Pages

Search This Blog

Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts

Friday, March 11, 2011

கடவுள்

1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.


2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.

3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர்களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.

4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.

5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.

6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.

7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாக்கவும் கட்டப்பட்டதாகும்.

8. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.

9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது.
ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.

10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.

http://viduthalai.in/new/page-7/5214.html 

Thursday, March 3, 2011

13 ஆம் எண் கெட்ட சகுனமா?

மூடநம்பிக்கைகள் பலவிதம்; அதில் ஒன்று இந்த எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துவிடும்.

சிலர் தன்பெயரில்கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ மாற்றியமைப்பதுண்டு. எதிர்க் கட்சித் தலைவர் அண்ணா பெயரைக் கட்சியில் தாங்கிக் கொண்டிருப்பவர்கூட தன் பெயரில் ஓர் எழுத்தைச் (ய) சேர்த்துக் கொண்டார். அதனால் பலன் என்ன கிடைத்து விட்டது?

தான் போட்டியிட்ட தொகுதியில்கூடத் தோற்றதுண்டு. கடந்த முறை ஆட்சியையா பிடித்துவிட்டார்?

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 என்றும், வாக்கு எண்ணிக்கை மே 13 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதாம். 13 என்பது கெட்ட நாளாயிற்றே - சகுனம் சரியில்லையே என்னாகுமோ என்று அரசியல் வாதிகள் அச்சப்படுகிறார்கள் என்று ஓர் ஏடுகூட எழுதியிருக்கிறது.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவது உண்மையானால், இந்த 13ஆம் எண்ணைப் படைத்தவனும் கெட்டவனாகத்தானே இருக்க வேண்டும்? அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், வெலவெலத்துப் போய் விடுவார்கள் - பதில் வராது.

இன்னும் சில பேருக்கு எட்டாம் எண்ணும் பிடிக்காது; பெரிய மேதை என்று பி.ஜே.பி.காரர்கள் பிதற்றுவார்களே - அந்த அடல்பிஹாரி வாஜ்பேயிகூட இதற்கு விதிவிலக்குக் கிடையாது. பிதமராக அவர் ஆனபோது அவருக்கு டில்லியில் பங்களா ஒன்றை ஒதுக்கினார்கள். அதன் எண் 8. அவ்வளவுதான் தனக்கு எட்டாம் எண் இராசி கிடையாது என்று கூறிவிட்டார்.

என்ன செய்தார்கள்? வேறு பங்களாவை ஒதுக் கினார்களா? அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை; எண்ணை 6ஹ என்று மாற்றிவிட்டார்கள் அவ்வளவுதான், பங்களா மாற்றப்படவில்லை. ஆனால் எண் மட்டும் மாற்றப்பட்டவுடன் அந்த மேதை திருப்திப் பட்டுக் கொண்டாராம்.

விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51A) அந்தச் சட்டத்தின்கீழ் சத்தியம் செய்துதான் பதவியை ஏற்றுக் கொள்கிறார்கள். பிரதமர் என்ற நிலையில் உள்ளவர்களே அதற்குத் தயாராக இல்லையே - அரசியலமைப்புச் சட்டத்துக்கு என்னதான் மரியாதையோ!

டில்லி உயர்நீதிமன்றத்தில் குரோவர் என்ற நீதிபதி இருந்தார். அவரை குற்றவாளி ஒருவன் கத்தியால் குத்தி விட்டான். உடனே அந்த நீதிபதியை மருத்துவமனையில் சேர்த்தார்கள். நீதிபதி கண் திறந்து பார்த்தார். அறை எண் 13 என்று இருந்தது.

அவ்வளவுதான் உடனே இந்த அறையிலிருந்து மாற்றுங்கள் என்று கத்தினார். நான் கத்தியால் குத்தப்பட்டது 13ஆம் தேதி. நான் அன்று விசாரித்தது 13ஆவது வழக்கு - எனக்கு இந்த எண் சரிப்பட்டு வராது - ஆகாதது என்றார்.

என்ன செய்தார்கள்? அவர் சற்றுக் கண்ணயர்ந்த போது அந்த அறை எண்ணை அகற்றிவிட்டு 12ஏ என்று போட்டு விட்டனர். கண் திறந்து பார்த்த அந்த நீதிபதிக்கும் ஆத்ம திருப்தி.

இத்தகு மூடநம்பிக்கைக்காரர்கள் ஒன்று செய்யலாமே - இந்த எட்டு, 13 போன்ற எண்களை நாள்காட்டியில் இருந்து அறவே எடுத்துவிட வேண்டும் என்று சங்கம் அமைத்துத் தீர்மானம் போடலாமே - ஏன் போராட்டம்கூட நடத்தலாமே!

13ஆம் எண்ணைக் கண்டு அலறும் மக்கள் உலகின் பல பகுதிகளிலும்கூட உண்டு.

இலண்டனில் அரசி குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத்தின் தங்கை 1930 ஆகஸ்டு 21 இல் பிறந்தார்.

ஆனால் பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாக பதிவு செய்யவில்லை. ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13ஆம் எண் வரிசையில் இடம் பெற நேர்ந்திருக்குமாம்.

இந்த முட்டாள்தனத்தைக் கேலி செய்யவும், பகுத்தறிவைத் தூண்டவும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துணிவுடைய பகுத்தறிவுவாதிகள் 13 பேர் கூடினார்கள். 1982 சனவரி 13 ஆம் நாளைத் தேர்வு செய்து ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதன் பெயரே 13ஆவது சங்கம் என்பதாகும் (Thirteenth Club).

ஓர் உணவு விடுதியில் 13ஆவது அறையில் 8.13 மணிக்கு விழா நடத்தி, 13 மணிக்கு (அதாவது பிற்பகல் ஒரு மணிக்கு) முடித்தனர். ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதிகூடி விருந்துண்டு மகிழ்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது. உறுப்பினரிடமிருந்து 13.13 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. முட்டாள் தனத்தை வேறு எப்படித்தான் தோல் உரிப்பது?

சென்னை மாநகராட்சி கதவு இலக்கம் பொறிக்கப்படும் பொழுது 13அய் விரும்புவதில்லையாம். திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பழைய வீட்டின் எண் 13 ஆகும்.

இன்னின்ன காரணங்களுக்காக எங்களுக்கு வாக்கு அளியுங்கள் என்று கூறக்கூடத் துணிவு இல்லாதவர்கள், அப்படிக் கூற தங்கள் வசம் சரக்கு இல்லாதவர்கள்தான், பகுத்தறிவற்றவர்கள்தான் இந்த 13ஆம் எண்ணைக் கட்டிக் கொண்டு அழுவார்கள்.

நாட்டு மக்களுக்கு உணவைவிட உண்மையில் முக்கிய மாகத் தேவைப்படுவது பகுத்தறிவே. அது சரியாக இருந் தால்தான் மற்றவைகளும் சரியாக இருக்கும் - சரிதானே!
http://viduthalai.in/new/page-2/4657.html

Tuesday, February 8, 2011

அய்ன்ஸ்டின்-தீக்கதிர்

தீக்கதிர் இணைப்பு இதழான வண்ணக் கதிரில் (6.11.2011) பெட்டிச் செய்தி ஒன்று காணப்பட்டது.

அய்ன்ஸ்டின் இப்படி சொன்னார் என்ற தலைப்பில் அது வெளியாகியிருந்தது.
தீய சக்தி என்று எதுவும் இல்லை. அல்லது தீயசக்தி என்பது தானாக இல்லை. தீயசக்தி என்றால் கடவுள் இல்லை என்கிற நிலைமை அவ்வளவுதான். ஒளி இல்லாத இடத்தில் இருள் இருப்பது போல, வெப்பம் இல்லாத இடத் தில் குளிர் இருப்பது போல, கடவுள் இல்லாத மனிதனின் இதயத்தில் தோன்றுவதுதான் தீயசக்தி.

இப்படி ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் சொன்னதாக ஆன்மிகவாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு. அவ்வளவு பெரிய அறிவியல் மேதையே கடவுள் இருப்பதை நம்பியதற் கான ஒப்புதல் வாக்கு மூலம் தான் இது என்பார்கள். ஆனால் அவரது வாழ்க்கையையும், அவ ரது கருத்துகளையும் ஆராய்ந்த வர்கள் அவர் அப்படிச் சொன் னார் என்பதற்கு முழுமையான ஆதாரம் எதுவும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள் (வண் ணக்கதிர் 6.2.2011 பக்கம் 2).

பிற்பகுதியில் வண்ணக் கதிர் சொன்னதுதான் உண்மை என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன.

2008 மே 15 அன்று லண்டனில் மேஃபேர் எனும் இடத்தில் புளும்ஸ்பரி ஏலக் கடையில் விஞ்ஞானி அய்ன்ஸ்டின் ஜெர்மனி மொழியில் எரிக்குட் கிண்ட் எனும் மெய்யறிவாள ருக்கு 1954 ஜனவரி மூன்றாம் தேதியிட்ட கடிதங்கள் இரண்டு லட்சம் பவுனுக்கு விற்கப்பட்டன. அக்கடிதத்தில் அய்ன்ஸ்டின் எழுதியிருப்பதாவது:

என்னைப் பொறுத்த வரையில், கடவுள் என்னும் சொல் மனிதரின் நலிவின் (weakness) வெளிப்பாடு என்றும், விளைவு என்றும் கருதுகிறேன். பைபிள் என்பது பெருமைக்குரிய ஆனால், நாகரி கம் அடையாத (Premitive) மக்களின் மரபு வழிக் கதை களின் திரட்டாகும். அவை சிறு பிள்ளைத்தனமானவை.

என்னைப் பொறுத்தவரை யில், மற்ற எல்லா மதங்களையும் போலவே (யூத மதமும்) மிக மிகச் சிறுபிள்ளைத்தனமான, மூடநம்பிக்கைகளின் வடிவ மாகவே தெரிகிறது. யூதர்களின் இனத்தைச் சேர்ந்தவன் என்ப தில் மகிழ்கிறேன். அவர்களு டைய மனநிலையுடன் ஆழ மான உறவு எனக்கு இருக் கிறது. ஆனால் பிற மக்களிட மிருந்து வேறுபடும் தன்மைகள் அவர்களிடம் இல்லை என்பது என் கருத்து. மற்ற மக்களைவிட யூதர்கள் எவ்வகையிலும் சிறந்தவர்கள் அல்லர் என்பது என்னுடைய அனுபவம். அவர் களிடம் அதிகாரம் இன்மையால் மிக மோசமான புற்றுநோய் போன்ற நடப்புகளில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்ட வர்கள். மற்றபடி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என யூதர்களிடம் எதையும் விசேட மாக நான் காணவில்லை என்று அந்தக் கடிதத்தில் அய்ன்ஸ்டின் எழுதியுள்ளார்.

உண்மை இவ்வாறு இருக்க, கடவுள் இல்லாத மனிதனின் இதயத்தில் தோன்றுவதுதான் தீய சக்தி என்று அறிவியல் அறிஞர் அய்ன்ஸ்டின் சொன்ன தாகக் கூறுவது, பரப்புவது உண்மைக்கு மாறானதாகும்.

இவ்வளவு தெளிவான நாத்திகரை கடவுள் என்னும் குப்பிக்குள் முடக்கப் பார்க்கும் மூடர்களை என்னென்று சொல் வது! பெரியார் வீட்டிலும் பிள்ளையார் இருக்கிறார் - தினந்தோறும் பூஜை செய்கிறார் என்று கையாலாகாத சிலர் இங்கு பிரச்சாரம் செய்ய வில்லையா?
அத்தகைய மனிதர்கள் எங்கும் இருக்கத்தான் செய் கிறார்கள்!

- மயிலாடன்
http://viduthalai.in/new/home/archive/2851.html 

Sunday, February 6, 2011

சோதிடம் - அறிவியல் அல்ல-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

(17.7.2010 அன்று பொன்னேரியில், ஏறத்தாழ ஆயிரம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூடியிருந்த அரங்கில், அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரையிடம் பல்வேறு வினாக் களை மாணவர்கள் எழுப்பினர். அதி லிருந்து சிலவினாக்களும், அவர் அளித்த விடைகளும்)

கேள்வி: கோதவாடி என்னும் ஒரு சிற்றூரில் பிறந்த நீங்கள், இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக எப்படி உயர்ந் தீர்கள்?

பதில்: அதற்குப் பல்வேறு காரணங் கள் இருக்கின்றன. குறிப்பாக ஒன்றைச் சொல்வதானால். நான் தமிழ் வழிக் கல்வியில் படித்தவன், தாய்மொழி வழிக் கல்வி தான் அறிவியல் செய்திகளை நன்றாகப் புரிந்து கொள்ளுவதற்கும், அதற்கும் மேல் நாம் சுயமாகச் சிந்திப்பதற்கும் உதவும். எனவே, என் முன்னேற்றத்தில் தமிழ்வழிக் கல்விக்குப் பெரும் பங்கு உண்டு.

கேள்வி: சந்திராயன் விண்கலத்தை அனுப்புவதற்கு முன் திருப்பதி கோயிலுக்குச் சென்று பூசை செய்து வழிபட்டது சரிதானா?

பதில்: நான் தனிப்பட்ட முறையில் அவ்வாறு எதுவும் செய்வதில்லை. பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் தொடக்குவதில்லை என்றுகூட ஒரு மரபு உண்டு. ஆனால் நான் பல புதிய திட்டங்களைச் செவ்வாய்க்கிழமைகளில் தான் தொடங்கியிருக்கிறேன் என்றா லும், திருப்பதிக்கு என் மேலதிகாரிகள் எல்லாம் சென்ற போது என்னையும் அழைத்தார்கள். அதை நான் மறுக்க முடியாது.

கேள்வி: உங்களுடைய இந்த வளர்ச்சி என்பது தனிப்பட்ட முயற்சியா அல்லது கூட்டு முயற்சியா?

பதில்: கண்டிப்பாகச் சந்திரயான் _ 1 இன் வெற்றி என்பது ஒரு குழு முயற்சிதான். முழுமையான ஒரு குழு வினுடைய முயற்சி. இதில் கிட்டதட்ட 3000 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் மட்டுமல்ல, அமெரிக்கர்கள் வேலை செய்திருக் கிறார்கள். பல்கேரியர்கள் வேலை செய் திருக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து, ஜெர்மனியிலிருந்து, ஜப்பானிலிருந்தெல் லாம் வந்து வேலை செய்திருக்கிறார்கள். இப்படிப் பலதரப்பட்ட பகுதியிலிருந்து வந்தவர்கள் இணைந்து என்னுடைய தலைமையில் செய்த கூட்டுப்பணிதான் சந்திரயான்_1

கேள்வி: இப்படி ஒரு சாதனையாள ராக மாறுவோம் என்று சிறுவயதில் தாங்கள் நினைத்திருப்பீர்களா?

பதில்: ஒரே ஒரு சொல்லில் பதில் சொல்வதாக இருந்தால், இல்லை. என்னுடைய அப்பாவின் வழிகாட்டு தலில்தான் நான் வந்தேன். விண் வெளித்துறை என்று ஒன்று இருக்கிறது என்றுகூட எனக்குத்தெரியாது. அவ்வ ளவு ஏன், அய்.அய்.டிக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதுகூடத் தெரியாது. அந்தமாதிரி நிலையில் இருந்து வந்தவன் நான். ஆனால் எந்தக் கல்லூரியிலும் முதலாவதாக வரவேண் டும் என்று நினைத்ததால், என்னுடைய அப்பாவின் வழிகாட்டுதலி னால், அரசாங்கத்துறை என்பதால் பெங் களூரில் போய் வேலையில் சேர்ந்தேன். ஆனால் அங்கே போய்ச் சேர்ந்த பிறகு தான் என்னுடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்தேன். நான் இந்தத் துறைக்குள் வந்ததை ஒரு விபத்து என்றுகூடச் சொல்லலாம். ஆனால் உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம். நான் இங்கு வந்ததன் நோக்கம் _ நீங்கள் செய்ய நினைப்பதைச் சரியாக செய்வதற்கு ஊக்கமளிப்பதற் காகத் தான்.

கேள்வி: கான்ஸ்பியரன்சி தியரி ஆஃப் மூன் பற்றி கொஞ்சம் சொல் லுங்களேன்...

பதில்: நிலவில் போய் மனிதர்கள் இறங்கியதே உண்மையா என்பது போன்ற புத்திசாலித்தனமான கேள் விகள் அந்த கான்ஸ்பியரன்சி தியரியில் கேட்கப்பட்டுள்ளன.

அந்த கேள்வி களுக்கெல்லாம் நாசாவே பதில் சொல்லியிருக்கிறது. அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அறிவியல் பூர்வமான பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. உதா ரணமாக, நிலவில் கொடி ஆடுமா, அங்கே காற்றே இல்லை. பிறகு எப்படிக் கொடி ஆடியது? என்று கேட் கிறார்கள். நிலவில் காற்று இல்லை என்பதை நாம் அனைவருமே அறி வோம். ஆனால் அங்கே கொடி ஆட வேண்டும் என்பதற்காகச் சிறப்பாகக் கொடி தயாரிக்கப்பட்டது. அங்கே காற்று இல்லாததால்தான் அந்தக்கொடி ஆடியது. ஏன் என்றால், அங்கே உள்ள மணல் மிகவும் நுண்ணியதாக இருக்கும்.

எனவே ஒரு குழாயினுள் ஆம்ஸ்ட்ராங் கொடியைச் செருகி வைத்தால், அப்படி அவர் வைக்கும்போது அந்தக் கொடி ஆடியது. அப்படி ஆடிக்கொண்டிருக் கின்ற கொடி, அங்கே காற்று இல்லாத தால் அதாவது அதை உராய்வதற்கு, உராய்ந்து கொடி ஆடுவதை நிறுத் துவதற்கு உராய்வு விசை இல்லாத காரணத்தால் வைத்தால், அப்படி அவர் வைக்கும்போது அந்தக் கொடி ஆடியது. அப்படி ஆடிக்கொண்டிருக்கின்ற கொடி, அங்கே காற்று இல்லாததால் அதாவது அதை உராய்வதற்கு. உராய்ந்து கொடி ஆடுவதை நிறத் துவதற்கு உராய்வு விசை இல்லாத காரணத்தால் நிலவில் கொடி ஆடியது. காற்று இல்லாத கண்ணாடிப் பெட் டிக்குள் (கடிகாரத்தில்) தனிஊசல் எப்படி ஒருமுறை கொஞ்சம் ஆட்டி விட்டால் தொடர்ந்து சீராக ஆடிக் கொண்டிருக்கிறதோ அப்படித்தான் இதுவும்.

இப்படி கான்ஸ்பியரன்சி தியரியில் உள்ள ஒவ்வொரு கேள்விக் கும் அறிவியல் பூர்வமாகப் பதில் சொல் லியிருக்கிறார்கள். நிலவில் மனிதர்கள் இறங்கியதற்கான காலடித் தடங்களை சந்திரயான்கூட படம் பிடித்திருக்கிறது. எனவே அந்தத் தியரி தவறானது.

கேள்வி: அண்மையில் நாகர்கோயி லில் ஒரு கோயில் கோபுரத்தின் மீது இது தாக்கியதில், அதில் இருந்த கலசம் இரிடியமாக மாறிவிட்டாகப் பத்திரிக் கைச் செய்தி வெளிவந்தது. கலசம் இரிடியமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: நானும் படித்தேன். ஊடகங்கள் வழியாக அது தொடர் பான கேள்விகளுக்குப் பதிலளித்து இருக்கிறேன். இது சரியானதில்லை. கோபுரங்களின் மீது இடி தாக்குவது என்பது அடிக்கடி நடக்கின்ற ஒன்று தான். ஆனால் அதை வேறு மாதிரி யாகப் பயன்படுத்துகின்றனர். அறிவி யல் பூர்வமாக அதெல்லாம் சாத்திய மில்லை என்பதுதான் உண்மை.

கேள்வி: சந்திராயன் _ 1அய் விண் ணில் ஏவும்போது உங்களுக்குள்ளே ஒரு மாற்றம், உணர்வு ஏற்பட்டிருக்குமே _ அதைப்பற்றிக் கொஞ்சம் சொல் லுங்கள்...

பதில்: நான் இந்தக் கேள்விக்கான விடையை நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதாவது நான் ஆணாக இருந்தபோதும் அந்த நேரத்தில் தாய்மையை உணர்ந்தேன். 60 மணிநேரத்திற்கு முன்பே கவுன்ட் டவுனை ஆரம்பித்து விடுவார்கள். அதை நேரில் பார்த்துக்கொண்டிருப் போம். 10,9,8 என்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சந்திரயான் விண்ணில் சீறிப்பாய்ந்தபோது நான் தாய்மையை உணர்ந்தேன். அதனால் தான் முதன்முதலாக ஊடகங்கள் என்னைக் கேட்டபோது. “Our baby is on the way to the moon” என்று சொன்னேன்.

கேள்வி: கோதவாடி என்ற குக் கிராமத்தில் பிறந்த நீங்கள் இன்று அறிவியலால் இவ்வளவு உயரத்தை எட்டியிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

பதில்: இதே கேள்வியை, கர்நாடாக வில் ஒரு மாவட்டத்தில், ஏறத்தாழ 15,000 மாணவர்களுக்கு முன்னால் ஒரு பெரியவர் கேட்டார். இதற்கான பதிலை நீங்கள் தமிழிலேயேகூடச் சொல்லுங்கள். நான் கன்னடத்தில் மொழி பெயர்க்கச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னார். நான் நிறைய இடங்களில் சொன்னது தான்; செம்மொழி மாநாட்டில் கூட அதைத்தான் சொல்லியிருக்கிறேன். தாய் மொழியில் படித்தது எனக்குச் சுய சிந்தனையை உருவாக்கியது. அதாவது 70 கலங்கள் விண்வெளிக்குப் போயிருந் தாலும். மற்றவர்கள் செய்ததை நாங்கள் பின்பற்றவில்லை.

நாங்கள் சுயமாக சிந்தித்துச் செய்தோம். அதனால்தான் 69 கலங்கள் செய்ய முடியாததை 70 ஆவது கலமாக நாங்கள் விண்ணில் செலுத்திய சந்திரயான் செய்தது. இந்த சுய சிந்தனைக்குக் காரணம் கண்டிப் பாகத் தாய்மொழிக் கல்விதான் என்பதை நான் உணர்கிறேன்.

கேள்வி: சந்திரயான் _ 1 ஒவ்வொரு இந்தியனுக்கும் என்ன செய்திருக்கிறது, அதாவது ஒவ்வொரு இந்தியனுக்கும் அதனால் பயன் என்ன?

பதில்: ஏன் நிலவுக்குப் போகவேண் டும் என்பதற்கான 200 காரணங்களை முன்வைத்து ஒரு பெரிய புத்தகமே போட்டிருக்கிறார்கள். இந்தியாவின் மக்கள் தொகை இரண்டாம் இடத்தில் இருக்கிறது. என்பது நமக்குத் தெரியும். கூடிய விரைவில் முதல் இடத்திற்குப் போகக்கூடும் என்று ஆய்வுகள் சொல் லுகின்றன. நாளை ஒரு அமெரிக் காவோ, ஒரு ஆஸ்திரேலியாவோ நிலவில் உருவாகும்போது, இந்தியனுக்கும் அங்கே முழு உரிமையும் இருந்தே தீரவேண்டும். அதற்கான முதல் படி சந்திரயான் _ 1. இது 200 காரணங்களில் ஒரு காரணம் மட்டுமே, சந்திரயானுக்கு முன்பு, இந்தத்துறைக்கு நாங்கள் 40 பேரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந் தெடுப்போம். அதற்கு வெறும் 2000 பேர் மட்டும்தான் விண்ணப்பிப்பார் கள். ஆனால் சந்திரயானின் வெற்றிக் குப் பிறகு 1 இலட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். சந்திரயானுக்கு முன்பு 13 கலங்கள் செய்திருக்கிறேன். ஆனாலும் என்னை அடையாளம் காட்டியது சந்திராயான் _1 தான். தனிப்பட்ட மனிதனுக்கு மட்டு மல்ல, இன்று அறிவியல் துறையில் இந்தியாவின் முகவரியாகவே சந்திர யான்_ 1 அறியப்பட்டுள்ளது.

கேள்வி: நிலவின் மேற்பாறைகளில் உள்ள ஹீலியம் 2 அய் நாம் எப்படி உருக்கிக் கொண்டு வர முடியும்? அது ஒரு unstable எனும்போது அதை மின்சாரம் தயாரிக்க எப்படிப் பயன்படுத்த முடியும்?

பதில்: நிலவிற்கு மனிதர்கள் போனால் அங்கும் தண்ணீர் வேண்டும், மின்சாரம் வேண்டும்_ இல்லையா? அங்கிருக்கிற தண்ணீரை இங்கே கொண்டுவருவதற்காக இல்லை. இங்குள்ள தண்ணீர்த் தேவையை அங்கேயிருந்து கொண்டு வந்து நிறைவு செய்துவிட முடியாது. ஆனால் அங்கே போகும்போது அங்கு தண்ணீர் தேவை. அதே நேரத்தில் அங்கே மூலப் பொருள்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வது. மனிதன் எங்கே போய் இறங்கலாம் என்பதை அறிந்துகொள்ளத்தானே ஒழிய அங்கிருக்கின்ற மூலப்பொருள் களை எல்லாம் இங்கே கொண்டு வந்து விடுவதற்காக இல்லை. அப்படி அங்கி ருந்து ஏதாவது கொண்டு வருவதாக இருந்தால் ஹீலியம் _ 3 அய் மட்டும் தான் கொண்டு வருவோம். அதுவும் சில டன்கள் மட்டும்தான் கொண்டு வரலாம். மற்றபடி அங்கே இருப்ப வற்றை ஆராய்ச்சி செய்வது என்பது எதிர்காலத்தில் மனிதன் அங்கு போய் இறங்கும்போது எந்த இடத்தில் இறங் கினால் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தான்.

கேள்வி: சோதிடம் என்பது அறிவி யலா? வானத்திலுள்ள கோள்களைச் சோதிடர்கள் தங்களுக்குச் சாதமாக்கிக் கூறுகிறார்கள். இதைப்பற்றி தங்க ளுடைய கருத்து என்ன?

பதில்: இந்தக் கேள்விக்கு என்னு டைய சொந்தக் கருத்தைச் சொல்கிறேன். நான் என்னுடைய பதினொன்றாம் வகுப்புத் தேர்வுக்கான முடிவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு சோதிடர் எனக்குச் சோதிடம் பார்த்துவிட்டு என்னுடைய அப்பா விற்கு மேலே உனக்குப் படிப்பு இல்லை என்று சொன்னார்.

என்னுடைய அப்பா பத்தாவது வரை படித்திருக் கிறார். அவர் அன்றைக்குச் சொன்னது. நான் எஸ்.எஸ்.எல்.சிக்கு மேலே தேற மாட்டேன். அது எந்த அளவிற்குப் பலித்திருக்கிறது என்பது இப்போது உலகத்திற்கே நன்றாகத் தெரியும். அன்று அந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எங்கள் கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தேன். ஆக என்னு டைய அனுபவத்தில் சோதிடம் என்பது ஒன்றுமேயில்லை. அறிவியல் பூர்வ மாகப் பார்த்தால் சோதிடமும், வானி யலும் ஒன்று இல்லை. அறிவியல் படி அது சரியல்லை என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: செவ்வாயை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்ற இன்றை சூழ்நிலையிலும், ஆக்டோபஸ் சையும், கிளி சோதிடத்தையும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்: இது மூடநம்பிக்கையை விட மோசமான நம்பிக்கை. அந்த ஆக்டோ பஸ் பாவம்! அந்தக் கொடியினுடைய கலர் பிடித்து, அது போயிருந்திருக்க லாம். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி யான உணவைச் சாப்பிடப்பிடிக்காமல் அது வேறு பெட்டிக்குப் போயிருக்கிறது. மூன்று நான்கு நாள்களாகத் தொடர்ந்து ஜெர்மன் கொடி உள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவையே சாப்பிட்டதால், அடுத்த நாள் அது பிடிக்காமல் அடுத்த பெட்டிக்குப் போயிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். அதைப்போய் இவர்கள் ஏதேதோ சொல்லி பரப்பரப்பாக்கி விட்டார்கள். அதே போலத்தான் கிளி சோதிடமும்.

(நன்றி: அறிவியல் தமிழ் பிப்ரவரி - மார்ச் -2011)
http://viduthalai.in/new/page4/2800.html 

Monday, December 20, 2010

சிறீஅரிகோட்டா விஞ்ஞானி செயற்கைக் கோளை ஏவுமுன் காளஹஸ்தி கோயிலில் அர்ச்சனை செய்வதா?-கி.வீரமணி

ஜோதிடத்தை நம்பி குழந்தையைக் கிணற்றில் வீசி எறிந்த பெண்
சிறீஅரிகோட்டா விஞ்ஞானி செயற்கைக் கோளை ஏவுமுன் காளஹஸ்தி கோயிலில் அர்ச்சனை செய்வதா?அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் இலட்சணம் இதுதானா? வேண்டுமானால் பக்தி வீட்டுக்குள்ளிருக்கட்டும்!

தமிழர் தலைவர் கண்டனம்

விண்வெளி ஆய்வுக்கூடமான சிறீஅரிகோட்டாவில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன் ஆந்திர மாநில காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று விஞ்ஞானி அர்ச்சனை செய்வது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிரானதல்லவா - விஞ்ஞானிக்குப் பக்தி இருந்தால், அது அவர் வீட்டுக்குள் பூஜையறையில் இருக்கட்டும் - ஆனால், மதச் சார்பற்ற அரசுப் பணியில் அதனைத் திணிக்கலாமா? என்று வினா எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.


அறிக்கை வருமாறு:

இன்றைய ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ள நெஞ்சை உருக்கும் செய்தி ஒன்று, மூட நம்பிக்கையால் நம் மக்கள் வாழ்வு எப்படி சீரழிந்து சின்னாபின்ன மாக்கப்படுகிறது என்பதை விளக்குவதாக உள்ளது!


ஜோதிடத்தால் பெற்ற பிள்ளையைக் கிணற்றில் தூக்கி எறிந்த குரூரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற 25 வயது நிறைந்த பெண், தன் குடும்பத்தாரின் சம்மதமின்றி தத்தூர் என்ற ஊரில் உள்ள ஒரு ஸ்பின்னிங்மில்லில் வேலை பார்க்கும் தர்மராஜ் என்பவரை இரண்டாண்டு களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்; இரண்டு குடும்பங்களுமே இந்தக் காதல் திருமணத் தம்பதிகளை ஏற்க மறுத்துவிட்டன. (ஜாதி மறுப்புத் திருமணமாகவும்கூட இது இருந்திருக்கலாம் - உறுதியாகத் தெரியவில்லை).

இவர்களுக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று பிறந்து வளர்ந்துவரும் நிலையில், இந்த காளீஸ்வரி என்ற (தாய்) பெண், எவனோ வழியில் போகும் ஒரு ஜோசியக் காரனிடம் ஆரூடம் கேட்டாராம்; அவன், நீ இந்தக் குழந்தையை எப்படியாவது விட்டொழித்தால்தான் உங்களது குடும்பத்தவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வர் என்று ஜோசியம் கூறினானாம்!

அதைக் கேட்டு, இந்த மூட நம்பிக்கையால் தனது 18 மாத ஆண் குழந்தையை ஒரு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்ய முன்வந்தாராம்!


நாடகம் அம்பலமானது

இதைச் செய்துவிட்டு, கழுத்தில் போட்டிருந்த செயினைத் திருட, யாரோ ஒரு இளைஞன் தனது குழந்தையைப் பிடுங்கி கிணற்றில் வீசி எறிந்ததாக, காவல் துறையினரிடம் ஒரு போலி நாடகம் ஆடியுள்ளார்! காவல்துறை அதிகாரிகள் உண்மையை வரவழைத்து விட்டனர்!

என்னே மனிதாபிமானமற்ற கொடுமை!

இதில் ஜோதிட மூட நம்பிக்கை, காதல் திருமண எதிர்ப்பு, ஜாதி ஒழிப்புக்கு மறுப்பு என்ற சமூகக் கட்டுப்பாட்டு மூட நம்பிக்கை என்ற மூவகை மூடத்தனங்களும் சேர்ந்து, அந்த 18 வயது குழந்தையைக் கொன்றுள்ளது என்பது தானே உண்மை?

வன்மையான கண்டனத்திற்குரிய இச்சம்பவம் உணர்த்துவது என்ன? இன்னமும் பெரியாரும், அவர்தம் இயக்கமும், கொள்கைப் பிரச்சாரமும் எவ்வளவு தேவைப்படுகிறது என்பதுதானே!

இவராவது படிக்காத ஒரு கிராமத்துப் பெண், இளம் வயதில் இப்படி ஒரு முடிவு எடுத்தால் இனிவரும் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் தப்புக் கணக்கு அதற்கு அடிப்படையாக இருக்கலாம்.

அதைவிட வெட்கத்தாலும், அவமானத்தின் ஆழத் தாலும் மிகவும் வேதனை அனுபவிக்கவேண்டிய மற்றொரு முக்கிய செய்தி:


விண்வெளி விஞ்ஞானியின் மூடநம்பிக்கை

சிறீஅரிகோட்டாவிலிருந்து இன்று பறந்திருக்க வேண்டிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - ஜி சாட் 5 பிரைம் என்ற செயற்கைக்கோள் (விண்வெளி ஆராய்ச்சித் துறையினரால்) தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்!

ரஷ்யாவிலிருந்து வந்த கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் என்ஜினில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, கசிவு காரணமாக, புறப்படுவது தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்! தேதி பின்னர் அறிவிக்கப்படுமாம்!

இதன் தலைவர் (இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர்) திரு. ராதாகிருஷ்ணன் என்ற கேரளத்தைச் சார்ந்த விஞ்ஞானி (இவர் மாதவன் நாயருக்கு அடுத்தபடி இந்தப் பதவியை ஏற்றவர்) இந்த விண்வெளிக்குப் புறப்படும் ராக்கெட் நல்லபடி புறப்பட, ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தாராம்!

ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி, காளஹஸ்தி கோவிலில் உள்ள கடவுளை வேண்டினார் என்பது எவ்வளவு அறியாமை! மடமை! மூட நம்பிக்கை! அறிவியலுக்கு நேர்மாறானது!

அந்தக் கோபுரம் இடிந்து கோயிலே சில மாதங்களுக்குமுன் தரைமட்டமான பிறகும்கூட - இவர்களுக்குப் புத்தி வரவில்லையே!

தன்னைக் காக்கத் தெரியாத - முடியாத கடவுளா உன்னைக் காப்பாற்றுவான் என்று தந்தை பெரியார் கேட்பார்; அதுதான் நினைவுக்கு வருகிறது! அதன் பின்னரும் கிளம்பவில்லையே! இதுதான் பக்தியின் சக்தி!


அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நமது அரசு மதச்சார்பற்ற (Secular) அரசு; அதுமட்டுமல்ல - ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை (Fundamental Duties) என்பதில் அறிவியல் மனப்பாங்கு Scientific Temper,’’ ‘‘Spirit of Enquiry - கேள்வி கேட்கும் ஆராய்ச்சி, Humanism - மனிதநேயம், Reform - சீர்திருத்தம் - இவ்வளவும் தேவை என்று 51ஏ பிரிவின்படி கூறியுள்ளதே!


இவர்களுக்கு - மேதைகளுக்குப் பொருந்தாதா?

மதச் சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை எல்லாம் இவர்களால் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறதே இது நியாயந்தானா?

திருப்பதி கோயிலுக்குச் சென்றபோதும் பலன் ஏற்பட்டதா?

ஏற்கெனவே, இவரின் முன்னோடி, விண்வெளி ஆராய்ச்சி செய்து கண்டறிந்த ராக்கெட்டை அனுப்புமுன் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை வேண்டுவது, குருவாயூருக்குச் சென்று, குருவாயூர் கிருஷ்ணனை வேண்டுவது போன்ற கேலிக் கூத்தான செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர்! கடைசியில் பலனின்றித் தோல்வியில் முடிந்ததும் உண்டு.

நாடு முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள், மதச்சார்பின்மை தத்துவங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் இதனைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பவேண்டும்.


பக்தி வீட்டுக்குள் இருக்கட்டும்!

அந்த விஞ்ஞானிக்குப் பக்தியிருந்தால் அது அவரது வீட்டுக்குள்தான் இருக்கவேண்டும். விண்வெளிக் கூடத்திற்கு வரவழைக்கப்படலாமா?

இந்த மெத்தப் படித்த மேதாவிகளின் கேலிக் கூத்துக்குமுன், ஆனைமலை காளீஸ்வரிகளின் மூட நம்பிக்கை வெகுசாதாரணமான சின்ன கோடாக மாறிவிடுகிறதே!

படிப்புக்கும், அறிவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா நம் நாட்டில்? மகா வெட்கக்கேடு!
http://www.viduthalai.periyar.org.in/20101220/news16.html

Sunday, October 10, 2010

நவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா ? - தந்தை பெரியார்

நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்கால மும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராய ணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக் களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.



நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாச மிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடைய வர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண் டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங் களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப் பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்ப தால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென் றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங் களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கை களுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப் பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத் தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண் டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற் சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத் திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படு கிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழி யான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படு கின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக் கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக் களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பி லடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேக மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடு வதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண் ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்ச மெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத் திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதி யும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டி ருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.

கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ்வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ் வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடி கள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோ மாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயி ருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங் களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபி ஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக் களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களை யெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்க ளென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?

ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலை யில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலு வால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந் தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

Wednesday, October 6, 2010

பரம்பரைப் பரம்பரையாக நாம் செய்து வந்த சரஸ்வதி பூசை ஆயுத பூசை நமக்குப் பலன் தரவில்லையே! யோசித்துப் பார் அடுத்த ஆண்டுக்குள்ளாவது!


ஆயுதபூசைபற்றி அண்ணா
எலக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்-புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்-டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும், மனி-தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள், ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்-பவர்கள் எல்லாம். சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கொண்டாடாதவர்கள்!!
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்களெல்லாம், ஆயுதபூசை செய்தவர்களல்ல!

நவராத்திரி கொண்டாடினவர்-களல்ல!

சரஸ்வதி பூசை இல்லை!

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும் மண்வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள் தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்-துக்குப் போடும் கண்ணாடிகூட, சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்ததுதான்.

நீ, கொண்டாடுகிறாய்-_

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை!!

ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சுயந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக் கொண்டு, உன், பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்துவந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளை, பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்-குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல், யோசி _ உன்னை-யுமறியாமல் நீயே சிரிப்பாய்.

உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூற்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடி-யிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்-சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

எல்லாம் மேனாட்டான், கண்டு-பிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை, மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!

சரஸ்வதி பூசை, விமரிசையாக நடைபெற்றது _ என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட், அல்லது ராய்ட்டர் சர்வீஸ் _ தந்தி முறை _ அவன் தந்தது!

தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!

ராகவன், ரேடியோ கேட்டதில்லை, சிபி, சினிமா பார்த்தில்லை!

தருமராஜன், தந்திக்கம்பம் பார்த்ததில்லை!

இவைகளெல்லாம், மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது _ அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம்.

அவர்கள், சரஸ்வதி பூசை ஆயுத பூசை! செய்தறியாதவர்கள் என் பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம். இதுமுறைதானா?

பரம்பரைப் பரம்பரையாக நாம் செய்து வந்த

சரஸ்வதி பூசை ஆயுத பூசை _

நமக்குப் பலன் தரவில்லையே! அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்-களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும் பிறகு வெட்கமாக இருக்கும், அதை-யும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் _ அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

திராவிடநாடு 26.10.194

http://www.viduthalai.periyar.org.in/20101006/news06.html 

பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?

இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.

ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவை யாகும்.


விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.

கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.

ஒவ்வொரு நிமிடமும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத காலமாகும். காலத்தைக் கண்ணாகப் போற்றும் மனிதனும், நாடும்தான் முன்னேற்றப் பாதையில் முனைந்து ஓடும்.

தொடர்ச்சியாக ஒன்பது நாள்களை மதத்தின் பெயரால் பாழ்படுத்தும் ஒரு நாடு எப்படித்தான் முன்னேறித் தொலைய முடியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான கதையளப்பு! அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அழுக்கு மூட்டைகள் அவை.

கடவுள் உருவமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர், விருப்பு வெறுப்பு அற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் சூலாயுதத்துடனும், வேலாயுதத்துடனும், கபாலத்துடனும், சிங்கத்தின்மீதும், மூஞ்சூறு மீதும், புலியின் மீதும், காகத்தின் மீதும் சவாரி செய்வது போன்ற உருவங்கள் - வழிபாடுகள் - கோயில்கள் என்றால் இந்த முரண்பட்ட, வெட்கம் கெட்ட மூடத் தனத்தை எண்ணி எங்கு போய் முட்டிக்கொள்வது!

ஒவ்வொன்றுக்கும் ஸ்தல புராணக் குப்பைகள் வேறு - பராசக்தியே துர்க்கையாக இருந்து தீமை களை அழிக்கிறாளாம்; அவளே சரசுவதியாக இருந்து கல்வியையும், அறிவையும் கொடுக்கி றாளாம்; அவளே மகாலட்சுமியாக இருந்து செல்வத்தையும் வாரி வழங்குகிறாளாம்.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள்தான் கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முத லிடத்தில் இருக்கவேண்டும்.

11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் போட்டும் இன்னும் தற்குறித்தனம் ஒழிக்கப்படவில்லை. இன்னும் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் ரூபாய் 20 தான். சீனாக்காரன் கையில் உள்ள இந்தியாவின் நிலப் பகுதிகள் இன்னும் மீட்கப்படவில்லை.

பூஜைகளுக்கும், புராணப் புளுகுகளுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சரசுவதி பூஜை கொண்டாடாத நாட்டில் நூற்றுக்கு நூறு படித்திருக்கிறார்களே! முயற்சி வேண்டாம் - பக்தி போதும் என்று போதனை செய்து வளர்க்கப்பட்ட நாட்டிலே புத்தி எப்படி வளப்பம் பெறும் - முன்னேற்றம் எங்கே முளைகட்டும்?

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவி கள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?

அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப் படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழி லாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை என்ற கேள்விகள் எழாதா?

குண்டூசி கூட கண்டுபிடிக்கத் தெரியாத நாட்டில் ஆயுத பூஜைக்கு மட்டும் குறைவு இல்லை. கடவுள்களின் கைகளில் இருக்கும் கருவிகள் எல்லாம் கொலைக்கருவிகளாகத்தான் இருக் கின்றன - அந்தக் கருவிகளைக் கொண்டு இந்து மதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளன - கொலைகளைச் செய்துள்ளன - அதற்காகத்தான் பூஜை புனஷ்காரங்களா?

பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க் கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?

http://www.viduthalai.periyar.org.in/20101006/news05.html

weather counter Site Meter