Pages

Search This Blog

Sunday, June 16, 2013

1921 ஆம் ஆண்டு பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் சில செய்திகள் - அவதூறுக்குப் பதிலடி

திராவிடர் இயக்கத்தின்மீது அவதூறுச் சேற்றை இறைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. 1921 இல் பி அண்ட் சி ஆலை வேலை நிறுத்தம் தொடர்பாக நீதிக் கட்சியின்மீது சிலர் அள்ளி வீசிவரும் பொய்யான தகவல்களை திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க.திருநாவுக்கரசு அவர்கள் அவருக்கே உரித்தான தன்மையில் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கும் ஆவணம் இது. ஊன்றிப் படித்து உண்மையை உணருவீர்! - ஆர்

பசுமைத் தாயகத்தைச் சேர்ந்த அருள் என்கிற தோழர் தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே விரட்ட வேண்டும் - திராவிட இயக்கத்தின் விபரீத வரலாறு எனும் கட்டுரையை இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அக்கட்டுரை எம் நண்பரால் எமக்கு அனுப்பப்பட்டு நாம் அதை மிகக் கவனமாகப் படித்துப் பார்த்தோம். அக்கட்டுரை தொடர்பாக எமது கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்புகின்றோம்.
தோழர் அருளின் கட்டுரை மொத் தம் ஏழு பக்கங்கள் உள்ளன. அதில் நுதல் பொருள் (Subject Matter) முழுவதுமாக இல்லை. நிகழ்வரத்தை (Facts) அவர் நடுநிலையோடும் ஆரா யவில்லை, எழுதவும் இல்லை. மேலும் அவர் ஒரு தலைப்பட்சமாகவே எழுதி யிருக்கிறார். ஆயினும் அவருக்கு நாம் நன்றி தெரி விக்கின்றோம். 1921 ஆம் ஆண்டு பின்னி ஆலை வேலை நிறுத் தம் வரலாற்றுப் புகழ் பெற்றது ஆகும்.
இந்நிகழ்வு நீதிக்கட்சி காலத்தில் - அவர்களின் ஆட்சியின்போது நடைபெற்று இருக்கிறது, ஆகவே இவ்வேலை நிறுத்தம் குறித்து நாம் எழுதிய நீதிக்கட்சி வரலாற்றில் அவசியம் இடம்பெற்று இருக்கவேண் டும். ஆனால், இடம்பெறவில்லை. அடுத்த பதிப்பில் பின்னி வேலை நிறுத்தம் குறித்து ஒரு தனி அத் தியாயம் இடம்பெறும். எம் மனத்தி லிருந்து மறப்பெனும் கள்வனால் வாரிச் சென்ற அந்நிகழ்மையை நினைவூட்டிய தோழர் அருளுக்கு நாம் நன்றி சொல்வதில் தவறு இல்லை அல்லவா? பின்னி வேலை நிறுத்தம் குறித்து நிரம்பச் செய்திகள் இருக் கின்றன. ஆனால், கட்டுரையாளர் அருள் ஏதோ ஒன்றை தனக்குச் சாதகமானது போன்ற கருத்தை இணைய தளத்தில் கொளுத்திப் போட்டு விட்டார்.
நமது நாவலர் நெடுஞ்செழியன் மேடைகளில் உரை நிகழ்த்துகிறபோது - எதிரிகளுக்குப் பதில் சொல்கிறபோது, மொட்டை தாதன் குட்டையில் விழுந் தான் என்பதுபோலப் பேசினால், எழுதினால் எப்படி? என்று எதிரிகளை வினவுவார். மொட்டை தாதன் என்றால் எந்த ஊர் மொட்டை; எந்த இடத்தில் உள்ள குளத்தில் விழுந்தான்? என்கிற விவரம் வேண்டாமா? என்று கேட்பார். அதைப்போல நாமும் இந்த இணைய தளக் கட்டுரையாளரைக் கேட்கத் தோன் றுகிறது. அவர் எழுதியுள்ள கட்டுரையில் விவர அடர்த்தியும், ஆழமும் இல்லாமல் பிரச்சினை என்ன என்பதைப் படிப்ப வருக்குப் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கிறது.
1921 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் நிகழ்வுகளைப்பற்றிய நிகழ்வரங்களின் உண்மைகளை நாம் இங்கே எடுத்துக் கூறக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
சென்னை மாநகரத்தின் பழைய தலைமுறையினருக்கு பி அண்ட் சி மில் என்றால் நன்றாகத் தெரியும். இப்போது அந்தப் பெயர் மெல்ல மறைந்து வருகிறது. அந்த மில் மூடி 17 ஆண்டுகள் ஆகி விட்டன. சுமார் 118 ஆண்டுகள் இந்த ஆலை நடைபெற்று வந்திருக்கிறது. ஆலை தொடங்கப்பட்டு 40 ஆவது ஆண் டில் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒரு வேலை நிறுத்தத்தை சந்தித்தது - சென்னை! அவ்வேலை நிறுத்தம் நிகழ்ந்த ஆண்டு 1921. இதைப்பற்றி இன்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்குப் பதில் சொல்லவேண்டிய தேவையும், அவசியமும் நமக்கு இருக்கிறது.
பங்கிங்காம் மில் (1878), கர்நாடிக் மில் (1882) என்கிற இரண்டு ஆலைகள் சென்னை சூளை பட்டாளம் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாலைகள் இரண்டும் 1920 முதல் ஒரே நிர்வாகத் தின்கீழ் செயல்பட்டன. இந்த ஆலைகள் தொடங்கப்பட்டு சுமார் 40 ஆண்டு களுக்குப் பிறகுதான் சென்னைத் தொழி லாளர் சங்கம் என்கிற அமைப்பு உருவா யிற்று. அப்போது எந்தவித சட்டங்களும், தொழிற்சங்கம் பற்றி இயற்றப்படவில்லை. சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலம் அநேகமாக முதல் உலகப் போர் முடிந்த நேரம், அந்தக் கால நிலைமை எப்படி இருந்தது தெரியுமா?
உணவுப் பஞ்சம் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. இப்பகுதிகளில் மழையே இல்லை, காய்ச்சலால் பலர் மடிகின்றனர், வாழ்க்கையே வெறுமையாய் இருக்கிறது
- என்று அந்தக் கால பஞ்ச நிலை மையைக் குறித்து 28.10.1918 ஆம் நாள் மறைமலையடிகள் எழுதிய நாள் குறிப்பு கூறுகிறது.
இப்படி ஒரு நிலைமை இருந்த போதுதான் சென்னைத் தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல தொழிற் சங்கங்கள் சென்னை மாநகரெங்கும் தோற்றுவிக்கப்பட்டன. ஏன்? போலீ சாருக்கும் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு இயங்கியது என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன். எந்தவிதமான தொழிற்சங்க சட்டங்களும் அப்போது இயற்றப்படவில்லை. இங்கே இடது சாரி இயக்கத் தலைவர்களின் மார்க் சியம் பயிலப்படவில்லை. அதனைப் பற்றிய நிழலுருவப் பேச்சு இல்லை. ஆனால், பின்னாளில் மார்க்சிய பார்வையில் வேலை நிறுத்தத்தைப் பார்த்தார்கள்; ஆராய்ந்தார்கள். அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் சிக்கலை - பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள் ளவே விரும்பினார்கள். எனவே, தேவைக் கருதிதான் சங்கம் உருவா கிறது. வாழ்நிலையிலிருந்து ஓர் அமைப்பு கட்டப்படுகிறது; உருவா கிறது. இரண்டு ஆலைகளிலுமாகச் சேர்ந்து தோழர் அருள் குறிப்பிடுவது போல 14,000 தொழிலாளர்கள் பணியாற்றவில்லை.
ஆண்டு    ப.ஆலை    கர்.ஆலை
1878            300                     -
1907           4304                3954
1920           5526                5158
இதுதான் வரலாறு சொல்கிற புள்ளிவிவரமாகும். புகழ்பெற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றபோது பதி னொயிரம் தொழிலாளர்கள் என்று திரு.வி.க. எழுதுகிறார். புள்ளி விவரப்படி இரு ஆலைகளிலும் சுமார் 11,000 பேர் பணியாற்றி வந் திருக்கிறார்கள். (விடுதலை நாளிதழ் வியாழன், 13 ஜூன் 2013)

அறிவியல் கண்டுபிடிப்புகள், அத னால் நிகழ்ந்த மாற்றங்கள் ஏற்கெனவே இருந்த முறைகளை மாற்றுதலுக்கு உட்படுத்தின. இந்தியாவில் ஆலைகளின் வரவும், ரயில்களின் வரவும், அய்ரோப் பியக் கலாச்சார ஊடுருவல்களும் இங்கே இந்த ஜாதி அமைப்புகளை கூக்குரல் இடச் செய்தன. பழமை அவலக்குரல் எழுப்பிக் கொண்டே புதுமையை ஏற்றுக் கொண்டது. காரணம் ஒரு ஜான் வயிறு! அது பி அண்டு சி மில்லுக்கும் பொருந்து வதாக இருந்தது.
பி அண்டு சி ஆலை யில் எல்லா ஜாதியினரும் பணியாற் றினர். இவர்களுள் தாழ்த்தப்பட்டோர் சரி பகுதியினர். இவர்கள் சென்னை நகரின் சேரிகளில் வாழ்ந்தனர். பிறர் ஒட்டுக் குடித்தனத்தில் இருந்தனர். ஒரு வீட்டில் 32 குடித்தனங்கள் வரை இருந்தன. அந்தக்குடும்பங்களே ஒரு தொழிற் சாலையாக இயங்கின.
தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ஆலையில் ரூ.26/- பயிற்சியற்ற தொழிலாளிக்கு (Unskilled)
12½   அணா முதல் 14 அணா வரை தினக்கூலி. (78 பைசா முதல் 87 பைசா வரை) இது அக்கால புள்ளி விவரங்கள் தருகின்ற செய்திகளாகும். தொழிற்சங்கம் தொடங் கப்பட்ட காலத்தில் இங்கே நிலைமை என்ன? நீதிக்கட்சி, காங்கிரஸ், ஹோம் ரூல் இயக்கம், முஸ்லிம் லீக் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து வருகின்ற அமைப்புகள். நீதிக்கட்சியின் தொடக்கக் காலத்தில் தொழிற்சங்க இயக்கத்தில் பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் இரண்டொருவர் இருந்தனர். அதில் ஒருவர் சக்கரைச் செட்டியார். ஹோம்ரூல் இயக்கத்தினரும் இருந்தனர். காங் கிரஸ்காரர்கள் இருந்தனர்.
அப்படி இருந்தோரில் முக்கியமானவர்கள் திரு. வி.க., B.P. வாடியா, சக்கரைச் செட்டியார், தண்டபாணி பிள்ளை, வ.உ.சி., ம.சிங்காரவேலர், சுப்பிரமணிய சிவா, இ.எல்.அய்யர் (இலும்பை இலட்சுமண அய்யர்) போன்றோர் ஆவர்.
சென்னைத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரே தவிர இதன் உறுப் பினர்கள் பி அண்டு சி ஆலைத் தொழி லாளர்களே ஆவர். இச்சமயம் தொடங் கப்பட்டபோது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளாக B.P.
வாடியா தலைவ ராகவும், திரு. வி.க. துணைத் தலைவராக வும், செல்வபதி செட்டியாரும் இரா மஞ்சலு நாயுடுவும் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹோம் ரூல் இயக்கத்தினர் தொழிற்சங்க இயக்கத் தில் ஆர்வங்காட்டி இதே கால கட்டத்தில் மத்திய சங்கம் அமைத்தனர், இது வெற்றி பெற்றதாகச் சொல்லி விட முடியாது.
சென்னைத் தொழிலாளர் சங்கம் தோன்றுவதற்கு முன்பாகவே பி அண்டு சி யில் 1878-லும், 1889-லும் வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1902 பங்கிங்காம் ஆலையில் மட்டும் வேலை நிறுத்தம் நடந்தது. உலகப் போர் முடிந்தும், ரஷ்யப் புரட்சி நிகழ்ந்தும் இருந்த வேளையில் பசிப்பிணியும், பஞ்சமும் சென்னையில் வாட்டியதால் 1920-21-இல் அப்போதைய நகரில் மட்டும் 30 வேலை நிறுத்தங்கள் நடைபெற்று இருக்கின்றன. சென்னை யில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் 25-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இருந்ததாகத் திரு. வி.க. குறிப்பிடுகிறார். இதனால் 90,000 தொழிலாளர்களை வேலை வாங்கும் 35 முதலாளிகள் 1920-ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஒன்று கூடிப்பேசினர். அத்தியாவசியமானதாக கருதப்படுகிற ரயில்வே, மின்சாரம், டிராம்வே, மண் ணெண்ணெய், பெட்ரோல் முதலியன நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தடை செய்யப்பட வேண்டும் என இக் கூட்டம் தந்தி மூலம் அரசைக் கேட்டுக் கொண்டது. இப்படித்தந்தி கொடுத்தவர் யார்? அப்போதைய பின்னி நிறுவனத் தின் இயக்குனரான ஏ.பி.சிமன்ஸ் என்பவர் தான். இத்தந்தியைத் தொடர்ந்து இக்கூட்டத்தினர் அரசினர்க்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினர். இவற்றைக் கிடைக்கப் பெற்றவுடன் அரசினர் ஓர் ஆணையை வெளியிட்டனர். அதில் தாடண்டர் என்பவர் குறிப்பு எழுதினார். இவர் ஓர் உயர்அரசு அலுவலர். இவர் பெயரில் சென்னை சைதாப்பேட்டையில் தாடண்டர் நகர் இருப்பதை இத்தருணத் தில் இங்கே பதிவு செய்கின்றோம்.
1920-ஆம் ஆண்டு பி அண்டு சி ஆலையில் ஒரு வேலை நிறுத்தம் நடந் தது. போலீஸ், பின்னி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டது. அரசு வெள்ளையர் கையில் இருந்தது. துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு பிரச்சினை போயிற்று. அதனால் இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். 1920-ஆம் ஆண்டு அக்டோபரில் சங்க நடவடிக்கை களில் பெரிதும் பங்காற்றிய நடேச முதலியார் என்பவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் அவர்க்குக் கீழே இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்களும் இப் பதவியை ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் அனைவரும் வேலையிலிருந்து நீக்கப்படுகின் றனர். இதனால் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு இயந் திரங்களுக்கு அருகே அமர்ந்து விடுகின்றனர். அதாவது உள்ளி ருப்பு வேலை நிறுத்தத்தைச் செய்தனர். பிறகு தொழிலா ளர்கள், ஆலை மேலாளரைக் காணச்சென்றனர். கூட்டத்தைக் கண்ட மேலாளர் தன்னுடைய கைத் துப்பாக்கியை எடுத்தான். தொழிலாளர்கள் அதனைக் கைப்பற்றினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நிர்வாகத்தினர் கதவடைப்பு என்று அறிவித்தனர். கதவடைப்புக்குப் பிறகு சென்னைத் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த பி அண்டு சி ஆலை நிர்வாகம் சென்னைத் தொழிலாளர் சங்கத்தை ஒழிக்க முடிவு எடுத்து செயல்படத் தொடங்கிற்று. வேலை நிறுத்தத்தினால் நிர்வாகத்திற்கு நட்டம் ஏற்பட்டதென்றும் அதனால் இழப்பீடாகத் தொழிற்சங்கம் ரூ. 75,000/- வழங்க வேண்டும் என்றும் வாடியா, திரு. வி.க., ஜி.ராமஞ்சலு நாயுடு, வேதநாயகம், எஸ்.நடேச முதலியார், வரதராஜ நாயகர், கேசவலு நாயுடு, சையட் ஜலால், கோ.மா.நடேச நாயகர், நமசிவாயம் பிள்ளை ஆகிய 10 பேர் மீது பின்னி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்தப் பத்து பேரில் வாடியாவும், திரு. வி.க.வும் தவிர மீதமுள்ள 8 பேரும் ஆலைத் தொழிலாளர்கள். தொழிற்சங்க சட்டங்கள் இயற்றப்படாத காலமாதலால் வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பத்துபேரும் வேலை நிறுத்தம் முடியும் வரை தொழிலாளர் கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் வேலை நிறுத்தக் காலமாதலால் தொழிற்சங்க வங்கிக் கணக் கிலிருந்து பணம் எடுத்து தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்தப் போராட்டத்தினால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்தனர் என்பதை முன்பே குறிப்பிட்டு இருந்தோம்.
B.P. . வாடியாவுக்கு மேலே நாம் குறிப்பிட்டு இருக்கிற உயர்நீதிமன்ற வழக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் - தியோசிபிக்கல் சொசைட்டியச் சேர்ந்தவர். 1921-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் பெசண்ட் அம்மையாரோடு பின்னி கம்பெனியின் தலைமை நிர்வாகி களை இரகசியமாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் விளைவாக பத்துபேர் மீதான வழக்குத் திரும்பப் பெறப்படும் என்றும் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவர் என்றும் வாடியா திரு. வி.க.விடம் கூறினார். அதோடு தொழிலாளர் கூட்டத்திலும் என்ன நிபந் தனைகள் என்பதை விளக்கி வாடியா பேசினார். ஆனால் வாடியா பேசிய பேச்சுக்கும் தியோசிபிக்கல் சொசைட்டியின் நாளேடான நியு இந்தியாவில் வெளியான ஒப்பந்த நிபந் தனைகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன. மூன்று மாதங்கள் நடந்த இந்த வேலை நிறுத்தம் அடிப்படை சிக்கல் எதுவும் தீர்க்கப்படாமல் முடிவுற்றது. தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இந்த ஏமாற்றமே 1921-ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் வேலை நிறுத்தத்திற்கு அடிப் படையாக விளங்கியது.
1921-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை சிறு சிறு வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.  மே மாதம் 20ஆம் தேதி சம்பளம் போதாது என்று கர் நாடிக் ஆலையின் பஞ்சை தூய்மைப்படுத்தும் (Carding) பிரிவுத் தொழிலாளர்கள் 600 பேர் வேலை நிறுத்தம் செய்தனர். இப்பிரிவு இயங்காத நிலையில் இதரப்பிரிவுகளுக்கும் வேலை இருக்காது என்பதால் நிர்வாகத்தினர் வேலை இல்லை என்று தொழிலாளர் களுக்கு மே 21-ஆம் தேதி அறிவித்தனர். திரு. வி.க., ஞானியார் அடிகள் கடலூரில் கூட்டிய மாநாடு ஒன்றிற்குச் சென்று இருந் தார். அவருடனோ, பிற சங்க நிர்வாகி களுடனோ கலந்து கொள்ளாமல் தொழி லாளர் வேலை நிறுத்தம் செய்து விட்டனர். சங்கத்தின் கட்டளை இன்றி வேலை நிறுத்தம் செய்தது தவறு என்று இதனைத் திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனவே தொழிலாளர் பிரதிநிதிகள் கர்நாடிக் ஆலையின் மேலாளர் ஆஷ் வந்த்தை அணுகினர். வேலைக்குத் திரும்பு கிறோம் என்று கோரினர். அதற்கு மேலாளர் தாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்றும் மேலாண்மை இயக்குனரைச் சந்திக்குமாறு கூறினார். தொழிலாளர்கள் மறுநாள் மே 26-ஆம் தேதி மேலாண்மை இயக்குநரை 30 பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர் சில நிபந் தனைகளை விதித்தார்.
1) இவ்வாண்டுக்குரிய போனஸ் யாருக்கும் கிடையாது.
2) வேலை நிறுத்த நாளுக்குரிய கூலி கிடையாது.
3) விடுமுறை விதிகள் மாற்றியமைக்கப்படும்.
இவையே அந்த நிபந்தனைகள். பிரதி நிதிகள் அனைவருக்கும் இத்தண் டனையை விதித்தல் உரியதாகாது. 600 கார்டிங் தொழிலாளர்களும் பாதிக்கப் படுகிறார்கள். இது முறையற்றது என்று எடுத்துரைத்தார்கள். இதைத் திரு. வி.க.விடமும் கூறினர்.
அவரோ, 600 பேருக்காக 5000 பேரைத் தண்டிப்பது நியாயமல்ல என்று கூறியதோடு இதற்கு ஓர் ஆலையின் வேலை நிறுத்தம் பயன்படாது. இரண்டு ஆலைகளிலும் வேலை நிறுத்தம் செய்தால் தான் பயன் விளையும் என்று திரு. வி.க. விளக்கினார்.
திரு. வி.க.வின் யோசனைப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1921 ஜூன் 3ஆம் தேதி பக்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களின் கூட்டம் நடத்தப்பட் டது. கூட்ட முடிவுப்படி பின்னி மேலாண்மை இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினர். அறிக்கை மட்டுமின்றி இது குறித்து திரு. வி.க.,
..... எங்களுக்கு இம்மாதம் 11ஆம் தேதிக்குள் தக்க பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய நேரிடும். இரண்டு ஆலைகளும் வெவ் வேறானவை, கர்னாடிக் ஆலைக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக் கிறது என்று வினவியவரிடம் இரு மில்களும் ஒரே நிர்வாகத்திற்கு உட்பட்டு உள்ளமை யால் ஒரு மில்லுக்கு ஏற்பட்டது இன் னொரு மில்லுக்கும் ஏற்பட்டதாகும். அதைபற்றி கர்நாடிக் மில் தொழிலாளர்கள் அநியாயமாய் நடத்தப்பட்டபோது எப்படி பங்கிங்காம் தொழிலாளர்கள் சும்மா இருக்க முடியும்?
- நவசக்தி (10.6.1921) என்று எழுதினார். இதற்கு எந்த பதிலையும் பின்னி நிர்வாகம் தொழிற்சங்கத்திற்கு அனுப்பவில்லை, ஆகவே மீண்டும் தொழிலாளர்கள் ஜூன் 14-ஆம் தேதி கூட்டத்தைக் கூட்டி வேலை நிறுத்த அறிவிப்பை நிர்வாகத்திற்கு அனுப்பினர், இது குறித்து திரு. வி.க.
... நீங்கள் கர்நாடிக் மில் தொழி லாளர்களுக்கு நியாயம் செய்யாததற்காக வும் நாங்கள் 4-ஆம் தேதியில் எழுதிய கடிதத் திற்குப் பதில் விடுக்காமல் இருப்பதற் காகவும் வருந்துகிறோம்.
கர்நாடிக் மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அனுதாபத்தைக் காட்டுவதற்காக வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. 14-ஆம் தேதி மாலையில் சங்கக்கூட்டத் தில் கூட்டம் கூட்டி எல்லோரும் 20-ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். எங்களுடைய குறை நிவர்த்திக்கப்படும் வரை வேலை நிறுத்தம் நீடிக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நவசக்தி (17.6.1921) என்று எழுதி னார் இதற்கு நிர்வாகத் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் ஆலை முதலாளியும், அரசும் கைகோர்த்து கொண்டனர். ஒற்று மையாய் இருந்த தொழிலாளர் களிடையே பிளவுகளை உண்டாக்கினர். ஒரு காலத்தில் இராயப்பேட்டை வெஸ்லியன் கல்லூரியில் திரு.வி.க. வேலை பார்த்த போது அவரோடு ஆசிரியராக வேலை பார்த்த எம்.சி. ராஜா இக்கட்டத்தில் திரு.வி.க. தொழிலாளர் தலைவர் ஆனது போல் அவர் ஆதிதிராவிட வகுப்பாருக்குத் தலைவராகி இருந்தார்.(விடுதலை நாளிதழ் வெள்ளி, 14 ஜூன் 2013)

பி அண்டு சி ஆலை வேலை நிறுத் தத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றில் ஜாதி, இந்துக்கள், முஸ்லிம்கள், ஆதி திராவிடர் என்று வேற்றுமை பார்க் காமல் தொழிலாளர் என்கிற முறையில் ஒட்டு மொத்தமாக பங் கேற்று வந்தனர். 1921 ஜூன் 20-ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் ஆயத்த மாகி இருந்தனர். ஆனால் அதற்கு முதல் நாள் ஜூன் 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு நிலைமை வேறாக இருந்தது. பக்கிங்காம் ஆலையின் ஆதி திரா விட தொழிலாளர்களின் கூட்டம் புளியந்தோப்பு பகுதியில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்திற்குத் ஆதிதிராவிடத் தலைவரான எம்.சி. ராஜாவும், சுவாமி தேசிகானந்தாவும் முன் நின்றனர், உதவித் தொழில் துறை ஆணையாளரும் உடனிருந் தார். அவர் பெயர் சுந்தராச்சாருலு. இக்கூட்டத் தில் அனுதாப வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுக்கப்பட்டது. அரசும், ஆலை நிரு வாகமும் இணைந்தே இப் பிளவை உண்டாக்கினர். எம்.சி.ராஜா இதற்கு துணை நின்றார்.
இந்நிலைமைக் குறித்து வெகுண் டெழுந்து திரு.வி.க.,
... இந்நாளில் எம்.சி.ராஜா வேலை நிறுத்தத்தை உடைத்தெறிய ஊக்கங் கொண்டு முன் வந்ததன் நோக்கத்தை அறிய விரும்புகின்றோம், வேலை நிறுத்த காலத்தில் தலைகாட்டிய சிறீமான் எம்.சி.ராஜா தொழி லாளர்கள் 11ஙூ  மணி நேரம் வேலை செய்து வருந்திய காலத்தில் எங்கே சென்றிருந்தார்? தொழிலாளர் இருண்ட காலத்தில் எங்கே சென்றி ருந்தார்? தொழிலாளர் மலக்குப் பையில் அழுத்தப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்? பகலில் உணவு கொள்ளப் போதிய நேரம் பெறாது சாப்பிட்டதும் சாப்பிடாமலும் கை கழுவியும், கை கழுவாமலும் மில்லுக் குள் ஓடித் தொழிலாளர் வருந்திய போது எங்கே நண்ணினார்?
தொழிலாளர் சங்கத்தை அமைத் துக் கொண்டு, நியாயக்கிளர்ச்சி செய்து வேலை நேரத்தைப் பத்து மணியாகவும் பகல் உணவு கொள் நேரத்தை ஒரு மணியாகவும் செய்து கொண்டு, வேறு பல நன்மைகளை பெற்று வரும் இந்நாளில் ஆதி திராவிடர் பெயரை முழங்கிக் கொண்டு வேலை நிறுத்தத்தைக் குறைக்க வீர வார்த்தை பேசுவது நியாயமோ? என்று எழுதினார்.
- நவசக்தி நாளிதழ் (25.6.1921) தலையங்கம்
ஆக, வேலை நிறுத்தம் கெடுவதற்கு எம்.சி.ராஜா முக்கிய காரணமாக இருந் திருக்கிறார் என்பது திரு. வி.க.வின் எழுத்துகளிலிருந்தும் பிற ஆய்வு நூல்களிலிருந்தும் காணக்கிடைக்கிற செய்திகளாகும். முதலில் வேலை நிறுத்தத்திற்கு எதி ராக செயல்பட்ட எம்.சி.ராஜா பின்னர் 1930ஆம் ஆண்டு களில் இது குறித்து அவர் வருத்தப்பட்டும் இருக்கிறார் என்று  பதிவுகள் கூறுகின் றன. ஆதி திராவிட தலை வர்களில் ஒருவரான ராவ் பகதூர் மதுரைப் பிள்ளை இது குறித்து எம்.சி.ராஜா வின் அணுகுமுறையை ஏற்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது குறித்து அவர்கள் வெளியிட்ட கருத்துக்களையெல்லாம் இக்கட்டுரை யில் இணைத்தால் கட்டுரை மிக நீண்டதாக ஆகிவிடும், ஆகவே அவற்றை நாம் இங்கே வெளியிட விரும்பவில்லை. அவையெல்லாம் ஆவணங்களாக பதிவாகி இருக்கின்றன,
ஆலை வேலை நிறுத்தத்தில் ஏற்பட்ட இக்குழப்பங்களில் போலீஸ் பாதுகாப்பும், வழிக்காவலும் வேலை நிறுத்தத்திற்கு எதிராக இருந்தவர்களுக்குத்தான் சாதகமாக இருந்தது. ஆனாலும் இந் நிலைமைகள் குறித்து எல்லாம் 1921 மே இறுதியில் வெளிவந்த சுதர்மா எனும் ஏடு கீழ்க்காணும்படி எழுதி இருக்கிறது.
... தொழிலாளர் நெடும் போராட் டத்திற்குத் தயாராகி வருகின்றனர். போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு ஆதிதிராவிடரைத்தான் கம்பெனி நம்பியுள்ளது. ஏழை ஆதிதிராவிட தொழிலாளர் வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படும். இதனால் வேலை நிறுத்தம் முறிவதோடு சங்க ஒற்றுமையும் குலையும், பிரித்தாளும் சூழ்ச்சி கையாளப்படும் என்பது வெளிப் படை பக்கிங்காம் ஆலையில் சென்ற முறை ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் இதே போல் மிரட்டினர், இம்முறை இது வெறும் மிரட்டலாக முடியுமா, இல்லையா என்பது ஆதிதிராவிடரைப் பொறுத்துள்ளது
எம்.சி.ராஜாவினால் ஆதிதிராவிடர் கள் வேலை நிறுத்தத்திலிருந்து விலகி இரு ஆலைகளுக்கு கொஞ்சம் கொஞ்ச மாகச் செல்லத் தொடங்கினர். இதன் விவரத்தை எயிலிஸ் கமிட்டியின் அறிக்கை கீழ் காணும் விதத்தில் எடுத்து கூறுகிறது. இந்த எயிலிஸ் கமிட்டி என்பது என்ன? என்பது குறித்து பின்னர் ஓர் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம்
இவ்வாறு இரண்டு மாதங்களில் வேலை நிறுத்தம் உடைவதற்கு எம்.சி. ராஜா காரணமாக இருந்தார். ஜூலை 11-ஆம் நாளிலிருந்தே ஆலைகளின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்த திரு. வி.க.வுக்கு ரூபாய் ஒரு இலட்சத்தை காங்கிரஸ் கமிட்டி கொடுத்தது என்று மெயில் எழுதியது. அவதூறான இச் செய்தியை எதிர்த்து வழக்குத் தொட ருவேன் என்று திரு. வி.க. கூறியதால் மெயில் அச்செய்தியைத் திரும்பப் பெற்றது. இதனால் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற் படுவது இயல்பே. இதனால் தொழி லாளர் வாழும் குடிசைப் பகுதிகளில் தீ வைப்பு நிகழ்வுகள் நடந்தேறின. ஆதிதிராவிடர்கள் வாழ்ந்த பகுதி களிலும் தீவைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றை விசாரிப்பதற்காக எயிலிஸ் கமிட்டி அமைக்கப்பட்டது. 1921 ஜூன் 29-ஆம் தேதியிலிருந்து பெரம்பூர் வட்டத்தில் நிகழ்ந்த குழப்பங்களை விசாரிக்கவே இக்கமிட்டி நியமிக் கப்பட்டது.
இக்குழுவில் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.வேங்கடரத் தினம் நாயுடு, ராவ்பகதூர் நரசிம்ம மாச்சாருலு உறுப்பினர்களாக இருந் தனர். இக்குழுவின் முன் செல்ல திரு. வி.க. மறுத்துவிட்டார். எல்லா ஜாதிகளும் தொழிலாளர் களாகப் பணியாற்றிய நிலையில் சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொண்டபோது எம்.சி.ராஜா ஏற்படுத்திய பிளவே பெருங்குழப்பங்களுக்கு காரணமா யிற்று. ஹோம் ரூல் இயக்கத்தின் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சும் வாடியா விலகி அய்ரோப்பா சென்றதற்குப் பிறகு முற்று பெற்று விட்டது எனலாம். தலைமை பொறுப்பில் திரு.வி.க.வே இயங்கினார் காங்கிரஸ் விடுதலை இயக்கமாக இயங்கிய காலகட்டமாதலால் திரு. வி.க. காங்கிரஸ்காரராக இருந்தும் உழைத்தும் சங்கத்திற்கு நிதி உதவியோ தொழிலாளர்களுக்கு வேறுவித தார்மீக ஆதரவோ வழங்க வில்லை. வழங்குவதாகக் கூறி செய் யவும் இல்லை என்று எழுதினால் இன்றும் சரியானது என்று கருது கின்றோம். அடுத்து நீதிக்கட்சி இக்கட்சி அப்போதுதான் இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது. எப்படி மாறுகிறது என்றால் நிதி, இராணுவம், போலீஸ் மூன்றையும் ஆங்கிலேயர் வைத்துக் கொண்டு இதரதுறைகளை இந்தியர் களுக்கு வழங்கியது தான் இரட்டை ஆட்சி முறை. இந்நிலையில்தான் இரண்டு பெரிய கலவரங்கள் சென்னை மாகாணத்தில் உண்டாயின 1) பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தம் 2) மலையூரில் மாப்பிள்ளை கலகம், நாம் அவற்றில் பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தைத்தான் இங்கே பார்த்து வருகின்றோம்.
இப்போது நாம் பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பற்றிய விவரங்களை மிகச்சுருக்கமாக மேலே எடுத்து கூறி இருக்கின்றோம், இனி தோழர் அருள் எழுதியுள்ள வற்றைப் பார்ப்போம்.(விடுதலை நாளிதழ் சனி, 15 ஜூன் 2013)

1) 1921-ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பிரிவினருக் கும் பார்ப்பனரல்லாத ஜாதியினருக்கும் கலவரம் மூண்டபோது நீதிக்கட்சி, அரசாங்கமும் அதன் தலைவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலையை எடுத்தனர் என்று தோழர் அருள் கூறுகிறார் அல்லவா? மேலே நாம் எடுத்துச் சொன்னதிலிருந்து பார்ப்பனர் அல்லாத ஜாதியினர், முஸ்லிம், ஆதி திராவிடர் ஆகிய தொழிலாளர்கள் ஜாதி வித்தியாச மின்றி பணியாற்றியதை, போராடி வந்ததைப் பிளவு படுத்தியது யார் - எம்.சி.ராஜா என்று ஆவணங்கள் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இவரால் தான் கலவரமே மூண்டது அவரே ஒப்புக் கொண்டு நாளடைவில் வருந்தினார். இதற்கு என்ன சொல்லு கிறார் அருள்?
நீதிக்கட்சியின் அதிகாரம் என்னவென்பதை விளக்கி இருக்கின்றோம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எப்படி சும்மா இருக்க முடியும்? களத்தில் இறங்கி சமரசத்திற்கு முயற்சியை மேற்கொண்டார்கள். இதை எதிரான நிலை என்று சொல்லுவது சரியா? பிறகு, எதிரான நிலை எனத் தோழர் அருள் எதனைக் குறிப்பிடுகிறார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பல சலுகைகள், ஆணைகளை வழங்கிய கட்சி நீதிக்கட்சி ஆயிற்றே!
பி அண்டு சி  ஆலை வேலை நிறுத்தம் நடக்கும்போது எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் தானே இருந்தார். இந்த நிலையை அவர் மேற்கொள்ள ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஓ.தணிகாசலம் செட்டியார் வேலை நிறுத்தம் பற்றியும், கலவரம் பற்றியும் சட்டமன்றத்தில் பேசிய அளவுக்கு பொதுமை உணர்ச்சியோடு எம்.சி.ராஜா நடந்து கொள்ளவில்லையே அது ஏன்? என்பதை அருள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.
நீதிக்கட்சி வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் ஆனால் உண்மையான ஆட்சியாளரான ஆங்கிலேயர்கள்தான் எதிர்த்தனர் என்றும் தோழர் அருளே அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து தெரிவது என்ன? வேலை நிறுத்தத்திற்கு எதிரானவர்கள் ஆங்கிலேயர்கள், அவர்கள் தான் வேலை நிறுத்தத்தின்போது ஜாதி பார்க்காமல் போர்க் குணத்தோடு இயங்கியவர்களை - ஆதிதிராவிடர் களைப் பிரித்தார்கள். அதற்குத் துணை நின்றார் எம்.சி.ராஜா என்பது தானே நிகழ்மை. குஹஊகூ இதனால் தானே கலவரம் நிகழ்ந்தது. குழப்பம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடந்தது, 6+2=8 பேர் மாண்டனர். எயிலிஸ் கமிட்டியை அரசாங்கம் போட்டது. கலவரம் நடந்த பகுதிக்கு கவர்னர் லார்டு வெலிங்டன் வந்தார். நீதிக்கட்சியினர் நிதி தண்டியபோது ரூ. 750/- வழங்கினார். இவ்வளவும் ஏற்பட்டது யாரால்? நீதிக் கட்சியாலா? அக்கட்சியின் இதரத் தலைவர்களாலா? அருள்தான் இதனை விளக்க வேண்டும்.
2) கட்டுரையாளர் அருள் பிட்டி.தியாகராயர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர், தாழ்த்தப்பட்ட மக்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது என்றும் அந்த அறிக்கை இந்துவிலும், திராவிடனிலும் வெளிவந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார். இந்த அறிக்கையை நம்மால் பார்க்க முடியவில்லை. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி விரிவான ஆவணங்களாக நமக்குக் கிடைப்பவை திரு. வி.க.வின் வாழ்க்கைக்குறிப்புகளும் ஆ.சிவசுப்பிரமணியனும், ஆ.இரா.வேங்கடாசலபதியும் எழுதியுள்ள பின்னி ஆலை வேலை நிறுத்தம் - 1921 எனும் நூலுமாகும். இவ்விரு நூல்களில் நன்றாகப் பிரச்சினை அலசப்பட்டும், ஆராயப்பட்டும் இருக்கின்றன. இதுவன்றி நீதிக் கட்சியின் திராவிடன் நாளிதழ் - ஓர் ஆய்வு? எனும் நூலிலும் வேலை நிறுத்தம் பற்றி மேலோட்டமும் கூறப்பட்டு இருக்கிறது. சிங்காரவேலர் எழுதியுள்ள கட்டுரையில் அப்போதைய நிலைமைகள் மட்டும் விளக்கப்பட்டன. எம்.சி.ராஜா தமது நூலில் தமக்கு சாதகமானதைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். இப்படி பல ஆவணங்கள் இருந்தாலும் இது குறித்த சிறந்த ஆவணமாகத் திகழுவது பின்னி வேலை நிறுத்தம் - 1921 எனும் நூல் மட்டுமே! அந்நூலில் இவ்வேலை நிறுத்தம் எல்லாக் கோணங்களிலும் பார்க்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்நூலில் அருள் குறிப்பிடும் பிட்டி. தியாகராயரின் அறிக்கை மட்டும் காணப்படவில்லையே - அது ஏன்? அவர்கள் இருவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் அல்லர்.
எயிலிஸ் கமிட்டியின் அறிக்கையின்படி 400-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதிக் கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு அரசின் சார்பாக முகாம் அமைக்கப்பட்டு உதவி இருக்கிறார்கள் என்றும் ஆவணங்கள் பேசுகின்றன. இவ்வளவு அவலங்களை யும் நீதிக்கட்சித் தலைவர்களான பிட்டி.தியாகராயர், ஓ.தணிகாசலம் செட்டி, டாக்டர் சி.நடேச முதலியார் கலவரப் பகுதிகளைச் சென்று பார்வையிடுகிறார்கள். அப்பகுதியில் உள்ள டாக்டர் சி.நடேச முதலியாரின் உறவினர் வீடு பாதிக்கப்பட்டதால் தான் நீதிக்கட்சித் தலைவர்கள் வந்தார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். எது எப்படி இருப்பினும் நீதிக்கட்சித் தலைவர்கள் கலவரப்பகுதியில் சென்று பார்த்து இருக்கிறார்கள். நிதி திரட்டி இருக்கிறார்கள், உதவி இருக்கிறார்கள் கலவரம் நிற்க வேண்டும் - வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தியவர் களாக இருந்திருக்கிறார்கள் என்பது மிக வெளிப் படையாகத் தெரிகிறது.
மேலும் அருள் குறிப்பிட்டு இருக்கிற பிட்டி. தியாகராயர் அறிக்கையைப் படித்து பார்த்தோம். அய்யத்திற்கு இடமின்றி ஆம் (டிக உடிரசளந) என்று ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவ்வறிக்கை அவருடையதாக இருக்க முடியாது என்றே கருத இடமிருக்கின்றது. ஏனென்றால் ஒரு சில ஆவணங்களில் இவ் வேலை நிறுத்த கலவரம் குறித்து அரசுக்கு பிட்டி. தியாராயர் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்கள். அக்கடிதமும் இன்ன தென்று நமக்குத் தெரியவில்லை. அதில் வேலைக்குச் செல்லும் புதியவர்களை அப் புறப்படுத்த சொன்னதாகக் கூறுகிறார்கள்.  திரு. வி.க.வோ, ம.சிங்காரவேலரோ பிட்டி. தியாகராயரின் அறிக்கையைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் வேலை நிறுத்தம் பற்றி பிட்டி. தியாகராயர் நிகழ்த்திய இராஜதந்திரப் பேச்சைப் பற்றி திரு. வி.க. குறிப்பிடுகிறார்.
அப்பேச்சில் ஓர் இடத்தில் அப்புறப்படுத்துதல் என்ற சொல் வருகிறது. ஆனால் நகரத்தை விட்டே ஆதி திராவிடர்களை ஓட்டும்படியாக அதில் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் நலன் சார்ந்தே அதனை அவர் கூறுகிறார். தியாகராயரின் பேச்சு குறித்து திரு. வி.க. தமது வாழ்க்கைக் குறிப்பில்,
வேலை நிறுத்தம் எப்படி முடிந்தது? ராஜா ஸர், இராமசாமி முதலியார் பங்களா வெளியில் கூடிய கூட்டத்தில் சர்.பி.தியாகராய செட்டியார் நிகழ்த்திய இராஜதந்திரச் சொற்பெருக்கில் மூழ்கித் தொழிலாளர்கள் பலர் வேலைக்குத் திரும்பினர். சர்.பி.செட்டியார், மாதங்கள் பல ஆயின. இனிப் பிடிவாதம் வேண்டாம், உங்களுக்கு இராஜ தந்திரம் வேண்டும். மில்களில் புதிய ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள். புது ஆட்கள் தொழிலைப் பயின்று விடுவார்களாயின் உங்களுக்குத் தொல்லை விளையும். போலீஸ் காவலையும், இராணுவக் காவலையும் கடந்து அவர்களைத் தடுத்தல் இயலாது. ஆனால் அவர்களை ஒரு வழியில் அப்புறப்படுத்தல் கூடும். நீங்கள் எல்லோரும் வேலைக்குச் செல்ல உறுதி கொண்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஆதலால் நீங்கள் உள்ளே போங்கள், நன்மையே விளையும், சங்கம் சாகாது என்று பேசிய பேச்சு அவ்வேளையில் தொழி லாளர்க்கு உசிதமாகத் தோன்றிற்று, சர்.பி.செட்டியாரின் ஜோசியம் பெரிதும் பலித்தது என்று எழுதியிருக்கிறார். திரு.வி.க. இந்து ஏடு வேலை நிறுத்தத்தை ஆதரித்தது என்றும் கஸ்தூரி ரங்கன் அய்யங்கார் ஆதரவு தந்தார் என்றும் எழுதியிருக்கிறார். ஆக நமக்குத் தெரிந்த அப்புறப்படுத்தல் என்பது தியாகராயரின் பேச்சில் தொழிலாளர் நலன் விழைந்தே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தினர் வரலாற்றை மறைப் பதில்லை. எங்களுக்கு அகப்பகைவர்களும் உண்டு. புறப் பகைவர்களும் உண்டு, அவர்களின் விமர்சனங்களினால் அவை மறைக்கப்படுவது உண்டு.
3) தோழர் அருள் அவரது கட்டுரையில் 1921 வேலை நிறுத்தத்தின் போது 14,000 தொழிலாளர்கள் இருந்த தாகத் தெரிவித்து இருக்கிறார். அக்காலக்கட்டத்தில் இரு ஆலைகளிலுமாக தொழிலாளர்கள் எத்தனை பேர் பணி யாற்றினார்கள் என்பது குறித்து நாம் மேலே குறிப்பிட்டு இருக்கின்றோம். அதன்படி 1921-இல் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது தொழிலாளர்களின் எண்ணிக்கை 14,000 அல்ல; சுமார் 11,000 மட்டுமே! மேலே புள்ளி விவரத்தை ஒப்பு நோக்கிப் பார்த்துக் கொள்க!
4) தோழர் அருள் சொல்லுகிற மற்றொரு செய்தியைப் பார்ப்போம். அவர் கூறுகிறார்:-
இந்த சூழலில் 1921 ஜூன் 28 அன்று இரவு புளியந்தோப்பு சேரி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் பெரும் மோதலாக வெடித்தது. புளியந்தோப்பு கலவரம் 1921 என்று அழைக்கப்படும் இந்த கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், மற்றவர் களும் மோதிக்கொண்டனர். சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. மூன்றுபேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர் (இவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருக்கலாம்). போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசின் காவல்துறையினர் நடத்திய துப் பாக்கிச் சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு பேரும் பார்ப்பனரல்லாத இந்துக்கள்.
புளியந்தோப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சுமார் மூன்றாயிரம் பேர், அங்கிருந்து ஆங்கிலேய அரசாங்கத்தால் வெளியேற்றப் பட்டு வியாசர்பாடி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கே.ஓ.அந்தோணி சிறப்புக் கடமையாற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் அறிக்கை ஜூன் 29/1921-லிருந்து ஜூலை 4-ஆம் தேதி வரை கலவரத்தைப் பற்றி வெளி யிடப்பட்டது. இதில் ஆதிதிராவிடர்களின் குடிசைகள் 269, சக்கிலியர் குடிசைகள் 61, ஓட்டர் குடிசைகள் 17, ஜாதி இந்துக்கள் குடிசைகள் 28, முகமதியர் குடிசைகள் 43 என மொத்தம் 418 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. எந்தெந்த ஜாதியினர் என்னென்ன ஆயுதங்களை வைத்து இருந்தனர் என்ற விவரத்தையும் அப்போதைய நீதித் துறையின் ஆவணங்கள் நமக்கு இன்றும் கூறிக்கொண்டு இருக்கின்றன. இவையன்றி கலவரத்தினால் இறந்த வர்கள் பற்றிய குறிப்பில் ஆதி திராவிடர் எவரும் இல்லை. தோழர் அருள் குறிப்பிட்டிருப்பது போல மூன்று பேர் வெட்டிக் கொல்லப்படவும் இல்லை. ஆதிதிராவிடர் எவரும் இறக்கவும் இல்லை. இறப்பு, காயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:
1921 ஆம் ஆண்டு ஆக்ஸ்டு 29-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் இறந்தனர். இவர்களின் சடலம் மறுநாள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இடுக்காட்டில் திரு. வி.க., சிங்கார வேலர், சக்கரைச் செட்டியார் போன்றோர் உரையாற்றினர். இவை தான் கலவரங்களின் போது நடைபெற்ற இழப்புகளாகும்.
தோழர் அருள் வியாசர்பாடி முகாம்களில் 3000 பேர் இருந்ததாக எழுதி இருக்கிறார், அது தவறு. ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாமில் 1669 பேர் இருந்தனர். இவர்கள் 446 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஜூலை 2-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 2-ஆம் தேதி வரை முகாம் வாழ் மக்கள் அனைவருக்கும் இலவச உணவு, துணிமணிகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூ. 2885 - 3 - 0 செலவழிக்கப்பட்டது. அகதிகள் முகாம் அமைப்பதற்காக ரூ. 2849 = 13 - 0 செலவழிக்கப்பட்டது. 1922 ஜூன் வரை உணவு வழங்குவதற்காக ரூ. 12,495. 11 - 5 செலவாகி இருக்கிறது. இவ்வளவு அன்பு ஆதிதிராவிடர்கள் மேல் ஆங்கிலேய அரசுக்கு ஏன் ஏற்பட்டது? பி அண்டு சி ஆலை வேலை நிறுத்தத்தை உடைத்ததற்காக! எம்.சி.ராஜாவின் வழிகாட்டு தலுக்காக! இந்நிலையில் நீதிக்கட்சி அரசு என்ன செய்ய முடியும்? அதன் தலைவர்கள் என்ன செய்ய முடியும்? இயன்றதைச் செய்ய அவர்கள் தவறவில்லை.
5) எம்.சி.ராஜாவின் சட்டமன்றப் பேச்சைப் பற்றி அருள் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் பேச்சும் குற்றச்சாட்டுகளும் சட்டமன்றத்தில் எடுபடவில்லை. இதர நீதிக்கட்சி தலைவர்களின் பேச்சு சிறப்பாக இருந் தது. ராஜா தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நீதிக்கட்சியின் மேல் சொந்த பகையை வைத்துக் கொண்டு தனது ஜாதியாரை அவர் பலி கொடுத்து அவர்களுக்கும் அவர் கெட்ட பெயரையே சம்பாதித்துக் கொடுத்தார். அது சரித்திரமாகி விட்டது. அவரே ஒப்புக்கொண்ட அதை  அருள் ஒன்றும் செய்ய முடியாது.
காந்தியார், சென்னைக்கு வந்தது பற்றியும் அவரிடம் ஆலை பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டது பற்றியும் தோழர் அருள் கூறியிருக்கிறார். ஆம், காந்தியார் 1921 செப்டம்பர் திங்களில் வந்தார். செப்டம்பர் 16-ஆம் தேதி தொழிலாளர்களிடையே பேசினார். வழக்கம் போல் ஒத்துழையாமை, அகிம் சையைப் பற்றி பேசினாரேயன்றி ஆலைத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி நேரி டையாகவோ, தெளிவாகவோ எந்தக் கருத்தையும் எடுத்துக் கூறவில்லை. வேலை நிறுத்தம் செய்தவர்கள் சரணடைந்து விட்டதாக அருள் தெரிவிக்கிறார். பிட்டி. தியாகராயரின் பேச்சை ஏற்று தொழிலாளர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆட்சியாள ருக்கு துணை நின்ற எம்.சி.ராஜா போன்றவர்களை வைத்துக் கொண்டு எந்தத் தொழிலாளர்கள் இலக்கை அடைய முடியும்? இன்னும் பல செய்திகள் இது குறித்து சொல்ல வேண்டி இருந்தாலும், அது இங்கே - அருள் எழுப்புகிற பிரச்சினைக்கு பொருந்தாது.
தோழர் அருள் அல்லது அருள் போன்றவர் களுக்கு நாம் சொல்வதெல்லாம் இதுதான்:-
நீதிக்கட்சிக்காரர்கள் ஜாதி இந்துக்கள் தான்; பெருந்தனக்காரர்கள்தான்! ஆனால் மனிதா பிமானிகள். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாத வர்கள். பிரித்தாளப்பட்டபோது உண்மையின் பக்கம் நின்றவர்கள் அவர்கள். அரையாட்சி அதிகாரத்தில் எதுவும் செய்யாத நிலையில் இருந்தனர். எதையாவது செய்து பிரச்சினையை அமைதிக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினார்கள். அவர்கள் எரிந்து கொண்டு இருக்கையில் எண்ணெய்யை வார்க்க வில்லை, ஆதித்திராவிடர்களை ஒழிக்க நினைத்தா பார்ப்பனர் அல்லாதார் தொகுப்பிற்குள் அவர்களை நீதிக்கட்சியினர் கொண்டு வந்தார்கள்? நேரிய பார்வையானாலும் இயல்பாகவே ஒரு பகுதி, பார்வைக்கு உட்படாதது போல பல சிக்கல்கள் நாட்டில் இருப்பதைப் பார்க்க வேண்டும்.
நாம் அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்தி வருவோம். வாழ்நிலையிலிருந்து தான் சிந்தனை தோன்றுகிறது. அந்தச் சிந்தனை பல பரிமாணங்களைத் தோற்றுவிக் கிறது. அப்படித் தோன்றியதுதான் அரசியல் இயக்கங்கள்; நீதிக்கட்சி முதலானவை! அதன் பிறகு தான் தேவையும், மறந்துபோன சேர்த்துக் கொள்ள மறந்தவைகள் பலவும் விவாதத்திற்கு வருகின்றன. இவை இணைத்துக் கொள்ளப்பட்டு அரசியல் இயக்கங்கள் அதனதன் கொள்கைகளுக்கு ஏற்ப முன்நகர்வை இயல்பாக பெறுகின்றன. இவற்றில் சர்ச்சைகள் எழும்; சண்டைகளும், இழப்புகளும் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கும். செய்தவைகள் நியாமானதாகத் தெரியும். பின்னர் அவற்றைப் பரிசீலிக்கிறபோது நேர்ந்தவைகளுக்காக வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படித்தான் 1921-ஆம் ஆண்டு பின்னி அண்டு கர்நாடிக் ஆலை வேலை நிறுத்தம் பல அனுபவங்களை அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் நமக்கு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அருள் போன்றவர்கள் தெரிந்து கொண்டால் போதுமானது.(16-06-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2)

Sunday, June 9, 2013

கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது -தந்தை பெரியார்

இன்று பொதுவாகவே மனித சமூகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடுகளையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.
குறிப்பாக நமது நாட்டு மக்களிடையே உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை. அரசியலானது சமுதாயக் கொள்கையையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது. அரசியல் கொள்கைகளை, சமூகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமூகத்துக்கு ஆதாரம் முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளை களுமே ஆகும்.
எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம். நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங் கத்தாராவது, சமூக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக் கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.
நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா?  இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திரவாதம் கொடுத்து விட்டே (கிளர்ச்சியும், முயற்சியும்) நடை பெறுகின்றது.
இன்றைய தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்திரவாதம் கல்லுப்போல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்
1)    The article in the constitution relating to fundamental rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, language, scripts, education, profession, practice religion and religious endowments.
2)    Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.
1)    சுயராஜ்ஜிய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப் பாருடையவும் அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவை களைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாதமளிக்கப்படும்.
2)    ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும் படியான திட்டத் தையும் சேர்க்கப்படும் - என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.
அந்நிய அரசராகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதி களின் பயனாகவே சமூக வாழ்வில் ஜாதிமதக் கொடுமை யில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.
சாரதா சட்டம்கூட அதனாலேயே சுயமரியாதையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும் போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமூகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தர வாதமும், வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவைகளில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?
ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டு விடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய முகமதியர் ஆட்சியிலோ, பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.
மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப் படுத்திய குணமும், ராமராஜ்ஜியம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது.
உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டு மானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழைய கொடுமைகளும், இழிவுகளும், குறைவு களும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம். இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 97 பேர்களாகும்.
ஜாதியால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 25 பேர்களாகும். மதத்தால் இழிவுபடுத்தப் பட்ட மக்கள் 100-க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருது கின்றான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான். பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ்ஜாதி என்பது இந்து மத சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலைமை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?
பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழிவுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பனன் பட்டினி கிடக்கின் றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகின்றானா?அது போலவே பறையர், பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக்கூட்டத்தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே, ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகர்களுக்கு இழிவும், தரித்திரமும் மக்களிடம் நிலவுகின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அந்நிய அரசாலும், சுயராஜ்ஜியத்தாலுமா நிலவுகின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப்புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவ தற்கு ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூழ்ச்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய, யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.
கேவலம் ஒரு தீண்டாமை விலக்கு என்கின்ற சாத னத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை காங்கிரசால் இந்தக் காரியத்துக்கு என்ன  பயன் ஏற்பட்டது? இந்தக் காரி யத்தின் பேரால் காங்கிரஸ் பண வசூல் செய்து அதனால் ஓட்டுப் பெற்றது. மற்றப்படி தீண்டாமை விலக்குக்கு என்ன திட்டம் காங்கிரசினிடம் இருக்கிறது?
தீண்டாமை விலக்குக்குப் பாடுபடாமல் உயிர் வாழ முடியாது என்று சொல்லி பட்டினி கிடந்து ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த காந்தியார் என்ன சாதித்தார்?
இந்தியச் சட்டசபைக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டி யாக வந்து விட்டார்கள் என்பதைக் கேட்டவுடன், காந்தியார், சட்டசபைக்கு சமுதாய சம்பந்தமான தீர்மானங்களைக் கொண்டு போகாதீர்கள் என்று உத்திரவு போட்டுவிட வில்லையா? காங்கிரஸ் தீண்டாமை விலக்கு விஷயத்தில் நடந்து கொள்ளும் நாணயத்துக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
ஆகவே, இந்த சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் இருந்தா லென்ன? சர்க்கார் நியமனக் காரர்களே இருந்தால் என்ன? என்று யோசித்துப்பாருங்கள். கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி நடக்கும் சந்தர்ப்பம் கிடைத்த காங்கிரஸ் காரர்கள் தீண்டாமை விஷயத்தில் தான் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், பொருளாதார விஷயத்தில் எவ்வளவு யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மாதம் 1-க்கு 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதில்லை என்ற காங்கிரஸ்காரர்கள், ஒரு ஒற்றை ஆளுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூ. வீதம் சர்க்காரிடமிருந்து படி வாங்கினார்கள். இதில் ஒரு அளவு காங்கிரஸ் பண்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் உத்திரவு போட்டார். யார் இதற்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்?
தோழர் சத்தியமூர்த்தி அய்யர், தென்னாட்டு காங்கிரஸ் ஸ்தாபனத்தின் தலைவர் என்கின்ற ஹோதாவில் அதை மறுத்து ஒரு தம்பிடி கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். தனது (ஒண்டி ஆள்) செலவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூபாயே போதாது என்று சொல்லி ஒரு காசு கூட குறைத் துக் கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த யோக்கியர்கள் நாளை சுயராஜ்ஜியம் பெற்ற பிறகு மாத்திரம் பொருளா தாரத்தில் எப்படி யோக்கியமாய் நடந்து கொள்ள முடியும்?
ஒரு காசு கூட சர்க்காருக்கு இன்கம்டாக்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத தோழர் சத்தியமூர்த்திக்கு தன் சாப்பாட்டுச் செலவுக்கு மாத்திரம் தினம் ஒன்றுக்கு ரூ.20 போதவில்லை என்றால் மற்றபடி மற்றவர்களுக்கு எவ்வளவு அதாவது செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்த கோடீஸ்வரர்களுக்கு, தினமும் எவ்வளவு ரூபாய் வேண்டியிருக்கும் என்பதைப் பார்த்தால் தோழர் சத்தியமூர்த்திக்கோ மற்ற காங்கிரஸ்காரர்களுக்கோ இன்றைய சம்பளம் அதிகம் என்றும், ஜனங்களால் தாங்க முடியாதது என்றும் சொல்லுவதற்கு யோக்கியதை உண்டா என்பதோடு, இவர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுவார்களா என்றும் கேட்கின்றோம்.
நிற்க, ஜாதி, மதம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய காங்கிரஸ்காரர்கள் சம்மதிக்கவில்லை யானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? பிராமணன், சூத்திரன், பறையன், சண்டாளன் என்கின்ற பெயர்களும், பிரிவுகளும் ஜாதி காரணம் மாத்திர மல்லாமல் மதங்காரணமாகவும் இருந்து வருகின்றன.
மதம் காரண மாத்திரமல்லாமல், தெய்வம் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக்கு இந்து மதமும், மனு தர்ம சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும் அதற்கும் மேல்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.
கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவைகளில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமல்லாமல், இந்து ஆஸ்திகர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும்.
பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார் என்பவர்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், முகமதியர், பௌத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்புவிக்கப்பட்டார்கள் என்பதும் கேள்விக்கு இடமான காரியமாய் இருந்தாலும் நான்கு வருணத்தையும் மறுக்க எந்த ஒரு இந்துவும் துணிவதில்லை. ஏதோ சில பேர்கள் சூத்திரர்கள் என்கின்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் இருப்பதால் நான்கு வருணத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று ஒரு புறம் சொன்னாலும், மற்றொரு புறம் அக்கொள்கைக்கு அடிமையாகியே தீருகிறார்கள்.
எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக் கியானம் செய்கின்றவர்களும், பாரதக் கதையை நம்பாத வர்களும், அக்கதைகளில் வரும் பாத்திரங்களான ராம னையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. அது மாத்திரமல்லாமல் பாரதக் கதையில் ஒரு சிறு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் கிருஷ்ணன், அர்ச்சுனன் சம்பாஷணை என்னும் கீதையைப் பிரமாதமாக மதிக்கிறார்கள்.
கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குத் தைரியம் வருமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட கீதையில் கிருஷ்ணன் நான்கு வருணங்களை நான் தான் சிருஷ்டி செய்தேன் என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை தங்களுடைய மதத்துக்கு ஒரு ஆதாரமாகவும் கிருஷ்ணனை ஒரு கடவு ளாகவும் கொண்டிருக்கிற ஒருவன், சூத்திரன் என்கின்ற பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவுகள் ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும். ஜாதிப் பிரிவுக்குப் பார்ப்பனன்தான் காரணம் என்று சொல்லுவது இனி பயனற்ற காரியம் என்பதே எனது அபிப்பிராயம்.
ஜாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் இந்து மதம், மனுதர்ம சாஸ்திரம், பாரத ராமாயண புராண, இதி காசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணங்கள் ஆகும் என்பதை எந்த மனிதன் உணருகிறானோ, அவன்தான் வருண பேதத்தை, ஜாதி பேதத்தை ஒழிக்க நினைக்க வாவது யோக்கியமுடையவனாவான்.
காங்கிரசுக்காரர்கள் 100க்கு 99பேர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். கீதையை நெருப்பிலிடவோ, கிருஷ்ண பகவானை மறுக்கவோ ஒப்புக் கொள்ளாதவர்கள்.
காங்கிரசுக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் நான்கு வருணம் கூடாது என்கின்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஒரு அளவுக்கு மனுதர்ம சாஸ்திரத்தின் மீது பார்ப்பனர்கள் உள்பட பலருக்கு வெறுப்பும், அலட்சியமும் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், கீதையின் மீதும், கிருஷ்ணன் மீதும் வெறுப்பும், அலட்சியமும், அவ நம்பிக்கையும், மக்களிடையிருக்கும் அந் நம்பிக்கையை ஒழிக்கும் தைரியமும் ஏற்படுவது என்பது சுலபத்தில் எதிர் பார்க்க முடியாத காரியம். இந்தக் காரணங்களாலேயே இந்த நாட்டில் பல ஆயிர வருஷங்களாக இந்த இழிவும், முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் நிலவி வந் திருக்கின்றன. திருவள்ளுவர் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகித மாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர் விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.
இந்த முட்டாள்தனமான காரியம் பார்ப்பனர்களிடம் மாத்திரம் இருப்பதாக மாத்திரம் நான் சொல்ல வரவில்லை. சைவன்கள், வைணவன்கள் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள். அவ நம்பிக்கைப்படவும் மாட்டார்கள். ஆனால், தங்களுக்குள் ஜாதி, பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள், ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சள வில் மாத்திரம் போற்றப் படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் எப்படி ஜாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஜாதியை உற்பத்தி செய்தவர்களை நாம் கேவலமாய் நினைத்து, அவர்கள் மீது மாத்திரம் ஆத்திரப்படுவதின் மூலமே நமது முயற்சிகள் இதுவரை நாசமாகிக் கொண்டே வந்துவிட்டது.
பார்ப்பனர்கள் ஜாதி விஷயத்தில் எவ்வளவுதான் நமக்கு விட்டுக் கொடுத்தாலும் கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது என்பதை ஞாபகத் தில் வையுங்கள். இது தெரிந்துதான் ராஜகோபாலாச் சாரியார் உள்பட பக்கா பார்ப்பனர்கள் ஜாதி போக வேண் டும்; ஜாதி போக வேண்டுமென்று நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போடுகிறார்கள். நம் வீட்டிலும், பறையன் என்கின்றவன் வீட்டிலும் சாப்பிடு கிறார்கள். ஆனால் கீதையை வெகு பத்திரமாகக் காப் பாற்று கிறார்கள். கிருஷ்ணனுக்குப் பதினாயிரக்கணக் கான கோவில்கள் கட்டி கோடிக்கணக்கான மக்களைக் கும் பிடும்படி செய்து மூடர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வருகிறார்கள்.
இதனால் அவர்களுக்கு நம் வீட்டில் சாப்பிடுவதின் மூலம் ஆகாரச் செலவு மீதி ஆவதுடன், அவர்களிடம் மக்களுக்குத் துவேஷம் இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விடுகின்றதே தவிர, மற்றபடி ஜாதி பிரிவுக்குச் சிறிதுகூட ஆட்டம் ஏற்பட்டுவிடுவதில்லை.
நமக்கு இன்று வேண்டிய சுய ஆட்சி என்பதனாது ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், ஜாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும், ஒழிக் கும்படியாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால், நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனபதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.
கோவில் நுழைவு என்பதைப் பற்றிக் கராச்சி காங் கிரஸ் திட்டத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை. அதற்கு மாறாக பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதாகவே வாக்குறுதியும், உத்திரவாதமும் இருக்கிறது. சமீபத்தில் சத்தியமூர்த்தி தலைவர், கோவில் நுழைவைப் பற்றி, தான் ஒப்ப முடியாது என்று சொல்லி விட்டார். ரோடு, குளம், பள்ளிக்கூடம் இவைகளுக்கு மாத்திரம் அனுமதி கொடுப்பதாய் கருணை வைத்து அருள் புரிந்து இருக்கிறார். இதையே கராச்சிக் காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு சத்தியமூர்த்தியுடையவும், கராச்சி காங் கிரசினுடையவும், காந்தியாரினுடையவும் தயவு எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. ரோடும், பள்ளிக் கூடமும், குளமும் சர்க்கார் பாதுகாப்பில் இருப்பவை.  அவை தினமும் சர்க்கார் உதவியால் நடந்து வருபவை. ஆதலால் அதை ரயில், தந்தி, தபால் போல் எல்லா மக்களுக்கும் கிறிஸ்துவர்,  முகமதியர் உட்பட சம சுதந்திர மாய் அனுபவிக்க கட்டுப்பட வேண்டியவர் களாகிறார்கள்.
கோவில் மதத்தைச் சேர்ந்ததானதினாலும், மதத்துக்கு மத ஜனங்களே பிரதிநிதி களானதினாலும், ஜனங்களுக்குக் காந்தியாரும், சத்திய மூர்த்தியாரும் பிரதிநிதிகளாக ஆகிவிட்டதாலும் கோவில் பிரவேசம் என்பது களப்பிரதிநிதிகளையும், ஜனப் பிரதிநிதி சபையான காங்கிரசையும் சேர்ந்தது என்று சொல்ல வேண்டி இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் காந்தியாருக்கும் இஷ்ட மில்லையானால், சத்தியமூர்த்தியாருக்கும் இஷ்டமில்லை யானால், காங்கிரசுக்கும் இஷ்டமில்லையானால், பிறகு இந்த அரசியல் பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி காங்கிரஸ் ஆட்சியோ, காந்தி ஆட்சியோ, சத்தியமூர்த்தி ஆட்சியோ ஆகிவிடுவதால் என்ன லாபம் என்று கேட்கின்றேன்.
நிறபேதம் மாறுவதால் அதாவது வெள்ளை நிறக்காரர் ஆட்சி மாறி பழுப்பு நிறக்காரர் ஆட்சி வந்தவுடன் ஜனங்களுக்கு இன்றுள்ள இழிவு மாறிவிடும் என்று கருதுவது போன்ற முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.
கொள்கைகள் மாற்றமடைய வேண்டும். அதை மாற்றுவதற்கு ஒப்புகிறவர்கள் கைக்கு ஆட்சி வர வேண்டும். அது வர முடியவில்லையானால் பொது மக் களிடம் இன்னும் 10 வருஷத்துக்கோ, 100 வருஷத் துக்கோ பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அதில்லாமல் ஜஸ்டிஸ் மந்திரிகள் உள்ள ஸ்தானத்தில், சத்தியமூர்த்தி, பிரகாசம் மற்றும் இவர்கள் அடிமைகள் போய் உட்கார்ந்தால் ஒரு மாறுதலையும் கண்டுவிட முடியாது. ஆகவே, வீண் சூழ்ச்சிப் பிரச்சாரங்களையும், துவேஷப் பிரச்சாரங்களையும், சுயநலப் பிரச்சாரங் களையும் கண்டு மக்கள் யாவரும் ஏமாந்துவிடாதீர்கள்.
(அருப்புக்கோட்டை, திண்டிவனம், சேலம், விழுப்புரம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில்  நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சாரம்)
குடிஅரசு - சொற்பொழிவு - 02.06.1935
09-06-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2

Sunday, July 8, 2012

நம்மை முட்டாளாக்கவே பார்ப்பான், பண்டிகை, விழாக்கள்!

பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! இந்தச் சிவகாசியில் என்னைப் பொங்கல் விழாக் குழுவினர் இன்று அழைத்துப் பொங்கல் விழாவினைப் பற்றிப் பேசச் சொல்லி இருக்கின்றார்கள். நான் இந்த ஊருக்குப் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு தடவை வந்து, இதே இடத்தில் பேசி இருக்கின்றேன். அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் காலஞ்சென்ற நண்பர் சவுந்தர பாண்டியன், பி.டி.ராசன் ஆகியவர்களுடன் சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்துள்ளேன்.

இந்த முப்பது ஆண்டுகளில் எவ்வளவோ மாறுதல் அடைந்திருக்கின்றது. இந்தப் பொங்கல் பண்டிகை தமிழனுடைய விழா என்று சொல்லும்படியான நிலையில் உள்ளது. அறிவுக்குப் பொருத்தமானதாகவும் அமைந் துள்ளது. மற்றப் பண்டிகைகள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும், முட்டாள்தன மான கருத்துகளை கொண்டனவாகவுமே இருக்கின்றன. ஒன்று கூடத் தமிழனுடையது - தமிழனுக்குச் சொந்தமானது என்று சொல்லத்தக்க நிலையில் இல்லை.

தீபாவளி விழாவை நம் மக்கள் புத்தி இல்லாமல் ஆடம்பரமாகக் கொண்டாடு கிறார்கள். அதன் தத்துவம் என்ன என்பதை எவனும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது. பெரிய பட்டதாரிகள், புலவர்கள் என்பவர்கள் கூடக் கவலைப்படுவது கிடையாது. என்ன கதை அது?

இரணியனுடைய தம்பி இரண்யாட்சன் என்பான், இந்தப் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு போய்க் கடலில் போட்டு விட்டானாம். அதைத் திருமாலான வன் பன்றி உருவம் எடுத்துக் கடலுக்குள் சென்று மீட்டு வந்தா னாம். இது எவ்வளவு முட்டாள் தனமான கற்பனை என்பதை நம் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூமி உருண்டை வடிவமானது என்று விஞ்ஞானி சொல்லுகின்றான். அப்படியே தட்டையாக இருந்த போதிலும், அவன் அதை எதன் மீது நின்று கொண்டு சுருட்டினான்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அப்படிக் கடலுக்குள் இருந்து மீட்டு வந்த அந்த பூமியை மீண்டும் விரித்து அதன் மீது அந்தப் பன்றி நடந்ததாம். அதனால் பூமாதேவிக்கு அந்தப் பன்றி மீது காதல் உண்டாயிற்றாம். இருவரும் சேர்ந்து ஒரு குட்டி போட்டார்கள். அவன் தான் நரகாசூரன் என்பவன். ஆணும், பெண்ணும் மனித இனத்தில் கூடிப் பிறப்பது தான் மனித உருவாகப் பிறக்கும் என்பது இயற்கை. ஆனால், பார்ப்பனர்கள் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான கதைகளை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றனர்.

அந்த நரகாசூரன் என்பவன் பெரிய வனாக ஆனதும், கடவுள்களை எல்லாம் உதைக்க ஆரம்பித்தான். தேவர்களுக்கெல் லாம் தொல்லை கொடுத்தான். அதனால், விஷ்ணு அவனைக் கொன்று போடச் சென்று முடியாமல் தன் மனைவியை விட்டுக் கொல்லச் செய்தான்.
அப்படி அந்த நரகாசூரன் இறந்த நாளைத் தான் நாம் தீபாவளி என்று கொண்டாட வேண்டுமாம். பார்ப்பானுக்குத் தொல்லை கொடுத்தவன் ஒழிந்ததற்குப் பார்ப்பான் சந்தோஷமாகக் கொண்டாடுகின்றான் என்றால், அதில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால், நம் மக்கள் இம்மாதிரி, நம்மவன் இறந்ததற்குத் துக்கப்படாமல், மகிழ்ச்சியாகக் குளித்து விட்டுப் புத்தாடை உடுத்திக் கொண்டு பலகாரம் சாப்பிட்டுக் குதியாட்டம் போடுகிறார்கள் என்றால், இந்த மக்களை என்ன என்று கூறுவது?

அடுத்து விநாயக சதுர்த்தி. பார்வதி யானவள் குளிக்கப் போகும் முன் தன் உடலில் இருந்த அழுக்குகளை எல்லாம் ஒன்று திரட்டி ஓர் உருவம் செய்து குளிக் கும் அறைக்கு வெளியே உட்கார வைத்து, தான் குளித்து முடிக்கும் வரை உள்ளே யாரையும் விட வேண்டாம் என்று கூறி விட்டுக் குளிக்கச் சென்றாளாம். வெளியே சென்றிருந்த சிவன் உள்ளே நுழைய, அந்த அழுக்குருண்டை ஆசாமி சிவனைத் தடுத்து நிறுத்தினானாம். உடனே சிவன் சினங்கொண்டு தலையை வெட்டி வீழ்த்தி விட்டுப் பார்வதியிடம் சென்று விட்டான். சங்கதி அறிந்த பார்வதியானவள் தன்னுடைய அழுக்கினால் உண்டாக்கப்பட்ட பிள்ளையைக் கொலை செய்ததற்காக மிகவும் விசனப்பட்டாளாம். சிவன் அவள் வருத் தத்தை மாற்ற ஒரு யானைத் தலையை வெட்டி வந்து அந்த அழுக்குருண்டைக்கு வைத் துப் பொருத்தினானாம். அதுதான் யானை முகப் பிள்ளையார் சங்கதி.

ராமன் பிறந்ததைக் கொண்டாட ராமநவமி, கிருஷ்ணர் பிறந்ததைக் கொண்டாட கிருஷ்ண ஜெயந்தி, சுப்பன், சஷ்டியில் பிறந்தான் - அதற்கு விழா. இப்படித்தான் அறிவுக்குப் பொருத்த மற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களுக் காகத் தான் எல்லா விழாக்களும் ஏற்பட்டு இருக்கின்றன.

அத்தனை கதைகளும் பார்ப்பானால், நம்மை முட்டாள்கள் ஆக்க, நம்மை அடிமைப் படுத்த உண்டாக்கப்பட்ட கதைகளும், விழாக்களுமேயாகும். இதில் ஒன்று கூடத் தமிழ்நாடு சம்பந்தமானதாக இருக்கவில்லை. எல்லா விழாக்களும் இந்தக் கடவுள் இவனைக் கொன்றான், அந்தக் கடவுள் அவனைக் கொன்றான். அவன் 1,000 பேரைக் கொன்றான். இவன் 2,000 பேரைக் கொன்றான். இப்படி எல்லா விழாக்களும் கொலை பண்ணின சங்கதிகளுக்காக ஏற்பட்டதாகத் தான் இருக்கின்றன.

மதுரையில் வருஷா வருஷம் 8,000 சமணர்களைக் கழு மரத்தில் ஏற்றிக் கொன்றதற்காக விழா நடத்தப்படுகின்றது! கேட்டால் கூறுகின்றான் எங்கள் கடவுள் அன்பானவர், அருளானவர் என்று! உன் கடவுள்கிட்டே அருளும், அன்பும் எங்கே இருக்கிறது? எதற்கு அதன் கையில் வேலா யுதம், சூலாயுதம், அரிவாள், கொடுவாள், ஈட்டி, கொட்டாப்புளி இவற்றைக் கொடுத்து இருக்கின்றாய்? அதெல்லாம் கொலைகாரப் பசங்கள், திருட்டுப் பசங்கள் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களாயிற்றே! இவை எல்லாம் உன் கடவுள் கையில் ஏன் கொடுத் திருக்கின்றாய்?
உலகத்திலே நாம் சங்கங்கள் வைத்துக் கொண்டு - இலக்கியங்கள் வைத்துக் கொண்டு நாகரிகமாக வாழ்ந்த காலத்தில், சுத்தக் காட்டுமிராண்டிகளாகத் துணி கூட உடுக்கத் தெரியாத மக்களாக வாழ்ந்த அய்ரோப்பிய மக்கள் எல்லாம். இன்று எவ்வளவோ முன்னுக்கு வந்து விட்டார்கள். அதிசயமான விஞ்ஞான அற்புதங்கள் எல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு இருக் கின்றார்கள். ஆனால், நாம் எந்த நிலையில் இருக்கின்றோம்? பழைய சிக்கி முக்கிக் கல் காலத்தில், கட்டை வண்டிக் காலத்தில் ஏற்பட்ட கடவுளையும், மதத்தையும் தானே கட்டிக் கொண்டு அழுகின்றோம்.

ஆரக்கால் இல்லாத மரப்பட்டரை வண்டியில் மணிக்கு மூன்று மைல் போய்க் கொண்டு இருந்த நாம், இன்று சைக்கிள், மோட்டார் ரயில், அதற்கும் மேலாக மணிக்கு 1,000, 1,500 மைல் போகும் ஆகாய விமான காலத்தில் வாழ்கின்றோம். அமெரிக்காவின் ஜனாதிபதி அய்சனோவர் மாலை 8 மணிக்கு அங்கு ரேடியோவில் பேசுகின்றார் என்றால், நாமும் 8 மணிக்கு உடனுக்குடன் கேட்கும் வாய்ப்புப் பெற்று இருக்கின்றோம் என்றால், நம் கடவுள்கள் பழைய ஆரக்கால் இல்லாத முழுமையும் மரத்தாலேயே செய்யப்பட்ட கட்டை வண்டிக் காலத்தை நினைவுபடுத்து வது மாதிரி, மரக்கட்டைகளால் ஆன தேரில் தானே போய் வருகின்றனர். கொஞ்சம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா?

நம் மக்களை எவ்வளவுக்கெவ்வளவு மடையர்களாக, காட்டு மிராண்டிகளாக ஆக்கி வைத்திருக்கின்றார்களோ, அவ்வளவுக் கவ்வளவு பார்ப்பானுக்குப் பிழைப்புக் கிடைக்கும். அதனால் தான் அடிக்கடிப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பண்டிகைகளையும், விழாக்களையும் நம் மக்களைக் கொண்டாடச் செய்து, அவர்களுடைய மடமை எத்தனை டிகிரி உயர்ந்திருக்கின்றது என்று பார்த்துக் கொள்ளுகின்றார்கள். எப்படிப் பார்ப்பனர்கள் தம் அறிவினைக் கெடுத்து மடமையில் ஆழ்த்தி இருக்கின்றார்களோ, அது போலவே சமுதாயத் துறையில் நம்மை நான்காம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி மக்களாக, சூத்திரர்களாக, பறையன், சக்கிலி, பஞ்சமர்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர். இந்த இழிநிலை பற்றி இன்று எங்களைத் தவிர, எந்த அரசியல் கட்சிக்காரன்களும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், சட்டசபைக்கும், பார்லிமெண்டுக்கும் பொறுக்கித் தின்ன மட்டும் சொல்லுகின்றார்கள். 100-க்கு 97 பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தக் காரர்களான நாம், உடல் உழைப்புக்காரர் களாகிய நாம் ஏன் இழிந்த ஜாதி? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் ஆக இருக்க வேண்டும்? 100-க்கு மூன்று பேராக உள்ள இந்த நாட்டிற்குச் சொந்தமில்லாதவன். உடலுழைப்புச் செய்யாதவன் ஆன பார்ப்பான் ஏன் மேல் ஜாதியாக இருக்க வேண்டும்? இதுபற்றி எவனாவது சிந்திக்கின்றானா? எதற்காக இந்த நாட்டில் பார்ப்பான் இருக்க வேண்டும்? அவனால் இந்த நாட்டிற்கு ஒரு கடுகு அளவு பிரயோசனமாவது உண்டா?

கக்கூஸ் எடுப்பவன் இல்லாவிட்டால் நகரமே நாறிப் போகும். அதற்காகக் கக்கூஸ் எடுப்பவன் இருக்க வேண்டும். துணி வெளுக்க வண்ணான் வேண்டும். மயிர் சிரைக்க சவரத் தொழிலாளி இருக்க வேண்டும். உடை நெய்ய நெசவாளி, உழுது உணவு தானியம் விளையச் செய்ய உழவன் வேண்டும். ஆனால், இந்தப் பார்ப்பனர்கள் எந்த வேலையும் செய்யாமல் சமுதாயத் தில் சேர்ந்திருக்க வேண்டும்? இவர்கள் இல்லாவிட்டால் எந்தக் காரியம் கெட்டுப் போகும்? சொல்லட்டுமே. தலைவணங்கி ஏற்றுக் கொள்ளுகின்றேன். வீணாக ராமசாமி, பார்ப்பானைத் திட்டுகிறான், திட்டுகிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

இன்று உத்தியோகத் துறையினை எடுத்துக் கொண்டால், 100-க்கு மூன்று பேராக உள்ள இவர்களே, 100-க்கு 70, 80 பங்குகளுக்கு மேலாகவே பெற்றுக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். நம் வரிப் பணத்தில் இருந்து 60 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் முழுக்க முழுக்க இந்தப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தானே நடைபெற்று வருகின்றது. ரூ.2,000, ரூ.1,500 இப்படிப்பட்ட பெரிய பதவியில் இருந்து சாதாரண கிளார்க் பதவிகளில் கூட அவர்கள் தான். ரயில்வே அக்கவுண்டெண்ட் ஆபீசில் வேலை பார்ப்பவர் எல்லாம் பார்ப் பனர் மயம்! இது பற்றி எவன் கவலைப்படுகின்றான்? மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்றுப் பொறுக்கித் தின்ன சட்டசபைக்கும், பார்லி மெண்டுக்கும் போகின்றார்களே தவிர, எவனாவது இதுபற்றிக் கேட்கின்றானா?

ஆனால், பார்ப்பானுடன் சேர்ந்து கொண்டு எவன் தமிழனுக்காக நன்மை செய்கின்றானோ அவனை ஒழிக்கிறேன் என்று மட்டும் வந்து விடுகிறான். இன்று நான் எங்கு போனாலும் நீயேன் காமராசரை ஆதரிக்கின்றாய் என்று கேட்கின்றார்கள். நான் காமராசாரை ஆதரிக்காமல் இந்தத் தேர்தலில் இருந் திருந்தால், அந்த இடத்தில் யார் வந்திருப்பார்? ராஜகோ பாலாச்சாரியோ அல்லது அவரது அடிமைகள் தானே வந்திருப்பார்கள்? ராஜகோபாலாச்சாரி கொல்லைப்புற வழியாக மந்திரிசபை ஏற்றுக் கொண்ட சில மாதங்களுக்குள் பச்சை மனு தரும ஆட்சியை அல்லவா நிலைநாட்டி விட்டார். அவனவன் ஜாதித் தொழிலைப் படிக்க வேண்டும். அரை நேரம் மட்டும் பள்ளிக்கூடம் வந்தால் போதும். பாக்கி அரை நேரம் வண்ணான் மகன் வெளுக்க வேண்டும். அம்பட்டன் மகன் சிரைக்க வேண்டும். சக்கிலி மகன் செருப்புத் தைக்க வேண்டும். குயவன் மகன் சட்டிப்பானை செய்யப் பழக வேண்டும் என்றல்லவா சட்டம் போட்டு விட்டான்?

அவரை இந்தச் சட்டசபைக்காரர்களால் என்ன செய்ய முடிந்தது? நான் தானே ஒரு மாதத்துக்குள்ளாக இந்த உத்தரவை மாற்றாவிட்டால் கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லும்போது உபயோகிக்கலாம் என்றவுடன், தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதாகக் கூறி விட்டு ஓடினார்.

பிறகு காமராசர் வந்தார். ஆச்சாரியாரின் வருணாசிரமக் கல்வித் திட்டத்தை, வந்ததும் - வராததுமாக உடனே எடுத்துப் போட்டார். ஆச்சாரியாரால் மூடப்பட்ட 3,000 பள்ளிக் கூடங்களையும் திறந்து, மேலும் 4,000 புதிய பள்ளிகளையும் திறந்தார். பள்ளிக்கூடத்துப் பசங்களுக்கு மத்தியான சாப்பாட் டுக்கு வகை செய்தார்! ஏராளமான அய்ஸ்கூல் களையும், காலேஜ்களையும் ஏற்படுத்தினார்! அய்ஸ்கூல் வரை சம்பளம் இல்லாமல் படிக்க ஏற்பாடு செய்தார்.

ஆச்சாரியார் காலத்தில் எஞ்சினியரிங், மெடிகல் காலேஜ், இவற்றில் பார்ப்பனப் பிள்ளைகள் 100-க்கு 60, 70 பேர் படித்து வந்தார்கள். பாக்கியில் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்பதன் கீழ் பார்ப் பானுக்குப் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படும் மலையாளி களையும், கிறித்தவர், முஸ்லீம்கள் இவர் களுக்குக் கொடுத்தது போக மீதி நம்மவர் களுக்கு 10, 12 இடங்கள் தான் கிடைக்கும்.

ஆனால், காமராசர் முதன்மந்திரியாக வந்த பிறகு நம் பசங்கள் 60, 70 பேர்களும் பாக்கியில் கிறித்தவர்கள், முஸ்லீம் போகப் பார்ப்பாரப் பசங்கள் 10, 15 பேர்கள் தான் வரும்படியான நிலையை இன்று உண்டாக்கி இருக்கின்றார்.

மற்றும் ராஜகோபாலாச்சாரியார் மந்திரியாக இருந்தபோது, கூன் குருடு, சுடுகாட்டுக்குப் போக வேண்டிய வயதான பார்ப்பனர்களுக்கெல்லாம் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருந்தார். எல்லா பெரிய உத்தியோகங்களிலும் பார்ப்பனராகவே பார்த்துப் போட்டு வந்தார்.

காமராசர் வந்தபிறகு தான் நம் தமிழர்கள் சில பேர்களாவது உயர்ந்த பதவிக்கு வரும்படியான நிலை வந்திருக்கின்றது. இன்று முக்கியமான இலாக்காக்களில் பெரிய பதவிகளில் எல்லாம் நமது தமிழர்களே பதவி வகிக்கின்றனர். இப்படி இருப்பதனால் அந்த அந்த இலாகாக்களில் வேலை பார்க்கும் நமது கீழ்த்தர உத்தியோகஸ்தர்களுக்குத் தானே நன்மை.

தமிழர்களுக்காக, தமிழன் நன்மைக்காக என்றே கட்சி வைத்துத் தொண்டாற்றி வரும் எங்களுக்கு இப்படித் தமிழன் நலத்தில் அக்கறை கொண்ட ஒருவரை ஆதரிப்பது தான் கடமை.

நான் சென்ற தேர்தலில் மட்டும் அல்ல, இந்தக் காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக் கின்றவரை காமராசரே முதன்மந்திரியாக இருக்க வேண்டுமென்று கருதுபவன். காங்கிரஸ் ஒழியும்போது வேண்டுமானால் காமராசர் ஒழிந்து போகட்டும். கவலை யில்லை. அதுவரை அவர் தான் முதன் மந்திரி யாக இருக்க வேண்டும்.

அவர் பெண்டு பிள்ளை இல்லாதவர். ஆகையால் அவர் களுக்கென்று சொத்து முதலியவை சேர்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இல்லாதவர். என்னைப் போலவே அவரும் ஒரு மொட்டை மரம். எனக்குப் பிள்ளைக் குட்டிகள் கிடை யாது. எனக்கும் காமராசர் தயவால் ஆக வேண்டிய காரியம் ஒன்றும் கிடையாது. இப்படிக் கல்வித் துறையிலும், உத்தியோகத் துறையிலுமாக காமராசர் செய்திருக்கின்ற அம்மாறுதல்களால் எங்கள் வீட்டுப் பிள்ளைகளா பலன் பெறப் போகிறார் கள்? 100-க்கு 97 பேராக உள்ள நம் சமுதாயம் முழுமைக்கும் தானே அதனால் பலன் ஏற் பட்டிருக்கின்றது.

19.1.1959 அன்று சிவகாசி பொங்கல் திருநாளில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை. (விடுதலை 31.1.1959.)

08-07-2012  (http://viduthalai.in/page-2/37903.html)

Sunday, May 27, 2012

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?

தோழர்களே!

தலைவர் அவர்கள் என்னை உங் களுக்கு அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும், தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம் செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர் கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற் களோடு அறிமுகப்படுத்தினார்கள்.

முதலில் நான் அவரது பாராட்டு தலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

தமிழ் பாஷை

நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன். நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமே யாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்த வன். என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டா மல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந் தேன். காரணம் என்னவென்றால், எனக்குப் படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல் லாம் பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள். அக் காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள். வீட்டிற்கு சாப்பாட்டிற்கு செல்லும்போது ஒவ் வொரு மாணவனும் எச்சில் துப்பி விட்டுப்போய், அது காய்ந்து போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும். அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பது தான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

பொதுவாகவே பள்ளிக் கூடங்களிலும், வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திலேயே மிக நிர்ப் பந்தமுண்டு. இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அதோடு நான் அரசியல் சமுதாயத் திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப்பற்றி இங்கு பேசக்கூடாத இடமாகவும் இருக்கிறது. தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி பெற்றதாக இச்சங்கக் காரிய தரிசி சொன்னார். ஆகவே, எனக்குத் தெரியாத விஷயத்தைப் பேசவேண்டிய வனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன் என்பதை எண்ணும் போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல் போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது. மீறி ஏதாவது பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார்களே என்று பயப்பட வேண்டிய வனாய் இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசுவதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்

தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார். அதற்காகவே பாடுபடு கிறேன் என்றும் சொன்னார்.

தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகத்தியரால் உண் டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினிடத்திலும் பற்று கிடையாது. அது மூடப்பற்று - மூட பக்தியே ஆகும். குணத் திற்காகவும், அக் குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.

எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன். மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம் வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது தனது பெரியார்களுடையது என்பதற்காக அல்ல.

அன்பு என்பது...

உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய், தகப்பன் முதலாகிய எல்லாரிடத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும், பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன்களும்தான் ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும் இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால் புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும். புருஷன் செத்தால் மனைவிக்கு சாகும்வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக்கும். மறுவிவாகம் செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில் துக்கம் ஆறி, மறந்துபோகும். தகப்பனுக் கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த உடன் பிள்ளை செத்துவிட்டால் பிள்ளையைப் பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம் இருக்காது. 90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று, மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும் என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம் இருக் காது. தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை இறந்துபோனால் படுகிற துக்கத்தின் அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால் படுகிற துக்க அளவு ஆண் பிள்ளை இறந்து போனால் படுவதில்லை. மற்றபடி எந்த விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில் மகிழ்ச்சியோ, இன்பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில் ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில் அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.

அதுபோல்தான் நான் தமிழினிடத் தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்ட மேற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடம் அன்பு செலுத் துகிறேன்.

அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒருவித பழக்க வழக்கமும், அவைகளிடத் தில் சில விருப்பு வெறுப்பும் இருந்து வருவதுடன் விருப்பமானதைப் பெருக் கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப் பதுமுண்டு. ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டா ருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.

ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கலாம். ஆதலால், அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழை யது - புதியது என்ப தற்காகவும் எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப் பாஷைக் காக அவன் போராடவேண்டியவனே ஆவான். மற்ற நாட்டு பாஷை எதினா லாவது நமது நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க வேண்டியவனேயாவான்.

இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள். இங்கிலீஷால் தீமை இல் லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத் திற்கான விஷயம் பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன். இது என் அபிப்பிராய மாத்திரமல்ல. இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள் என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லி இருக் கிறார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அபிப்பிராயபேத மன்னி யில் போற்றப்படுகிறார்கள். ஆதலால், விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக் கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத் தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும் என்பது எனது அபிப்பிராயம். ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக இந்திய பாஷையை விட அதிகமான முன்னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.

பழங்காலம்

பழம் பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும். யார் என்ன சொன்ன போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர் களைவிட, நாம் முன்னேற்றமடைந்தவர் களே ஆவோம். ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத சாதனங்களும், சுற்றுச்சார்பு களும் இன்று நமக்கு இருந்துவருகின்றன. இதன் மூலம் நாம் எவ்வளவோ முற் போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும் அடைந்திருக்கிறோம். இனி யும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள் அடையப் போகிறார்கள்.

முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச் சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக மக்கள் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான் மூடர்கள் என்று குறைகூறவில்லை. அக்கால மக்களுக்கு இருந்த வசதியும், சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது. இக்கால மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.

இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள் இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள் கேட்கலாம். பழங்காலத் தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச் சார்புகளும் இருந்திருக்கலாம். ஆனால், அவைகளும், அவற்றால் ஏற்பட்ட பலன் களும் உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்க லாம்; பூகம்பத்தால் மறைந்தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல் அழித்திருக்கலாம். இப்போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத் திற்கு எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்து தான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க் கொண்டிருப்பதைக் காண் கிறோம். ஆகையால், பெரும்பான்மை யான விஷயங்கள் பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என் பது எனது அபிப்பிராயம். இவற்றை யெல்லாம் மாணக்கர்களாகிய உங்களுக் குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து முடிவுக்கு வர வேண்டும்.

தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக் காகப் பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள். நம் தாய் நமக்குக் கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது. நாம் பயன் படுத்துவதுமில்லை. உதாரணமாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்கொள் வதற்கு சாச்சி என்றும் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று நாம் அவற்றையா பயன்படுத்துகிறோம்? அது போவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி, பருவத்திற்குத் தக்கபடி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும். தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல காரியங்கள் அரசியல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரண மாகவும் இப்போது ஏற்பட்டு, அவற் றிற்காக பல அந்நிய பாஷை வார்த் தைகள் இன்று பழக்கத்தில் இருக் கின்றன. இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால் சொல்லிவிட முடியுமா? அவசியமான வற்றை வைத்துக்கொள்ள வேண்டும். அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவைகளைப்பற்றிக் கவலை இல்லாமல் இருந்து விடலாம்.

கேடு பயப்பவைகளை வார்த்தைகளா னாலும், கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதே யாகும். இந்தக் கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை எதிர்ப்பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே! இவ்வளவுதான் இந்த இடத்தில் தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று கருதுகிறேன். இதற்கு மேற்பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல என்று கருதி இவ்வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.

(21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர் கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - 06.08.1939http://viduthalai.in/page-2/34897.html

weather counter Site Meter