Pages

Search This Blog

Friday, September 9, 2011

எல்.கே. அத்வானி மீண்டும் ரத யாத்திரையா?

ஊழலை ஒழிக்க இன்னொரு ரத யாத்திரையைத் தொடங்கப் போவதாக எல்.கே. அத்வானி மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததில், முடியுமானால் என்னையும் கைது செய்யுங்கள் என்று சவாலும் விட்டுள்ளார். இந்த வழக்கில் இரு பி.ஜே.பி.யினரைக் கைது செய்வதில் இவருக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? பி.ஜே.பி.யினர் தவறு செய்தால் கைது செய்யக் கூடாதா?

ராமன் கோவில் கட்டுவதற்காக அத்வானி ரத யாத்திரை சென்றபோது நாட்டின் பல பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன; உயிர்ப்பலிகளும் ஏற்பட்டன!

குடம் நிறைய ரத்தத்தை நிரப்பி அத்வானிக்கு வரவேற்பு கொடுத்த இந்துத்துவா வெறியர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு கலவரத்தை விதைக்க இந்துத்துவா வாதிகள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

ஊழல் என்று எடுத்துக்கொண்டால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைவிட எந்த விதத்திலும் பா.ஜ.க.வினர் குறைந்தவர்கள் அல்லர்.

இன்னொருவர் மனைவியை தன் மனைவி என்று சொல்லி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த ஒழுக்கவாதிகள் பி.ஜே.பி.யில் தான் உண்டு.

முதலாளிமார்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்காகக் கேள்வி கேட்பவர்களும் பி.ஜே.பி.யில் தான் அதிகம் உண்டு. இதுபோன்ற சாதனைகளை அவர்களால்தான் சாதித்துக் காட்ட முடியும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாண்சிங் முதல் அமைச்சராவதற்கு பி.ஜே.பி. செய்த தில்லுமுல்லுகள் கொஞ்ச நஞ்சமல்ல; அதே முறையை மத்தியிலும் ஆட்சியை நிலைப்படுத்திக் கொள்ள பி.ஜே.பி. தயங்காது என்று வாஜ்பேயி கூறிடவில்லையா? பி.ஜே.பி.யின் வாடகை ஒலிபெருக்கியான துக்ளக் ராமசாமியாலேயே அதனை ஆதரிக்க முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு தலையங்கம் தீட்டியதைத்தான் மறக்க முடியுமா?

சவப் பெட்டிகளை இறக்குமதி செய்வதில்கூட ஊழல் செய்ய முடியும் என்று ஊழலில் புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டியதில் பி.ஜே.பி.தான் நாட்டில் முதல் நிலையில் இருக்கிறது.

அன்றைய பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணனைப் பலி கொடுக்க முடிந்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான்.

அத்வானிகூட சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இல்லாத நிலையில் தான், ஹவாலாவில் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. மக்கள் வரிப் பணத்தில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டிய பி.ஜே.பியைச் சேர்ந்த ஆளுநர்களும் உண்டே!

கருநாடக மாநில முதல் அமைச்சராக இருந்த எடியூரப்பா மீது ஆதாரப் பூர்வமான ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், அவரை முதல் அமைச்சர் நாற்காலியிலிருந்து நகர்த்த பி.ஜே.பி. உயர்மட்டம் பட்டபாடு நல்ல நகைச்சுவை!

பி.ஜே.பி.யின் தலைமைக்கே சவால் விட்டவர் எடியூரப்பா. டில்லி தலைநகரில் உட்கார்ந்து கொண்டு என்னை விலக்கிப் பாருங்கள் பார்ப்போம்! என்று பி.ஜே.பி. தலைமைக்குச் சவால்விடவில்லையா?

கட்சியின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பி.ஜே.பி. தலைமையே அவரிடம் சரணடைந்த நிலை - வேறு எந்த அரசியல் என்ற திரைப்படத்திலும் காண முடியாத காணற்கரிய உச்சக்கட்ட காட்சியாகும்.

இந்த ஊழல்களையெல்லாம் மறைக்கத்தான் பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்க அன்னாஹசாரே என்ற ஒருவர் காந்தி குல்லா போட்டு உட்கார வைக்கப்பட்டார்.

இவர் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெறும் ஊழலை எதிர்த்துத்தான் உண்ணாவிரதம் இருப்பார்.

கருநாடக மாநிலத்திலோ, குஜராத்திலோ நடக்கும் லஞ்ச ஊழல், சட்டவிரோத செயல்பாடுகள்பற்றி மூச்சவிட மாட்டார். முடிந்தால் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு நற்சான்று பட்டம் வழங்குவார் (எதிர்ப்பு வலுத்தவுடன் கொஞ்சம் ஜகாவாங்கி விட்டார் - அவ்வளவுதான்)

2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்கூட பிரமோத் மகாஜன், அருண்ஷோரிகள் காலத்தில் தவறு ஏதும் நடக்கவேயில்லை என்று பசப்பு வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் சிபிஅய் அந்தக் கால கட்டத்தில் நடைபெற்ற கோளாறுகள் பற்றியும் விசாரணை நடத்த இருக்கிறது. அப்பொழுது தெரியும் பி.ஜே.பி.யின் இன்னொரு பக்கம்.

நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கிவிட்டால் அவர்கள் வீரர்கள், உத்தமர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்ற தப்பான அபிப்பிராயத்தில் மிதக்கிறது பி.ஜே.பி. ஆனால் மக்கள் வேறுவிதமாகத் தான் நினைப்பார்கள். தங்கள் வரிப்பணம் இத்தகைய முடக்குவாதத்தின் மூலம் கரியாக்கப்படுகிறதே என்கிற சினம் அவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க பாடம் கற்பிக்கும் - இது கல்லின்மேல் எழுத்தாகும்.
http://viduthalai.in/new/e-paper/17496.html 

No comments:


weather counter Site Meter