Pages

Search This Blog

Monday, September 26, 2011

திராவிடர் என்பது - ஏன்?

தலைவர் அவர்களே! மாணவர்களே!

இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15 வயது 18 வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும் பொருத்தமானதுமாக பேச வேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடு பேச வேண்டியிருக்கிறது.
ஆனால் படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர, வேறு பேச்சு என்னத்திற்கு? என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில், படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்கு ஆவது உங்களி டத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகி விட்டது.

உங்கள் படிப்பின் தன்மை

முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை, லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்புப் படிப்பது என்பது பள்ளிக்கூடத்தாருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட சம்பந்தமற்றதாகும்; இதனால் இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன ஏற்படும் என்று கருது வதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு அறிவுக்காக, அறிவு விருத்திக்காக என்று சொல்லப் படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா என்றால், ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பது கூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல்லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவர்கள் என்றுதான் சொல்லக் கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பில்; அறிவு ஆவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூடச் சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணான அறிவு ஏற்படும் படியாக இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும், உபாத்தியாயர்களுங்கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர் களாகிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்று சொல்லமுடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து, ராமனும் பரதனும் இந்த நாட்டை ஆண்டான் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்குப் பாரததேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்திலும் அதற்கு ஏற்றவண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள் நிஜமான நபர்கள் அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.

நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும், அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விபரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்குச் சரியான விபரம் தெரிவதில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகிய வர்களும், அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிகளும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறை களும், முடிவுகளும் சரித்திரம் படித்த 100க்கு 90 மாண வர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச் சக்கர வர்த்திக்கும், மனுநீதி கண்ட சோழனுக்கும் அண்ணன் தம்பிமார்கள், மனைவி மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும். பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இராது. ஆனால் இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை பலன், தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும், ஞானசாஸ்திரம் படித்தவனுக்கு சூரியன், சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத்தனம் இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரியாகத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரனுக்குக் கலை வளரவும் தேயவும், சாபம் இவர்களது மனைவி மக்கள், அவர்களது விபசாரம், ராகு கேது விழுங்குதல். அதனால் கிரகணம், அதற்குப் பரிகாரம் என்பது போல கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மை யென்ற காரணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு ஏற்ப நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம், விஞ்ஞானப் படிப்பின் இன்றைய நிபுணர்களைப் பார்த்தாலே விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பலனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும், பெரும்பாலும் உண்மைக்கும், நடப்புக்கும் சம் பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது.

படிப்பால் ஏற்படும் பயன்

இது தவிர, இனிப் படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏதாவது ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும், பற்றுகளுந்தான் பெரிதும் காணப்படுகின்றனவே தவிர உண்மையானதும், இருக்க வேண்டியதுமானவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிகமிக நீளும். ஆகவே, இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள்ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என்று உங்களுக்கு சொல்லுவதால் கேடு எதுவும் எற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை.

ஆசிரியருடன் விவாதம் புரியுங்கள்

உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும்போது இந்தமாதிரியான காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன்மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும், எழுதினாலும் உங்கள் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாவது விளங்கக்கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்கம் விரும் புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர் கள் விளக்கம் பெற விரும்புவீர்களானால் ஆசிரியர்களும் உங்களுக்கு விளக்கம் சொல்லவாகிலும் பயன்படும்படி அறிவு பெறுவார்கள். இப்படிப்பட்ட விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் கடமையாவது காலப்போக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறை பாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரி யானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகத்தான். எனவே இதுவரை உங்களுக்கு படிப்பைப்பற்றி சில கூறினேன்.

திராவிடர் கழகம் ஏன்? இனி உங்கள் கழகத்தைப் பற்றிச் சில கூற ஆசைப்படு கிறேன். திராவிடர் மாணவர் கழகம் என்பதில் திராவிடர் என்கின்ற பெயர் ஏன் வைக்கவேண்டியதாயிற்று? இத்தனை நாள் இல்லாமல் இப்போது ஏன் எங்கு பார்த்தாலும் திராவிடர் திராவிடர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இருந்துவருகிற பிரிவுகள், பேதங்கள் ஆகியவைகள் போதாமல் இது வேறு ஒரு புதிய பிரிவா? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படலாம். அவற்றிற்கு உங் களுக்கு விடை சொல்லத் தெரியவேண்டும். அதை நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் திராவிடர்களின் எதிரிகள் இந்தத் திராவிடம் என்பது ஒரு புதுப் பிரிவினையை உண்டாக்கக் கூடியது என்றும், இது மக்களுக்குள் துவேஷத்தையும், பேதத்தையும் உண்டாக்கக் கூடியதென்றும் சொல்லி திராவிட மக்களின் மேம்பாடு முன்னேற்ற உணர்ச்சியையும், முயற்சி யையும் கெடுக்கப் பார்ப்பார்கள்.

இதுவே எதிரிகளின் வழக்கம். திராவிடம் - திராவிடர் என்பது திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களு மாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக்கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும். எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினை வுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. இதுகூட ஏன்? இதுகூட ஏன்? இன்று புதிதாகச் சொல்லப்படவேண்டும் என்று கேட்கப்படலாம். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருந்துவருகிற திராவிடர் ஆரியர் என்கின்ற வார்த்தையை நாம் இன்று அமலுக்கு - பழக்கத்திற்கு அதிகமாய்க் கொண்டுவருவதால் அந்தக்கால நிலைக்கு நாம் போகவேண்டும் என்கின்ற கருத்து அதில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது. பிற்போக்குக்கு ஆக நாம் அப்படிச் சொல்லவில்லை. நமக்குச் சிறு பிராயத்தில் சரித்திர மூலம் படிப்பிக்கப்பட்டிருந்தும் அனுபவத்தில், உணர்ச்சியில் ஏன் நம் மக்களுக்குள் நினைவிலிருக்க முடியாமல் போய்விட்டது என்று நாம் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய, ஏன் நமக்கு இப்போது ஞாபகப்படுத்தப்படுகிறது என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆனாலும் ஏன் என்றால், ஏற்பட்ட கெடுதி அதாவது, திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4 ஆம் , 5 ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டுமிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகி றோம். இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினை வுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலை என்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென் படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர்களுக்குத்தான் (நமக் குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. இந்நாட்டு மனித சமுதாயத்தில் ஒருகூட்டம் அதாவது, ஆரியர்கள் பிறவி உயர்வாயும், பிறவி காரணமாய் உயர்வாழ்வாயும், மற்றொரு சமுதாயம் அதாவது, நாம் - திராவிடர் பிறவி இழி மக்களாயும், பிறவி காரணமாய்த் தாழ்ந்த இழிந்த வாழ்வாயும் இருப்பது இதுவரை மக்களுக்குத் தென்படாததும், தென்பட்டாலும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாமலும், சிந்தித்தாலும் முயற்சி செய்யாமலும், முயற்சி செய்தாலும் வெற்றி பெறாமலும் போனதற்கு காரணம் என்ன? என்பதைச் சிந்தியுங்கள். நீங்கள் உங்களைத் திராவிடர்கள் என்று கருதாததினால், நினைவுறுத்திக் கொள்ளாததால் இன்றைய இழிவுக்கும், தாழ்மைக்கும், கீழ்நிலைமைக்கும் உரியவர்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி ஏற்பட்டுவிட்டது. அக்கட்டுப்பாட்டை உடைக்க நீங்கள் திராவிடர்கள் என்று கருதி முயலாமல் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக ஆசைப்பட்டதால்தான் அக்கட்டு உங்கள் ஆசையை அனுமதிக்கவில்லை. இதுவரையில் இழிநிலை கட்டுப்பாட்டிலிருந்து தப்ப, மீள முயன்றவர்கள் நம்மில் எவர்களாவது இருப்பார்களானால் அவர்கள் அத்தனைபேரும் தோல்வி அடைந்து பழைய நிலையிலேயே இருப்பதற்குக் காரணம் இதுவேயாகும். சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப்படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்? திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக் குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறியாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால்தான் பயன் என்ன? ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத் தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவ தாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.

எப்படி ஒருவன் பறையனாய், சக்கிலியாய் இருப்பவன், அவன் இஸ்லாம் என்றாகிவிட்டால் அந்தப் பறத் தன்மை, சக்கிலித் தன்மை உடனே ஒழிந்துபோகிறதோ அதேபோல் அறியாமையால் ஆரியத்தில் சிக்குண்டு கீழ் மகனான மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலே சரிசமமான மக்களாக ஆகிவிடுகிறார்கள். அதாவது எல்லா மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் உரிமையும் சமபங்கு முள்ள சுதந்திர மக்களாக ஆகிவிடுகிறார்கள். அப்படிக் கில்லாமல் தன்னை ஆரியத்தோடு பிணைத்துக்கொண்டு இருக்கிற எந்தத் திராவிடனும் கீழ்மகன் என்ற தன்மையை ஒப்புக் கொண்டவனேயாவான். எவ்வளவு முயற்சி செய்தாலும் மீள முடியாதவனே ஆவான். உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவதன் மூலம் எவ்வளவு பெரிய ஜாதி வைசியரானாலும், பிராமணனுக்கு கீழ் ஜாதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய அனுபவம். இதுதான் இதுவரை யார் பாடுபட்டும் வெற்றிபெறாத காரணம். இதைக் கண்டிப்பாய் உணருங்கள். யுக்திக்கும், நியாயத்திற்கும், அனுபவத்திற்கும் ஒத்த உண்மையாகும் இது. திராவிடர் என்பதின் கருத்து இனி திராவிடத் தன்மையைப் பற்றிச் சில கூறுகிறேன். நான் நம்மைத் திராவிடர் என்பதும், இது சரித்திர காலத் தன்மை என்பதும், உங்களை நான் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகக் கருதாதீர்கள். அல்லது திராவிடர் - ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாக கருதாதீர்கள்.

அல்லது திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதை சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்துச் சொல்லுவதாகக் கருதாதீர்கள். இவைகள் எப்படி இருந்தாலும், இவை பிரிக்கமுடியாதனவாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து, முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். சுயராஜ்ஜியம் என்றால் எதைக் குறிக்கிறது? பாகிஸ்தான் என்றால் எதைக் குறிக்கிறது? மோட்சம் என்றால் எதைக் குறிக்கிறது? வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது? என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை, ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படிக் குறிப்பிடுகின்றனவோ அப்படிப் போல் நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டிய தில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? காப்பி(பானம்) என்னமொழி? அது காலை ஆகார(பான)த்திற்கு ஒரு குறிப்பு மொழி, அவ்வளவில்தான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் என்னமொழி? இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில்தான் அதைக் கருத வேண்டும். கலந்துவிட்டது என்பது... ஆரியன் திராவிடன் என்பது கலந்துபோய்விட்டது, பிரிக்க முடியாதது, ரத்த பரீட்சையாலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல் லுவேன். ஆரிய திராவிட ரத்தம் கலந்துவிட்டிருக்கலாமே தவிர ஆரிய திராவிட ஆச்சார அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? பிராமணாள் ஓட்டல், பிராமணர்களுக்கு மாத்திரம்; பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி, பிராமணனல்லாதவன் ஆகிய பிரிவுகள் எங்காவது கலந்துவிட்டனவா? பேதம் ஒழிந்து விட்டதா? பிராமணர்கள் என்பவர்கள் உயர்வும் பாடுபடாமல் அனுபவிக்கும் போக போக்கியமும், சூத்திரர்கள், பறையர்கள், சக்கிலிகள் (திராவிடர்கள்) என்பவர்கள் இழிவும், கஷ்ட உழைப்பும், ஏழ்மையும் தரித்திர வாழ்வும் எங்காவது சரிசரி கலந்து விட்டதா? பிரிக்க முடியாதபடி ஒன்றிவிட்டதா? அல்லது அறிவு, கல்வி, தகுதி திறமை கலந்துவிட்டதா? எது கலந்து விட்டது; இரத்தம் கலந்தாலென்ன கலவாவிட்டால் என்ன? வாழ்வு, போகபோக்கியம், உரிமை கலத்தல் வேண்டாமா?

சட்டைக்காரர் என்று ஒரு கூட்டம் இருக்கிறது, இது வெள்ளை ஆரிய, கருப்பு திராவிட ரத்தக்கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும், நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது. அவர்கள் தனிச் சமுதாயமாக வெள்ளை ஆரியர் (அய்ரோப்பியர்) போலவே ஆச்சார அனுஷ்டானங்களில் நம்மில் இருந்து பிரிந்து உயர்வாழ்வு வாழுகிறார்கள். இவர்களைப் பார்த்துக் கருப்புத் திராவிடன் இரத்தத்தால் பிரிக்க முடியாதவர்கள் என்று சொல்லுவதில் பொருள் உண்டா என்று பாருங்கள். ஆகவே, திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப் பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். நாம் இந்தத் திராவிடர் என்ற பெயர் கொண்டு விடுவதால் நமக்கு வேறு தவறுதல்கள் எதுவும் நேர்ந்துவிடாது. நம் எதிரிகள் சொல்லும் குறும்புத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு அதாவது கடவுள், மதம், சாஸ்திரம், ஒழுக்கம், கலை, தர்மம், புண்ணியம், பக்திவிசுவாசம் முதலியவை எல்லாம் ஒழிக்கப்பட்டுப் போகும் என்பவை மிகவும் இழிவான குணத்தோடு நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் புகார்களுமாகும்.

திராவிடர், திராவிட இனத்தவர், திராவிடக் கூட்டத்தவர் என்பதற்கும், இந்தக் குற்றச்சாட்டுக்கும், எவ்வித சம்பந்தமுமில்லை, இவைகள் ஒன்றும் கெட்டுவிடாது. ஆரியத்தால் தீண்டப்படாதவனான ஒரு பறையன், சக்கிலி தன்னை இஸ்லாமியன் என்று ஆக்கிக்கொண்டால் அவன்மீது இந்த இழி தன்மைகளுக்கு அருத்தம் உண்டா என்று பாருங்கள். அதோடு அவனுக்கு, அவன் பறையனாயிருந்தால் சூழ்ந்துகொண்டிருந்த அவனைப் பறையனாக்குவதற்குக் காரணமாயிருந்த கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம், புண்ணியம் முதலிய ஈனத் தன்மைகள் ஆரியருடையதுகள் கண்டிப்பாய் நசித்துப்போய் விடுகிறதா இல்லையா பாருங்கள். அதனால் அவன் நாஸ்திகன் ஆகிவிடுகிறானா? இல்லையே! அதற்குப் பதிலாக ஈனத் தன்மைக்குக் காரணமாயில்லாத இஸ்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், கலை, ஒழுக்கம் முதலியவை அவனைச் சூழ்ந்து அவன் மீதிருந்த இழிவுகளை நீக்கிவிடும். உதாரணமாக ஆரியனுக்கு உருவக் கடவுள், இஸ்லாமி யனுக்கு உருவமில்லாத கடவுள் என்பதோடு உருவக் கடவுள் வெறுப்பும் உண்டு. ஆரிய மதத்துக்கு ஜாதிபேதம், இஸ்லாமிய மதத்திற்கு ஜாதி பேதம் இல்லை; இப்படிப் பல மாறுதல்கள்தான் திராவிடனுக்கு உண்டாகலாம். இதனால் கடவுள், மதம். சாஸ்திரம், கலை, ஒழுக்கம் ஒழிந்து விட்டதாகவோ ஒழிக்கப்பட்டதாகவோ அருத்தமா? இங்குதான் உங்களுக்குப் பகுத்தறிவு வேண்டும். ஜாக்கிரதை வேண்டும். இன்றைய உலகம் எல்லாத் துறையிலும் மாறுதல் ஏற்பட்டு முன்னேற்றம் அடைந்து வருகிறதே ஒழிய நாசமாய்விடவில்லை. பழையதுகளுக்கும், பயனற்றதுகளுக்கும் சிறிதாவது குறைந்த சக்தி கொண் யுடவை நசித்துதான் போகும்; கைவிடப்பட்டுத்தான் போகும். சிக்கிமுக்கியில் ஏற்பட்ட வெறும் நெருப்பு வெளிச் சம் மறைந்து படிப்படியாக மாறி இன்று எலக்டிரிக்(மின்சார விளக்கு) வெளிச்சம் வந்ததானது நாசவேலையல்ல என்பதும்; அது முற்போக்கு வேலை என்பதும் யாவரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆதலால், ஆரம்பகாலத்தில் - பழங்காலத்தில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட கடவுள், மதம், சாஸ்திரம், இசை, ஒழுக்கம், பக்தி என்பவை இன்றைக்கும் அப்படியே பின்பற்றப்படவேண்டும் என்றால் அது அறியாமையேயாகும். அறியாமை அல்ல என்றால், புத்தர், ஏசு, மகம்மது, ராஜா ராம்மோகன்ராய் ஆகிய கடவுள், மதம், கலை, ஒழுக்கம், பக்தி ஆகியவைகளில் மாற்றம் ஏற்படுத்தியவர்கள் நாச வேலைக்காரர்களா? எடிசன், மார்கோனி, டார்வின், சாக்கரடீஸ், லூதர், மார்க்சு, ஏஞ்சல்ஸ் ஆகியவர்கள் நாச வேலைக்காரர்களா? இவர்கள் மனித சமுதாய ஒழுக்கத்தை சமுதாய அடிப்படையைக் கலைப்பவர்களா? என்று சிந்தியுங்கள்; மாறுதல் உணர்ச்சி யால் அதுவும் முற்போக்கான பழைமையை உதறித்தள்ளின மாறுதலில்தான் பயன் உண்டாக முடியும். மாறுதல் என்று சொல்லி பழைமையைத் திருப்புவது, அதாவது ராட்டினம் கொண்டுவருவது, செல்லரித்து மக்கி ஆபாசமாகப் போன புராணங்களை உயிர்ப்பிப்பது, பழைய கோவிலைப் புதுப்பிப்பது, என்பவை மாறுதல் ஆகிவிடா. எனவே மாறுதல் கருத்தால் வெகுகாலமாக இருந்து வரும் குறைகளை இழிவுகளை நீக்கிக் கொள்ளச் செய்யும் முயற்சியை நாசவேலை என்று கருதாதீர்கள். இவ்வித மாறுதலுக்கு நீங்கள்தான், அதாவது இளை ஞர்கள், குழந்தைப் பருவமுள்ளவர்கள், ஆகியவர்கள்தான் பெரிதும் தகுதி உடையவர்கள் ஆவீர்கள். நன்றாய்ச் சிந்திக் கும் காலம் இது. சிந்தித்து வாது புரியுங்கள், விவகாரம் கிளப்புங்கள்.

அதனால் அனுபவம், அறிவு முதிர்ச்சி பெறு வீர்கள். உங்கள் வாதத்தால் உங்கள் ஆசிரியர்களுக்கும் சிந்திக்கும் சக்தியும் பகுத்தறிவும் தோன்றும்படி வாது புரியுங்கள். நீங்கள் காரியத்தில் இறங்க உங்களுக்கு இன்னும் சற்று அனுபவம் பெறுங்கள். யாவர் சொல் வதையும் காது கொடுத்துக் கேளுங்கள், கேட்டவை களைச் சிந்தித்துச் சிந்தித்து உண்மை, நேர்மை கண்டு பிடிக்க வாதம் செய்து, கேள்வி கேட்டு அனுபவம் பெறுங்கள். எனவே, நான் இவ்வளவு நேரம் சொன்னவைகளில் உள்ள குற்றம் குறைகளை உங்கள் தலைமை ஆசிரியரும், இக்கூட்டத் தலைவருமான அறிஞர் திருத்துவார். (09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 14.07.1945

25-09-2011 விடுதலை பக்கம் 2

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (11)-பெரியார் - மணியம்மை திருமணம்

எதை எதையோ கிறுக்கிப் பார்த்து அலுத்துப் போன ஸ்ரீமான் கே.சி.லட் சுமிநாராயணன் பெரியார் - மணியம்மை திருமணத்தை சிக்கெனப் பிடித்துக் கொண்டார்.

இதற்கான விளக்கங்கள் எல்லாம் எப்பொழுதோ கொடுக்கப்பட்டு முடிந்து போன சங்கதி; யார் குற்றம் சொன்னார்களோ அவர்களே பின் னாட்களில் உண்மையை உணர்ந்து விட்ட நிலைதான்.

தொடக்கத்தில் அதனை அதிர்ச் சியாகப் பார்த்தவர்கள், விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட ஒரு செவிலியராக அன்னை மணியம்மையார் இருந்து தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்த தகை மையைக் கண்டு வாயார, நெஞ்சாரப் பாராட்டத்தான் செய்தார்களே தவிர யாரும் குற்றப் பத்திரிகை படிக்க வில்லை.

உலகியலில் கூறப்படும் சாதாரண காரணங்களை தந்தை பெரியார் மீது யாரும் திணிக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார் நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூட இடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின் வீட்டார் கூட எவ்வளவோ வலியுறுத் தியும் கூட திருமண எண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.

நாகம்மையார் மறைவு கூட ஒருவகையில் நல்லது என்றுதான் கருதினார்.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும், துயரமாகவும் காணக் கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது. (குடிஅரசு 14-5-1933) என்று எழுதினார் என்றால் இதனுள் அடங்கியிருக்கும் தத் துவத்தைத் தன்னலம் துறந்த பொது மனத்தினரால்தான் உணர முடியும்.

ஒரு கட்டத்தில் துணைவியர் மறைந்தது நல்லது என்ற நிலை; இன்னொரு கட்டத்தில் தனக்கு ஒரு துணைவி தேவை என்ற நிலை . . . அந்தத் துணையும் தனிப்பட்ட- தன் சுக வாழ்வுக்காக அல்ல. தான் வரித்துக் கொண்டு இருக்கிற புரட்சிகரப் பொது வாழ்வுக்கு, தனது தள்ளாமை, உடல் நோய் இடையூறாக இருக்கும் நிலையில், அதிலிருந்து விடுபடவும், தொண்டறம் புரிய சட்ட ரீதியாக அவர் மேற் கொண்டமுடிவும், துணிவும், எதிர்ப் புகளை சட்டை செய்யாத ஆளுமையும் அய்யாவை ஒரு தனித் தன்மைமே லோங்கும் வைரம் பாய்ந்த மாமனித ராகத்தான் ஜொலிக்கச் செய்கிறது.

நான் திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17 ஆம் ஆண்டில் துணை தேடக் காரணம் என்ன வென்று ஏன் திருமணம்? என்று கேட்டவர்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டாமா என்ற அய்யாவின் கேள் விக்குள் எல்லாமே அடங்கி விட்டதே!

ரமணரிஷி போல தன் சொத் துக்களை ரத்த சொந்தத்துக்கா எழுதி வைத்தார்? ஒரு கழகத் தொண்டரின் மகளாகவும் கழகக் கொள்கையில் ஆழமான பற்றுக் கொண்டவராகவும் இருந்த ஒரு தொண்டரைத்தான் பெண் மணியைத்தான் தனது வாரிசாக வரித்துக் கொண்டார்.

இன்னும் சொல்லப்போனால் தந்தை பெரியார் அவர்களின் இந்த விசால மனப்போக்கில், உயர்ந்த சீலத்தில், பொது ஒழுக்கக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்குக் கூட ஒரு தகுதி தேவைப்படவே செய்யும்.

ராஜாஜியைச் சந்தித்து அவர் ஆலோசனையின் படியே பெரியார் அந்தத் திருமணத்தை செய்து கொண்டார் என்பது பாமரத்தனமான பிரச்சாரமே! உண்மை என்னவென் றால் பெரியார் எதிர்பார்க்கிறபடி 30 வயது பெண் பரிபாலனம் செய்வார் என்று நம்புவதில் பயன் இல்லை என்றுதான் ராஜாஜி கடிதமே எழுதி னார். ஆனால் அதற்கு மாறாக தந்தை பெரியார் வாரிசாக அன்னை மணி யம்மையாரைக் கொண்டார். ராஜாஜியின் கணிப்பு பொய்த்தது; தந்தை பெரியார் அவர்களின் எதிர் பார்ப்பும், நம்பிக்கையும், தொலை நோக்குமே வென்றன.

ராஜாஜியின் ஆலோசனையின் பெயரில்தான் பெரியார் மணியம்மை திருமணம் நடந்தது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையோ வேறு விதமானது. ராஜாஜி எழுதிய அந்தக் கடிதத்தை அந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியார் வெளியிட்டு இருந் தால், அந்தப் பொய்ப் பிரச்சாரம் மண் மூடிப் போயிருக்கும். ஏன் பெரியார் வெளியிடவில்லை? பர்சனல் என்று தனக்கு எழுதப்பட்ட கடிதத்தை வெளியிடுவது பண்பாடல்ல என்ற உயர்ந்த பண்பாட்டை பெரியார் கடைப்பிடித்ததுதான் அதற்குக் காரணம்! இப்படி ஒரு தலைவரை வரலாறு கண்டதுண்டா? கேள்விப் பட்டதுதான் உண்டா? தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகுதான் வரலாற்றுத் தேவையின் அடிப்படையில் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார் என்பதுதான் உண்மை.

திருமண ஏற்பாட்டுக்குப் பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும் தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர் வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார் என்பதிலும் அய்யமுண்டோ?

நாகம்மையார் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதியதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்கள் சில விசேஷ சம்பவங்களாக இருக்க லாம். அவை நாகம்மையாருக்கு துக்கமாகவும், துயரமாகவும் இருக்கும் என்றாரே!

உண்மைதானே - இந்தி எதிர்ப்புப் போராட்டம், - பெல்லாரி சிறைச்சாலை - சட்ட எரிப்புப் போராட்டம், தேசிய கொடி எரிக்கும் போராட்டம் - தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்புப் போராட்டம், - பிள்ளையார் உடைப் புப் போராட்டம் - ராமன் பட எரிப்புப் போராட்டம் - கோவில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் என்று அலை அலையான போராட்டங்களை அல் லவா தந்தை பெரியார் நடத்தினார்!

இந்த இடர்ப்பாடான கால கட்டத் தில் தோன்றாத் துணையாக இருந்தவர் அந்த ஈரோட்டுச் சிங்கம் எடுத்த சரியான முடிவின்படி, கணிப்பின்படி அமைந்தவர் அன்னை மணியம்மை யார் அல்லவா!

தந்தை பெரியார் மனம் விட்டு எழுதினாரே!

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் (விடுதலை 15-10-1962) என்று கூறினாரே அய்யா!

என் காயலா சற்றுக் கடினமானது தான். எளிதில் குணமாகாது. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்பட வில்லை. எதற்கும் தயாராக இருக் கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது. - தந்தை பெரியார் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் - 17-9-1967)

தந்தை பெரியார் மறைந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இந்தப் பார்ப்பனர்கள் அந்தத் திருமணத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? அந்த அம்மா இருந்துதானே இந்தக் கிழவரை நீண்ட காலம் வாழ வைத்தார்! நம்மவா ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு உறு துணையாக இருந்தாரே என்கிற ஆத்திரம்தான் - இத்தனை ஆண்டுகள் ஓடிய பிறகும் கூட அவாளின் ஆத்திர நெருப்பு அணைந்து போய்விடா மைக்குக் காரணம்! இன்னும் குமுறிக் கொண்டும் திமிறிக் கொண்டும் பார்ப்பனர்கள் கிடக்கிறார்கள் என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!

பெரியார் மட்டுமல்ல, பெரியார் மணியம்மையார் திருமணத்தைக் காரணம் காட்டி கழகத்தை விட்டுப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அண்ணா அவர்களே கூட உண்மையை உணர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாரே!

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பது ஆண்டுகளாக கட்டிக் காத்து, அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சாரும் என்று அண்ணாவே சான்றளிப்புச் செய்து விட்ட பிறகு இந்த லட்சுமி நாராயணன்கள் யார்?

சோ. ராமசாமிகள் யார் குற்றங்கண்டுபிடிக்க?

அய்யா சிறையிலிருந்து 6 மாதங் களுக்குப் பிறகு விடுதலையாகிறார். ஒவ்வொரு ஊருக்கும் தோழர்கள் தந்தை பெரியார் அவர்களை அழைக் கின்றார்கள். அந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் வெளியிட்ட அறிக் கையை நோக்குங்கள். (விடுதலை 8.6.1958)கூப்பிட்டால் வந்துவிடுவார்; கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்! பெரியார் அவர்கள் விடுதலை ஆனவுடன் தங்கள் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்பதாக ஒரு மாதமாகவே பலர் கடிதங்கள் எழுதி வழிச் செல வுக்குப் பணமும் பல பேர் அனுப்பி யிருக்கிறார்கள். இந்த இரண்டு, மூன்று நாள்களாக பல தந்திகளும், செக்குகளும், டிராப்டுகளும் வந்த வண்ணமாய் இருக்கின்றன.

பெரியார் உடல் நிலையைப் பற்றி, பெரிய நோய் ஒன்றும் இல்லாவிட்டா லும் அவரது 80 வயதே அதாவது மூப்பு என்பதே ஒரு பெரிய நோய் அல்லவா? அதிலும் பெரிய டாக்டர்கள் பலர் அவர் உடல்நிலை பற்றிப் பயப்படும் படியாகக் கூறி, பெரியாரைப் பத்திர மாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இனி அவரைப் பயணம் செய்யும்படியோ, பேசும்படியோ விடாதீர்கள்! கண்டிப் பாய் விடாதீர்கள்! என்பதாக ஒரே கருத்தாய்க் கூறி வருகிறார்கள்.

பெரியார் அவர்கள் தனது மூப் பினால் வேறு எந்தக் காரியமும் செய்ய முடியாவிட்டாலும், தனது மூப்பு, பிரயாணத்திலோ - பேச்சிலோ தனக்கு முடிவு தரவாவது உதவட்டுமே என்கிறார்.

இதற்காக அவரைத் தற்கொலை செய்து கொள்ளும்படி விடலாமா? அல்லது நாமாவது அவரது முடிவை அவசரப்படுத்தலாமா?

ஆகையால் அவர் இனி அதிகப் பிர யாணம் செய்யாமலும், அதிகம் பேசா மலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

பெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து. பொதுச் சொத்து நாதியற்ற தாகும் என்கின்ற அறிவு மொழிப்படி அவரை விட்டுவிடாமல் எல்லோரும் தங்கள் சொந்தச் சொத்தைக் காப் பாற்றுவது போல் கவலையுடன் காப்பாற்றியாக வேண்டும்.

அரசாங்கத்தாரால் நமது மக்களுக்கு இப்போது ஏற்பட்ட அக்கிரமமான கொடுமைக்கும் கொலைக்கும் பெரியார் அவர்கள் சென்னை முதல் கன்னியா குமரி வரை எல்லா மாவட்டங் களுக்கும் சென்று மக்களைப் பாராட்டி ஆறுதல் கூறவேண்டி இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் எய்தவனை விட்டுவிட்டு அம்பை (வாளியை) நொந்துகொண்டிருக்கிறார்கள்! இதற்குப் பரிகாரமாகத் தவறான வழியில் செல்லத் தூண்டப்படு கிறார்கள். இத் தவறான நிலைக்கு ஆளாகாமல் மக்களை நடத்த வேண்டி இருக்கிறது. இது பெரியாரால்தான் ஆகும். மற்றவர்களுக்குப் பெரிதும் விஷயமே புரியவில்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

ஆகையால் ஒரு மாவட்டத்திற்கு ஒரு வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் அழைப்பது என்கின்ற தன்மையில் அந்தந்த மாவட்டத்தார் முடிவு செய்து கொண்டு அந்தப்படி அழைத்தால், தேதி குறிப்பிடுவதை நான் கவனித்துத் தேதி கொடுக்கிறேன்.

அழைப்பைக் குறைத்தால் பெரியார் அவர்களை பத்திரிகைக்கும், நூல் களுக்கும் ஏதாவது எழுதிக் கொண் டிருக்கும்படி செய்யலாம். மாநாடுகளை மாதத்திற்கு ஒன்று நடத்தினாலே போதுமானது ஆகும். அதுவும் அனுமதி பெற்று நடத்துவது பயன்படத் தக்க தாகும்.இதை மாவட்டத் தோழர்கள் உணர வேண்டுகிறேன்.

பெரியாருக்கு ஒரே வேளை உணவு தான், இரண்டு வேளை பால். இப்படித் தான் சிறையில் (ஆஸ்பத்திரியில்) பழக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பாய் யாரும் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கூப்பிட்டால் வந்துவிடுவார், கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்.

இது இரண்டிலும் அவர் குழந் தையே ஆவார்.

ஆகையால் தோழர்கள் அருள் கூர்ந்து இதைக் கருத்தில் கொள்ளப் பணிவாய் வேண்டுகிறேன்.- விடுதலை 8-6-1958

தந்தை பெரியார் எதிர்பார்த்ததற்கு மேலாக அல்லவா, ஒரு தாயாக இருந்து அந்தத் தந்தையை, தலைவரை தமிழ் நாட்டின் பொது வாழ்வுக்குக் காப் பாற்றிக் கொடுத்திருக்கிறார்.

இதனைக் கொச்சைப்படுத்துபவர்கள் குணக் கேடர்களாகத்தான் இருக்க முடியும்.

தன்னைக் காண வந்த எழுத்தாள ராகிய ஒரு பெண்மணியை (அனுராதா ரமணன் - பார்ப்பனப் பெண்மணிதான்) கையைப் பிடித்து இழுத்தவர்கள்தான் அவாளுக்கு ஜெகத் குரு - காமகோடி!- பார்ப்பனர்களின் யோக்கியதைக்கு ஜெகத்குருக்கள் போதாதா?

வாலிப வயதை ஒரு சமூகத்தின் புரட்சிப் பணிக்காகத் தியாகம் செய்து, தலைவரையும் காத்து, தலைவரின் மறைவுக்குப் பிறகு - அந்தத் தலைவர் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இயக்கத்தைக் கட்டிக் காத்த அந்த கண்ணியமிக்க கடமை உணர்வை, தியாக உணர்வை மதிப்ப தற்கு மரியாதையான பண்பாடும் சீலமும் தேவைப்படும்.

பார்ப்பனர்களிடத்தில் அதனை எதிர்பார்க்க முடியுமா?

முடியாது என்பதற்கு அடையாளம் தான் துக்ளக்கில் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண அய்யர் வாளின் எழுத்துக்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவரது நினைவு நாளை யொட்டி (25-12-1974) ராமன், லட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவை நடத்திக் காட்டி, இந்தியாவே குலுங்கு மாறு இன எழுச்சிக் காவியத்தை எழுதி வரலாற்றில் கல்வெட்டாகப் பதிந்து போன அன்னையைப் பார்ப் பனர்கள் மதிப்பார்கள் என்று எதிர்பாக்க முடியாதே!

உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத் துக்குத் தலைமை தாங்கிய பெருமை இந்த அன்னையை மட்டும்தான் சாரும். நெருக்கடிக் காலம் என்னும் திராவகப் புயலையும் தீர மிக்க பெரியார் உணர் வால் சர்வ சாதாரணமாகச் சந்தித்த சாதனை சாதாரணமானது தானா?

தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகும் கூட பார்ப்பனர்களால் அத் தலைவர்கள் ஏற்படுத்திச் சென்றுள்ள பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் விட்டில் பூச்சிகளாகத் துடிக்கிறார்கள் என்பதிலிருந்தே அந்தத் தலைவர்கள் காலம் கடந்தும் வெற்றிப் பேரிகை கொட்டி வீறு நடை போட்டு வருகி றார்கள் கொள்கையாய் வாழ்கிறார்கள் என்பது விளங்கவில்லையா?

(சந்திப்போம்)

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நிலைப்பாடு என்ன?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், பெரியாரை திராவிடர் கழகத்திலிருந்து நீக்கி வைத்து திராவிடர் கழகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறினார் என்று துக்ளக் கட்டுரை கூறுகிறது!

அப்படியெல்லாம் ஏதோ உணர்ச்சி வயப்பட்டுச் சொன்ன வர்கள் எல்லாம், கடைசியில் தந்தை பெரியார் பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்து பெரியார் பக்கமே நின்றனர் என்பது துக்ளக் எழுத்தாளருக்குத் தெரியுமா?

அதே புரட்சிக் கவிஞர் அன்னை மணியம்மையார்பற்றி என்ன எழுதினார்?

தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் - தமிழரைக் காப்பேன் ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அது மட்டுமல்ல.

குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்போம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம்.

யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறி யினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை.

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இயக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கால் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்ன தில்லை. எம் அன்னை யாவது முன்னே குவிந் துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி - அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலை யில் வைத்தார் என்பதுமில்லை. - 10.4.1960 குயில் இதழ்

கோவை அய்யாமுத்து, ப. ஜீவானந்தம் அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று ஒரு பட்டியலைக் காட்டி இவர்கள் எல்லாம் பெரியாரைக் குறை கூறினார்கள் என்று துக்ளக்கில் திருவாளர் இலட்சுமி நாராயண அய்யர் எழுதியிருந்தாலும் இவர்கள் அத்தனைப் பேர்களுமே பிற்காலத்தில் தந்தை பெரியார் அவர்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, கருத்துத் தெளிந்து தந்தை பெரியார் அவர்கள்பால் அன்பும் மதிப்பும் கொண்டு, அய்யாவின் ஆதரவையும் பெற்றார்கள் என்கிறபோது, துக்ளக் தூக்கிய துப்பாக்கிக்கு துக்ளக் கூட்டமே இரையானது என்பதுதான் கண்ட பலன்!

கோவை அ.அய்யாமுத்து எழுதிய நான் கண்ட பெரியார் என்ற நூலிலிருந்து


அந்தப் பெண்மணி யார்?


1943-இல் நான் திருச்சூரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கும்பகோணத்திலிருந்து எனது நண்பர் கா.மு. ஷெரீப் அவர்கள் வந்தி ருந்தார்கள். கும்பகோணத் துக்கப்பால் காவேரி நதியின் மத்தியில் பெரிய விஸ்தார மான ஒரு திட்டுப் பூமியை வாங்கி அதிலே ஆட்டுப் பண்ணையும், விவசாயப் பண்ணையும் நடத்தி வருவ தாகவும், அதை நான் காண வேண்டும் என்றும் என்னை அழைத்தார். அவரும் நானும் திருச்சூரிலிருந்து ரயிலேறிப் புறப்பட்டோம்.

ஈராட்டிலே...

ஈரோட்டிலே ரயில் மாறவேண்டும். திருச்சி செல் லும் வண்டியில் இரண்டாம் வகுப்பில் நுழைந்தோம். கீழ்த்தட்டு ஒன்றில் ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டி ருந்தது. அருகில் ஒரு சிறிய பையன் நின்றுகொண்டி ருந்தான். அவனை விசா ரித்தபோது நாயக்கருக்காக அவன் காத்திருப்பது தெரிய வந்தது. பிளாட்பாரத்தில் காய்கறி அல்லாத சோற்றுக் கடை வைத்திருப்பவனைக் கூப்பிட்டு முதல் தரமான சாப்பாடு கொண்டு வரும்படி சொன்னேன். பிரியாணி, சாப்ஸ், ஆம்லெட், குருமா என்று அவன் தன் கடையில் உள்ளதையெல்லாம் தட்டுகளில் கொணர்ந்தான். அத்தட்டுகளை எல்லாம் ஜமுக்காளத்தின் மீது வைக்கச் சொல்லி விட்டு, நாங்கள் இருவரும் பிளாட் பாரத்தில் நாயக்கரின் வருகைக்காகக் காத்திருந்தோம்.

இதெல்லாம் என்ன?

வண்டியினுள் நுழைந்த நாயக்கர் இதெல்லாம் என்னடாவென்று அருகில் இருந்த பையனைக் கேட்டார். நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் செலுத்தி, இவையெல்லாம் தங்களுக்காக வரவழைத்தேன் என்றேன்.

அய்யோ, உன் உடல்நிலை முன் போல் இல்லை. பத்திய உணவு சாப்பிட்டு வருகிறேன். இதையெல்லாம் எதற்காகக் கொண்டு வந்தீர்கள்? என்று சங்கடத் துடன் கேட்டார்.

என்ன செய்வது? நீங்கள் பிரியமாகச் சாப்பிடுவீர்கள் என்றெண்ணி ஆர்டர் கொடுத்து விட்டேன். ஓட்டல்காரனுக்குப் பணமும் கொடுத்தாகி விட்டது என்று இழுத்தேன்.



சரி சாப்பிட்டுத் தொலைக்கிறேன் என்று தட்டுகளை யெல்லாம் ஒருவாறு காலி செய்துவிட்டார். நானும் நண்பர் ஷெரீப் அவர்களும் வெளியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது, பின்னல் ஜடையுடன் ஒரு பெண் உள்ளே நுழைந் தாள். நான் ஒரு தப்பு செய்துவிட்டேன் என்றார் பெரியார் அப்பெண்ணிடம்.

என்ன அது?

பிரியாணி சாப்பிட்டுவிட்டேன்.

அய்யோ, ஏன் சாப்பிட்டீர்கள்?



எனது மிகப் பழைய நண்பரொருவர் பிரியத்தோடு வற்புறுத்தினார். . . தட்டமுடியவில்லை.

அவருக்கு என்ன தெரியும்?

உங்கள் நண்பருக்கு உங்கள் உடல் நிலை எப்படித் தெரியும்? நீங்கள் மறுத்திருக்க வேண்டாமா?

மேற்கண்டவாறு அப்பெண்ணும் பெரியாரும் பேசிக் கொண்டிருக்கையில், ஸ்பென்சர் சிப்பந்தி யொருவன் எங் களைக் கடந்து சென்றான். ஓடிப்போய் ஒரு சோடா கொண்டுவா என்று அவனிடம் நான் கூற, அவனும் வெகு விரையில் சோடாவும் டம்ளருமாக ஓடி வந்தான். சோடாவைத் திறந்து டம்ளரில் ஊற்றி வண்டிக்குள் இருந்த நாயக்கரிடம் கொடுக்கச் சொன்னேன்.

யாருக்கு? என்று பட்லரை விசாரித்து டம்ளரைக் கையில் வாங்கிக் கொண்டு வண்டியை விட்டுக் கீழே இறங்கி எனது பக்கத்தில் வந்து நின்றார் நாயக்கர். அப்பெண்ணும் அருகில் வந்து நின்றாள்.

பெண்ணு யாரு?

இப்பெண் யாருங்க, புதிதாய் இருக்கிறது? அவள் உங்களைப் போடும் போடு எனக்கே பயமாயிருக்கிறது! என்றேன். பெரியார் வேலூரில் ஒரு நண்பரின் மகள். ஸ்கூல் பைனல் வரை வாசித்திருக்கிறது. நமது இயக்கத்தில் அதிக பற்றுதல். எனது காரியதரிசி போல என்னுடன் இருந்து வருகிறது என்றார்.

வண்டி புறப்படும் சமயமாயிற்று. பெரியார் உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டார். நானும், நண்பர் ஷெரீபும் அதே பெட்டியில் ஏறிப் படுத்துக் கொண்டோம். அதிகாலைக்கு முன்னரே ரயில் திருச்சி ஜங்ஷனை அடைந்தது. நாங்கள் மூவரும் கீழே இறங்கு முன்னர், அப்பெண் எங்கள் வண்டி யின் முன்னே வந்து நின்றாள்!

என்ன மணி! நல்ல இடம் கிடைத் ததா? நன்றாகத் தூங்கினாயா?

ஓ! முதல் தரமான இடம். சர்வென்ட்ஸ் கம்பார்ட்மெண்ட் (முதல், இரண்டு வகுப்பு பிரயாணிகளின் வேலைக்காரர்களுக்கென்று அமைக்கப் பட்டிருக்கும் தனிப்பெட்டி) காலியாக இருந்தது. நன்றாகத் தூங்கினேன்.

அதுதான் பொய். இந்தப் பெண் தூங்கவே இல்லை. ஒவ்வொரு ஸ்டேஷ னிலும் வண்டி நின்றதும், ஓடிவந்து உங்களை எட்டிப் பார்த்துவிட்டுப் போனது என்று ஒரு போடு போட்டார் நண்பர் ஷெரீப். இப்படியும் பூலோகத்தில் ஒரு பெண் இருப்பாளா என்று நான் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். அந்தப் பெண் பிற்காலத்தில் மணியம்மையாவார்.

(கோவை அ.அய்யாமுத்து எழுதிய நான் கண்ட பெரியார் என்ற நூலிலிருந்து).

எந்த அய்யாமுத்து அவர்களை மேற்கோள் காட்டி தந்தை பெரியார் அவர்களைச் சிறுமைப்படுத்த இந்தப் பார்ப்பனக் கூட்டம் எண்ணியதோ, அதே அய்யாமுத்து அவர்களைக் கொண்டே அதனை முறியடிக்கவும் நியாயமாக நம்மால் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!.

No comments:

Friday, September 9, 2011

எல்.கே. அத்வானி மீண்டும் ரத யாத்திரையா?

ஊழலை ஒழிக்க இன்னொரு ரத யாத்திரையைத் தொடங்கப் போவதாக எல்.கே. அத்வானி மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததில், முடியுமானால் என்னையும் கைது செய்யுங்கள் என்று சவாலும் விட்டுள்ளார். இந்த வழக்கில் இரு பி.ஜே.பி.யினரைக் கைது செய்வதில் இவருக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? பி.ஜே.பி.யினர் தவறு செய்தால் கைது செய்யக் கூடாதா?

ராமன் கோவில் கட்டுவதற்காக அத்வானி ரத யாத்திரை சென்றபோது நாட்டின் பல பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன; உயிர்ப்பலிகளும் ஏற்பட்டன!

குடம் நிறைய ரத்தத்தை நிரப்பி அத்வானிக்கு வரவேற்பு கொடுத்த இந்துத்துவா வெறியர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு கலவரத்தை விதைக்க இந்துத்துவா வாதிகள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

ஊழல் என்று எடுத்துக்கொண்டால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைவிட எந்த விதத்திலும் பா.ஜ.க.வினர் குறைந்தவர்கள் அல்லர்.

இன்னொருவர் மனைவியை தன் மனைவி என்று சொல்லி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த ஒழுக்கவாதிகள் பி.ஜே.பி.யில் தான் உண்டு.

முதலாளிமார்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்காகக் கேள்வி கேட்பவர்களும் பி.ஜே.பி.யில் தான் அதிகம் உண்டு. இதுபோன்ற சாதனைகளை அவர்களால்தான் சாதித்துக் காட்ட முடியும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாண்சிங் முதல் அமைச்சராவதற்கு பி.ஜே.பி. செய்த தில்லுமுல்லுகள் கொஞ்ச நஞ்சமல்ல; அதே முறையை மத்தியிலும் ஆட்சியை நிலைப்படுத்திக் கொள்ள பி.ஜே.பி. தயங்காது என்று வாஜ்பேயி கூறிடவில்லையா? பி.ஜே.பி.யின் வாடகை ஒலிபெருக்கியான துக்ளக் ராமசாமியாலேயே அதனை ஆதரிக்க முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு தலையங்கம் தீட்டியதைத்தான் மறக்க முடியுமா?

சவப் பெட்டிகளை இறக்குமதி செய்வதில்கூட ஊழல் செய்ய முடியும் என்று ஊழலில் புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டியதில் பி.ஜே.பி.தான் நாட்டில் முதல் நிலையில் இருக்கிறது.

அன்றைய பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணனைப் பலி கொடுக்க முடிந்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான்.

அத்வானிகூட சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இல்லாத நிலையில் தான், ஹவாலாவில் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. மக்கள் வரிப் பணத்தில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டிய பி.ஜே.பியைச் சேர்ந்த ஆளுநர்களும் உண்டே!

கருநாடக மாநில முதல் அமைச்சராக இருந்த எடியூரப்பா மீது ஆதாரப் பூர்வமான ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், அவரை முதல் அமைச்சர் நாற்காலியிலிருந்து நகர்த்த பி.ஜே.பி. உயர்மட்டம் பட்டபாடு நல்ல நகைச்சுவை!

பி.ஜே.பி.யின் தலைமைக்கே சவால் விட்டவர் எடியூரப்பா. டில்லி தலைநகரில் உட்கார்ந்து கொண்டு என்னை விலக்கிப் பாருங்கள் பார்ப்போம்! என்று பி.ஜே.பி. தலைமைக்குச் சவால்விடவில்லையா?

கட்சியின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பி.ஜே.பி. தலைமையே அவரிடம் சரணடைந்த நிலை - வேறு எந்த அரசியல் என்ற திரைப்படத்திலும் காண முடியாத காணற்கரிய உச்சக்கட்ட காட்சியாகும்.

இந்த ஊழல்களையெல்லாம் மறைக்கத்தான் பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்க அன்னாஹசாரே என்ற ஒருவர் காந்தி குல்லா போட்டு உட்கார வைக்கப்பட்டார்.

இவர் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெறும் ஊழலை எதிர்த்துத்தான் உண்ணாவிரதம் இருப்பார்.

கருநாடக மாநிலத்திலோ, குஜராத்திலோ நடக்கும் லஞ்ச ஊழல், சட்டவிரோத செயல்பாடுகள்பற்றி மூச்சவிட மாட்டார். முடிந்தால் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு நற்சான்று பட்டம் வழங்குவார் (எதிர்ப்பு வலுத்தவுடன் கொஞ்சம் ஜகாவாங்கி விட்டார் - அவ்வளவுதான்)

2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்கூட பிரமோத் மகாஜன், அருண்ஷோரிகள் காலத்தில் தவறு ஏதும் நடக்கவேயில்லை என்று பசப்பு வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் சிபிஅய் அந்தக் கால கட்டத்தில் நடைபெற்ற கோளாறுகள் பற்றியும் விசாரணை நடத்த இருக்கிறது. அப்பொழுது தெரியும் பி.ஜே.பி.யின் இன்னொரு பக்கம்.

நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கிவிட்டால் அவர்கள் வீரர்கள், உத்தமர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்ற தப்பான அபிப்பிராயத்தில் மிதக்கிறது பி.ஜே.பி. ஆனால் மக்கள் வேறுவிதமாகத் தான் நினைப்பார்கள். தங்கள் வரிப்பணம் இத்தகைய முடக்குவாதத்தின் மூலம் கரியாக்கப்படுகிறதே என்கிற சினம் அவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க பாடம் கற்பிக்கும் - இது கல்லின்மேல் எழுத்தாகும்.
http://viduthalai.in/new/e-paper/17496.html 

Thursday, August 25, 2011

தமிழ் புத்தாண்டு மாற்றம் திருத்தணிக்குக் கிடைத்த தீனி!

தமிழர்களின் வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு துக்க தினம். நாகப்பட்டினத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகச் சரியாக ஈரோட்டுக் கண்ணாடி வழியாக தெளிவு படுத்தி விட்டார்,
பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு! என்று!

1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடி எடுத்த முடிவு. அதிலும் முதன்மைத் தமிழ்ப் பேரறிஞர்கள் தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர்சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோரும் அந்த அவையில சுடர்விட்ட தமிழ் ஆய்ந்த பெரும்புலிகள்! அறிவுக் கருவூலங்கள் அணி செய்த அந்த மிக உயர்ந்த மேடையிலே, அவையிலே எடுக்கப்பட்ட அரும்பெரும் முடிவுகள் மூன்று.

(1) திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.

(2) அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது

(3) திருவள்ளுவர் காலம் கி.மு.31

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் தமிழர் மாநாடு, அதன் தலைமை நாவலர் சோமசுந்தர பாரதியார்.
அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட தமிழினச் சிங்கங்கள் கூடின.

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதுதான் தாமதம் - மாநாடே களை கட்டியது!

பெரியார் இப்படிக் கூறியதுதான் தாமதம். தமிழ்த் தென்றல் திரு.வி.க., எழுந்து என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்தச் சுயமரியாதை இயக்கத்தை - நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார். இன்று அதே சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்தப் பொங்கலை ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழகமே பாராட்டுதலை செய்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அது முதற்கொண்டே பொங்கல் தமிழ்ப் புத்தாண்டினை ஆதரித்துக் கருத்துகள் எழுதப்பட ஆரம்பித்துவிட்டன.
என்றாலும் கருத்துருவில்தான் நின்றது. அரசு ஆணையாக, சட்டமாக அரும்பிட வில்லை.

இந்தத் தொடர்ச்சியின் தொடு புள்ளியாகத்தான் அய்ந்தாம் முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற மானமிகு கலைஞர் அவர்கள் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டிற்கான - தமிழர் பண்பாட்டுத் திசையில் பெருமைக்குரிய மணிமகுடமான சட்டத்தினை நிறைவேற்றினார். (29.1.2008)

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகப் பந்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் பெருக்கத்தில் திளைத்தனர்.

நேற்று . . . நேற்று . . .

ஆரியப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழர் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் வாள் வீச்சாகப் புதியதோர் சட்டம் பாய்ந்து விட்டது - ஆம், பாய்ந்தே விட்டது. தமிழ்நாட்டு சட்டம் 2011 என்ன சொல்லுகிறது?
சித்திரை முதல்நாள்தான் புத்தாண்டுப் பிறப்பாக மாற்றப்பட வேண்டும் என்று யாரோ கோரிக்கைகளை வைத்தார்களாம்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏதோ கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்களாம். யார் அந்தத் தொல்பொருள் அறிஞர்கள்? யார் அந்தப் பொது மக்கள்.

தினமணியின் முன்னாள் ஆசிரியரும், தொல்பொருள் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் என்ன சொல்லுகிறார்?
சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற்காலத்தில் அயனப் பிறப்பு நாள்கள் தலை கீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும்.

இன்றைய பஞ்சாங்கங்கள் வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதைக் காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டுவிடலாம்.

என்றாரே அய்ராவதம் மகாதேவன் என்ற தொல்லியல் அறிஞர். (தினமணி: 26.1.2008)

அதே தினமணியில்தான் சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முதல் நாள் கட்டுரை வருகிறது. மறுநாளே சட்டப் பேரவையில் அது சட்டமாகிறது - என்னே கொடுமை!

முதல் அமைச்சர் உரையில் கூட விளக்கம் இல்லையே. வழக்கமான அரசியல் வாடை கலந்த பேச்சுக் கச்சேரி தானே நடந்திருக்கிறது.

கலைஞர் தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒரு சுயவிளம்பரத்திற்காகவாம்.

அப்படிப் பார்க்கப்போனால், தந்தை பெரியாரும், மறைமலை அடிகளார், திரு.வி.க., உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்களா?
நிதானம் வேண்டாமா? கலைஞரைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு நாட்டின் மரியாதைக்குரிய பெரும் தலைவர்களையெல்லாம் இழிவு படுத்தலாமா?

பிரபவ என்று தொடங்கி அட்சயஎன்று முடிவுறும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயருண்டா? எல்லாம் பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைச் சார்ந்ததுதானே!

தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது இதனைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்வானா?

ஒரு சட்டம் போட்டு அதிகார பூர்வமாக தமிழன் தலை மீது பார்ப்பன கலாச்சாரத்தைச் சுமத்தி வைக்கும் அரசு - எப்படி அண்ணா அரசாகும்? திராவிட இயக்க அரசாகும்? அந்தப் போர்வையில் நடக்கும் ஆரிய ஆட்சி - பச்சையான பார்ப்பன ஆட்சி என்றுதானே பொருள்?

புத்த மதத்தில் ஆரியம் புகுந்த அவலம். திராவிட இயக்கத்துக்கும் நேர்ந்துவிட்டது என்றுதானே வரலாறு எழுதும்? என்னே அவலம்! என்னே அவலம்!!

இதற்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ ஒப்புதல் அளித்த உறுப்பினர்கள் எந்தக் கட்சியைத் சார்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் கருப்புப்புள்ளிகளுக்குச் சொந்தக்கார்களே! தமிழர் மீதான பண்பாட்டுப் படையெடுப்பை மீட்டெடுத்தார் கலைஞர். மீண்டும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பைப் புதுப்பித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்றுதானே வரலாறு கூறும். கலைஞரை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு, தனக்குத் தானே தமிழின விரோத வலை விரித்துச் சிக்கிக் கொள்ளலாமா?

2008 தி.மு.க. சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சந்துரு வழங்கிய தீர்ப்பு என்ன?

சமஸ்கிருதத்தில் உள்ள அறுபது ஆண்டுகளின் பெயர்களைக் கூட தமிழில் மாற்ற குழு ஒன்று அமைக்கலாம் என்கிற அளவுக்கு நீதிபதி கூறியுள்ளார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவோ சமஸ்கிருதத்தில் அப்படியே இருக்க வேண்டும்; அதில் கை வைக்கக்கூடாது என்று ஒட்டாரம் செய்வது எந்த இன உணர்வின் அடிப்படையில்?

கேள்வி எழாதா? தமிழர்கள் கேட்கமாட்டார்களா?

நீதிபதியின் தீர்ப்பில் என்ன கூறப்பட்டது?

தமிழ் கால நெடுங்கணக்கில் 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று உள்ளது. இதில் 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதத்தில்தான் பெயர்கள் உள்ளன. இது எவ்வாறு ஏற்பட்டது என்பதை இதுவரை எந்த அறிஞரும் விளக்கவில்லை. எனவே, இந்த 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று தொடர்பான விவாதம் முடிவற்றதாக உள்ளது. தமிழர்கள் இப்போது வாழும் நிலப்பரப்பை பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் ஆண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் மத நம்பிக்கை சார்ந்த உத்தரவின் அடிப்படையில் அல்லது ஆட்சியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சகாப்தம் என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது.

தமிழ்நாடு இதே போல பல சகாப்தங்களைக் கண்டுள்ளது.

1. சாலிவாகன சகாப்தம்

2. ஹிஜ்ஜிரி சகாப்தம்

3. கிறிஸ்துவ சகாப்தம்

4. சகா சகாப்தம் (திருவாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியில் நடைமுறையில் இருந்தது.)

அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த பிறகு, இப்போதைய அரசு திருவள்ளுவர் சகாப்தத்தை ஆண்டுக் கணக்காக ஏற்றுக் கொண்டுள்ளது. திருவள்ளுவரின் சகாப்தத்தின்படி இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது 2039 ஆம் ஆண்டு ஆகும். தமிழர்கள் இப்போதுதான் முதல் முறையாக தங்களுக்கென ஒரு சகாப்தம் உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட காலக் கணக்கு முறையை மாற்றி, மற்றொரு காலக் கணக்கு முறையை அரசு புகுத்துவது என்பது புதிதானதல்ல. அரசியல் சாசன வரம்பிற்குட்பட்டு மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை சரியாக உணர்ந்து கொள்ளப்படாத மத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி கேட்பது ஏற்கத் தக்கதல்ல. சமஸ்கிருதத்திலுள்ள 60 ஆண்டுகளின் பெயர்களையும் தமிழ் மொழியில் மாற்றுவது குறித்து பரிசீலித்து உரிய திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு வல்லுனர்கள் குழுவை அரசு நியமிக்கலாம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருக்கும்போது தமிழ் சகாப்தத்தை நடைமுறைப்படுத்தவும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதுதான் அர்த்தமாகும்.

தமிழ் சகாப்தம் தொடர்பான அறிவிப்பை, 2008ஆம் வருடத்தில் 2ஆவது சட்டமாக அரசு கொண்டு வந்துள்ளதில் சட்ட முரண்பாடோ அல்லது அரசியல் சாசனத்திற்கு புறம்பான நிலையோ எதுவுமே இல்லை. என்றாரே நீதியரசர்!

டிராபிக் ராமசாமி என்னும் பார்ப்பனரும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை எதிர்த்துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
மாண்பமை நீதியரசர்கள் முகோபாத்தியாயா மற்றும் வேணுகோபால் ஆகியோர் பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ் நாடு சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளனரே! (13-2-2008)

(இதற்கு மாறாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இப்பொழுது. சமச்சீர் கல்வியில் செய்த அதே குளறுபடி இதிலும் இருக்கத்தான் செய்கிறது.)

யாரோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், வானியல் அறிஞர்களும் சொன்னார்களாமே! இதைக் குறித்து தமிழ்ப் பேராசிரியர் தமிழண்ணல் என்ன சொல்லுகிறார்?

சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் தை முதல் நாளாகும் என்றல்லவா கூறியுள்ளார். இதனை மறுக்க முடியுமா?

இவ்வாண்டு நூற்றாண்டு காணும் டாக்டர் மு.வ. என்ன கூறுகிறார்?

இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடையெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.

சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

- டாக்டர் மு.வரதராசனார், (ஆதாரம் 1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்). அதே நேரத்தில் பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

கேள்வி: தை மாதத்தை புத்தாண்டின் முதல் மாதமாக அறிவித்திருக்கிறாரே முதல்வர் கலைஞர். இதனால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் யாவை?

பதில்: அவருக்கு ஒரு திருப்தி. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். கலைஞர் அறிவிக்கிற புதிய புத்தாண்டு தினத்தன்று அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். அவ்வளவுதான். வேண்டுமானால் கிடைத்தது சாக்கு என்று மற்றொரு சங்கமம் நிகழ்ச்சி நடத்தலாம் (துக்ளக் 30.1.2008)

ஃ ஃ ஃ அனைவருக்கும் வணக்கம். பொங்கல் வாழ்த்துகள் (ஒரு வாசகர் - புத்தாண்டு வாழ்த்து இல்லையா? என்று கேட்டார்) அதை மூன்று மாதம் கழித்துச் சொல்கிறேன். நாளைக்குத் திடீரென தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்தால் அதற்காக எங்களுக்குத் தீபாவளி வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நீங்கள் கூறினால், அதைச் செய்வதற்கு நான் தயாராக இல்லை.

எந்தப் பண்டிகை வழக்கமாக நம்பிக்கையின்படி கொண்டாடப்பட்டு வருகிறதோ, அந்தப் பண்டிகையைத் தான் நான் ஏற்றுக் கொள்கிறேனே யொழிய, இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வரோ, ஒரு அரசோ உத்தரவிட்டு எதையும் சொல்வதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது. கலாச்சாரத்திற்கு விரோதமானது. நான் இதை ஏற்கவில்லை.

(துக்ளக் ஆண்டு விழாவில் சோ. ராமசாமி - துக்ளக் 27.1.2010)

முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த சட்டத்தின் வாசகத்திலும், முதல் அமைச்சரின் அது தொடர்பான சட்டப் பேரவைப் பேச்சிலும் துக்ளக் சோ ராமசாமி எழுதி வந்த, பேசி வந்த அந்தப் பச்சையான வாடை அப்படியே வீசுகிறதே - இதன் பின்னணி என்ன?

தி.மு.க.வுக்குப் பெரியார் ராமசாமி ராஜகுரு என்றால் அதிமுகவுக்கு ராஜகுரு சோ ராமசாமியா?
தமிழர்கள் மத்தியில் இது மெள்ள மெள்ள இது பரவாதா? 1971 மீண்டும் திரும்பும் நிலை ஏற்படாதா?

அடுத்த கேள்விக்கு வருவோம்.

கேள்வி: ஜி.ஜெயராமன், கூந்தலூர்.

தமிழர்களின் புத்தாண்டு தைமுதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல்வர்?

பதில்: எல்லாம் கிடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான்! (கல்கி 27.1.2008)

பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்கள் பிசிறு சிறிதும் இல்லாமல், சுருதி பேதம் இல்லாமல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதைப் பூணூலை முறுக்கிக் கொண்டு சிலம்பம் ஆடுவதன் நோக்கம் என்ன?

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இதன் பின்னணியையும், முன்னணியையும் புரிந்து கொள்ளாதா?

இன உணர்வுக் கண்ணோட்டத்தில் இது ஒரு முக்கியமான கால கட்டமாகிவிட்டது.

வரும் ஞாயிறன்று திருத்தணியிலே கழக மாநாடு - சிலிர்த்தெழும் பேரணியுடன்!

அதன் எழுச்சிக்குத் தீனியைக் கொடுத்து விட்டனர்! அங்கு எடுக்கப்பட வேண்டிய முடிவுகளுக்கான உந்துதலை நமது தோள்களுக்குக் கொடுத்துவிட்டனர்!

இருப்புக் கொள்ளாமல் இளைஞர் உள்ளம் துடிப்பது தெரிகிறது!

மாணவர் பட்டாளம் அலை மோதுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மகளிர் பாசறை ஒரு சுற்றுப் பயணம் சென்றுஅவர்களைத் தயார்படுத்திவிட்டது.

நேற்று வந்த செய்தி - கூடுதல் விளம்பரங்களுக்கு வேலையில்லாமல் ஆக்கி விட்டது.

வடக்கு எல்லை திருத்தணி - வரலாற்றில் புதிய எல்லையை வரைய இருக்கிறது!

வாருங்கள் தோழர்களே!

வலிமையைக் காட்டுவோம்!



தை முதல்நாள் - கழகத்தின் முயற்சியும் கலைஞரின் செயல்பாடும்

சென்னை கலைவாணர் அரங்கில் 29-4-1990 அன்று நடந்த புரட்சிக் கவிஞர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முதல்வர் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு என்று சித்திரை முதல் நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்படும் அறுபது ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ்ச் சொல்லே அல்ல! நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த குழந்தைகள்தான் பிரபவ என்று தொடங்கி, அட்சய என்று முடியும் 60 குழந்தைகள் என்று கூறுவது தமிழர் பண்பாட்டிற்கும், பகுத்தறிவுக்கும் பொருத்தமற்ற அருவருப்பான கதையாகும். உலக மத்தியில் தமிழர்களைத் தலை குனிய வைக்கும் செய்தியாகும். தமிழுணர்வும், இனவுணர்வும் படைத்த கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் இக்கால கட்டத்திலேயே இந்த ஆபாசத்துக்கு விடை கொடுக்கப்பட்டு, தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமாய் புரட்சிக் கவிஞரின் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்தப் பொருத்தமான நாளில் கேட்டுக் கொள்கிறோம்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கலைஞர் அவர்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு மானமிகு கி.வீரமணி அவர்கள்முதல்வர் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்து அவ்விழாவில் முதல்வர் கலைஞர் பேசும்போது கூறியதாவது:

தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் துவங்கவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எனது அருமை இளவல் வீரமணி இங்கே குறிப்பிட்டார்.

தளபதி வீரமணியின் சிந்தனையையும் சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கலைஞர் குறிப்பிட்டார்.

(விடுதலை 30-4-1990)

Wednesday, August 10, 2011

தினமலராகிய கருவாட்டுப் பூனை-போகுமா பூணூல் புத்தி

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இக்கல்வியாண்டில், பள்ளிகள் திறப்பதை ஒரு மாதம் தள்ளி வைத்ததோடு, அப்போ தும் சமச்சீர் கல்வித் திட்டம் ஏற்க இயலாது என, பதவியேற்ற அன்றே அவசர கோலம் அள் ளித் தெளித்த நிலை என்றபடி, ஒரே நாளில் அமைச்சரவை முடிவு, சமச்சீர் கல்வியை ரத்து செய்து சட்டத் திருத் தம், அதற்கு அதே நாளில் கவர்னரின் ஒப்புதல் பெறப் பட்டது.
டவுட் தனபாலு: கேட்டா சட்ட வல்லுனருங்கிறீங்க... இனமானத் தலைவருங் கிறீங்க... ஆனா, சமச்சீர் கல்வியை ரத்து செஞ்சு சட்டம் கொண்டு வந்தாங் களா; ஒத்தி வைச்சு சட்டம் கொண்டு வந்தாங்களான் னுகூட தெரியாம இருக் கீங்க... தீர்ப்பு வந்ததும், ஏதோ அறிக்கை விட்டா கணும்னு கிளம்பிட்டீங்க போல...! (தினமலர் 10-8-2011)

தினமலர்என்கிற வாஸ்கோடகாமா புதிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்துட்டாருங்கோ!

தி.மு.க. அரசு தயாரித்த சமச்சீர் கல்வியே கூடாது; அது அவசர கதியில் தப்பும் தவறுமாகக் தயாரிக்கப் பட்டது என்பதுதானே அ.தி.மு.க. அரசின் நிலைப் பாடு?

அதனைத்தானே திரா விடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டினார். அ.தி.மு.க. அரசின் குற்றச்சாற்றை குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட் டத்தை 10 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஓங்கிக் குட்டிவிட்டதே!

பாண்டிய மன்னன் மண் சுமந்த கூலி (சிவபிரான்) யின் முதுகில் அடித்த சாட்டையடி உலகில் உள்ள அனைத்து உயிர்களின் முதுகுகளிலும் சுளீர் என்று உறைத்தது என்று கூறும் புராணத்தை நம்பும் தினமலர் கூட்டத்தின் பூணூல் முதுகுகளிலும், உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி சுளீர் என்று வலித்திருக்கிறது போலும்! அந்த வலியின் உளறல் தான் தினமலரின் டவுட் தனபாலு எழுத்தில் நன் னாவே பஷ்டமா தெரியுது.

பரிதாபம், அவர்கள் என்ன செய்வார்கள்?

பாப்பார வீட்டுப் பெண்ணையும், சேரிவீட்டுப் பையனையும் ஒரே பாடத்தை படிக்கச் சொல்லி விட்டாரே இந்த சூனா மானா கருணாநிதி!

மறைமுகமான நமது குலக்கல்வித் திட்ட யுக் தியைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டாரே - இந்தக் கருஞ்சட்டைத் தலைவர் வீரமணி என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஏடு அக்னி சட்டியில் விழுந்த விட்டில் பூச்சியாகத் துடி யாய்த் துடிக்கிறது!

என்னதான் மூடி மறைத் தாலும் அப்பப்ப தன் குல தர்ம புத்தியை வெளிப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது தினமலர் வகையறாக்கள்.

இதனைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!

திராவிடர் கழகத் தலை வர் வீரமணி எப்படிப்பட்ட சட்ட வல்லுநர் என்பதை முதல் அமைச்சர் அம்மை யாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே! தமிழ்நாடு சட்டம் 45 (1994) 31-சி பிரிவின்கீழ் எப்படி வந்தது என்பது ஊருக் கும் உலகத்துக்கும் தெரியுமே! தினமலர் போன்ற உத்திராட்சப் பூனைகளுக்கு மட்டும் தெரியவே தெரியாது!

தம் கண்களை மூடிக் கொண்டு அய்யய்யோ பூலோகம் இருண்டுவிட் டது என்று கீச் மூச்! என்று கத்துகிறது தின மலராகிய கருவாட்டுப் பூனை.

Tuesday, August 9, 2011

எது தகுதி?கல்கியோ அவர் களின் வட்டாரத்துக்கு ஆலோசகராக இருக்கும் குருமூர்த்தி, சோ ராமசாமி போன்றவர்களாவது பதில் சொல்லுவார்களா?

கேள்வி: எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப் படும் என்று இந்திய மருத் துவக் கவுன்சில் அறிவித் துள்ளதே?

பதில்: அறிவுத்திறன் அடிப்படையில் அய்.அய்.டி; கேட் (Cat) தேர்வுகள் போல் நடத்தி, ஆரோக்கிய மருத் துவ உலகை அமைப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. சாதிய கட்சிகளின் குறுகிய லாப நோக்கத்தைக் கடந்து இது செயல்படுத்தப்பட வேண்டும். மனித உயிர்களை மலிவாகக் கருதக் கூடாது.

(கல்கி 14.8.2011 பக்கம் 82)

பார்ப்பனர்கள் வழக்க மாகப் பாடும் பல்லவியைத் தான் இப்பொழுதும் பாடுபடு கிறார்கள்.

+2 தேர்வில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்தால் தகுதி செத்துப் போய்விடும். அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தினால் தகுதி உயிர் பிழைக்கும் என்று யார் சொன்னது?

இவர்களாகவே ஒரு முடிவை எடுப்பது. அதுதான் தகுதிக்கும் திறமைக்கும் அடையாளம் என்று அவர் கள் நமது காதுகளில் பூ சுற்றப் பார்க்கிறார்கள்.

நுழைவுத் தேர்வுக்காக ஆயிரக்கணக்கில் பணம் கட்டி அங்கு அவர்கள் கொடுக்கும் கேள்வி - பதில்களை மனதில் பதிவு செய்து - நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது தான் தகுதி - திறமை யென்றால் - இந்த வசதிக் கெல்லாம் கிராமத்துப் பையன் எங்கே போவது?

உச்சநீதிமன்றத்தில் டில்லி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக் கான கட்.ஆஃப் மார்க் பிரச்சினையில் நீதிபதி ஆர். இரவிந்திரன் ஒரு வினா வைத் தொடுத்தாரே!

அம்பேத்கர் வெறும் 37 மதிப்பெண்தான் பெற்றிருந் தார். அதன் காரணமாக அவருக்குக் கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டு இருந் தால் இந்தியாவுக்கு ஓர் அரசியல் சாசனம் கிடைத் திருக்குமா என்று நாக்கைப் பிடுங்கக் கேட்டாரே மூத்த வழக்கறிஞர் பிபிராவ் (பார்ப் பனர்) தான் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினார் என்றால் கல்கியோ அவர் களின் வட்டாரத்துக்கு ஆலோசகராக இருக்கும் குருமூர்த்தி, சோ ராமசாமி போன்றவர்களாவது பதில் சொல்லுவார்களா?

இந்த ஆண்டு தமிழ் நாட்டில் மருத்துவக் கல்லூரி யில் சேர்க்கைக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரி யுமா?

திறந்த போட்டி 196.25
பிற்படுத்தப்பட்டோர் - 196.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 193.75
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 194.
தாழ்த்தப்பட்டோர் - 187
தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 177.25
மலைவாழ் மக்கள் - 169.25

இப்படி மதிப்பெண் பெற் றவர்கள்தான் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை கல்கி வகையறாக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதெல்லாம் தகுதி யில்லை - அகில இந்திய நுழைவுத் தேர்வுதான் தகுதி என்பதில் ஆரிய சூழ்ச்சி இருக்கிறது என்பது வெளிப்படையே!

மருத்துவரிடம் செல்லக் கூடிய நோயாளிகள், மருத் துவர் தங்கப் பதக்கம் பெற்றவரா என்று தெரிந்து கொண்டு செல்வதில்லை. மருத்துவர்களின் தகுதி திறமையை உண்மையில் எடை போடுபவர்கள் திரு வாளர் பொது மக்கள்தான்!

- மயிலாடன்

இறுதிப் போராட்டத்திற்கு அழைப்பு

தோழர்களே,

நாம் இதுபோது மிக்க நெருக்கடியான நிலையில் பரிதபிக்கத்தக்க விதமாய் இருக்கிறோம். நாம் இன்று நாடு முழுவதும் மிக்க உற்சாகத்தோடு நடைபெறும் தேர்தல் காரியங்களில் அடியோடு விலகி நிற்க வேண் டியவர்களாக இருக்கிறோம்.

இதைப் பல அரசியல் வாதிகள் நாம் அரசியல் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம்.

அரசியலை வெறுத்து இப்படி இருக்கவில்லை. இன்றைய நம் தகுதிக்கு, நிலைக்கு இதுதான் சாத்யமானதும் ஏற்றதுமானது மான காரியமாகும். நாம் கட்டுப்பாடற்றதும் நாட் டுணர்ச்சி, இன உணர்ச்சி அற்றதுமான ஒரு சமுதாய மாக ஆக்கப்பட்டு விட்டோம். தேர்தலுக்கு நின்றால் என்ன செய்வது? வெற்றி பெறுவோமா? தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணமிருக்கிறதா? இருக்கிறவர் கள் முன் வருகிறார்களா? அவர்கள் நம்பத்தக்கவர் களா? இவை ஒருபுறம் இருக்கட்டும்.

இன்றைய தேர்தல் ஜனநாயகமானதாக இருக்கிறதா? நாம் 100க்கு 90 பேர்களாய் இருக்கிறோம். நம்மவர்களில் 100க்கு 10 பேருக்குத் தான் ஓட்டு. அந்த 10பேர்களும் மீதி 80 பேர்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி அற்றவர் கள் என்பது மாத்திரமல்லாமல் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதுகூடத் தெரியாதவர்கள். பெரிதும் தங்கள் சுயநலத்துக்கு எதையும் செய்யத் தயாராய் இருந்து கொண்டு அரசியல் வாழ்வில் புகுந்தவர்கள் - புகுகிறவர்கள்.

இன்று நம்மவர்கள் என்பவர்களில் அரசியலில் புகுந்த மக்களில் 100க்கு 75பேர் எதிரிகளுக்குக் கூலியானவர்கள். மீதி 25 பேர்களில் 20 பேர்கள் தங்கள் நலனுக்கு ஆக மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்தக் காட்டிக் கொடுக்கும் தன்மையை படிக்கட்டாக வைத்து மேலேறி பட்டம், பதவி, பணம் தேடிக் கொண்டவர்கள். இந்த நிலையில் நாம் தேர்தலுக்கு நிற்காதது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் சரி, அதைப் புத்திசாலித்தனமான தற்கொலை என்றாவது சொல்லுவேன்.

அன்றியும், நமது சர்க்கார் நடந்து கொண்ட மாதிரியானது யோக்கியனுக்கும், உண்மையான தன்மையில் மக்கள் நலம் கோருபவருக்கும் தேர்தலில் இடமில்லாத படியாக நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்தச் சர்க்காரார் யோக்கியர்களை மதிப்பது மில்லை. அன்றியும் சர்க்காரார் நாணயம், நீதி, பொதுஜன அமைதி, சமாதானம் ஆகியவைகளைக் காப்பதில் மிக்க அலட்சியம் காட்டி நாட்டில் நாணயக் கேடும் காலித்தனமும் வளரும்படி விட்டுவிட்டார்கள்.

இன்று இந்தியா கண்டம் முழுவதும், நமது நாடு முழுவதும் பித்தலாட்டமும், காலித்தனமும் தாண்டவ மாடுகின்றன. கவர்னர்கள் கவலையற்ற சுகவாசிகளாக இருக்கிறார்கள். வைசிராய் அனுபவமற்றவரும் நிருவாகத் திறமை அற்றவருமாக இருக்கிறார். ஓலைக்குடிசைகளில் தீப்பற்றிக் கொண்டு பரவுவது போல் காலித்தனங்கள் வளர்ந்து நாடு முற்றும் பரவிக் கொண்டு இருப்பதைத் தடுக்க, பரவவொட்டாமல் செய்யப் பயனளிக்கும்படியான முயற்சி சர்க்காரால் செய்யப்படவே இல்லை. நம் எதிரிகள், காலிகள் இந்த நிலையை மிகுதியும் பயன்படுத்தி நலன்பெற்று வருகிறார்கள்.

இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ளவில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.

நாட்டில் 4 வருடங்களுக்கு முன் நடந்த நாச வேலைகளான தண்டவாளம் பெயர்த்தல், தந்தி அறுத்தல், கட்டடங்கள் கொளுத்தல், அதிகாரிகளைக் கொல்லுதல் ஆகிய காரியங்களிலும், சர்க்கார் யுத்த முயற்சிக்கு ஆகச் செய்யப்பட்ட காரியங்களை எதிர்த்து ஒரு கூட்டத்தார் தடை செய்த காரியங்களிலும் நாம் கலவாமல் இருந்ததும், அக்காரியங்களை எதிர்த்ததும் இன்று நமக்குத் தேர்தலில் நிற்க யோக்கியதைக் குறைவாகி விட்டதுடன், அம்மாதிரி கெட்ட காரியம் செய்தவர்களுடன் குலாவ வேண்டிய தாழ்ந்த நிலை சர்க்காரிடம் ஏற்பட்டுவிட்டதாலும், (ஓட்டர்களால்) அப்படிப்பட்டவர்களே விரும்பப்படு கிறார்கள். சர்க்காரின் இந்தத் தன்மையை நாம் வெறுக்கிறோம் என்பதற்கு ஆகவே முக்கியமாய்த் தேர்தலில் விலகி இருக்க வேண்டியவர்களாகிறோம்.

ஆகையால், நாம் தேர்தலில் விலகி இருப்பது குறித்து வருந்த வேண்டியதில்லை. எதிரிகள் பதவிக்கு வரட்டும், அவர்களைக் கொண்டு இந்தச் சர்க்கார் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்ளட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் நாம் இம்மாதிரி அலட்சியப் படுத்தப்படவும், புறக்கணிக்கப்படவும், ஏமாற்றப்படவும் தகுதி உடையவர்களாகவே நாம் வாழ்நாள் முழுவதும் இருப்பதா அல்லது நாம் ஒரு கட்டுப்பாடான மான வுணர்ச்சி உள்ளவர்களான, துணிவும், வீரமும், உயிரையும் கொடுத்து நம் உரிமையைப் பெறும்படியான ஒரு மனித சமுதாயமாக ஆகி நம் எதிரிகள் செய்ததை எல்லாம் நாமும் செய்யக்கூடியவர்கள் என்பதாக ஆகி நம் நாட்டை நாம் அடைந்து மனிதத் தன்மை பெறுவதா என்பதுதான் இன்றைய நமது பிரச்சனையாகும். இதை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவும் நாம் இன்று வீண் வேலையில் ஈடுபடாமல் மக்களைத் தயாராக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

தோழர்களே! முதலாவதாக நாம் ஒரு கட்டுப்பாட்டுக் குள் அடங்கியவர்களாக ஆகாமல் நம்மால் ஒரு காரியமுமாகாது. நமக்குப் புத்தி, பணம், சக்தி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சர்.ராமசாமி, சர்.சண்முகம் போன்ற டஜன் கணக்கான சர்கள், நாட்டுக்கோட்டை யார்கள், மில் முதலாளிகள், ஆயிரக்கணக்கான வேலி நிலம் கொண்ட நூற்றுக்கணக்கான மிராசுதார்கள், இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் ஆன கோடீவரர்கள் இல்லையா? மற்றும் நினைத்தால் தண்டவாளம் பெயர்க்க, கட்டடம் இடிக்க, கடையை மூட, பள்ளியை மறியல் செய்யச் சக்தி உள்ள நாசவேலை வீர ஆண்கள் இல்லையா? எதிரிகளுக்கு ஆதரவளித்து, அன்னக்காவடிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி தலைவர்களாக்கி நம்மை அடக்க கைதூக்கும் 5ஆம் படை இல்லையா? என்ன இல்லை நம்மிடம்? ஆனால் மானம், இன உணர்ச்சி, நாட்டுவுணர்ச்சி நம் சமுதாய இழிவைக் கண்டு வெட்கப்படும் தன்மை, பொது நலத்துக்கு ஆகச் சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபட வேண்டும் என்கின்ற மனிதத் தன்மை ஆகியவை இல்லை என்பது தான் நமக்கு பெருங்குறையாக இருக்கிறது.

இந்தக் குறை நமக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நமது மதம், நமது உயர்தரக் கல்வி நம் பண்டிதத் தன்மை என்பவை ஒருபுறமிருந்தாலும் நமக்குப் பயன்படாதவும் நம் எதிரிகளுக்கு கூலியாக, கையாளாக, ஒற்றர்களாக இருக்கத் துணிந்து, வாழ்க்கை நடத்தவும் துணிந்து நம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு நம்மை ஏமாற்றும் ஆட்களை நாம் சரிவர வெறுப்பதில்லை. அவர்களைச் சரிவர மக்கள் உணர்ந்து வெறுக்கும்படி நாம் எடுத்துக் காட்டுவது இல்லை, அப்படிப்பட்ட ஆளுக்கொருவர் இடம் அற்ப காரணங்களுக்கு நமது மான உணர்ச்சி உள்ள மக்களும், மாணவர்களும், சலுகை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இது தான் நம் நாட்டில் நம்மவர்களில் இத்தனை கேடானவர்கள், பயனற்றவர்கள் இருந்து கொண்டு நம் சமுதாயத்தின் பேரால் மதிப்பும், பயனும் அடையக் காரணமாகும்.

உதாரணமாகச் சென்ற மாதம் நமது நாட்டுக்கு வந்திருந்த தோழர் காந்தியாரை அவர் நம் எதிரிகளின் கைஆள் என்று யாருக்குத் தெரியாது? அவர் எதற்கு ஆக வந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்? எவ்வளவு லாபத்தோடு போனார்? என்பதெல்லாம் யாருக்குத் தெரியாத இரகசியம்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவரை அழைத்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர் இருமருங்கிலும் அர்த்தநாரி போல் ஓட்டிக்கொண்டிருந்த வர்கள் பார்ப்பனர்கள்; அவர் இறக்கப்பட்டது பார்ப்பனக் கோட்டையில்; அவர் உடலை ஒரு பார்ப்பனரிடம் சிகிச்சைக்கு விட்டுவிட்டார்; அவர் புத்தியை ஒரு பார்ப்பனரிடம் நடத்த விட்டுவிட்டார், அவர் பிரசாரம் செய்தது பார்ப்பன (இந்தி) மொழியில்; அவர் வேலை செய்தது பார்ப்பன உயர்வுக்கு ஏற்ற (இராம) பஜனை, அவர் உபதேசித்தது பார்ப்பனப் புராணம்; அவர் காட்சியளித்தது பார்ப்பன பக்த சிகாமணி (மகாத்மா)யாக; அவர் இந்தத் தமிழ்நாட்டில் நாணயமும் சக்தியும், திறமையும், தகுதியும் உடையவராக ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டியது ஒரு (ஆச்சாரிய) பார்ப்பனரை, அவரைக் கண்டு இரகசியம் பேசி அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் யாவரும் பார்ப்பனர்கள்; அவரே (காந்தியாரே) நேராக இரண்டு மூன்று தடவை தேடிப்போய்ப் பேட்டி கண்டு மரியாதை செலுத்திப் பொதுமக்களுக்கும் காந்தியார் மரியாதை பெற்ற பிரம்மாண்டமான பெரிய மனிதர் என்று கருதும் படியான பெருமை கொடுக்கப்பட்டதும் ஒரு பார்ப்பன (ஸ்ரீனிவாச சாதிரியா)ருக்கு, அவர் காரியங்களில் கலந்து கொண்டது அத்தனைபேரும் பார்ப்பனர்கள், அவருக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் வைத்தது பார்ப்பனத்திகள் என்கின்ற இவைகள் யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றேன்.

ஆனால் அவர் காலில் விழுந்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், அவர் காலைத்தொட்டு கும்பிட்டவர்கள் தமிழர்கள், பஜனையில் கலந்து கொண்டு சொரணை அற்றுச் சொக்கினவர்கள் தமிழர்கள், அவருக்கு மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றவர்கள் தமிழர்கள்; அதுவும் வெறும் தமிழர்கள் அல்ல, தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்ளும் நாட்டுக் கோட்டையார்கள், மில் முதலாளிகள், மிராசுதார்கள் ஆகிய தமிழர்கள். நகைகள் கழற்றிக் கொடுத்து விழுந்து கும்பிட்டு நல்வாக்குப் பெற்றவர்கள் இவர் (தமிழர்)களின் மனைவி மக்கள்மார்கள்.

இவ்வளவு மாத்திரமா, கண்ணில் படக்கூடிய தூரத்தில், காதுக்கு எட்டும் தூரத்தில்தான் நான் காத்துக்கிடந்தேன். என்னை ஏன் என்றுகூடச் சட்டை செய்யவில்லை, என் மீது என் எதிரி (பார்ப்பனர்)கள் சுமத்திய குற்றத்தை விசாரிக்கக் கூட என்னைச் சமாதானம் கேட்டுப் பார்க்கக் கூட கருணை காட்டாமல் ஒருதலைப் பட்சமாய் தண்டித்து விட்டாரே என்று அழுதவரும் (தமிழர் தலைவர், தமிழ்நாட்டு ராஷ்டிரபதி) தமிழரே ஆவார். காந்தியாரால் கெட்ட அர்த்தத்தில் படும்படியான (விஷமக்கும்பல் என்ற) கடுஞ்சொல் சொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இதற்காகக் குறை இரந்து நின்றவர்கள் தமிழர்கள், ஆம் நான் அப்படித்தான் சொன்னேன், இனியும் சொல்லுவேன். இஷ்டமிருந்தால் தலைவராக இரு, இல்லாவிட்டால் போ என்று உதாசீனப்படுத்தப்பட்டவன் தமிழன்.

இவ்வளவு போதாதா காந்தியார் நம் எதிரிகள் கூலி என்பதற்கும் தமிழ் மக்கள் மானமற்றும் எதிரிகளுக்கு கையாட்களாக இருப்பதில் பெருமை கொள்ளுபவர்கள் என்பதற்கும் அத்தாட்சி என்று கேட்கிறேன்.
காங்கிரசில் இருக்கும் தமிழ் மக்களுக்குக் காங்கிரசும், காந்தியார் போலவே தமிழ் மக்களின் எதிரிகளது கையா யுதம் என்பது உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழன் சட்டசபை மெம்பர் ஆவதற்கோ மந்திரி ஆவதற்கோ பார்ப்பனர் கடாட்சம் இல்லாவிட்டால் பார்ப்பனர்களது அடிமையாய் இல்லாவிட்டால் முடியாது என்பது எந்தக் காங்கிர தமிழராவது தனக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

பார்ப்பனரை விரோதித்துக் கொண்டால் தம்மால் வாழ முடியாது என்பது இந்த நாட்டில் எந்த சர் தமிழராவது, கோடீசுவரர் தமிழராவது, மில் முதலாளி தமிழராவது, மிராதார் தமிழராவது, இராஜா தமிழராவது, ஜமீன்தார் தமிழராவது அறியாததா என்று கேட்கிறேன். அல்லது இவர்களில் யாராவது காந்தியாரோ, பார்ப்பனரோ, காங்கிரசோ நம் இனத்திற்கு விரோதமானதென்றும் பார்ப்பன வாழ்வுக்கு ஏற்றதென்றும் தெரியாதவர்கள் உண்டா என்று கேட்கிறேன்.

இப்படிப்பட்ட மானமற்ற இன உணர்வற்ற இழிதன்மை யில் சுயநலம் தேடுகிற மக்கள் பார்ப்பனர்களில் யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். முசுலிம்களில் யாராவது இருக்கிறார்களா? கிறிதவர்களில் யாராவது இருக்கிறார்களா? வெள்ளையர்களில் யாராவது இருக்கிறார்களா? ஆங்கிலோ இந்தியர்களில் தானாகட்டும் யாராவது இருக்கிறார்களா?

உலகத்தில் இல்லாத இழிகுணங்கள், மானமற்ற தன்மைகள் தமிழனுக்குத் தானா, பிதுரார்ஜித சொத்தாக இருக்க வேண்டும்?

மாணவர்களே, இளைஞர்களே, இந்த இழிநிலை நீக்கப்படுவதற்கு ஆக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; இந்த உங்கள் பிதுரார்ஜித சொத்தை தூ வென்று காரித்துப்புங்கள். இப்படிப்பட்ட உங்கள் பெற் றோர்களை மனித உருவம் தாங்கிய கீழ்த்தரப்பிராணி என்று கருதுங்கள். அவர்கள் யாராய் இருந்தாலும், சர் முதல் சாஹேப் வரை, கோடீவரர் முதல் மில்முதலாளி முதல் மிராசுதார் வரை மற்றும் எப்படிப்பட்ட பட்டம், பதவி, பணம், பெருமை, நாளைக்கு முதல் மந்திரி, கவர் னர் வைசிராய் ஆகக்கூடிய தன்மை உடையவர்களாக இருந்தாலும், வெறுத்துக் கொடும்பாவி கட்டி இழுங்கள். அவர்கள் வயிற்றில் பிறந்த இழிவுக்காக கொடும் பாவிக்கு முன் கொள்ளிச் சட்டி தூக்கிக் கொண்டு நடவுங்கள்.

நாம் யார்? நம் உண்மை சரித்திரம் எப்படிப்பட்டது? உலகில் நம் பழைய அந்தது என்ன? எதிரிக்கு ஜே போடுவது, எதிரியைக் கண்டு நடுங்கி நரித் தந்திரம் செய்வது, எதிரியைக் கைகூப்பித் தொழுது ஈன வாழ்வு வாழுவது ஆகிய குணம் தானா நமக்கு நம் கடவுள் களும் மதமும் கலை காவியங்களும் கற்பித்தது? நம் சரித்திரத்தில் இதுதானா சொல்லி இருக்கிறது? கலை இரசிகர்களே, காவிய ரசிகர்களே, பாவம் கண்டு பரவசப்படுபவர்களே, இலக்கிய இரசிகர்களே, இராம பக்தர்களே, முருக பக்தர்களே, செந்தூர் வேலன் பக்தர் களே புராண காவியங்களுக்குப் புதுப்பொருள், கருப் பொருள் நுண்பொருள் கண்டு கலை இரசத்தில் மூழ்கி, கரை காணாமல் இருக்கும் பண்டிதர்களே இவை எல்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் இவை களால் எல்லாம் உங்களுக்கு ஏற்பட்டதுமான பிரசாத பாக்கியம் இதுதானா என்று கேட்கிறேன்.

இன மானம், தன்மானத்தினும் பெரிது, உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோக தடாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததின் பெரு நோக்கமாகும்.

ஆகவே இனி நம் வாழ்வு, மனித வாழ்வு ஆவ தற்கு மாணவர் இளைஞர்களே நீங்கள் மனம் வைத் தால்தான் உண்டு, உங்கள் எண்ணம் இதைவிடப் படிப் பிலும், பதவியிலும் பணம் தேடுவதிலும் செல்லுமே யானால் உங்கள் பெற்றோர்கள் கொண்டாடும் மதத்தில் பார்ப்பனர்கள் உங்களை வைத்து இருக்கும் இடம் மிகமிகப் பொருத்தமானது என்றே சொல்லுவேன். ஒருபுறம் நீங்கள் அந்த இடத்தை வாயில் வெறுத்துக் கொண்டு காரியத்தில் அந்த நடத்தையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால் அது நம் இழிநிலையை வலியுறுத்துவதேயாகும்.

தோழர்களே வாருங்கள் வெளியில்! உங்களுக்கு கல்யாணமாகி இருந்தால் உங்கள் மனைவியையும் அழையுங்கள், வராவிட்டால் விட்டொழியுங்கள்!! பிள்ளை குட்டிகள் இருந்தால் அவற்றை அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விடுங்கள், ஆச்சிரமம் இல்லாவிட்டால் மகமதிய அனாதை காப்பு இடத்திலேயோ, கிறிதவ அனாதை காப்பு இடத்தி லேயோ விட்டுவிட்டு வாருங்கள்.

உங்களுக்கு இனி காலம் இல்லை. நாளை இப்படிப்பட்ட காலம் வராது, நாள் ஆக ஆக நீங்களும் உங்கள் பெற்றோர்கள் போல ஆகி உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்று எதிரிக்கு கையாளான, அடிமையான பிள்ளைகளைப் பெற்று விடத்தான் நேரும்.

எதிரிகளின் அரண் இப் போது கட்டப்படுகிறது. அதை முளையிலேயே இடித்துத் தள்ளத் தயாராகுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் அணுக்குண்டையும் வெடிக் காமல் செய்துவிடும். ஆதலால் எழுங்கள் வரிந்து கட்டுங்கள் புறப்படத் தயாராகுங்கள், சங்கநாதம் ஒலிக்கப் போகிறது. என்பதாக வீர முழக்கம் செய்தார்.

(2.3.1946இல் திருச்சி உறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஆண்டுவிழாவிலும், 3.3.1946 காலை திருச்சி சோழங்கநல்லூரில் நடைபெற்ற திருச்சி ஜில்லா மாநாட்டிலும் 3.3.1946 மாலை திருச்சி புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு)

- குடிஅரசு - சொற்பொழிவு - 09.03.1946

weather counter Site Meter