Pages

Search This Blog

Monday, March 7, 2011

பட்டுக்கோட்டை தீர்மானங்கள்

பட்டுக்கோட்டையில் கடந்த சனியன்று நடைபெற்ற தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக ஊடகங்கள் நடந்து கொண்டு வரும் போக்குப்பற்றி தீர்மானம் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட இந்த மின்னணு ஊடகங்களால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதுபற்றி தீர்மானம் பேசுகிறது.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டிய இந்த விஞ்ஞான சாதனங்கள் அதற்கு நேர்மாறாக மக்களிடத்திலே மூடநம்பிக்கைகளை வலிமையாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியிலே வக்கிர உணர்ச்சிகளை ஊட்டுகின்றன. இதனால் ஏற்படக் கூடிய ஆபத்து சாதாரணமானதன்று.

இளைஞர்கள் கலாச்சாரச் சீரழிவின் பக்கம் திசை திருப்பப்படுகின்றனர். எதிர்கால சமுதாயம் இதன் காரணமாகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகும் என்பதில் அய்யமில்லை.

கல்லூரி ஆசிரியைகளை மாணவர்கள் கேலி செய்வது, சாலையில் போகும் பெண்களைச் சீண்டுவது என்பது போன்றவை - இளைஞர்கள் மத்தியில் அத்தகு உணர்வுகள் பெருகுவதற்குத்தான் தூண்டுதலேயாகும்.

பெண்களை வில்லியாக உருவாக்குவது, பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் புலம்புவது, கண்ணீர் வழிவது என்பது போன்றவை பெண்களைக் கோழைகளாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் சித்திரிக்கும் கேவலமான போக்குகளாகும்.

இதில் என்ன கொடுமையென்றால் - இதுபோன்ற தொடர்களைப் பெண்களே ரசித்துப் பார்க்கும் ஒரு மனநிலைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதுதான்.

பெண்களுக்காக உரிமைக் குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் அமைப்புகள்கூட இதுபற்றியெல்லாம் சிந்திப்பவர்களாகவோ, விமர்சிப்பவர்களாகவோ இல்லை.

லண்டன் தொலைக்காட்சியின் விளம்பரத்தில் இடம் பெற்ற ருத்திராட்சம் குறித்த மூடநம்பிக்கைக் காட்சி உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. அறிவியல் ஊடகத்தில் அதற்கு எதிர்மாறான காட்சிகள் இடம் பெறக் கூடாது என்று அந்நாடு கருதுவதுதான்.

ஊடகங்களில் இந்தப் போக்குக் குறித்து திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணியினர் மக்கள் மத்தியிலே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் திட்டமிட்ட வகையில் இந்தத் திசையில் கழகம் தன் பணிகளைத் தொடங்கும்.

சின்னத் திரைகளை ஒரு ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கும் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறோம்.

பட்டுக்கோட்டை மாநாட்டில், ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணங்கள் அவசியம் என்றும், ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து கொண்டவர்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிக முக்கியமாகும்.

21ஆம் நூற்றாண்டில் ஜாதி உணர்வு இருப்பது வெட்கப்படத்தக்கதாகும். எந்த விலை கொடுத்தாவது ஜாதியை ஒழித்தாக வேண்டும். தந்தை பெரியார் அவர்களின் மிக முக்கியமான கொள்கை ஜாதி ஒழிப்பேயாகும். ஜாதியின் காரணமாகத்தான் ஏற்றத் தாழ்வுகள், பேத உணர்ச்சிகள், மனிதனை மனிதன் வெறுக்கும் கேவலங்கள், இவற்றின் காரணமாக கலவரங்கள் ஏற்பட ஏதுவாக உள்ளன. மனிதவளம் இந்த ஜாதியத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது -திசை திருப்பி விடப்படுகிறது.

இடஒதுக்கீடுகூட ஜாதி ஒழிப்பின் மிக முக்கியமான கூறுதான். இடஒதுக்கீடு காரணமாக கல்வி, வேலை வாய்ப்புகள் பெருகும்போது சிந்தனையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நமது பாடத் திட்டத்திலும்கூட, ஜாதி, தீண்டாமை ஒழிப்புத் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றாக வேண்டும். மாணவர்கள் மத்தியில் இது தொடர்பான எழுச்சியை, உணர்வை ஊட்டும் சொற்பொழிவு, கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

கல்வியில் இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது, அந்தக் கல்வி மாணவர்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனைகளை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட சமத்துவ சமதர்மச் சிந்தனைகளை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டாமா?

இளைஞரணி மாநாட்டில் ஜாதி ஒழிப்புத் தொடர்பான இத்தகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்களும் மாணவர்கள் மத்தியில் (கல்வி நிறு வனங்கள், விடுதிகள்) ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - அதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://viduthalai.in/new/page-2/4922.html

No comments:


weather counter Site Meter