Pages

Search This Blog

Friday, March 11, 2011

திருநீற்று மோசடி

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-
நீறு புனைவார் வினையை
நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது
நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர்
செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில்
முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:- திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில் உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒருமருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு

கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவபுராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்

தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேசவாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவவினை தீர அதைத் தரித்துக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறதே. இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன்றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன்றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண்ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும்போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படியும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

http://viduthalai.in/new/page-7/5215.html 

No comments:


weather counter Site Meter