Pages

Search This Blog

Thursday, November 25, 2010

ஞானசூரியன்-5

ஞானசூரியன்

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008)


வேதம் அபவ்ருஹஷேயம் (புருஷனால் செய்யப் படாதது) ஆகையால், குற்றமற்றதும் மற்றொரு பிரமாண நூலின் உதவியின்றிச் சுதந்திரமாகவும் இருப்பது என்பது வைதிகர்களுடைய கொள்கை. மேலும், எல்லா நூற்களும், ஒழுக்கங்களும் இதற்குக் கீழ்ப்படிந்தே இருக்கவேண்டும் என்பதாகக் கவுதம ஸ்மிருதியின் முதலில் வேதோ தர்மமூலம் என்ற சூத்திரத்தால் முடிவு கூறப்பட்டிருக்கிறது. வேத வாக்கியத்திற்கு முரண்படாத ஸ்மிருதி வாக்கியமும், ஸ்மிருதிக்கு முரண்படாத ஒழுக்கங்களும் பிரமாணங் களாகும்.

தத்விதாம்ச ஸ்மரணசீலே என்னும் சூத்திரத்தால் இக்கருத்தைக் கவுதமர் வெளியிட்டுள்ளார். ஆனால், இரண்டு, ஸ்மிருதிவாக்கியங்கள் ஒரு விஷயத்தைக் குறித்துக் கூறும்போது, ஒன்றுக்கொன்று முரண்பட்டால், இரண்டு பிரமாணங்களே இத்தருணத்தில் விகற்பமே கொள்ளத் தக்கது. சுருக்கமாகக் கூறுங்கால், மேற்சொன்ன ஸம்ஹிதை, பிரமாணம், உபநிஷத்துகள் இவைகளடங்கிய வேதம் தானே பிரமாணமும், தரும நூல் வேதத்தைக் கருதிய பிரமாணமும் இவைகளுக்கு முரண்படாத ஒழுக்கங் களாகும். ஆனால், வேத ஸ்மிருதிகளை ஒத்துக் கொள்ளாமல், இந்நூற்களுக்கு விரோதமான வேறொரு வசனம் யுக்திக்குப் பொருத்தமாய் இருந்தாலும் பிரமாண மென்று சொல்வது பெரிய குற்றமாகும் என்பது:

ஸ்ருதி ஸ்துவேதோவிஜ்ஞேயோ

தர்ம சஸ்த்ரம்து வைஸம்ருதி

தேஸர் வார்த்தேஷ்வமீமாம்

ஸ்யேதாப்யாம் தர்மோவிநிச்சித:

யோவமன்யேததேமூலே ஹேது

சாஸ்தராஸ் ரயாந்நர;

ஸஸாது பிர்பஹிஷ்கார்

யோ நாஸ்திகோ வேதநிந்தக - மனு

பொருள்: வேதங்களும், ஸ்மிருதிகளும் தருமத்திற்கு இருப்பிடங்களா தலால் இவைகளை யுக்தி வாயிலாக எவனாவது கண்டிக்க முயன்றால், அத்தகைய வேத நிந்தகனான நாஸ்திகனை நல்லோர்கள் ஊரைவிட்டுத் துரத்திடவேண்டும் என்றும் இதனால் அறியக் கிடக்கின்றது.

இவ்வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் சொல்லப்படுவது தான் ஹிந்து சமயம் இந்நூற்களில் சொல்லுகிறபடி ஒழுகுகின்ற மனிதன், எல்லாவகையிலும் முன்னேற்ற மடைவான் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், வேதத்திற்கு அதிகாரமில்லாத தமிழ்மக்கள் தங்களை இந்துக்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் இருந்தாலும், இவர்களுக்கு வேத ஸ்மிருதிகளில் சற்றேனும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஆயினும், பார்ப்பனர்களும், இவர்களை (பார்ப்பனல்லாதாரை) இந்துக்கள் என்று சொல்லுகிறார்களே எனின், இது தங்கள் சுயநலத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பார்ப்பனரல்லாதாரை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியிலேயே அமிழ்த்தி வைக்க வேண்டுமென்ற மோசக்கருத்தை உள்ளடக்கிக் கொண்டு மயக்குகின்ற பசப்பு வார்த்தை என்றறிந்து கொள்க.

சமய நூற்கள் இம்மைக்குரிய உயர்வுக்கும், மோட்சத் திற்கும் வழிகாட்டிகளன்றோ? ஆனால், இந்துக்களின் மதநூல்களில் மிகப் பழமையான இருக்கு வேதத்தில் மறுமையைப் பற்றிக் கூறுகிற பாகம் மிகக் குறைவே. இயற்கைப் பொருள்களை மேன்மைப்படுத்தித் தேவர் களாகக் கூறுவதும், அங்ஙனம் புகழ்ந்து கூறப்பட்ட தேவர்களிடம் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதும் இதிலடங்கியிருக்கின்றன. இத்தகைய தேவர்களுக்கு இருப்பிடம் சுவர்க்கமும், அதை ஆட்சி புரிபவன் இந்திரனு மாவான். இதை எழுதி வைத்தவர் விரும்புகிற பொருள் களைத் தேவர்களும் விரும்புகிறார்கள். இவர்கள் வெறுக்கிறவர்களைத் தேவர்களும் வெறுக்கிறார்கள். (இதனால், பார்ப்பனர்கள் தங்களையே தேவர்களாக நினைத்துள்ளார்கள் என்று எண்ண இடந்தருகிறது. பூசுரர் என்ற பெயரும் இதற்குச் சான்றாகும்.) அருந்தல், பொருந்தல் முதலியவைகளிலும், பொழுதைப் போக்கும் மற்ற விளையாட்டுகளிலும், இவர்களுக்கும் தேவர்களுக்கும் வேற்றுமை இல்லை. இறந்து போகிற புண்ணியவான்கள் உயிருடனிருக்கும்போது, இங்குத் தேவர்களுக்குக் கொடுத்த சோமம், மாமிசம் (கள்ளு, இறைச்சி) இவைகளின் உயர்வு தாழ்வுக்கேற்றவாறு அங்கும் (சுவர்க்கத்திலும்) சோமம், அமிர்தம், அழகிய பெண்கள் இவைகளை அனுபவிப் பார்கள். புண்ணியம் முடிந்தவுடன் பழையபடியே பூமியில் பிறக்கின்றார்கள். இதுவே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட இன்பநிலையின் சுருக்கம். இத்தோத்திரங்களைப் பார்க்கிற வர்களுக்கு, அக்காலத்தில் இருந்த கொடியவர்களின் எண்ணங்கள் நன்கு புலப்படும். இந்நாட்டின் பழைய குடிகளாகிய நம்மவர்களை, இவர்கள் பலவிதத்திலும் துன்புறுத்தி வந்ததும், தங்களுக்கு உதவி செய்யும்படி இந்திரனையும் ஏனைய தேவர்களையும், அழைத்திருப்பதும் ஆகிய செய்திகளே அத்தோத்திரங்களில் மலிந்து கிடக் கின்றன.

இருக்கு வேதத்திலுள்ள மந்திரங்களையே வேள்வி புரியுங் காலங்களில், ஓதவேண்டிய முறைப்படிக்குக் கோவை செய்ததே யஜுர் வேதமாகும். அன்றியும், அத்வர்யு என்கிற ஓர் இனத்தாரின் (யாகத்தில் சம்பந்தப் பட்ட புரோகிதர்களுள் ஒரு வகையினர்) உபயோகத்திற் குள்ள சில நியமங்களும் இதில் அடங்கி இருக்கின்றன. ஸாம என்ற சொல்லிற்கே பாட்டு என்று பொருள். இதில் உத்காதா என்கிற புரோகிதக் கூட்டத்தாரால் யாக காலங்களில் பாடும் பொருட்டுப் பல ரிக்கு மந்திரங்கள் தொகுக்கப்பட்டிருக் கின்றன.

இருக்கு வேதம் போலவே, பல தோத்திரங்களும் அடங்கிய 1அதர்வ ஸம்ஹிதையில் கர்ம சம்பந்தமில்லாத தனால், மற்ற மூன்று வேதங்களோடு சேராமல் தனித்து நிற்கிறது. வேதத்தின் பயன் சுவர்ககாதி சாதனங்களான யாகம் முதலியவைகளில் மனிதர்களை ஏவுவதும், கருமங்களைச் செய்யுங்கால், பொருளை நினைப்பூட்டு வதைக் கொண்டு மந்திரங்கள் பயனையுடையன வென்றும் வைதிகர்கள் எண்ணுகிறார்கள். பிரமாணக் கிரந்தங்கள் அனைத்தும் கருமங்கள் செய்யும் முறைகளைக் கூறு கின்றன. புரோகிதர்களின் சொத்தாகிய இந்நூல் கருமங் களை விளக்கிக் காட்டுவதேயாகும். இத்துடன் முடி வடையாது, அனந்தாவை வேதா (வேதங்கள் எண் ணிறந்தன) அவைகளில் இப்போது கிடைத்துள்ளவைகள் தவிர, மற்றவை கற்றலும், கற்பித்தலும் இன்றி அறியப்படாமற் போயின. இவைகளின் (பல வேதங்களின்) பொருட்களை அறிந்த ரிஷிகள், பிறருக்கும் பயன்படுமாறு அவைகளை வெளியிட்டார்கள். அவைகளே ஸ்மிருதிகள். ஆதலால், ஸ்மிருதிகள் வேதத்தின் உரை நூற்களாம். ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட எல்லா விதிகளும் வேதத்தில் இல்லை. ஆயினும், வேத சம்பந்தங்களும் பிரமாணங் களுமாகையால், அவைகளைப் பின்பற்றியே மனிதன் ஒழுக வேண்டுமென்பது வைதிகர் (ஆரியர்)களின் முடிவு.

1. இஃது பிற்காலத்தியதெனக் கருதப்படுகிறது. காரணம் வேதமத்ரயீ என்ற வசனத்தாலென்க. -(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101124/news09.html

ஞானசூரியன்-4

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008)

மந்திரத்தை மறைத்து வை என்று எந்நூற்களைப் பற்றிப் பார்ப்பனர் கூறிக் கொண்டிருந்தனரோ, அவைகளையெல்லாம் அச்சு வாகனத்தில் ஏற்றி அம்பலத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். குறைந்த விலைக்கும் விற்கின்றனர். வேண்டுவோர் பெற்றுப் படிக்கலாம். அவைகளில் சொல்லப்பட்டிருக்கிற வசனங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் உயிருக்குக் கேடில்லாமல் தெரிந்துகொள்ளலாம்; இதுவே நமது நற்காலம். இத்தருணத்தை நன்றியறிதலுடன் பயன்படுத்திக் கொள்வோமாக. இல்லாவிடில், செய்ந்நன்றி கொன்ற பாவத்திற்காளாவோம். ஆதலால், இந்துக்களின் சமய நூற்கள் எவை? அவைகளில் கூறப்படும் பொருள்கள் எவை? தலைவர்கள் யார்? இவைகளைக் குறித்து ஆராய்வோம்.
இந்துக்களின் சமய நூற்கள், சுருதம், ஸ்மிருதம் என இருவகைப் படும். சம்ஹிதைகள், பிராமணங்கள், உபநிஷத்துகள் ஆகிய இவைகளடங்கிய நான்கு வேதங்களைச் சுருத மென்பார்கள். இவ்வேதங்கள் முதல் முடிவில்லாதனவும் எவராலும் உண்டு பண்ணாதவையுமானதால் இப்பெயர் பெற்றதென்று ஒரு சரார் கூறுகின்றனர், மற்றொரு சாரார் வேதம் கடவுளால் உண்டு பண்ணப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால், வேதம் கடவுளால் உண்டுபண்ணப்பட்டது என்றால், மனித இயற்கைக் குணமாகிய மறதியினால் ஒன்றொடொன்று முரண்படக்கூறுதல் முதலிய குற்றங்கள் வேதத்தில் ஏற்படும். இத்தகைய குற்றங்கள் வேதத்தில் இருப்பதாக, வேதத்திற்குத் தலைவனுளன் என்று ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் சொல்லவில்லையாதலால், மனிதனால் உண்டு பண்ணப்பட்டதன்று. இரண்டாவது குற்றமில்லாத ஈசுவரனால் செய்யப்பட்ட வேதத்தில் குற்றமில்லை என்று சொல்லுவோமானால், ஈசுவரன் ஒருவன் உளன் என்பதை உறுதிப்படுத்துவதற்கு வேதம் தவிர, வேறு பிராமண நூலில்லாததால் 1ஒன்றையொன்று பற்றிய குற்றம் உண்டாகும். ஆதலாலும் ஈசுவரனை வேதத்திற்குத் தலைவனாக ஒப்புக்கொள்ள முடியாது. (இவைகளில் சிருஷ்டி கர்த்தாவாகிய ஈசுவரனை இவர்களின் வேதத்தில்தான் நிலைபெறச் செய்யவேண்டும் என்பது உண்மையே) வேதம் நித்தியம் என்பதை நிலைநாட்டு வதற்கு ஓர் அனுமானப் பிரமாணமும் கூறுகின்றனர். அதையும் ஈண்டு எடுத்துக்காட்டுவோம்.
அது வருமாறு:
வேதாத்யயனம் ஸ்ர்வம், குர்வத்யயன பூர்வகம்
வேதாத்யயன ஸாமான்யாதாது னாத்யயனம்யதா
வேதம் கற்றுக்கொடுப்போர் மற்றொருவனிடத்திலிருந்து கற்றுக் கொண்டவர்களாதலால், வேதம் நித்தியம். அப்படியானால், முதன் முதல் கற்பிப்பதற்கு ஆசானாயிருந்த கடவுளுக்கு வேதம் கற்றுக் கொடுத்தவர் யார்? அவரே வேதத்தை உண்டாக்கிக் கற்றுக்கொடுத்தார் என்று கூறுவோமாயின், வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விஷயங்களைக் குறித்த, முற்றறிவும் ஈசுவரனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவதால், அவையனைத்தும் படைப்புக்கால முதல் இருந்தனவென்று ஒப்புக்கொள்ள வேண்டிவரும். அது பொருந்தாது; ஆதலால், ஈசுவரனுடைய முற்றறிவுக்கு விஷயமாகிய வேதத்தைப் படைப்புக்கால முதல் நினைத்துக் கற்பித்தார் என்று ஒப்புக்கொள்வதே யுக்திக்கு ஒத்ததாம்.

1. இதை வடநூலார் அன்யோன்யாஸ்ரய தோஷமென்பர் அல்லது பூர்வாபரவிருத்தம் என்பர்.

இந்த வாதத்தின் இனிமையையும் இந்த வாதத் தலைவர் களின்அறியாமையையும் விளக்கும் பொருட்டே இவ்வளவு தூரம் சொல்ல நேர்ந்தது. இனி, ரிக் ஸம்ஹிதையும், அய்தரேயம், கவ்ஷீதகி என்ற பிரமாணங்களையும் அய்தரேயாரண்கயகம் முதலிய உபநிஷத்துகளும் இருக்கு வேதத்தைச் சேர்ந்தவை. யஜுர்வேதம் ஒன்றையே கிருஷ்ண யஜுஸ், சுக்கில யஜுஸ் என இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். இவைகள் இரண்டிலுள்ள மந்திரங்கள் பெரும்பாலும் ஒரே விதந்தான். ஆனால், அம்மந்திரங்களின் வைப்பு, சற்று முறை பிறழ்ந்து காணப்படுகிறது. நிற்க, வேதத்திற்கும் கருமை, வெண்மை முதலிய நிறங்கள் உண்டா? என்று அய்யப்படுகின்றவர்களைப் பார்த்துப் பார்ப்பனர்கள் ஒரு கதை கூறுவது வழக்கம். அது வருமாறு:
வேதத்தைப் பகுத்த வியாச முனிவரின் சிஷ்யர்களுள் ஒருவரான வைசம்பாயனரிடம் யாக்ஞவல்கியர் வேதத்தை உணர்ந்தார். கடைசியாக ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு வைசம்பாயனர் இவரிடம் மனத்தாபம் கொண்டு, தன்னிடம் கற்றறிந்த வேதங்களைத் திருப்பித் தரும்படி கேட்டார். யாக்ஞவல்கியரும் தமது தவ வலிமையால் தாம் கற்றுணர்ந்த வேதத்தைக் கக்கிவிட்டார். இவ்விதம் வாந்தி பண்ணப்பட்டவேதத்தைக் குருவின் ஆணைப்படி வைசம்பாயனருடைய மற்றைய மாணாக்கர்கள் விழுங்கி விட்டார்கள். அது சமயம் அவர்களது புத்தியானது தெளிவாக இல்லாமையால், இந்த யஜுஸ் கருமை நிறத்தை அடைந்தது. இதுதான், தைத்ரீய ஸம்ஹிதை என்னும் பெயரால் வழங்கி வருகின்றது. சதபதப் பிரமாணம், பிரகதாரண்ணிய கோபநிஷத்து ஆகிய இரண்டும் இதைச் சார்ந்தவையே. சுக்கில யஜுர் வேதத்திற்கு வாஜஸனேயீஸம்ஹிதை என்று மற்றொரு பெயரும் உண்டு. இதைச் சார்ந்ததே ஈசா வாஸ்யோபநிஷத்தாகும். ஸாமம், அதர் வணம்இவ்விரண்டிற்கும் கணக்கற்ற பிரமாணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. உபநிஷத்துகள் ஏராளமாக இருந்தாலும், ஏறக்குறைய பத்து உபநிஷத்துகளை 1வைதிகம் என்றும், மற்றவைகளை வேதத்திற்குப் புறம்பானவைகள் என்றும் சொல்லுகிறார்கள்.
உபநிஷத்துகளில் ஆன்மாவைக் குறித்த விஷயங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பகுதியும் கவுதம புத்தன்
1. வேத சம்பந்தம்
பிறந்த பிறகே ஏற்பட்டவை. அல்லா உபநிஷத்தும், கிறிஸ்து உபநிஷத்தும் இருப்பதிலிருந்தே இவைகள் பிற்காலத்தியவைகள் என்பது தெளிவாய் விளங்கும். சமஸ்கிருத இலக்கியத்துள், ஃசந்தேச காவியம் என்ற ஒரு பகுதி இடைக் காலத்தில் ஏற்பட்டிருப்பது போல், உபநிஷத்து என்கிற ஒரு பகுதியும் ஏற்பட்டிருப்பது உண்மை. உபநிஷத்தை உண்டுபண்ணியவர்கள், புத்த பகவானது உயர்ந்த கொள்கைகள் அனாதியும் வேதமுமாகுமென்று உறுதிப்படுத்துவதற்கு, இந்த இந்திர ஜாலத்தைக் காட்டி மக்களை மயக்கி இருக்கிறார்கள். இதைப்பற்றி மற்றோரிடத்தில் விரிவாகக் கூறுவோம். இனி, ஸ்மிருதம் என்ற இரண்டாவது பிரிவில் ஆறு அங்கங்கள், புராணங்கள், தரும சாஸ்திரங்கள் (மனு, யாக்ஞவல்கியர் முதலியோரால் எழுதப் பெற்றவை) முதலிய நூல்களும், ஆகமங்களும் தரிசன கிரந்த (நியாய, வைசேஷிக, சாங்கிய, யோக, வேதாந்த)ங்களும் அடங்கும். இவற்றுள் ஆறு அங்கங்களாவன: வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருமங்களைச் செய்யும் முறையை விவரித்துக் கூறுவனவும், வேத மொழியிலுள்ள சில தனிப்பட்ட சொற்களுக்குப் பொருளையுணர்த்துவனவுமாகும். மேற்கூறப்பட்ட 1தரிசன நூற்கள் ஆறும், கவுதம ஸ்மிருதி முதலிய சில தர்ம சாஸ்திரங்களும் 2ப்ராதி சாங்கியங்களும், 3சூத்திர வடிவினவாக இருக்கின்றன.
தரிசனங்களுள் சாங்கியமும், வேதாந்தமும் தவிர ஏனைய பூர்வ மீமாம்சை, நியாயம், வைசேஷிகம், யோகம் இவைகளைச் சமயக் கொள்கையுடன் பெரும்பாலர் ஏற்றுக்கொள்வதில்லை; புராணங்கள் பதினெட்டு; அன்றியும் புராணங்கள் என்ற பெயருடன் அளவற்ற நூற்களும் காணக்கிடக்கின்றன. தருமம் என்ற சொல்லுக்கு, நூன்முறைப்படி ஒவ்வொரு வருணத்தானும் கட்டாயம் செய்யத்தக்க தொழில் என்றே பொருள் கொள்ளக்கிடக்கின்றது. இதற்கு உதாரணமாகச் சோதனா,
ஃ. சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிஷம் இவை ஆறுமாம்.
1. தரிசனம் - சாஸ்திரம்
2. இதற்குச் சரியான தமிழ்ப் பெயர் விளங்கவில்லை. ஆயினும், வட மொழியிலும் வேறு பெயர் காணப்படவில்லை. இது வேத இலக்கியத்திற்கு இலக்கணமாமென்பர்.
3. சூத்திரம் - குறள்.
லட்சணோர்த்தோ தர்மம் (ஒவ்வொரு வருணத் தானையும் தத்தந் தொழிலில் ஏவுவதாகிய இலக் கணத்தையுடையதே தருமம்) என்று ஜைமினி பூர்வமீமாம்சையிற் கூறுகிறார். எனவே, அவசியம் செய்யத்தக்க தொழில் என்பதனால், யாகம் முதலியவைகளைச் செய்தே தீரவேண்டும் என்பது பெறப்பட்டது.
http://www.viduthalai.periyar.org.in/20101123/news11.html

C.A.G. Report என்றால் Caste Advantageous Group’s Report என்றுதான் அர்த்தம்!

நீதிக்கட்சியின் 95 ஆம் ஆண்டு விழாக் கூட்டத்தில் (20.11.2010) கலந்துகொண்டு முன்னாள் துணை வேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவருமான பேராசிரியர் இராமசாமி ஆற்றிய தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:
நீதிக்கட்சியின் தேவை மிகவும் உணரப்படும் காலம் இது! அதன் கொள்கைகள், கோட்பாடுகள் இப்பொழுது அவசியம் தேவைப்படுகின்றன.
டில்லியில் உயர்ஜாதிக்காரர்கள் திட்டமிட்டு நடத்திய நாடகத்தால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் பதவியிழக்க நேரிட்டதைப் பார்க்கும்போது தான், நீதிக்கட்சிக் கொள்கைகளின் அர்த்தம் நமக்குப் புரிகிறது.
இந்தியத் தணிக்கைத் துறை 150 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, 1950 இல் புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாகத் தணிக்கைத் துறை ஆண்டு தோறும் அளித்துவரும் அறிக்கைகள் ஒவ்வொன்றிலும், அந்தந்த காலத்து அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே அவரைப் பற்றியும், அவரிடம் பணியாற்றிய அமைச்சர்களைப் பற்றியும், அவர்களுடைய செயல்பாடுகளில் காணப்பட்ட குறைகளையும் தணிக்கைத் துறை எடுத்துக்காட்டி யுள்ளது. அவைகளைப் பற்றியெல்லாம் டாக்டர் ராம் மனோகர் லோகியா நாடாளுமன்றத்தில் கடுமையாகக் குற்றச்சாற்றிப் பேசினார். கிழிகிழியென்று கிழித்தார் என்றே சொல்லலாம். ஆனால், அவைகளுக்கெல்லாம் நேரு பெருமகனார் அளித்த பதில் என்ன தெரியுமா? குறைகள் சரி செய்யப்படும், தவறுகள் திருத்தப்படும் என்பதுதான்!
அன்று பதவி விலகச் சொன்னார்களா?
ஜவகர்லால் நேரு அளித்த பதில் சரியானதுதான். தணிக்கைத் துறை அறிக்கையின்மீது அரசு அந்த அளவிற்குத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இதை அன்றைக்கு எதிர்க்கட்சியிலிருந்த தலைவர்கள் டாக்டர் ராம்மனோகர் லோகியா, ஆச்சார்யா கிருபளானி, மதுலிமாயி, ஹிரேன் முகர்ஜி, பூபேசு குப்தா, பேராசிரியர் ரங்கா, பிலுமோடி, நாத்பாய் ஆகிய இவர்ளெல்லாம் என்ன சாதாரணமானவர்களா? மிகப்பெரிய நாடாளுமன்ற வாதிகள். மிகச் சிறந்த பேச்சாளர்கள். அவர்களெல்லாம் தணிக்கைத் துறையின் அறிக்கையைக் காரணம் காட்டி யாரையும் பதவி விலகச் சொல்லவுமில்லை; நாடாளு மன்றத்தை முடக்கவுமில்லை.
ஆனால், இன்று தணிக்கைத் துறையின் அறிக் கையைக் காரணம் காட்டி ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரனை பதவியிலிருந்து நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் செய்த முயற்சியைப் பார்க்கும்போதுதான் சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி என்ற பாட்டின் அர்த்தம் புரிகிறது. இதைக் காணும்போது தான் C.A.G. report என்றால் Comptroller Auditor General report என்று அர்த்தம் அல்ல; உண்மையில் ஊ.ஹ.ழு. C.A.G. report என்றால் Caste Advantageous Group’s report என்றுதான் அர்த்தம்! என்று கூறத் தோன்றுகிறது. எனவே, உயர் ஜாதிக்காரர்களால், உயர் ஜாதிக்காரர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அளிக்கப்பட்ட ஓர் அறிக்கைதான் இந்தத் தணிக்கைத் துறை அறிக்கை.
இந்தச் சூழ்நிலைகளில்தான் நீதிக்கட்சியின் தேவை நமக்குப் புரிகிறது. இன்றைக்கு நீதிக்கட்சியின் வாரிசு களாக இருக்கின்ற திராவிடர் கழகம், திராவிட முன்னேற் றக் கழகம் இவை இரண்டும் தான் பார்ப்பனரல்லாதவர் களுக்குப் பாதுகாப்புக் கேடயங்களாகும். இதை நம் மக்கள் - குறிப்பாக படித்த, நடுத்தர வகுப்பு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.

பிகார் தேர்தல் - ஒரு கண்ணோட்டம்

பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் ஆட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட அதிகளவில் அய்க்கிய ஜனதா தளத்துக்கு இடங்கள் கிடைத்துள்ளன.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல அய்க்கிய ஜனதா தளத்தோடு கூட்டுச் சேர்ந்ததால், பா.ஜ.க.வுக்கும் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன. பா.ஜ.க.வைப் புறந்தள்ளியிருந் தால், அந்த இடங்களும் அய்க்கிய ஜனதா தளத்துக்கே கிடைத்திருக்கும்.

பிகாரில் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு தங்கள் கொள்கைக்கு மக்கள் பேராதரவு அளித்துவிட்டனர் என்று பா.ஜ.க. கூத்தாட முடியாது.

நிதிஷ்குமார் ஆட்சியில் மக்கள் பெற்ற நலன் களுக்காக, வளர்ச்சித் திட்டங்களுக்காக வாக்கு அளித்துள்ளனர். அதற்கான ஆதரவு கிடைத்திருக் கிறதே தவிர - இதில் பி.ஜே.பி.,க்கு மக்கள் ஆதரவு தந்துவிட்டனர் என்று உரிமை கொண்டாடுவதற்கு இடம் இல்லை.

(கடைசிக் கட்ட தேர்தலில் நிதிஷ்குமாருக்கு எதிராகவே அத்வானி பேசினார் என்பது கவனிக் கத்தக்கது).

இன்னும் சொல்லப்போனால் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைவர்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதிஷ் அழைக்கவே யில்லை. குறிப்பாக குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி பிகார் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று கறாராகவே அடித்துக் கூறிவிட்டார்.

பிகாரில் வெள்ளம் சூழ்ந்தபோது, அதனைப் பார்வையிடுவதற்காக நரேந்திர மோடி வருகிறார் என்று சொல்லி நிதிஷ்குமாரோடு - மோடியின் படத்தையும் இணைத்துச் சுவரொட்டி ஒட்டப்பட்டது என்றவுடன், உடனடியாக அவற்றை அகற்றுமாறு முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் உத்தர விட்டார். வெள்ளப் பகுதியைப் பார்வையிட எல்.கே. அத்வானி வந்தபோதுகூட அவரை வரவேற்க முதலமைச்சர் நிதிஷ்குமார் செல்லவில்லை.

கொள்கையளவில் பா.ஜ.க.வோடு எந்த வகை யிலும் ஒத்துப் போகக்கூடியவரல்லர் நிதிஷ்குமார். பிகார் மாநில அரசியல் சூழலில் அய்க்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி இருக்கிறதே தவிர, வேறு எந்த வகையான காரணமும் கிடையாது.

நிதிஷ்குமார் சாதனைக்குக் கிடைத்த வாக்கு கள் என்கிறபோது மக்கள் சாதனைகளுக்காக வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதை கணிக்க முடிகிறது. அதன் பிரதிபலிப்பை 2011 இல் தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காணலாம் - அதற்கான அறிகுறியே பிகார் தேர்தல் என்பதில் அய்யமில்லை.

இந்தத் தேர்தலில் லாலுபிரசாத் அவர்களின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், லோக் ஜனசக்தியும், காங்கிரசும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாகக் காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது. தனித்துப் போட்டியிட்டுக் குதித்து குதிகால் எலும்பு முறிந்தது தான் கண்ட பலன். உத்தரப்பிரதேசத் தேர்தலி லிருந்தாவது புத்தி கொள்முதல் கண்டிருக்க வேண்டும். அனுபவமே தலைசிறந்த ஆசான் என்பதை 125 ஆண்டுகள் வரலாறு படைத்த காங்கிரசுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே!

வடநாட்டைப் பொறுத்தவரை லாலுபிரசாத், முலாயம்சிங், நிதிஷ்குமார், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஒரு மேசைமுன் அமர்ந்து பேசி நல்ல தோர் முடிவை எடுப்பார்களேயானால், அதன் அலைவீச்சு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்கும்.

சமூகநீதிக் கண்ணோட்டத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறு பான்மையினரும் இணைந்து கைகோத்து நிற்பார் களேயானால், அதுதான் உண்மையான பகுஜன் ஆகும்.

இதுபோன்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றுதான் கன்ஷிராம் விரும்பினார். அவர் மறைவுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் செல்வி மாயாவதி சந்தர்ப்பவாதமாக, பார்ப்பனர் களையும் இணைத்துக் கொண்டு கொட்டிக் கவிழ்த்துவிட்டார்.

அடுத்து உத்தரப்பிரதேசத்திலும் தேர்தல் நடக்கப் போகிறது. பார்ப்பனப் பிடியிலிருந்து விலகி, கன்ஷிராம் விரும்பிய உண்மையான பகுஜனை (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்) உருவாக்குவது நல்லது!

இதன்மூலம் பா.ஜ.க.வை தம் அணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேற்றவும் வசதியாகுமே!

Wednesday, November 24, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற போர்வையில் தி.மு.க. ஆட்சியை ஒழிக்க பார்ப்பன முதலாளிகளின் கூட்டு! தி.மு.க.வின் பிரச்சாரப் படை கிளம்பட்டும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற போர்வையில் பார்ப்பன - முதலாளித்துவ சக்திகள் கூட்டு சேர்ந்து தி.மு.க. ஆட்சியை ஒழித்திட முனைந்துள்ளதன் முகத்திரையைக் கிழித்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்ந்தாம் முறை தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி, தமிழ்நாட்டின் அசோகரான தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில், இந்தியாவே கண்டு வியக்கத்தக்க வகையில் நடைபெற்று பீடுநடை போடுகிறது. சொன்னதையெல்லாம் செய்து முடித்த ஆட்சி என்ற பெருமையோடு, சொல்லாததையும் செய்து - 108 கலைஞர் உயிர் காக்கும் திட்டம், குடிசைகளற்ற தமிழகம் என்ற இலக்குடன் இயங்கும் கலைஞர் வீட்டுவசதித் திட்டம் போன்றவைகளால் மற்ற கட்சிகளால் எட்ட முடியாத சரித்திர சாதனையின் சிகரத்திற்கே சென்று பெருமை கொண்டுள்ளது தி.மு.க. ஆட்சி! மத்தியில் அய்.மு. கூட்டணியில் தனது பங்கை சிறப் புடனும், சுருதி பேதமின்றியும், கூட்டணித் தலைமையுடன் சுமுக உறவு கொண்டு, முன்பு அவர்கள் தமிழ்நாட்டில் தவ றான கூட்டணியில் சிக்கி அனுபவித்த தலைவலி எதுவும் இன்றி ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெறுவது உலகறிந்த ஒன்று. இதைக்கண்டு பொறுக்காத பார்ப்பனர்கள், விபீட ணர்கள், பதவி இழந்த விரக்தியாளர்கள், நாள்தோறும் தி.மு.க. ஆட்சியின் ஒளி மேலும் தகத்தகாய ஒளியாவது கண்டு ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது. வீழ்த்த சதிவலை பின்னுகிறார்கள்.

கற்பனை அனுமானம்

இந்நிலையில், திடீரென்று அவர்களுக்கு ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை (CAG அறிக்கை) - 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை கிடைத்துவிட்டதை ஏதோ ஒரு புதையல் கிடைத்ததைப்போல எண்ணி, இதைப் பெரிதாக ஊதி ஊதி, மயிரைச் சுட்டுக் கரியாக்கக் கனவு கண்டு வருகின்றனர்! 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை - இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்றெல்லாம் கூறுகின்றனரே - என்ன நடந்துவிட்டது? அத்தொகையை யாராவது எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்களா? இப்படி.... செய்ததற்குப் பதில், இப்படி ஏலம் விட்டிருந்தால், அப்படிச் செய்திருந்தால், இந்தப்படி முறை மாறியிருந்தால் இவ்வருமானம் வந்திருக்குமே என்ற கற்பனை அனுமானத்தின் மீது கணக்குப் போட்டு, கூறப்பட்ட ஒரு தகவல் அறிக்கையே தவிர, அது ஒன்றும் ஆராய்ந்து நீதிமன்றத்தாலோ, வேறு விசாரணை அமைப்புகளாலோ நிறுவப்பட்ட உண்மை அல்ல. தீர்ப்பு அல்ல! தி.மு.க. மீது - அதன் திறமைமிகு அமைச்சர்களில் ஒருவரான ஆ.இராசாமீது சேற்றை வாரி இறைத்து, குற்றமற்ற அவரை வெளியேறச் செய்து, அதன்மூலம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை முறித்து, பார்ப்பன ஜெயலலிதாவுக்கு வரும் தேர்தலில் புனர்வாழ்வு தந்து - ஊழல் வழக்குகளிலிருந்து கரையேற்றவேண்டும் என்பது பார்ப்பன ஊடகங்களின் பேராசை பதவிக் காய்ச்சல்! (பன்றிக் காய்ச்சலைவிட கொடுமையான பதவிக் காய்ச்சலுக்கு ஆளான பலர் - விபீடணர்களும் சேர்ந்து இன்று தலை துள்ளி குதிக்கின்றனர்).

பா.ஜ.க.வின் உள்கட்சிச் சண்டை!


கலகலத்துவரும் கட்சி - உள்கட்சி சண்டையில் நாளும் உளுத்துவரும் பா.ஜ.க., எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் எதை எதையோ நாளும் செய்து வருகின்றது. நாடாளுமன்றம் மக்களின் பிரதிநிதிச் சபை - ஜன நாயகத்தின் பாசறை - அங்குதான் எந்தப் பிரச்சினையும் விவாதித்துத் தீர்வு காணுவது மக்களாட்சியின் மாண்பு. அதை கடந்த 9 நாள்களாக நடத்தவிடாமல் முடக் கிடும், சண்டித்தனம் - சந்தைக் கூச்சல் போடுவது - கலைவது என்று - வாக்களித்தோர் வெட்கப்படும் நிலையில், கண்ட உருப்படி பலன் என்ன? யாரோ அரசியல் தரகர் போன்ற ஒருவர் ஒரு கடிதம் எழுதி ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரை பிராசிகியூட் செய்ய அனுமதி கேட்டால், உடனே அடுத்த தபாலில் பிரதமர் எக்ஸ்பிரஸ் பதில் எழுதி அனுப்பி விடுவாரா? ஏன் காலதாமதம் என்று கேட்பதே சரியான கேள்வியா? நியாயமானதா? இதன்மூலம் ஒரு சில ஆதிக்க சக்திகள் பிரதமரையும், அவரது நேர்மை, நாணயம்பற்றி கறைபடுத்துவதற்கு முயற்சித்து மூக்கறுபட்டுள்ளனர். மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அட்டர்னி ஜெனரல் - வாகனாவதி இப்படி ஒரு கடிதம் பிரதமருக்கு சு.சாமி எழுதியதே தவறு என்று ஓங்கி அடித்துவிட்டார் நீதிபதிகள் முன்பு - பிறகு பிரதமர்பற்றி பிரச்சினையே இதில் அடிபட்டுவிடவில்லையா? உண்மைகள் நிச்சயம் வெளிச்சத்திற்கு மெல்ல வந்து கொண்டுள்ளன.

பார்ப்பன சக்திகள்- முதலாளிகளின் கூட்டணி!

இதற்காகவே சில ஊடகங்கள், பார்ப்பன ஆதிக்கச் சக்திகள், ஏகபோகத்தை இழந்த முதலாளிகள், கூட்டணி சேர்ந்து தங்களிடம் உள்ள சில நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்களை பிரச்சார கருவிகளாக்கி தி.மு.க. அமைச்சர் ஆ.இராசாமீது வேட்டையாடி நாளும் கடித்துக் குதறி வருகின்றன! அவரது ராஜினாமா பெற்றுவிட்ட பின்பு, நாடாளுமன் றத்திற்கு வந்து விவாதங்களில் கலந்து, தங்களிடம் உள்ள ஊழல் களஞ்சியங்களையெல்லாம் அவிழ்த்துக் கொட்டி விவாதிக்க வேண்டியதற்குப் பதிலாக, 8 நாள்களாக ஏன் விவாதம் நடத்த முன்வர பயப்படுகின்றனர்? சரக்கு இல்லை அவர்களிடம்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் இதுவரை ஏற்பட்ட பலன் என்ன?

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையில் உள்ள பொதுக்கணக்குக் குழு (PAC) விசாரணை என்பதையேகூட ஏற்க மறுத்து - இல்லாத ஊருக்குப் போகாத பாதையைக் காட்டுகின்றனர்! J.P.C. (Joint Parliamentary Commitee) விசாரணை ஏற்கெனவே நடைபெற்றதே - அதனால் ஏற்பட்ட பலன் என்ன? 1. போஃபர்ஸ் பீரங்கி வாங்கிய ஊழல் - 1987 ஆம் ஆண்டு 2. பங்குச் சந்தை ஊழல் - அர்ஷத் மேத்தா 1992 (ரூ.1000 கோடி ஊழல் - அனுமானம் அல்ல, நடந்தது) 3. பங்குச் சந்தை தரகர் கேதன் பராக் 1999 முதல் 2001 வரை 4. பூச்சி மருந்து கோக்கோகோலா ஊழல் - 2004 (ஜே.பி.சி. - விசாரணையால் எந்தத் தீர்வாவது கிடைத்ததா?) இவை எல்லாம் நடந்தவை. 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஊழலே அல்ல; அனுமான கற்பனை. இப்படி செய்திருந்தால், அப்படிக் கிடைத்திருக் குமே என்ற ஒரு புள்ளி விவரக் கணக்கு. இதனை வைத்துப் பாமரர்களை ஏமாற்ற ஒரு லட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் உலகிலேயே உண்டா என்ற முதலைக் கண் ணீர் வெள்ளம் என்று ஏமாற, மக்கள் எல்லாம் முட்டாள் களா? ஏமாளிகளா? பாமரர்கள் சரியாக இருக்கின்றனர் - படித்த தற்குறிகள்தான் குழப்பமடைந்துள்ளனர். தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான மனுவாதிகளின் மகத்தான சதித் திட்டமே இது!

பிரச்சாரப் படை திரளட்டும்!

இதனை மக்களிடம் தி.மு.க. உடனடியாகத் தெரு முனைப் பிரச்சாரம் தொடங்கி, சிற்றூர்கள், பேரூர்கள் வரை தி.மு.க. பிரச்சாரகர்களை விட்டு தீவிரமான பிரச்சாரத்தை உடனடியாக முடுக்கிவிடவேண்டும்; அதன்மூலம் அதன்மீது தூற்றப்படும் பழி - மலைபோல் வந்தாலும், பனிபோல் கரைய கால தாமதமின்றி உடனடியாக - முன்பு நீதிபதி ஜெயின் கமிஷன் தி.மு.க.மீது பழிபோட்டதை எதிர்த்து உண்மை விளக்கங்களை, கூட்டங்களை நாடு தழுவிய அளவில் நடத்தியதுபோல், தனது பிரச்சார யந்திரத்தை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என்பது நமது அன்பான, உரிமையுடன் கூடிய வேண்டுகோளாகும். இது நமது கருத்து மட்டும் அல்ல; தி.மு.க. ஆட்சியினர், நலம் விரும்பிகள், நடுநிலையாளர்களின் கருத்தும்கூட - பலர் நம்மிடம் தெரிவித்த கருத்தும்கூட!

எதிர்ப்புகள் தி.மு.க.வுக்குப் புதியனவா?

தி.மு.க. வரலாற்றில் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கண்டிருக்கிறது! தி.மு.க.வைப் பிளந்து கட்சியை ஒழிக்க நினைத்தது உள்பட எத்தனையோ சோதனைகள் வந்தன! அவற்றை படிகட்டுகளாக்கி, சாதனைகளாக்கும் ஆற்றல் ஒப்பற்ற அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுக்கு உண்டு! எனவே, கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு இதனை எடுத்துச் சொல்லவேண்டும்! நாடாளுமன்றத்தினை திட்டமிட்டே 8 நாள்கள் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்க போதிய சரக்கு இல்லை. பதிலடி தருவதற்கு ஆளுங்கூட்டணி தயாராக இருக்கையில், அங்கே வரத் தயங்குவது ஏன்? மக்களிடம் சொல்லுவோம். இதுதான் ஜனநாயகக் கடமையா? அமைச்சர் ஆ.இராசா பெயர் எந்தக் குற்றப் பத்திரிகையிலாவது இருக்கிறதா? இருந்ததா? இருந்தும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் வழியிலும், பிரதமருக் குத் தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம் என்பதற் காகவே, செய்யாத குற்றத்திற்கு ஜென்மதண்டனையை அமைச்சர் இராசா ஏற்று, தி.மு.க. தனது கூட்டணி தர்மத் தைக் காத்தது என்பது மக்களுக்கு விளக்கப்படவேண்டும். வெறும் ஊடகங்களால் ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல தி.மு.க. - ஊர்மக்கள் ஆதரவால் வந்த இயக்கம்; வளர்ந்துவரும் மக்கள் இயக்கம் என்பதைக் கோடிட்டுக் காட்டவேண்டும். தி.மு.க. பயந்துவிட்டது என்று சில உளறுவாயர்கள் கூறுவதை - ஆப்பு அடித்து - நெருக்கடியை எதிர்த்து நின்ற இயக்கம் அது! பயமா? அதன் அகராதியிலா? 1971 மீண்டும் திரும்பும்! 2011 - மனுதர்மத்திற்கு மறு பிறவி அல்ல; 1971- வெற்றி வாகையை மீண்டும் சூடும் வீர வரலாற்றின் தொடர்ச்சி என்று காட்டவேண்டும் என்று மிகுந்த அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்! சிந்திப்பார்களாக!

தலைவர்,
 கி.வீரமணி
 திராவிடர் கழகம்.

Monday, November 22, 2010

ஞானசூரியன் தொடர்-3

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.
ஒரு முகம்மதியன் தோட்டி வேலை செய்பவனா யிருந்தாலும், தான் முகம்மது மதத்தினன் என்கின்ற உரிமையால், மவுல்வி (மதபோதகன்) ஆக வேண்டு மென்றாலும் ஆகலாம். பணம் திரட்டிப் பெரிய பிரபு (சாயபு) ஆக வேண்டுமென்றாலும் ஆகலாம். துறவியாக வேண்டுமென்றாலும் ஆகலாம். தேவாலயம், பாடசாலை முதலிய இடங்களிலும் இவனைக் குறித்து யாதொரு வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இவ்விதமே புத்த சமயிகளுக்குள்ளும், கிறித்துவர்களுக்குள்ளும் எல்லோருக்கும் சமமான உரிமை இருப்பதை நன்கு உணர்தல் வேண்டும்.

இந்துக்களின் நிலைமையோ இவைகளினின்றும் எவ்வளவோ வேற்றுமை உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்து மதத்தினுடைய சாதிக்கோட்டையானது சமாதான காலங்களில் நல்லெண்ணத்துடன் பிரவேசிக்கின்ற நண்பனையும் பிரவேசிக்கவொட்டாமல் தடுக்கின்றது. முன் கூறப்பட்ட முகம்மதியர் முதலிய சமயத்தாரின் சமுதாயப் பெயர், அந்தந்தச் சமயத் தலைவனது திருநாமத்தைத் தலையில் சூடிக் கொண்டு விளங்குகின்றது. இந்துவென்னும் பொதுப்பெயரை, அதன் உண்மையை உணராமலேயே அதனை அநேகர் இன்றைக்கும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து என்றும், இந்தியர் என்றும் வழங்கிவரும் சொற்கள் நமது நாட்டிலிருந்து வழங்கிவரும் எந்த மொழியினின்றும் தோன்றினவல்ல. மற்ற வேற்று நாட்டாரால் நமக்கு அப்பெயர்கள் அளிக்கப்பெற்றன. இவற்றை நமக்குத் தந்தவர்கள பாரசீகர்கள். அவர்களின் மொழியில் இப்பதங்களுக்கு நாகரிகத்தன்மை இல்லாத வர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் திருடர்கள் என்பன முதலிய பல இழிந்த பொருள்கள் காணப்பெறலாம். இப்பெயரை நாம் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுறுகின்றோம். இதில் வியப்பிற்கு இடமில்லை. ஏனென்றால், முதலில் நமது நாட்டில் புகுந்து ஆரியர்களால் அளிக்கப்பெற்ற 1தஸ்யூ (கொள்ளைக்காரன்), தாசன் (அடிமை), சூத்திரன் (திருடன்) முதலிய இழிவான பெயர்களை இங்குள்ள பழைய குடிகளின் கால்வழிகளாகிய நாம் இன்றும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஒருவனை வஞ்சித்த

1. தஸ்யூ - தாசன், சூத்திரன் என்னும் பெயர்களை வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் பலவிடங்களிலும் பார்க்கலாம்.

நம்மை மற்றொருவன் வஞ்சிக்கும்போது துக்கப்படுவது தகுதியன்று. இம்மதத்தில் (இந்து) இருக்கிற பலதிறப்பட்ட கொள்கைகளும் பெரும்பாலும் வெளிப்படை யாகையால், ஈண்டு விவரித்துக் கூறவில்லை. ஆனாலும், இந்துக்கள் எனப்படுவோரில் சிலர் தவிர, ஏனையோருக்கு இந்து மதத்தின் உருவம் இன்னது, அதை உணர்த்தவல்ல நூற்கள் இன்னின்னவை; அந்நூற்களால் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை என்பதைப் பற்றிய அறிவு சற்றேனு மில்லை. சனாதன தர்மம் (மிகப் பழைய தர்மம்) வருணாச்சிரம தர்மம் என்பன முதலிய சில பெயர்களும் இதற்குக் கொடுத்துத் தூயதாகக் கருதுகிறார்கள். ஆயினும், பெயருக்குத் தக்க பொருளைத் தருவதாக இல்லை. நாம் விரும்புகிற பொருள் மற்றொருவனிடம் இருக்கிறவரையில் நாம் அதை வைத்திருப்பவனுக்கு அடிமையாவோம். பணக்காரனது வாசலில் காத்துநிற்கிற பிச்சைக்காரனையும், தான் காதலித்த கட்டழகியின் ஏவற்படிக்குப் பாவைபோல் கூத்தாடுகிற காதலனையும் இவ்வடிமைத் தொழில் நிலைக்கச் செய்தது. இவ்விருவராலும் விரும்பப்படுகிற செல்வத்திற்கும், அழகுக்கும் முறையே பிரபுவும் பெண்ணும் உடையவர்களா யிருப்பதேயாம்.

அவ்வாறே நமது உள்ளத்தில் இருந்துகொண்டே நம்மை அடிமை யாக்குவது இந்த ஆசைதான். இதற்குரிய பொருளை அடைந்தவுடன், அதன் கண்ணிருந்த மேலான எண்ணமும், அத்துடன் அதைக் குறித்த ஆசையும் போய்விடுகின்றன.

இதனால்தான் அஸ்வாதீனேகாம (விரும்பிய பொருள் வசப்படாத வரையில் ஆசை) என்று பெரியோர்கள் மொழிந்தார்கள். பயனற்ற பொருளைக் குறித்துச் சிலர் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு, அத்தகைய பொருள்களிடத்தும் ஒவ்வொரு வேளை விருப்பம் வைப்பதுண்டு. இது ஆராய்ச்சி செய்யாமை யினாலேயே நிகழ்வது.

எல்லா மனிதர்களுடைய மனமும் 1ஞானவிழுப்பத்திற்கு அடிமையாய் இருக்கிறது. இது சாஸ்திரங்களுக்குள் இருக்கிறதென்றும், சாஸ்திரங்கள் ஞான ரத்தினக் களஞ்சியங்கள் என்றும் பெரும்பான்மையாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் ஒன்றுக்கும் உதவாத தாயினும், ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் விரும்புகிற பொருளைச் சேமித்து வைத்திருக்கிற களஞ்சியம் இதுவே; மோட்சம் இதற்குள்

1. ஞானத்தில் பிறவித்துன்பம் அடியோடு தொலைந்து பேரின்ப சித்தப் பெருவழியை நல்குவதாக இருத்தலிலென்க.

அடங்கியிருக்கிறது என்றிவ்வாறு புகழ்ந்து கூறி மக்களை நம்பச்செய்தும், அந்தச் சுவடி பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதியதாகவும் இருந்தால், அந்தச் சுவடியும் மொழியும் எவன் வசம் இருக்கிறதோ, அவனுக்கு மனிதர்கள் அடிமையாவது திண்ணமே. பொருளாக விருந்தால் கொள்ளையடித்தோ மற்றெவ்விதமாகவோ கைப்பற்றி விடுவார்கள். கல்வியானது அதையுடைவன் விரும்பிக் கொடுக்காதவரையில் எங்ஙனம் அடைய முடியும்? உண்மையாக அந்தச் சுவடியில் பொதுமக்களுக்கு நல்ல பயனைக் கொடாததும், தீய ஒழுக்கங்களைப் பழக்குவதும், தீய வழியில் செலுத்துவதுமான கொள்கைகள் நிறைந் திருந்தாலும், எல்லோராலும் விரும்பத்தக்கது. இது ஒன்றேயென்று புகழ்ந்து கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற காலம் வரையில், அதை வைத்துக் கொண்டிருப்பவன் கழுதைக்குச் சமனாக இருந்தாலும், அவனை எல்லோரும் வணங்குவார்கள்.

இவ்வாறே தீய எண்ணங்களையுடைய பார்ப்பனர்கள், வேதம் எல்லா விருப்பங்களையும் தரவல்லது எனக் கூறிக்கொண்டு, அது யாருக்கும் பயன்படாத மொழியிலிருப்பதால், அதனைப் புகழ்ந்துகூறிக் காப்பாற்றி வருவதோடு, நம்மவர்களைக் குறித்து,

பத்யுஹ்வா ஏதத்ஸ்மசானம்

சூத்ரஸ் தஸ்மாத் சூத்ரஸமீபேநாத்யேதய்வம்

அதாஸ்ய வேதமுபஸ்வருண்வதஸ்த்ர

புஜதுப்யாம்ஸ் ரோத்ரபூரணம்

வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி விட வேண்டும்.

1சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையாதால், அவன் பக்கத்தில் வேதமோதக் கூடாது.

வேதாச்சாரணே ஜிஹ்வாச்சே தோதாரணே சரீரபேத

வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்.

1. பார்ப்பனர்கள் தங்கள் இனத்தாரைத் தவிர, மற்ற யாவரையும் சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள். மனுஸ்மிருதி முதலிய நூற்களும் அவர்களுடைய கூற்றுக்கு அனுகூலமாகவே இருக்கின்றன.

இவ்வாறு நல்லோர்கள் காதினால் கேட்கவும் பெறாத அநேகக் கொடிய விதிகளை ஏற்படுத்தி, இந்த விதிகளும் வேதத்திலுள்ளது; வேதம் கடவுளால் பிராமணர்களாகிய எங்களுக்குச் சொந்தமாகத் தரப்பெற்றது என்று வாய்ப்பறை சாற்றித் திரிவதோடு, தங்களது மோசவலையில் சிலரைச் சிக்கவைத்து அவர்கள் மூலமாகவும், சில இடங்களில் (தங்களுக்குச் சமூக பலமுள்ள இடங்களில்) தாங்களாகவும் தங்களுக்குக் கீழ்ப்படியா நம்மவர்களைப் படுத்திய பாடு இவ்வளவெனச் சொல்லத்தரமன்று. மகாமேதாவிகளாகிய சிலரும் உயிருக்காகப் பயந்தோ, மற்றெதனாலோ, நான் பிராமண தாசன் என்று சொல்லியிருப்பது போஜசம்பு முதலிய நூற்களால் காணக்கிடக்கின்றது. மகாகவியும் பெரிய வள்ளலுமான போஜராஜர் பிராமணர்களைப் புகழ்ந்து கூறியிருப்பதை இரண்டாவது அத்தியாயத்தில் விவரமாகக் கூறுகிறேன். எத்தகைய பெரியாரையும் ஏமாற்றும்படியான இந்திரஜால வித்தையைக் கற்ற பார்ப்பனர்களின் மோசக் கருத்து, எவ்வளவு தூரம் பலனைக் கொடுத்து வருகிறதென்பது எல்லோருக்கும் அனுபவமானதால், அதிகம் சொல்லத் தேவையில்லை. இக்காலத்தில் இந்து என்று வெட்கமின்றித் தங்களைக் குறித்துச் சொல்லித் திரிகின்ற பலரும் இம்மோசவலைக்குள் அகப்பட்டவர்களே.

ஆனால், மோசம் பண்ணுவதற்குக் காலம் எப்பொழுது வாய்க்குமோ? பட்டப்பகலில் பலர் சேர்ந்திருக்கும்போது களவாடுவது கடினமன்றோ? அதைப்போலவே பார்ப்பனர் களுக்கும் தங்களது ஜாலம் பலிக்கிற காலம் மலை யேறிவிட்டது.
http://www.viduthalai.periyar.org.in/20101122/news11.html

ஞானசூன்யத்தை ஒழிக்க ஞானசூரியன்



ஞானசூரியன் என்ற புத்தகம் இப்பொழுது தமிழ் நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 1928 இல் தந்தை பெரியார் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த நூல் 19 ஆம் பதிப்பாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 2008 இல் வெளிவந்தது.
இந்த நூலை எழுதியவர் ஆன்மிகவாதியான சுவாமி தயானந்த சரசுவதி என்பவர். மத விசாரணை எனும் புகழ்பெற்ற இன்னொரு நூலினையும் எழுதியுள்ளார்.
பார்ப்பனீயம் என்னும் கொடிய நச்சுப் பாம்பு எத்தகையது? அவர்களால் ஏற்றிப் போற்றப்படும் வேதம், உபநிஷத்துகள், மனுதர்மம், இராமாயணம், கீதை போன்றவை எப்படியெல்லாம் பிராமண ஆதிக்கத்தை வலுவாக நிலை நிறுத்தக் கூடியவை; அதேநேரத்தில் பெரும்பான்மை இன மக்களை சூத்திரர்கள் என்று கூறி, அவர்களை எப்படியெல்லாம் உள ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் ஒடுக்கியது என்பதை ஏனோதானோ என்ற முறையில் அல்ல; பார்ப்பனர்களின் ஆதார சுருதிகளான அவற்றிலிருந்து எடுத்துக்காட்டி நிரூபித்துள்ளார்.
அதை ஒருமுறை படித்தால் போதும் மரக்கட்டை தமிழன்கூட மானமிகு மனிதனாக எகிறிக் குதித்து எழுந்துவிடுவான்.
பொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். - மனுதர்மம்.
சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால், அதைப் பிராமணன் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாதலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனு மில்லை. - மனுதர்மம்
எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக்கின்றானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து போகும். எந்த இடம் சூத்திரர்களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து வேதியர்கள் இல்லாததாலும் இருக்கிறதோ - அந்த நாடு பஞ்சம், நோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்துபோகும்.
பிறவியினாலேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும் சூத்திரன் ஒருபோதும் அரச சபைக்கு உரியவனாகமாட்டான்.
இதுபோன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகளை மனுவிலிருந்து ஞானசூரியனில் எடுத்துக்காட்டப்பட் டுள்ளன.
இந்தக் கண்ணோட்டத்தைத் தெரிந்துகொண்டு இருப்பவர்களால் மட்டுமே, இன்றைய தினம் பார்ப்பன சக்திகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும், ஊடகங்களும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு புறப்பட்டுள்ளதன் தாத்பரியத்திற்கான அர்த்தம் புரியும்.
இதனைப் புரிந்துகொண்டவர் என்கிற முறையில்தான் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் இது நாலாந்தர மக்களுக்கான சூத்திரர்களின் அரசு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே (28.7.1971) கம்பீரமாக அறிவித்தார்.
பார்ப்பன வட்டாரம் தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதற்கு இதுதான் காரணம். மத்திய அமைச்சராக இருந்த மானமிகு ஆ. இராசா அவர்களை அந்தப் பதவியிலிருந்து விலகச் செய் வதற்குக் காரணமாக இருந்து வந்ததோடு, அடுத்த கட்டமாகவும் ஆவேசத்தில் நிர்வாணமாகக் கூத்தாடு வதற்கும் இந்தப் பார்வையே காரணமாகும்.
நேற்று (21.11.2010) ஈரோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும் சரி, பொதுக்கூட்டத்திலும் சரி, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எடுத்து விளக்கியபோது, மக்கள் மத்தியிலே பலத்த கரவொலி அடங்கிட வெகுநேரமாயிற்று.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ஞானசூரியன்பற்றி அறிமுகம் செய்து அதனை ஒவ்வொரு தமிழ் மகனும் கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று முரசொலியில் (20.11.2010) முதல் பக்கத்திலேயே எழுதியுள்ளார்.
ஈரோட்டில் ஒரு திருமண நிகழ்ச்சியிலேயே நூற்றுக் கணக்கான நூல்கள் விற்றன. மணமக்களுக்கே (தனமேநீ - ச. வீரமணி) ஞானசூரியன் நூலை திருமணப் பரிசாகத் தமிழர் தலைவர் அளித்தார்.
12,000 ரூபாய்க்கு ஞானசூரியன் நூல் ஈரோட்டில் விற்றுத் தீர்ந்தது என்பது சாதாரணமானதல்ல.
தமிழ்நாடு முழுவதும் இந்நூலினைப் பரப்புவதற்கான திட்டமும் உருவாகிவிட்டது. தமிழர் தலைவர் அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி டிசம்பர் 6 இல் அந்தத் தொகையை அளிப்பது என்றும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
ஜெயலலிதா அவர்கள் ஒருமுறை முதல்வர் கலைஞரைப் பரம்பரைப் பகைவர் என்றும், பரம்பரை யுத்தம் என்றும் குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொண்டால், நாட்டில் நடைபெறுவது வெறும் அரசியல் போராட்டமல்ல - ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பதை உணரலாம்.
2011 இல் நடக்க இருக்கும் தேர்தல் அதனை யொட்டிதான் இருக்கும். தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள் சென்னைப் பெரியார் திடலில் 20.11.2010 மாலை நடைபெற்ற நீதிக்கட்சியின் 95 ஆம் ஆண்டு விழாவில் இதுகுறித்து குறிப்பிட்டதையும் கவனத்திலே கொள்ள வேண்டும். ஞானசூன்யத்தை ஒழிக்க ஞான சூரியனைப் படியுங்கள்! படியுங்கள்!!



http://www.viduthalai.periyar.org.in/20101122/news07.html

weather counter Site Meter