Pages

Search This Blog

Thursday, March 3, 2011

13 ஆம் எண் கெட்ட சகுனமா?

மூடநம்பிக்கைகள் பலவிதம்; அதில் ஒன்று இந்த எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துவிடும்.

சிலர் தன்பெயரில்கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ மாற்றியமைப்பதுண்டு. எதிர்க் கட்சித் தலைவர் அண்ணா பெயரைக் கட்சியில் தாங்கிக் கொண்டிருப்பவர்கூட தன் பெயரில் ஓர் எழுத்தைச் (ய) சேர்த்துக் கொண்டார். அதனால் பலன் என்ன கிடைத்து விட்டது?

தான் போட்டியிட்ட தொகுதியில்கூடத் தோற்றதுண்டு. கடந்த முறை ஆட்சியையா பிடித்துவிட்டார்?

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 என்றும், வாக்கு எண்ணிக்கை மே 13 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டதாம். 13 என்பது கெட்ட நாளாயிற்றே - சகுனம் சரியில்லையே என்னாகுமோ என்று அரசியல் வாதிகள் அச்சப்படுகிறார்கள் என்று ஓர் ஏடுகூட எழுதியிருக்கிறது.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவது உண்மையானால், இந்த 13ஆம் எண்ணைப் படைத்தவனும் கெட்டவனாகத்தானே இருக்க வேண்டும்? அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், வெலவெலத்துப் போய் விடுவார்கள் - பதில் வராது.

இன்னும் சில பேருக்கு எட்டாம் எண்ணும் பிடிக்காது; பெரிய மேதை என்று பி.ஜே.பி.காரர்கள் பிதற்றுவார்களே - அந்த அடல்பிஹாரி வாஜ்பேயிகூட இதற்கு விதிவிலக்குக் கிடையாது. பிதமராக அவர் ஆனபோது அவருக்கு டில்லியில் பங்களா ஒன்றை ஒதுக்கினார்கள். அதன் எண் 8. அவ்வளவுதான் தனக்கு எட்டாம் எண் இராசி கிடையாது என்று கூறிவிட்டார்.

என்ன செய்தார்கள்? வேறு பங்களாவை ஒதுக் கினார்களா? அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை; எண்ணை 6ஹ என்று மாற்றிவிட்டார்கள் அவ்வளவுதான், பங்களா மாற்றப்படவில்லை. ஆனால் எண் மட்டும் மாற்றப்பட்டவுடன் அந்த மேதை திருப்திப் பட்டுக் கொண்டாராம்.

விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51A) அந்தச் சட்டத்தின்கீழ் சத்தியம் செய்துதான் பதவியை ஏற்றுக் கொள்கிறார்கள். பிரதமர் என்ற நிலையில் உள்ளவர்களே அதற்குத் தயாராக இல்லையே - அரசியலமைப்புச் சட்டத்துக்கு என்னதான் மரியாதையோ!

டில்லி உயர்நீதிமன்றத்தில் குரோவர் என்ற நீதிபதி இருந்தார். அவரை குற்றவாளி ஒருவன் கத்தியால் குத்தி விட்டான். உடனே அந்த நீதிபதியை மருத்துவமனையில் சேர்த்தார்கள். நீதிபதி கண் திறந்து பார்த்தார். அறை எண் 13 என்று இருந்தது.

அவ்வளவுதான் உடனே இந்த அறையிலிருந்து மாற்றுங்கள் என்று கத்தினார். நான் கத்தியால் குத்தப்பட்டது 13ஆம் தேதி. நான் அன்று விசாரித்தது 13ஆவது வழக்கு - எனக்கு இந்த எண் சரிப்பட்டு வராது - ஆகாதது என்றார்.

என்ன செய்தார்கள்? அவர் சற்றுக் கண்ணயர்ந்த போது அந்த அறை எண்ணை அகற்றிவிட்டு 12ஏ என்று போட்டு விட்டனர். கண் திறந்து பார்த்த அந்த நீதிபதிக்கும் ஆத்ம திருப்தி.

இத்தகு மூடநம்பிக்கைக்காரர்கள் ஒன்று செய்யலாமே - இந்த எட்டு, 13 போன்ற எண்களை நாள்காட்டியில் இருந்து அறவே எடுத்துவிட வேண்டும் என்று சங்கம் அமைத்துத் தீர்மானம் போடலாமே - ஏன் போராட்டம்கூட நடத்தலாமே!

13ஆம் எண்ணைக் கண்டு அலறும் மக்கள் உலகின் பல பகுதிகளிலும்கூட உண்டு.

இலண்டனில் அரசி குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத்தின் தங்கை 1930 ஆகஸ்டு 21 இல் பிறந்தார்.

ஆனால் பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாக பதிவு செய்யவில்லை. ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13ஆம் எண் வரிசையில் இடம் பெற நேர்ந்திருக்குமாம்.

இந்த முட்டாள்தனத்தைக் கேலி செய்யவும், பகுத்தறிவைத் தூண்டவும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துணிவுடைய பகுத்தறிவுவாதிகள் 13 பேர் கூடினார்கள். 1982 சனவரி 13 ஆம் நாளைத் தேர்வு செய்து ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதன் பெயரே 13ஆவது சங்கம் என்பதாகும் (Thirteenth Club).

ஓர் உணவு விடுதியில் 13ஆவது அறையில் 8.13 மணிக்கு விழா நடத்தி, 13 மணிக்கு (அதாவது பிற்பகல் ஒரு மணிக்கு) முடித்தனர். ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதிகூடி விருந்துண்டு மகிழ்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது. உறுப்பினரிடமிருந்து 13.13 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. முட்டாள் தனத்தை வேறு எப்படித்தான் தோல் உரிப்பது?

சென்னை மாநகராட்சி கதவு இலக்கம் பொறிக்கப்படும் பொழுது 13அய் விரும்புவதில்லையாம். திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பழைய வீட்டின் எண் 13 ஆகும்.

இன்னின்ன காரணங்களுக்காக எங்களுக்கு வாக்கு அளியுங்கள் என்று கூறக்கூடத் துணிவு இல்லாதவர்கள், அப்படிக் கூற தங்கள் வசம் சரக்கு இல்லாதவர்கள்தான், பகுத்தறிவற்றவர்கள்தான் இந்த 13ஆம் எண்ணைக் கட்டிக் கொண்டு அழுவார்கள்.

நாட்டு மக்களுக்கு உணவைவிட உண்மையில் முக்கிய மாகத் தேவைப்படுவது பகுத்தறிவே. அது சரியாக இருந் தால்தான் மற்றவைகளும் சரியாக இருக்கும் - சரிதானே!
http://viduthalai.in/new/page-2/4657.html

2 comments:

yasir said...

எண் 13 பற்றி அதன் மூடநம்பிக்கையை விளக்கமாக எழுதியிருந்தீர்கள். படித்த முட்டாள்களும் இவற்றைப் பின்பற்றுவது பகுத்தறிவின்மையைத்தான் காட்டுகிறது. இன்னொரு பெரியார் வேண்டுமோ?

நம்பி said...

ஏன் வாகனப் பதிவில் பெருவாரியாக இது பின்பற்ற படுகிறது...அது மட்டுமில்லாமல்....கூட்டினால் 9 வருகின்ற எண்ணை வாங்க தனிக்கட்டணம்...அனைத்து ஆர்.டி.ஓ (சாலைப் போக்கவரத்து அலுவலகம்) அலுவலகத்திலும் கேட்கப்படுகிறது....எந்த எண் வந்தாலும் பரவயில்லை எனபவர்களுக்கு கட்டணமே இல்லை.(நாங்கள் இதை தான் பின்பற்றுவது...கட்டணமெல்லாம் கொடுப்பது கிடையாது...)

(அதாறாக...8 தான் குறிப்பாக வேண்டும் என்றாலும் கட்டணம் தான்...பகுத்தறிவுடன் அணுகுவதாக நினைத்து இந்த எண்ணை கேட்க கூடாது)

...9 தவிர பிற எண்கள் அதாவது 8 தவிர என்றால் பாதிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது...

கட்டணம் முதல் 900 ரூபாய் இப்பொது 1500 ரூபாய் வாகனத்திற்கேற்றார் போல் ஏன் இதை தனியாக ஓரு கையூட்டாக கொடுத்து பெறவேண்டும்...

எந்த எண்ணாக இருந்தாலும் சரியாக ஓட்டவில்லை என்றால விபத்து தான்..நடக்கும்...உயிரிப்பும் வரும்.

எல்லா எண்களிலும் விபத்து நடந்து உள்ளது.

அப்படி எண் ராசி பார்க்கதவரையும் இங்கே பாக்க வைக்க மோசடி நடக்கும் அதவாது உங்கள் எண் எட்டாக இருந்தால் மீண்டும் இந்த வாகனத்தை விற்க நேரிடும்பொழுது யாரும் வாங்காமாட்டார்கள் இது உண்மையில்லை...வாங்குவார்கள்...

வாகனம் நல்ல நிலையில் இருக்கிறதா? என்று மட்டும் பார்ப்பார்கள்...(மீண்டும் வாங்குபர் வேண்டுமானால் வேறு எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.).

ஆக இதை அரசும் ஊக்குவிக்கிறது...வாகன விற்பனையாளரும் ஊக்குவிக்கிறார்...என்ன பண்ணுவது? இதில் பணம் வந்தாலும் மக்களுக்கு தானே போய் நேரப்போகிறது... ஆனால் இதை வைத்து இன்னும் பல பேர் அதிக பணம் பண்ணுகிறார்களே...அது தவறல்லவா...?


அரசுக்கென்று சில எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன...அது வாகன தணிக்கையின் போது வேறுபாடு அறிவதற்காக..காவல் துறையினரின் கவனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஒரே வரிசை எண்கள் போன்றவை...

..மற்றபடி இந்த எண் மோசடி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும் மோசடியாக ரொம்ப காலமாக நடைபெற்று வருகிறது.


படித்தவர்கள் தான் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். படித்தவர்கள் தான் இந்த ராசியைப்பார்ப்பவர்கள்...

..ராசி பார்த்து வாகனம் வாங்கிய மறுநாளே விபத்திலும் சிக்கி கொண்டவர்கள் ஏராளம்...


weather counter Site Meter