Pages

Search This Blog

Tuesday, March 8, 2011

மகளிர் நாள் சிந்தனைகள்!

மார்ச் 8 - உலகம் முழுவதும் மகளிர் உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் நியூயார்க் நகரில் 1857 மார்ச்சு 8ஆம் நாள் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமையைக் கண்டித்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1903ஆம் ஆண்டிலும் அதே மார்ச் 8ஆம் நாள் அதே  நியூயார்க் நகரில் பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் கூடுதலாக பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை தேவை என்பதை வலியுறுத்தினர்.

1910ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் கிளாரா ஜெட்சின் என்பவர் தலைமையில் கோபன்ஹேகனில் சோசலிசப் பெண்களின் இரண்டாவது பன்னாட்டு மாநாடு நடை பெற்றது. அந்த மாநாட்டில்தான் மார்ச் எட்டை உலக பெண்கள் நாளாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி அளவு பெண்களாக இருந்து வந்தனர். அண்மைக் காலமாக அதில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. அதற்குக் காரணம்  பெண்கள் என்றால் வீட்டுக்கும், நாட்டுக்கும் சுமை என்கிற கருத்தோட்டமாகும்.

ஏன் பெண்கள் அவ்வாறு சுமையாகக் கருதப்படு கிறார்கள்?  ஆண்களுக்கு உரிய அத்தனை உரிமைகளும், வாய்ப்புகளும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் எப்படி சுமையாக இருக்க முடியும்?

கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, சிவில் உரிமைகள் எல்லாம் ஆணுக்கு நிகராகப் பெண்களுக்கு இருந்திருக்குமேயானால், பெண்களால் வீட்டுக்கும், நாட்டுக்கும் பெரும் நன்மைகள் கிட்டியிருக்குமே!

அதற்கான வாய்ப்புகளைப் பெண்களுக்குக் கொடுக்காமல், ஆண்களைச் சார்ந்தேதான் எல்லா நிலைகளிலும் பெண்கள் இருந்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தால், கண்டிப்பாக ஒரு சுமையான பண்டமாகத்தான் பெண்கள் இருக்கக்கூடிய நிலை ஏற்படும்.

ஆண் - பெண் ஏற்றத் தாழ்வு என்பது சற்று மாறு பாட்டாலும் பொதுவாக உலகெங்கும் ஆண் ஆதிக்க நுகத்தடியில் பெண்கள் பூட்டப்பட்டு இருக்கின்றனர் என்பது உண்மை.

இதில் மதங்களின் பங்கு மிக அதிகமாகும். பிறப் பிலேயே பெண்கள் அடிமைத் தன்மை கொண்டவர்கள் என்று அனேகமாக எல்லா மதங்களுமே சித்திரிக்கின்றன.

பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று இந்து மதத்தின் பெருமைக்கெல்லாம் கிரீடமாகக் கூறப்படும் கீதை கூறுகிறது.

சமூகத்தில் நிலவும் இந்த அடிப்படைச் சிந்தனை ஓட்டத்தின் ஊற்றுக் கண்களை நிரந்தரமாக மூடச் செய்யாமல் பெண்ணுரிமை என்பது முயற்கொம்பே!

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள்தான் பெண்ணடிமைத் தனம் என்ற கட்டை உடைக்கக் கூடியவை!

தந்தை பெரியார் அளவுக்குப் பெண்ணுரிமைபற்றிச் சிந்தித்தவர்களோ, பேசியவர்களோ, எழுதியவர்களோ யாரும் கிடையாது.

அதற்கு அடுத்த நிலையில் களத்தில் நின்று போராடியவர்; சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்திற்குத் தனக்குப்பின்னால் தலைமையேற்க ஒரு பெண்ணை தந்தை பெரியார் உருவாக்கிச் சென்றதும் இந்த இடத்தில் எண்ணத் தகுந்ததாகும்.

அந்தத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களும் தலை சிறந்த தலைமையை வெளிப்படுத்திச் சென்றார்கள்.

வாய்ப்பே கொடுக்காமல் பெண்கள் என்றால் பலகீனமானவர்கள் என்ற ஒரு சிந்தனை ஓட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த எண்ணத்தை உடைத்துத் தரைமட்டமாக்க வேண்டும்.

தோற்றத்தில்கூட ஆண் - பெண் என்று தெரியாத நிலையும், பெயரை வைத்துக்கொண்டுகூட பாலினத்தைத் தெரிந்து கொள்ளக்கூடிய நிலை இருக்கக் கூடாது என்றும் தந்தை பெரியார் சொன்னதெல்லாம் எத்தகைய உயர் எண்ணங்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பல உரிமைகள் பெண்களுக்குக் கிடைத்திருப்பது உண்மை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும், அவர் கண்ட இயக்கமும்தான்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே பெண்களுக்குச் சொத்துரிமை என்ற சட்டம் 1989-90-களில் தமிழ்நாட்டில்  இயற்றப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை என்பது நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் கிடைத்தது.

பெண்கள் வளர்ச்சிக்காக பெண்களின் பெயர்களை முன்னிலைப்படுத்தி, பெண்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துவதும் திராவிட இயக்கமான மானமிகு கலைஞர் அவர்களின் தலைமை யிலான திமுக ஆட்சியாகும்.

நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில்கூட இந்தக் கண்ணோட்டத்தில் பெண்கள் செயல்படுவார்கள் -  செயல்படவும் வேண்டும்.

பெண்கள் மத்தியில் திமுக அரசு செய்துள்ள சாதனைகள், முக்கியமாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண் உரிமைகளை முன்னிறுத்தக் கூடிய ஆட்சியே நாட்டுக்குத் தேவை!

http://viduthalai.in/new/page-2/4977.html

No comments:


weather counter Site Meter