Pages

Search This Blog

Monday, May 2, 2011

சட்டத்திற்கு வெளியில் திரியும் நரேந்திரமோடி

இந்தியாவில் அண்மைக் காலத்தில் மிகக் கொடூரமாக மனிதன் என்று ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டுமானால் அது குஜராத்தை ஆண்டுகொண்டிருக்கும் - பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி என்ற நர வேட்டை நாசகாலர்தான்.

இந்த மனிதரை உச்சநீதிமன்றம் சாடியதுபோல வேறு ஒருவரையும் சாடியது கிடையாது. நீரோ மன்னன் என்பதைவிட வேறு கேவலமான பட்டம் ஓர் ஆட்சியாளனுக்கு வேறு உண்டா?

சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்தும், அதிகார ஆயுதத்தைப் பயன்படுத்தியும் தப்பித்துக் கொண்டு வரும் இந்த மோடி இப்பொழுது உயர் காவல்துறை அதிகாரி உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ள மனுவின் மூலம் அம்பலப்பட்டுள்ளார்.

குஜராத்தில் கலவரம் திட்டமிட்ட வகையில் தூண்டி விடப்பட்ட போது மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட் என்பவர்தான் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்; அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்தபோது நான் அங்கு பணியாற்றினேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, "குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தைக் கண்டுகொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்குரலை கேட்க வேண்டாம்'' என்று சொன்னார்.

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள புலனாய்வுக் குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர் களுக்கும் எதிரானவற்றை புலனாய்வுக் குழுவினர் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே நான் தனியாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன். இந்த நிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு கிடைக்க உத்தரவிட வேண்டும். - இவ்வாறு மனுவில் காவல் அதிகாரி கூறி இருக்கிறார். பொறுப்பு வாய்ந்த அதிகாரி, அதுவும் குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது அங்கு பணியாற்றிய உயர்நிலை காவல்துறை அதிகாரி உச்சநீதிமன்றத்தில் வெளிப்படையாகப் பகிரங்கமான குற்றச்சாற்றை முன் வைத்துள்ளார் என்பது சாதாரணமானது அல்ல. இந்தப் பிடியிலிருந்து மோடி தப்பிப்பதும் அவ்வளவு எளிதும் அல்ல.

இந்த நிலையில் மோடி தனது வழக்கமான பாணியில் தற்போதைய குஜராத் மாநில காவல்துறைத் தலைமை முன்னாள் இயக்குநர் சக்ரவர்த்தி என்பவரைவிட்டு விட்டு முதல் அமைச்சர் மோடி கூட்டிய அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவேயில்லை என்று கூறச் செய்துள்ளனர்.

எவ்வளவு பலகீனமான இடத்துக்கு ஒரு முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளார் என்பதற்கு இது ஒன்றுபோதும்.

டி.ஜி.பி.யின் கூற்று உண்மையாகவே இருக்கட்டும். முதல் அமைச்சர் மோடி கூட்டிய அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டனரே - மோடி அமைச்சரவையில் முக்கிய அமைச்சரான ஹரே பாண்ட்யா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்தானே? உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறிய இதே தகவலை அப்பொழுதே கூறியுள்ளாரே!

அந்த உண்மையை வெளிப்படுத்தியதற்காக அமைச்சர் ஹரேன் பாண்டியா அடுத்துக் கொல்லப்பட்டதுதான் மிச்சம். என் மகன் கொல்லப்பட்டதற்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்று அவரது தந்தையார் அப்பொழுதே கூறினாரே!

மோடியின் கதையைத் தோண்டத் தோண்ட பல மர்மப் பூகம்பங்கள் வெடித்துக் கொண்டேதான் இருக்கும்.

உச்சநீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறியதுபோலவே குஜராத் கலவரம் நடந்தபோது அங்கு பணியாற்றிய கூடுதல் காவல்துறை அதிகாரி கே.பி. ஸ்ரீகுமார் என்பவரும் மோடியின் சட்ட விரோத செயல்பாடுகளை நானாவதி ஆணையத்தின் முன் கூறியதுண்டே!

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (குஐசு) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறையின் வழக்கறிஞர்கள் (பப்ளிக் பிராசிக்கூட்டர்) இதற்குத் துணை போனார்கள். குஜராத்தில் ஊடகங்களும் கலவரங்களைத் தூண்டி விடுவதில் அக்கறை செலுத்தின. நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று நானாவதி ஆணையத்தின்முன் கூறியவர் சாதாரணமானவர் அல்லர்; மோடி அரசாங்கத்தின் கூடுதல் தலைமைக் காவல்துறை அதிகாரி.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கூறிய வாக்கு மூலத்தை உச்சநீதிமன்றம் அமைத்த புலனாய்வுக் குழு கண்டு கொள்ளவில்லை என்பதுதான். அதே போல நானாவதி ஆணையமும் இன்னொரு காவல்துறை அதிகாரி கே.பி. ஸ்ரீகுமார் கூறிய வாக்குமூலத்தையும் பொருட்படுத்தவில்லை.

நரேந்திரமோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் எதிரானவற்றை புலனாய்வுக் குழுவினர் எடுத்துக் கொள்ள வில்லை என்று ஒரு உயர் நிலைக் காவல்துறை அதிகாரி கூறுகிறார் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே!
எந்த எல்லைக்கும் சென்று எதையும் செய்யக் கூடிய தீய மனிதர் ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் இருந்தால் நீதியும், விசாரணையும்கூட தலைக்குப்புற விழுந்து விடும் என்பதற்கு வேறு சாட்சியங்கள் தேவை இல்லை.

மோடியின் ஆட்சி எந்தத் தரத்தைச் சார்ந்தது என்பதற்கு மனித உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞர் மேமோன் என்பவர் குறிப்பிட்ட மோடி பற்றிய ஒரு கருத்துப் போதுமானதாகும்.

மோடி ஆட்சியில் பொடா பயங்கரவாதிகளை ஒடுக்கும் சட்டமல்ல; மாறாக பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் சட்டம் (Protection of Terrorist Act - Pota) என்று வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டி விட்டாரே - இதற்குமேல் என்ன சொல்ல!

மோடிகளை சட்டத்துக்கு வெளியே அனுமதிப்பது கலவரங் களுக்கு நாளும் பந்தக்கால் முகூர்த்தம் நடத்திக் கொண்டிருப் பதற்குச் சமமாகும் - எச்சரிக்கை. மோடியைத் தண்டிப்பதன் மூலம்தான் நாட்டின் சட்டம், நீதிக்கான மரியாதையை நிலை நிறுத்த முடியும்.

No comments:


weather counter Site Meter