Pages

Search This Blog

Saturday, August 6, 2011

இந்து மதத்தைக் காக்கப் போரட்டமாம்!

சென்னையில் நாளை இந்து மதத்தைக் காப்பாற்று வதற்காக இந்து தர்மசக்தி என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட இருப்பதாக ஏடுகளில் விளம்பரங்கள் அரங்கேறியுள்ளன.

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. நித்யானந்தா என்பவர் 18 மாதங்களுக்கு முன் அம்பலப்படுத்தப்பட்டார். வட மாநிலங்களில் தலைமறைவாக இருந்த இந்தக் கடவுள் சித்தி(?) பெற்றவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறைக் கொட்டடியில் தள்ளப்பட்டார். இப்பொழுது ஜெயிலிலிருந்து, பெயிலில் வந்துள்ள இவர், தமிழ்நாட்டின் புதிய அரசியல் சூழலில் தமிழ்நாட்டுக்கு வந்து கொட்டி முழங்கிவிட்டுப் போயிருக்கிறார்.

இவரின் தெய்வீக சக்தி எந்தத் தரத்தில் இருக் கிறது என்பதையும், தனக்குத்தானே நிரூபித்துக் கொண்டு அவமானப்பட்டதுதான் மிச்சம்.

தன் பக்தர்களை அந்தரத்தில் நிற்க வைக்கிறேன் - குண்டலினி சக்தி மூலம் என்று மார்தட்டினார். அதனைச் சாதித்துக் காட்ட இயலாத நிலையில், ஆசாமி கேலிக்கு ஆளானதுதான் மிச்சம்!

இவருடைய செயல்பாடுகள் இந்து மதத்துக்கு இழிவை ஏற்படுத்திவிட்டதாக இந்து அமைப்புகளே குரல் கொடுக்கத் தொடங்கின.

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் திரு. இல. கணேசன்கூட, நித்தியானந்தாவின் நடவடிக்கையை குறை கூறினார். இதுபோன்ற பேர்வழிகளால் இந்து மதத்துக்குத்தான் கெட்ட பெயர் என்று மூக்கைச் சிந்தினார்.

(அதே நேரத்தில் கொலைக் குற்றத்தில் சிக்கிய காஞ்சி சங்கராச்சாரியார்களால் இந்து மதத்துக்குக் கெட்ட பெயர் என்று சொல்ல இவர்கள் முன்வர வில்லை என்பதையும் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்க! - இதிலும்கூட பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற பேதம் அவர்களின் பார்வையில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).

காஞ்சி சாமியாராக இருந்தாலும் சரி, வேறு சாமியார்களாக இருந்தாலும் சரி, காவி வேட்டிகள் என்றால், சாமியார்கள் என்று சொன்னாலே பக்தர்கள் கூட முகம் சுளிக்கும் அளவுக்கு நிலைமை அரு வருப்பாகப் போய்விட்டது.

பகவான் அவதாரம் என்று நம்பிக் கொண்டிருந்த புட்டபர்த்தி சாயிபாபாவின் கதை - அவர் மரணத்துக்குப் பிறகு ஊளை நாற்றம் எடுத்துவிட்டது. அவர் தங்கி இருந்த அறைகளைத் திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாகக் கறுப்புப் பணம் மட்டுமல்ல; தங்கக் கட்டிகள் மட்டுமல்ல - விலை உயர்ந்த பட்டுப் புடவைகளும், பெண்கள் பயன்படுத்தும் கைப்பை களும் (டுயனலள க்ஷயப) இருந்தனவாம்! இதற்கான அர்த்தத்தை விளக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

முதலில் ஒரு கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

பகவான் அவதாரம் என்றும், கடவுளிடம் நேரிடை யாகப் பேசக்கூடிய சித்தி பெற்றவர்கள் என்றும் சொல்லப்படக் கூடியவர்களுக்கு எதற்குப் பணம்? எதற்குத் தங்கக் கட்டிகள் - வெள்ளிக்கட்டிகள்?

பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை இவை களைத் துறக்கவேண்டியவர்கள் - இவற்றின்மீது அல்லவா ஆலிங்கனம் செய்து கிடக்கிறார்கள்.

கறுப்புச் சட்டைக்காரர்கள் சொல்கிறார்கள் என்று இதில் பார்க்கவேண்டாம்; திறந்த மனதோடு ஆசாபாசமின்றி நடப்புகளின்மீது கருத்தூன்றிக் கொஞ்சம் கவனம் செலுத்திப் பார்க்கும் எவருக்கும் - இந்த அமைப்பு முறைகள் அத்தனையுமே நேர்மை யற்றவை - ஏமாற்றுத்தனம் நிறைந்தவை - மக்களைச் சுரண்டக் கூடிய ஏற்பாடுகள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதற்குமேல் இந்து மதத்தைக் காக்க இந்துக்களே வாருங்கள், வாருங்கள் என்று வருந்திக் கூப்பிடுவது - போராட்டம் நடத்துவதாக அறிவிப்பது மேற்கண்ட அருவருப்புகளுக்குப் புத்துயிர் ஊட்டும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்?

இவர்கள் ஏன் மக்களுக்கு அழைப்புக் கொடுக் கிறார்கள்? இவர்கள் நம்பும் இந்து மதக் கடவுள்களிடம் மண்டியிட வேண்டியதுதானே!

மக்களைக் கூப்பிடுவதிலிருந்து கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை பக்தர்களே அவர்களை அறியாமல் ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்றுதானே பொருள்?

பக்தியின் நிலை, மதத்தின் தன்மை எந்த நிலைக்குப் பலகீனப்பட்டுப் போயிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்!

No comments:


weather counter Site Meter