Pages

Search This Blog

Sunday, July 17, 2011

காமராசர் எனும் பெருமகன்

காமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீரர். தந்தை பெரியாரை பெற்றதால் ஈரோடு பேர் பெற்றது. அண்ணா பிறந்ததால் காஞ்சி சிறந்தது. காமராசர் பிறந்ததால் விருதுப்பட்டி சீர்பெற்றது என்பது மிகையான வார்த்தை அல்ல.

பொதுவாழ்வில் ஈடுபட, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் தொண்டாற்ற, நாட்டு விடுதலையில் நாட்டம் கொள்ள காமராசருக்கு - இளமைக்கால ஈர்ப்புக் குக் காரணமாய் அமைந்தவர்கள் காந்தியும், பெரியாரும்.

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் ஈடுபட்ட போது, இளைஞராய் பங்கேற்றவர் காமராசர். சத்தியமூர்த்தி யின் சீடராக அடையாளப்படுத்தப் பட்டாலும் அரசியலில் இராசகோபாலாச் சாரியின் ஆதிக்கத்தை அகற்றி அணிய மானவர் காமராசர்.

ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்திட வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் சிறப்பாக செயலாற்றியவர். காங்கிரசில் இருந்தாலும், காங்கிரஸ் முதலமைச் சரான இராசகோபாலாச்சாரி குலக் கல்வித் திட்டத்தைச் செயலாக்க முனைந்தபோது எதிர்த்தவர். அத்திட்டம் ஒழிய காங்கிரசாரை அணிதிரட்டியவரும் கூட. தேவை என மக்கள் கருதியபோது, அவசியம் என அவர் உணர்ந்தபோது இராசகோபாலாச்சாரியை வீட்டுக்கு அனுப்பி தமிழக முதல்வராக பொறுப் பினை ஏற்றவர்.

பெரியாரின் கருத்தினை ஏற்று ஆட்சித் தேரினை செலுத்தியவர் காமராசர். தகுதி-திறமை பேசிய கூட்டத் தினருக்கு உன் தகுதியும் தெரியும், உனக்கு சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும் என்றவர். இந்திய பிரதமர்களை உருவாக்கிடும் ஆற்றல் பெற்ற கிங் மேக்கர் அவர். சோசலிச சமுதாயம் அமைவதை லட்சியமாகக் கொண்டவர். ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரானவர். அவரின் சாதனைகளை, சிறப்புகளை, செயல் திறனைப் பார்ப்போம்.

எத்தனை எத்தனை திட்டங்கள்

மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வாலையார் அணை, ஆரணி யாறு அணை, மங்கலம் அணை, வீடூர் அணை, கிருட்டிணகிரி அணை, மேல்கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடி கால்வாய், சாத்தனூர் அணை, கோமுகி அணை, பரம்பிக்குளம் - ஆளியாறு அணை, கீழ் பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம் இப்படியாய் எத்தனை எத்தனை அணைகள் காமராசர் ஆட்சியில் அமைக்கப்பட்டன. எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன. வேளாண்மை செழித்திட காமராசர் ஆற்றிய பணிகள்.

திருச்சி பெல் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி உற்பத்தி சாலை, மேட்டூர் காகித ஆலை, ஆவடி ராணுவ டாங்கித் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, குன்னூர், கிண்டி இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ், நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், திருச்சி துப்பாக்கித் தொழிற் சாலை, இப்படியாய் இன்னும் ஏராளமான சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், பல்வேறு தொழிற்சாலைகள் தலைவர் காமராசரின் ஆட்சியின் சாதனைகளாக மலர்ந்தன.

நீர்மின்திட்டங்கள், அனல்மின் திட்டங்கள், அணு மின் திட்டங்கள் பல காமராசர் ஆட்சிக் காலத்தில் செயல் படுத்தப் பட்டு கிராமப்புற மக்கள் மின் னொளி பெற காரணமானவர் காமராசர். மின்வாரியம் அமைத்து மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு என செயல்படுத்தி மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட வைத்தார்.

மக்கள் பங்களிப்புடன் கல்வி . . .

ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைந்திட மாணவர்களாகிய பிஞ்சு உள்ளங்களில் ஜாதி, பொருளியல் ஏற்றத் தாழ்வு எனும் நஞ்சு கலந்துவிடக் கூடாது என எண்ணிய காமராசரின் உள்ளத்தில் உதித்திட்ட திட்டம்தான் மதிய உணவுத் திட்டம் - சீருடைத் திட்டம். ஒடுக்கப்பட்ட சமுதாய பிள்ளைகள் படிக்கவும், படித்து சிறக்கவும், மதிய உணவுத் திட்டம் மகத்தான வழி வகுத்தது என்றால் மிகையல்ல. அனை வரும் சமம் என்ற உணர்ச்சி, ஒன்றாக அனைத்து மாணவர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிடவும், ஒரே மாதிரியான உடைஅணிந்து வருவதும் ஆன நிலை ஏற்பட வழி வகுத்தது. மக்கள் பங்களிப் போடு இத்திட்டங்களை நிறைவேற்றினார்.

அரை நேரம் படிப்பு - அரை நேரம் குடும்பத் தொழில் என்று குல்லுகபட்டர் இராசகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து - கல்விச் சோலை மலர காமராசரும் காரணமானார். உள்ளம் கொதித்து அவர் கொட்டிய வார்த் தைகள் இதோ, இது ஒரு பைத்தியக் காரத் திட்டம். இதை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என்றார்.

நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை . . .

கடையர் எனப்படுவோர் எவ்விதம் கடைத்தேற முடியும்? கல்வி பெற்றுச் சிறந்தால்தான் தேறுவார்கள். படிக்கிற கல்வி மூலம் நல்ல அறிவும் திறமையும் வளர்ந்தால் நிச்சயமாகப் பிழைத்துக் கொள்வார்கள். ஆம்., அவர்கள் சிறந்த மனிதர்களாக மாறுவார்கள். ஆனால் பலருக்கு எழுத்தறிவே கிடையாது. ஊர்களில் பள்ளிக் கூடம் இல்லாத போது எப்படி எழுத்தறிவைப் பெற முடியும்? ஆகவே முதல் வேலையாக எல்லா ஊர்களிலும் பள்ளிக் கூடங்களைத் திறக்க வேண்டும். கல்வியை எல்லார்க்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வியை இலவசமாகப் பெற வேண்டும். இன்னொன்று நிலம் ஈரமாக இருந்தால் தான் பயிரிட முடியும்; காய்ந்து கிடந்தால் விதை எப்படி முளைக்கும்? பிள்ளைகளின் வயிறு எந்தக் காரணம் கொண்டும் காயவே கூடாது. அவர்களின் வயிறு காய்ந்திருந்தால் அவர்களுக்கு எவ்விதம் படிப்பு ஏறும்? இந்த நாட்டில் ஏழைகள் மலிந்திருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு அங்கேயே, பள்ளிக் கூடத்திலேயே சோறிட வேண்டும். இதுதான் நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, இனிமேல் வரும் தலைமுறையினராவது பெற்றுப் படித்து வளர்ந்து வாழட்டும் . . . எல்லாருடைய கண்களையும் திறக்கும் பள்ளிகளைத் திறப்பதை விடவும் முக்கிய வேலை இப் போதைக்கு இல்லை. எனவே மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஊர் ஊராக வந்து பகலுணவுத் திட்டத்திற்குப்பிச்சை எடுப்பதற்கும் சித்தமாக உள்ளேன் - காமராசரின் எட்டையபுரம் பேச்சு இது. படிப்பை மக்கள் - குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் நுகரச் செய்ய தலைவரின் எண்ணம் எப்படி இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.


ஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக . . .

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப் பில் இருந்தபோது பெரியாரின் எண்ணக் கனவை ஈடேற்றும் வண்ணம் பெருந் தலைவர் காமராசர் அற்புத சாதனைகளை நிகழ்த்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோயில் கதவுகள் திறக்க மறுத்தன - திமிர்வாதம் பேசினர் ஆதிக்க வாதிகள். பரமேசுவரன் என்ற தாழ்த்தப்பட்டவரை இந்து அறநிலையத் துறை அமைச்சராக் கியதன் மூலம் பூரணகும்ப மரியாதை கொடுத்து அழைக்க வேண்டிய உரிமைப் பிரகடனமாயிற்று. போலீஸ்துறை அமைச் சராக கக்கன் அவர்களை நியமனம் செய்ததன் மூலம் தாழ்த்தப்பட்ட மக் களுக்கு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட வழியாயிற்று.

ஏழை எளிய மக்கள் வாழ்வில் மாற்றமும், ஏற்றமும் பெற கல்வி வள்ளல் காமராசர் தமது ஆட்சியைப் பயன்படுத் தினார். எளிமையாக, நேர்மையாளராக தம் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது. அவர் சொல்றார் - நாம் செய்கிறோம்! இது 1952லே துவங்கின சிக்கல் இல்லை. அய்யாயிரம் ஆண்டு களாக இருக்கிறதாச்சே!

தெய்வத்தின் பேராலேயும், மதத்தின் பேராலேயும் நம்மை ஒதுக்கி வைச்சுட் டானுங்க! இதை தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! யார் கவலைப்பட்டா?

பெரியார் ஒருவர்தானே தலையில் எடுத்துப் போட்டுக் கிட்டுப் பண்ணிக் கிட்டிருக்கார். அவரில்லேன்னா, நம்ம பிள்ளைங்க கதி என்னவாயிருக்கும்? அத்தனை பேரும் கோவணத்டே வய லிலே ஏரோட்டிக்கிட்டிருப்பான்! இன் னைக்கு டெபுடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரெட்டிரியாகவும் உட்கார்ந்திருக்கான். நம்ப கிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார் நினைச்சதிலே ஏதோ கொஞ்சம் பண்ணிக்கிட்டிருக்கோம்.

அவர் எந்த அதிகாரமும் இல்லாமே, நமக்காக ஊர் ஊரா அலைஞ்சு சத்தம் போட்டுக்கிட்டே வர்ராரு! அவராலேதான் நமக்கெல்லாம் பெருமை.

தந்தை பெரியாரை - அவர்தம் உழைப்பை - அதனால் விளைந்த பயனை நன்றி உணர்வோடு பெருந்தலைவர் காமராசர் பகன்றுள்ளதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அய்யாவின்மீது காம ராசர் வைத்திருந்த மதிப்பை உணர முடியும்.

குலக்கல்வித் திட்டம் என்ற பேரால் - தமிழினத்தின் எதிர்காலத்தையே சூனிய மாக்கிடவும், ஒரு இனத்தின்அறிவுக் கண்ணை ஊனப்படுத்தவும், இராச கோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டத்தைப் பெரியார் எதிர்த்து முறியடித்தது ஒரு புறம் - அதனால் இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண் டது இன்னொரு புறம் - பெருமைக்குரிய காமராசர் தமிழ்நாட்டின் ரட்சகராக - முதல் அமைச்சராக அரியணை ஏறியது என்பது மற்றொரு புறம் தமிழ்ச் சமுதா யத்திற்குக் கிடைத்திட்ட பெருவாய்ப்பு. இவற்றிற்கெல்லாம் தந்தை பெரியார் தான் காரணம்.

இராசாசியால் மூடப்பெற்ற 6000 பள்ளிகளை மீண்டும் காமராசர் திறந் தார்- மேலும் 14000 பள்ளிகள் என ஆக் கினார். 300 பேர் கொண்ட கிராமத்தில் எல்லாம் பள்ளிகள் திறப்பு. 14 வயதுக் குட்பட்ட அனைவரும் படித்திட வேண்டும் என்ற கட்டாய இலவசக் கல்வி. 1954 இல் தமிழகத்திலிருந்த தொடக்கப்பள்ளிகள் 30,000 இதர உயர் நிலைப் பள்ளிகள் 2,200. தமிழக வரலாற்றில் காமராசர் காலம் கல்வி வளர்ச்சியில் பொற்காலம்.

இருக்கு இல்லைங்கறது பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையா துன்னேன். நாம் செய்யறது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்கியனா இருக் கனும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிக்கிட்டுக் கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா?

மேல்சாதி, கீழ்சாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுகப் பண்ணின ஏற்பாடுன்னேன். சுரண்டித் திங்கறதுக்காகச் செய்ததுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்திலே பத்துமாதம் இருந்துதானே பிறக்குறோம். அதுவே என்ன பிராமணன்-சூத்திரன், ரொம்ப அயோக்கியத்தனம்.

நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி, ஆத்திகவாதி எல்லோ ருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்ரவனை மனுஷன்னுதான் பார்க்குறேன். பிராமணன்- சூத்திரன்னு பார்க்குறதில்லை.

தனிப்பட்ட முறையிலே நான் கோயில், பூசை, புனஸ்காரமுன்னு பைத்தியம் பிடிச்சி அலையறதில்லே. மனிதனோடே அன்றாடக் கடமைதான் முக்கியமுன்னு நினைக்கிறவன் நான்.

மனிதனை மதிக்க வேண்டும். மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை களை சரிவர செய்ய வேண்டும். மக்களைப் பிரித்து வைக்கும் ஜாதியின் மீது நம்பிக்கை வைக்கக் கூடாது. யோக்கியப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதிலே அழுத்தமான நம்பிக்கை உள்ளவராக தலைவர் காமராசர் வாழ்ந்தார் என்பது மேலே அவன் பதில்கள் பறைசாற்றுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களின் ஒருவரும் முன்னாள் மேலவை உறுப்பினரும், சீரிய பகுத்தறி வாளருமான சீர்காழி பெ.எத்திராஜ் எழுப்பிய வினாக்களுக்கு தலைவர் காமராசர் அளித்திட்ட பதில்கள்தான் இவை. இவற்றுக்கும் மேலாக நம்மை சிலிர்க்க வைக்கும் சிந்தனை பதில்களைத் தொடர்ந்து பாருங்கள்.

நீங்க பூசையெல்லாம் செய்யறதில்லையா? இது கேள்வி.

அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் பண்ற துன்னேன். அடுத்த வேளைக்குச் சோறு இல்லாதவன் கடன் வாங்கி, ஷேத்ராடனம் போறான். எந்தக் கடவுள் இவன் கிட்டேவந்து, நீ ஏண்டா, என்னைப் பார்க்க வரலேன்னு கோவிச்சுக்கிட்டான். அபிஷேகம் பண்றதுக் குக் குடம் குடமா பாலை வாங்கி வீணாக்குகிறானே மடையன். அந்தப் பாலை நாலுப் பிள்ளைக் கிட்டே கொடுத்தா அதுங்க வலிமையா வளருமில்லியா?

பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.எச்டி யா கொடுக்குறாங்க.பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்! பக்தி வேஷம் போடுறது நாலு பேர் பாராட்டணுமிங்கறத்துக்காகத்தான்.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லையா?

ஊருக்கு நூறு சாமி; வேளைக்கு நூறு பூசைன்னா, மனுஷன் என்னைக்கு உருப்படறது? நாட்டிலே வேலை யில்லாத் திண்டாட்டம், வறுமை, சுகாதாரக்கேடு, ஏற்றத் தாழ்வு இத்தனையும் வச்சுக்கிட்டு, பூசை என்ன வேண்டிக் கிடக்கு பூசைன்னேன்? ஆயிரக்கணக்கான இந்த சாமி கள் இதப் பாத்துக்கிட்டு ஏன் பேசாமே இருக்குன்னேன்?

பட்டறிவாளரான காமராசரின் பதில்கள் பேர் பெற்ற பகுத்தறிவாளனின் பதிலைப் போலல்லவா அமைந் துள்ளது. தலைவர் காமராசர் வீசிய வீரியமுள்ள அறிவுக் குண்டுகள் இவை. தொடர்ந்து பகுத்தறிவுக் கணை பாய்வதைப் பாருங்கள். . .

லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்தியெல்லாம் ஓவியர்கள் வரைஞ்சு வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்ம ஆளு கும்பிட ஆரம்பிச்சுட்டான்.

சுடலைமாடன், காத்தவராயன் பேர்ல அந்தந்த வட்டாரத்துல பிரபலமானஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்ம ஆளு. கடவுள் கண்ணை உருட்டிக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான் னான். செருசலத்திலே இருக்கிறவன் கர்த்தர்ன்னான், இதிலேயும் சில பேர் மேரியை கும்பிடாதேன்னான். கிறித்துவ மதத்திலேயே ஏழெட்டு டெனாமினேஷன் உண்டாக்கிட்டான்.

மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்னி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமிகளைச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது?

மதம் மக்களுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களைப் போக்குமா? இந்தக் குறைஞ்சபட்ச அறிவு கூட வேணாமா மனுஷனுக்கு?

உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு மதமும் நான் பெரிசா நீ பெரிசான்னு மோதிக்கிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம் அடிச்சிக்கிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்? பச்சைத் தமிழரின் நியாயமான கேள்விக்கு எந்த பக்த பிரசங்கி பதில் சொல்லுவார்?


தீபாவளி கொண்டாடுவதில்லை . . .

நரகாசூரன் கதையை வச்சுத் தீபாவளி கொண்டாடு றான். நவராத்திரிக் கதையைச் செல்லி சரசுவதி பூசை பண்றான். விக்னேசுவரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை படைக்கிறான். இது மாதிரி செய்து பாமர மக்களைத் தம் மதத்தின் பிடிக்குள்ளே வச்சுப் பொழப்பு நடத்துறான்.

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்லே. எண்ணைத் தேய்ச்சுக் குளிச்சதுமில்லே. புதுசு கட்டனதுமில்லே. பொங்கல் மட்டும்தான் நம்மக் கலாச்சாரத்தோடு ஒட்டுன விழான்னேன்.
நான் தீ மிதி, பால் காவடி அப்படீன்னு போனதில்லே. மனிதனைச் சிந்திக்காத எந்த விஷயமும் தேவையில்லே. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக் குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்லே. இவன் லட்சக்கணக்கான ரூவாயிலே வைர ஒட்டியாணம் செய்து காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடுறான்.

தீர்க்கமான மானுட நேயச் சிந்தனையை மக்கள் தலைவரான காமராசர் எவ்வளவு நியாயமாக முன் வைக்கிறார். வரால் மறுத்துரைக்க முடியும் காமராசரின் கருத்தை?
திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம்!

கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டிய லில்லே கொண்டு போய்க் கொட்டுறான். அந்தக் காசிலே ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கலாம். அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடுமுன்னு பயந்துகிட்டுச் செய்வான்.

மதம் மனிதனைப் பயமுறுத்தி வைக்கிறதேத் தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித் தான் இருக்கான்னேன்!

கோயில், பிரார்த்தனை, நேர்த்திக் கடன் கழிக்கிறது. இதிலே உங்களுக்கு அனுபவமுண்டா? என்று தலை வரிடம் கேட்டதற்கு, பெருந் தலைவர் சொன்ன பதில் வியக்க வைக்கிறது - விலா நோக சிரிக்க வைக்கிறது.

சின்னப்பையனா இருந்தப்போ பத்ரகாளியம்மன் திருவிழா நடக்கும். அந்தச் சிலைக்கு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930க்கு முன்னாலே சஞ்சீவிரெட்டியோடு திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுக்கிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்புறம்தான் நினைச்சுப் பார்த்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணுச்சு. போயும் போயும் தலை முடியைத்தானா கடவுள் கேட்கிறாரு. எல்லாம் செட்டப் அப்படின்னு சிந்திச்சேன். விட்டுட்டேன் . . . தலையிலே இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆனா, ஆண்டவனுக்காக தலையையே கேட்டாக் கொடுப்பானா? எவ்வளவு ஆழமான கேள்வி. அறிவில் ஆர்வமுள்ளோர் சிந்திக்க வேண்டும்.

காமராசரை நமது நாட்டு முதல் மந்திரியாக அடை வற்கு ஓர் அளவுக்குக் காரணமானவன் என்று சொல் வேன். இத்தனை நாள்களுக்குள் குலக்கல்வித் திட்டம் பற்றிய முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், பலாத்காரத் தில் ஈடுபடுவோம் என்று முதல் அமைச்சர் சி.இராசகோ பாலாச்சாரிக்கு எச்சரிக்கை செய்தோம். அதன் காரண மாக உடம்புக்குச் சவுகரியம் இல்லை என்று சாக்குக் கூறிப் பதவியை விட்டு விலகினார். அவர் விலகாமல் இருந்தால் காமராசர் பதவிக்கு வரமுடியாது!

இந்தியாவிலேயே எந்தப் பகுதியும் அடையாத நன்மைகளை தமிழர்களாகிய நாம் அடைந்திருக்கிறோம். ஏனெனில், தமிழர்களாகிய நமக்குக் கல்விக் கண் கொடுத்தவர் காமராசர் ஆவார்! காமராசர் பதவிக்கு வராத வரைக்கும் நாம் 100 க்கு பத்துபேர்தான் படித்திருந் தோம். இந்த நிலையை மாற்றி 100க்கு 40 பேருக்கு மேல் படிக்கும் நிலையைக் காமராசர்தான் ஏற்படுத்தினார்.
இன்றைக்குப் பிள்ளைகள் பாஸ் செய்து, என்ஜினீரிங், மெடிகல் கல்லூரிகளில் சேரப் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றதை நாம் காண்கிறோம்.
- (பெரியார் : 18.7.1965)

இது மட்டுமா? இதோ இன்னும் பெரியார் பேசுவதைக் கேளுங்கள். பெருந்தலைவரின் ஆட்சிக் காலம் தமிழர் வாழ்வில் பொற்காலம். அப்படிப்பட்ட காமராசரை பயன் படுத்திக் கொள்வது தமிழர் கடன் என்பதை 18.7.1961 விடுதலை வெளிப்படுத்துகிறது.

தோழர்களே! எனக்கு 82 வயது ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறக்க நேரலாம். உங்களையும் விட பெரிய வனான நான் என் மரண வாக்கு மூலம் போல இதைக் கூறுகிறேன். நாம் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை.

இன்றைய நமது காமராசர் ஆட்சியில் நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும், அடுத்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முகலாய மன்னர்கள், அதன் பின்னர் வந்த வெள்ளைக்காரர்கள் ஆகிய இவர்களின் ஆட்சிகளி லாகட்டும் நமது கல்விக்கோ, முன்னேற்றத் துக்கோ வழி செய்யவில்லை!

தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உண்மையில் உருப்பட வேண்டுமானால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் நம்மை அடையுங்கள்!

தமிழர்கள் - குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற காமராசர் பல்வேறு வகை யிலே பாடுபட்டு ஆட்சியின் மூலம் செயல்படுத்தி உள்ளார். அவற்றிற்கு அடிப்படையாக, மூலகாரணமாக இருந்தவர் அய்யா பெரியாரே! ஓங்கட்டும் காமராசர் புகழ்!

No comments:


weather counter Site Meter