Pages

Search This Blog

Wednesday, March 2, 2011

மருத்துவமனைகளைவிட மருத்துவ மனங்கள் முக்கியம்(வாழ்வியல் சிந்தனைகள்)

கோவையின் தொண்டறச் செம்மல் டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்களது மிகப் பரந்து வளர்ந்தோங்கி நிற்கும் மருத்துவ, கலை அறிவியல், கணினித் துறை, செவிலியத் துறை முதலிய பல்கலைக் கல்விக் கூடங்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சீரிய செயலாற்றல் மிக்க புத்தாயிரத்து இந்தியக் குடிமகன் என்ற விருது வழங்கி, அவர்களை ஊக்க, ஊட்டச் சத்தாக இளைய தலைமுறை யினருக்குக் காட்டி எழுச்சியூட்டக் கூடிய தனித்தன்மையான விழா எடுத்து பெரு மிதம் சேர்க்கிறார்.

இவ்வாண்டு ஆந்திராவின் மிகப் பெரிய நிருவாகியும், சேவையாளருமான வெங்கட் சங்கவள்ளி எம்.பி.ஏ. அவர் களுக்கும், எனக்கும் விருது அளித்துப் பெருமைப்படுத்தினார்.

எனக்கு இது மிகவும் சங்கடமாக அமைந்தபோதிலும், 26 ஆண்டுகளுக்கு முன் (1985 வாக்கில்) எனக்கு கோவை யில் மாரடைப்பு (Heart Attack) முதன் முதலில் நள்ளிரவில் திடீரென்று வந்த நிலையில், அவரது கே.ஜி. மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரு டைய அருமையான சேவை, கவனிப்பு கண்காணிப்பு மூலம் நான் மீண்டும் புதுவாழ்வு பெற்றேன் என்பதால் அவரது விருப்பத்தை அன்புக் கட்டளையாகவே ஏற்று மறுப்பேதுமின்றி ஒப்புக் கொண்டு சென்றேன் - இணையரோடு.

அவ்விழா எளிமை, இனிமை, விருந் தோம்பல், உற்சாகம், மாணவ சமுதாயத் தின் எடுத்துக்காட்டான கட்டுப்பாடு - இவைகளின் எடுத்துக்காட்டாக நடை பெற்ற விழாவாகும்!
கூட்டுக் குழு வெற்றி (Team Spirit) என்பது அன்னார் அருமைச்செல்வன் அசோக் பக்தவத்சலம் தலைமையில் அவரது சக கூட்டுப் பணித் தோழர்கள் உற்சாகத்துடன் தொண்டாற்றி மகிழ்ந் தனர்!

அதில் பாராட்டு விருது பெற்ற பெருந்தகையாளர் வெங்கட் சங்கவள்ளி அவர்கள் ஆந்திராவின் நிறுவனமான சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் வளர்ந்தோங்கிட மூல காரணமானவர்.

அவர் தந்த திட்டம்தான் இப்போது தமிழ்நாட்டில் நாம் கலைஞர் ஆட்சியில் மக்கள் உயிர் காக்கும் திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆந்திராவில் அறிமுகப்படுத்த காரணமானவராக கருத்துரை கூறியவர் என்று அறிமுகப் படுத்தினார்.

திரு. வெங்கட் அவர்கள் பேசும்போது ஒரு முக்கிய தகவலைக் கூறினார் - வியத்தகு செய்தி.

இந்த ஆம்புலன்ஸ் சர்வீஸ் துவக்கப் பட்டதிலிருந்து சுமார் 65,000 தாய்மார் களின் மகப்பேறு (பிரசவங்கள்) நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 40 லட்சம் பேர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டி ருப்பதாகவும் குறிப்பிட்டு, கேட்டவர்களை மிகவும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக் கினார்கள்!

அதற்கு முதலில் கிராமங்களில் உள்ள தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் கயிற்றுக் கட்டிலில் வைத்து பல மைல் தூக்கிச் சென்று, வழியிலேயே சரியான மருத்துவ வசதி கிட்டாத தினால் இறந்தவர்கள் பலர் என்பது இப்பொழுதும் மாற்றப்பட்டுள்ளது.

நமது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் - திருவாரூர் - மயிலாடு துறை சாலையில் உள்ள கங்களாஞ் சேரியிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் பக்கத்து மற்றும் சுற்று கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த போது அங்கே பெரிதும் விவசாயிகளான அன்றாடம் பணிபுரியும் இருபாலர் -பெரிதும் தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதர - சகோதரிகள் நிறைந்த பகுதி என்ற நிலையில் நான் கண்ட காட்சி மனதை மிகவும் நெருடச் செய்தது!

கயிற்றுக் கட்டிலில் வைத்து பிரசவ வலியால் துடிக்கும் ஏழை - எளிய தாய்மார்களை திருவாரூருக்கோ, நாகூருக்கோ அழைத்துச் செல்லும் (தூக்கிச் செல்லும்) காட்சியைக் கண்டு, அந்தப் பகுதியில் எப்படியாவது ஒரு மகப்பேறு மருத்துவமனை தொடங்கிடத் திட்டமிட்டு, இன்று சோழங்கநல்லூரில் (திருவாரூர்) அந்த கங்களாஞ்சேரி - நாகூர் சாலையில் நிலத்தைப் பெற்று பெரியார் மருத்துவமனை பல படுக்கை வசதிகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது; (அரசுகளின் எந்த உதவியும் இதற்குக் கிடையாது; இன்னமும் கிட்டவில்லை என்றாலும்) சிறப்பாக நடைபெறுகிறது.

மருத்துவ வசதிகள் எங்கணும் சிறப் புடன் நடைபெற மருத்துவமனைகள் மட்டும் போதாது; மருத்துவ மனங் களும் தேவை.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்த கிராமப்புற இளைஞர்கள் (இருபால்) கூட, கிராமங்களில் போய் தங்கி மருத்துவ சேவை செய்ய முன் வர மறுக்கிறார்கள் - அரசு சம்பளம் விகிதம் தந்தாலும்கூட மருத்துவர்கள் கிடைப்பதில்லை.

இதற்கொரு திட்டம் 108 ஆம்புலன்ஸ் போன்று அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும் போலும்!

என்ன செய்வது! பணமே வாழ்க்கை என்றாகிவிட்டதால் குணம் விடை பெற்று, பணம் ஆட்சி செய்து, மக்களை பிணம் ஆக்கும் கொடுமை நீடிக்கிறது!

நிலைமை மாறும் - கலைஞர் போன்ற மனிதநேயர்கள் ஆட்சியில். அதற்கும் ஒரு விடையும் - விடியலும் கிடைக்கும் என்று நம்புவோமாக!

No comments:


weather counter Site Meter