னேற தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடுகிறது.

பெண்கள் மேலும் ஏற்றம் பெறும்வகையில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் அவர் களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்திட மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது.
வாழ்த்துகள்
இந்நிலையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் உலக மகளிர் நாள் விழா தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நிகழ்ந்திடவும், தமிழக மகளிர் அனைவரும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேற்றம் எய்திடவும் இந்நன்னாளில் எனது உளமார வாழ்த்துகிறேன்.
- இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.
http://viduthalai.in/new/page-7/5001.html

weather counter Site Meter