Pages

Search This Blog

Thursday, March 22, 2012

சோதிடத்துக்குத் தடை

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடப் பாடத் திட்டம் வைப்பது என்ற முடிவை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. (20.1.2012)

அதற்குக் கை மேல் பலன் கிடைத்துள்ளது. சோதிடம் (Astrology) என்பது வேறு வானவியல் என்பது வேறு (Astronomy!) இரண்டும் ஒன்றல்ல படித்தவர்கள்கூட இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்பிக் கொள்வது பரிதாபமே!

சோதிடர்கள் கோள் என்று சொல்லும் சூரியன் உண்மையில் நட்சத்திரமாகும். சோதிடத்தில் முக்கிய கோளான பூமிக்கு இடமில்லை அதே நேரத்தில் பூமியின் துணைக்கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.

இராகு, கேது என்று இரு கோள்களைக் குறிப்பிடுகிறார்களே உண்மையில் அப்படி கோள்கள் கிடையாது என்று வானவியல் அறுதியிட்டு அறை கிறது. செவ்வாய், வியாழன், சனி இவைகளுக்குத் துணைக்கோள்கள் முறையே 2,16,22 இருக்கின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் எழுதி வைத் துள்ளனரா? இப்படி துணைக்கோள்கள் உண்டு அறியாதவர்கள் எப்படி இவற்றிற்குப் பலன் எழுதி வைத்திருக்க முடியும்?

பூமி நிலையானது என்றும், சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்கிற சோதிடத்தை நம்பி பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டத்தில் சேர்ப்பது என்று எப்படிதான் துணிந்தனரோ தெரியவில்லை.

நம் நாட்டுக் கல்வியின் தரம் இதுதானா?

சோதிடர் கூறும் இராசி வட்டத்தில் பல கோடி நட்சத்திரங்கள் உண்டு. இவர்களுக்குத் தெரிந்த தெல்லாம் 27 நட்சத்திரங்களே.

ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு இடைவெளி துரத்தில் இருக்கும் பொழுது கிரகங்கள் எப்படி இராசி வட்டத்துக்குள் குடியிருக்கின்றன?

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புதிய புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் வருகின்றன. இவற்றிற்குச் சோதிடத்தில் பலன் கிடையாது.

சனிக்கிரகம் பொல்லாதது - பாவம் பிடித்தது என்றெல்லாம் உளறி வைத்துள்ளனர். 28.1.2006 அன்று சூரியன் - பூமி - சனி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அதனால் என்ன பாவம் வந்து சூழ்ந்து விட்டது?

இப்படி நேர்நோட்டில் வந்ததைக்கூட விஞ் ஞானிகள்தானே தெரிவித்தனர். 10.2.2007 அன்று பூமிக்கு அருகில் வந்த சனிக்கிரகத்தை பெரியார் அறிவியல் மய்யத்தில் உள்ள கோளரங்கத்திற்குச் சென்று பொது மக்கள் பார்வையிட்டனரே! அப்படிப் பார்வையிட்டவர்களை சனிப் பகவான் பிடித்துக் கொண்டானோ!

கண்டுபிடிப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படு கின்றன; நிரூபணம் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக புளூட்டோ என்னும் கிரகம் பற்றி 1930இல் கூறப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கிரகத்திற்குரிய தகுதிகள் அதற்கு இல்லை என்று கூறி கோள்களின் பட்டியலிலிருந்து அகற்றி விட்டனர்.

இப்படி விஞ்ஞானம் புதுப்புது உண்மைகளைக் கண்டறியும் நிலையில், அறிவியல் வளராத காலத்தில் வெறும் கண்களால் விண்வெளியைப் பார்த்து அப்பொழுது இருந்த அறியும் பக்குவத்திற்கு ஏற்ப எதையோ கிறுக்கி வைத்தனர்.

அவற்றை நாளும் அறிவியல் வளரும் இந்தக் கால கட்டத்தில் கண்மூடித்தனமாக நம்புவது, பல்கலைக் கழகங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு பக்கத்தில் கூறுகிறது; இன்னொரு பக்கத்தில் பல்கலைக் கழகத்திலேயே அறிவியல் மனப்பான்மைக்கு விரோதமாகப் பாடத் திட்டத்தை வைக்கத் துடிக் கின்றனர் என்பது வெட்கக் கேடாகும்.

பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம்தான் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரும் - புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராயும்

(எம்.என்.ராய் 125ஆம் ஆண்டு: பிறந்தநாள் நினைவுகள் - மார்ச் 21) - தொகுப்பு:  நீட்சே
புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராய் அவர்களின் 125ஆவது ஆண்டு பிறந்தநாளில் தந்தை பெரியார் மீது எம்.என்.ராய் வைத்திருந்த பற்று, மரியாதை. இரு தலைவர்களும் ஒரு கட்டத்தில் இணைந்து பணியாற்றிய தன்மையின் மூலம் இந்நாட்டுப் பொதுவாழ்க்கையின் முதிர்ச்சி நிலை எப்படிப்பட்டது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். தந்தை பெரியார் முறையான பள்ளிக் கல்வியை தொடர்ந்தவர் அல்ல. தனது சிந்தனையில் உதிர்த்த எண்ணங்கள், உணர்ந்து கொண்ட பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் தான் செல்ல வேண்டிய பொதுவாழ்க்கைப் பயணத்தை தீர்மானமாக முடிவு செய்து - அந்த பயணத்தில் சிறிதளவும் மாற்றமின்றி நடை போட்டவர். தனது கொள்கை, அணுகுமுறைக்கு ஒவ்வாத நிலை தோன்றியபொழுது, தான் இணைந்து பணியாற்றிய அமைப்பிலிருந்து வெளியேறிக் கொண்டார். மனித இனத்தின் பெரும் சிறப்பியல்பான சுயமரியாதை மக்களிடம் பலப்பட வேண்டும் என கருதி அதற்காகவே ஒரு இயக்கத் தினை - சுயமரியாதை இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். தனது தலைமை வேண்டும் என விரும்பிய அமைப்புகளை தனது கொள்கைப் பயணத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொண்டார். எந்தச் சூழலிலும் தான் ஒரு மனிதநேயர் என்பதை உணர்த்திக் கொண்டு வாழ்ந்து புரட்சி கண்டவர் தந்தை பெரியார். சுயசிந்தனையா ளராக வாழ்ந்து சமுதாயப் புரட்சிக்கான இயக்கம் அமைத்து பொதுவாழ்விற்கு பெருமை சேர்த்தவர் தந்தை பெரியார்.

லெனினை சந்தித்தவர்

எம்.என்.ராய் அவர்களும் முழுமையாகப் பள்ளிக் கல்வியைக் கற்றவர் அல்ல. தாமாகவே உலக நடப்புகளை, தத்துவக் கோட்பாடுகளை கற்றுக்கொண்டவர். சிறு வயதில் புரட்சிகர இயக்கங்களில் பங்கேற்று தீவிரவாதியாக வாழ்ந்தார். அதன் காரணமாகவே பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆயுதப் போராட்டம் மூலமே இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து அரசியல் விடுதலைப் பெற முடியும் என்ற கருத்தில் நாட்டம் கொண்டவராய், இந்தியாவை விட்டு ஜெர்மனிக்குச் செல்ல நினைத்து கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக மெக்சிகோ நாட்டிற்கு வந்தடைகிறார். கம்யூனிச கொள்கையில் நாட்டம் கொண்டவராக மாறி அந்த கொள்கைப் பரவலுக்கு இயக்க ரீதியாக மெக்சிகோவில் பங்காற்றுகிறார். பின்னர் அவருடைய கம்யூனிச கொள்கைப் பரப்பலின் அடிப்படையில் சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற இரண்டாம் கம்யூனிச அகிலத்தில் (ளுநஉடினே ஊடிஅஅரளைவ ஐவேநசயேவடியேட) பங்குகொள்கிறார். புரட்சி செய்து அரசியல் ஆட்சியில் அமர்ந்த லெனினை சந்தித்து அரவது அறிவுறுத்தலில் தாஷ்கண்ட் பல்கலைக் கழகத்தில் கம்யூனிசம் பற்றிப் பாடம் போதித்தார். பின்னர் சீன நாட்டில் கம்யூனிசம் பரவிட அனுப்பப்பட்டார். பத்து ஆண்டு காலம் கம்யூனிச இயக்கத்தில் இருந்த பின்னர் லெனினை அடுத்து வந்த ஸ்டாலினின் அணுகுமுறையில் மாறுபட்டு அந்த இயக்கத்தினை விட்டு வெளியேறினார். 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு திரும்பி, காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றி அந்த அமைப்பிடமும் மாறுபாடு கொண்டு வெளியேறுகிறார். புரட்சிகர ஜனநாயகக் கட்சி (சுயனஉயட னுநஅடிஉசயவஉ ஞயசவல) எனும் அரசியல் அமைப்பினை தோற்றுவிக்கின்றார். மனித நேயக் கருத்தினை முழுமையாக சொல்லி பணியாற்றிட அரசியல் தளம் உகந்தது அல்ல என கருதி, நிறைவாக புரட்சிகர மனிதநேயத்தினை  பரப்பிட மறுமலர்ச்சி மனிதநேய இயக்கத்தினை நிறுவுகிறார். இந்தியா அரசியல் விடுதலை பெற்ற பிறகு மனிதநேயத்தினை பரப்பிடும் பணியினை தனது எழுத்து, பேச்சு, பத்திரிகை செயல்பாடு என பல தளங்கள் அமைத்து பணியாற்றி வந்தார்.

பெரியார் மீது பெருமதிப்பு

தந்தை பெரியாரின் பணி பற்றி ஆரம்பகட்ட நாள் களிலேயே எம்.என்.ராய் அறிய நேர்ந்து அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். இருவருக்கும் வயது வித்தியாசம் ஏழு ஆண்டுகள் (தந்தை பெரியார் மூத்தவர்) என இருந்தாலும், இருவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக, சரியான புரிதலுடன் பொதுவாழ்க்கையில் பங்கேற்று சமுதாய மேம்பாட்டுப் பணி ஆற்றினர்.
மிகவும் சங்கடத்துடன் தந்தை பெரியார் ஒரு முறை கூட்டத்தில் கூறிய செய்தி இது:

சொல்வதற்கே வெட்கம்

எம்.என்.ராய் என்ற அறிஞர் ரஷ்யாவில் இருந்தவர். சில காரணங்களால் அவர் ரஷ்யாவைவிட்டு வந்துவிட்டார். அவரிடம் நம் தோழர்கள் நான் எழுதிய புத்தகங்களைக்காட்டி இருக்கின்றனர். அவர் அவைகளை பார்த்துவிட்டு என்னைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். நானும் அவரை காண வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஒரு முறை சென்னைக்கு வந்தபோது நான் அவரை சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் என்ன செய்தார் தெரியுமா? எனக்கே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. என் காலில் விழுந்து வணங்கினார். நான் மிகவும் சங்கடப்பட்டு ஒரு பகுத்தறிவாதி இப்படி நடந்து கொள்ளலாமா! என்று கேட்டேன்.

பிறகு சில நாள்கள் நான் அவருடனேயே சேர்ந்து பிரச் சாரம் செய்து வந்தேன். ஒரு முறை அவர் டேராடூனில் ஒரு விருந்து ஏற்பாடு செய்தார்.விருந்துக்கு வந்திருந்தவர்களி டையே நான் எழுதிய புத்தகங்களைப் பற்றி விளக்கம் செய்து என்னை அறிமுகப்படுத்தினார். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பல முறை எழுந்து எனக்கு மரியாதை செய்தனர். (விடுதலை 22.4.1965).

தந்தை பெரியாரும் எம்.என்.ராய். அவர்களும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து பணியாற்றிவிட்டு கொள்கை அணுகு முறை வேறுபாட்டால் அதிலிருந்து வெளியேறியவர்கள். 1939ஆம்ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வல்லபாய் படேல் தன்னிச்சையாக நடந்து கொண்ட விதத்தைப் பற்றி படேல் கூட்டத்தின் எதேச்சதி காரம் எனும் தலைப்பில் தனது பத்திரிகையான இண்டி பெண்டன்ட் இந்தியா (ஐனேநயீநனேநவே ஐனேயை) வில் எம்.என்.ராய் தலையங்கம் தீட்டினார். பார்லிமெண்ட் முறையைப் பற்றி பாராட்டி பேசுகிறவர் களே தம் காரியம் கைக்கூட வேண்டுமானால் அதைப் புறக்கணிக்கிறார்கள். புரட்சியை விரும்புகிறவர்கள் ஏன் அவ்வழி பற்றி நடக்கலாகாது? நிலைமைகளை மாற்ற விரும்புவதே புரட்சிதான். காந்தி கட்சியை சேர்ந்தவர்களின் தலைமைக்கும் சாமானிய காங்கிரஸ்காரர்களுக்கும் சமரசம் செய்ய முடியாத விரோத குணங்கள் இருக்கின்றன. (குடிஅரசு, 28.5.1939)

படிக்கும்பொழுது மேற்குறிப்பிட்ட வரிகள் 1926ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் ஆளுமையில் காங்கிரஸ் செயல்படுகிறது என்று கூறி அதிலிருந்து தந்தை பெரியார் வெளியேறிய நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன.

எம்.என்.ராய் அவர்களின் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தனது குடிஅரசு இதழில் தந்தை பெரியார் வெளியிட்டு வந்தார். 31.12.1939 நாளிட்ட குடிஅரசில் மதமும் மூடநம்பிக்கையும் எனும் தலைப்பில் எம்.என்.ராய் கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரையில் எம்.என்.ராய் அவர்கள்,

மூடநம்பிக்கையும், வைதீகக் கொடுமையும் இணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள் என எளிமையாக வலிமை யான கருத்தை எடுத்து வைக்கிறார். மேலும் அதே கட்டுரை யின் ஒரு பகுதியில், ஆரம்பக் கால மக்கள் ஜடபொருள்களை தங்கள் இறைவனாக ஏற்று வணங்கி வந்தார்கள். உதா ரணமாக கல், மரம், (மிருகம்கூட) இவைகளால் நாகரிகமற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட பல கிளைகளையும்தான் தெய்வமாகக் கொண்டாடினார்கள். அந்த கொள்கை அடைந்த வளர்ச்சியின் பயன்தான் பல்வேறு கடவுள்களில் நம்பிக்கை உண்டாயிற்று. அதன் வளர்ச்சி அவரவர்கள் கொண்ட மனோ சக்தியின்படி உருவங்களாக உதயமாயிற்று. இவை எப்படி ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்தது என்பதை அன்றைய மக்கள் அறியமாட்டார்கள். அவ்வளவு தெளிவாக ஆதி காலத்தில் இந்த கடவுள்கள் மேல் மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கைக்குக் காரணம் அவைதான். மனிதசக்திக்கு மேம்பட்ட சக்தியை உடையன என்று எண்ணிய எண்ணம் இவைகளுக்குள்ள காரணங்கள் ஏராளமாய் உண்டு. இத்தகைய நம்பிக்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆணிவேர், அன்று ஏற்பட்ட இடி மின்னல் பூகம்பம் போன்றவையே. இந்த எதிர்பாரா சம்பவங்களால் ஏற்பட்ட இடையூறுகளே காரணம் என்னும் மூடநம்பிக்கையில் முளைத்த பயம் என்ற பழுதுள்ள சொல்தான். இந்த பயத்தைப் போக்க கடவுளைத் தஞ்சம் அடைந்தான் மனிதன். தன்னை தியாகம் செய்தால்தான் கடவுள் கிருபை கிடைக்கும் என எண்ணினான். அந்த எண்ணம் ஆழமாக இடங்கொண்டது. இந்நாட்டின் மக்கள் மனதில், இந்த தியாகத்தில் இறங்கினார்கள் ஏராளமானோர்

இந்நாட்டுமக்கள். புரோகிதக் கூட்டம்

காலப்போக்கில் இந்த மக்களைக் கொண்ட கூட்டம் ஒரு புரோகிதக் கூட்டமாக ஏற்பட்டது. இவர்கள் இறைவனின் ஆசியினைப் பெற்றவர்கள் என்ற எண்ணம் வளர்ந்தது. அதன் பயனாய் கடவுளின் மாற்றமுடியா அபிப்பிராயங்களை அறியும் ஆற்றல் உள்ளவர்களும், அந்த கூட்டம்தான் என்ற அபிப்பிராயமும், ஆதரவும் பெற்றது அதிகமாக. இந்த கடவுளின் ஆசியினைப்பெற்றவர்கள் அநேக மார்க்கங்களை ஆக்கினார்கள். இந்த கூட்டத்தின் புதிய மார்க்கமும், மக்களின் மூடநம்பிக்கையும் சேர்ந்து புரோகித கூட்டத்தை புதியதொரு மேலான ஸ்தானத்தில் வைத்துவிட்டது. அவர்கள்தான் சர்வ சக்தி உள்ளவர்கள் என்ற இடத்தை இந்நாட்டில் அடைந்து விட்டார்கள். (குடிஅரசு, 31.12.1939). மேலும், விடுதலையில் வெளியிடப்பட்ட முரண்பட்ட மதமும் மூடநம்பிக்கையும் அழியவேண்டும் எனும் கட்டு ரையில் எம்.என்.ராய். குறிப்பிடுகிறார்:

மேலைநாட்டு மறுமலர்ச்சியையும், இந்நாட்டு மறுமலர்ச் சியையும் நாம் ஆராயப் புகுவோம். மேலைநாட்டு அய்ரோப் பியர்களின் மறுமலர்ச்சி இருவகை கொண்டது. முதலாவது, அய்ரோப்பியர்களின் முன்னோர்கள் பற்றிய தத்துவங் களையும், அவரது பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளை யும், அறிவதாகும். இரண்டாவது பழங்கால கிரேக்கர் களிடமிருந்து அய்ரோப்பிய அறிஞர்கள் அறிவியல் கலை அறிவையும் தத்துவங்களையும் பரப்பியது பற்றி அறிவதாகும்.

நம்முடைய பழங்கால புராணம் கட்டுக்கதை, மதம் ஆகியவைகளிலிருந்து நம்மை விடுவித்து மனிதப்பண்பை வளர்க்க வேண்டும். நமக்கு நம் புராணங்களிலும் இதிகாசங் களிலும் ஒருவிதப் பயனும் இல்லை. அவை நம்மை புத்துல கிற்கோ, மனித பண்பை வளர்ப்பதற்கோ பயன்படாது. (விடுதலை, 12.12.1949)

கட்டுரை வரிகளைப் படிக்கும்பொழுது எம்.என்.ராய் கருத்துகள் தந்தை பெரியாரது கருத்துக்களோடு, அவரது கணிப்புகளோடு எப்படி ஒத்துபோய் இருக்கின்றார் என அறிய முடியும். இருவரது கட்டுரைகளிலும் எழுதியவர் பெயரை மாற்றிப் போட்டாலும், கருத்து விளக்கம் ஒன்றாகத்தான் அமையும். அது மாற்றம் பெறாது. ஒருமித்த கருத்தினை உரத்துச் சொன்னவர்கள் தந்தைபெரியாரும், எம்.என்.ராயும். இவ்வாறு ஒத்த கருத்துக்கொண்ட சமுதாய புரட்சியாளர்கள் இணைந்து பணியாற்றியதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

1941 ஆம் ஆண்டு அந்நாளைய சென்னை ராஜதானியில் எம்.என்.ராய் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கூட்டங்களில் உரையாற்றுகிறார். 20.2.1941 அன்று மாலை சென்னை வி.பி.ஹாலில் தேசிய ஜனநாயக கட்சி மற்றும் அமிதவாத ஜனநாயக கட்சி சார்பிலும் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் தலைமையேற்றிட எம்.என்.ராய். ஆற்றிய உரையின் சில பகுதிகள்:


பார்ப்பனர் அல்லாதார் இயக்கச் சிறப்பு

தென்னிந்தியாவில் தேசிய இயக்கம் என்பது இருக்கு மாயின் அது பார்ப்பனர் அல்லாதாரை பெருவாரியாகக் கொண்ட இயக்கமாகத்தான் இருக்க வேண்டும். இங்கு பார்ப்பனர் அல்லாத மக்களின் ஆதரவு பெறாத எந்த இயக்கமும் நம் நாட்டு விடுதலை இயக்கமாக இருக்க முடியாது....

நாட்டு மக்களுக்கு உகந்ததோர் சுதந்திரம் வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமன்றி சமய, சமூக, வர்க்க, வகுப்பு, ஏற்றத் தாழ்வு வித்தியாசம் பாராட்டாது, நாட்டு மக்கள் அனை வருக்கும் சகல விதங்களிலும் உண்மை, சுயேச்சையும், சுதந்திரமும் தருவதாக இருத்தல் இன்றியமையாதது......

அகிம்சை கொள்கை என்று பேசப்படுவதும் வெறும் பித்தலாட்டமாகும்....

பாசிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை நான் மேற்கொண்ட தால்தான் என்னை காங்கிரஸில் இருந்து வெளிக்கடத்தி விட்டார்கள். காங்கிரஸ் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பிரதிநிதி என்று உரிமைப்பாராட்டிக் கொள்வது எந்த வகையிலும் பொருத்தமானதாகாது. ஏனெனில் காங்கிரஸில் சேராமல் 80 சதவிகித மக்கள் இங்கு இருக்கின்றனர். எனவே இவ்விதம் தகாத முறையில் உரிமைக்காண்டு பேசுவது ஜனநாயக் கொள்கையோ, சுதந்திர கொள்கையோ ஆகாது. (விடுதலை, 22.2.1941)
23.2.1941 அன்று சென்னை வாலிபர் மன்றத்தில் பங்கேற்று கூட்டாட்சி தத்துவம் பற்றி எம்.என்.ராய் பேசுகிறார். பேச்சை துவக்குவதற்கு முன்பு கீழ்க்கண்ட கருத்தை மிகவும் வருத்தத்துடன் எம்.என்.ராய் வெளியிட்டார். சென்னை பத்திரிகைகள் (ஆரியத்தாள்கள்) என்னை ஆதரிக்க பின்னுற் றும், என் கொள்கைகளை நாட்டினர் அறிந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையும் கொண்டு, என் பொது மேடைப் பேச்சுகளை ஒழுங்காகவும் உண்மையாகவும் பிரசுரிக்க மறுத்த ஒரு பட்ச போக்கு கொண்டிருப்பது கண்டு நான் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைய வேண்டி இருக்கிறது.

கூட்டாட்சித் தத்துவம் பற்றி அந்தக் கூட்டத்தில் எம்.என்.ராய் வெளிப்படுத்திய கருத்துகள்:

இந்தியாவை ஒரு ஆட்சி சரகமாக்குவதைவிட அய்ரோப்பா கண்டத்தை ஒரு ஆட்சிசரகமாக்குவது எளிதா கலாம். நாற்புற இயற்கை எல்லைக்குட்பட்ட இந்த இந்தியா நாட்டிலே உள்ள எண்ணற்ற பாஷைகள், கணக்கற்ற மதங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், சம்பிரதாயக் கொள்கை வேறுபாடுகள், அய்ரோப்பா கண்டத்தில் உள்ளதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கின்றன. மனித சகோதரத்துவத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய எல்லை மதில் கட்டி விடலாம் என்று அவர்கள் (காங்கிரஸ்) பெரும் கனவு கண்டு வருகிறார்கள். இது வீண் ஆகாயக் கோட்டை. இதைவிடுத்து வர்க்கத்திற்கு ஒரு வட்டாரம் அமைக்க தோது செய்வதுதான் தகுந்த உபாயமாகும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டாட்சி பற்றி இவர்கள் வண்டி வண்டியாய் பேசுகின்றனர். ஆயினும் அந்த கூட்டாட்சியின் அங்க அவயவ லட்சணங்கள் இன்னின் னவை என்பது பற்றி உருப்படியான பேச்சைக் காணோம். இந்தியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இருப்பதை வரவேற்க இந்திய அரசியல்வாதிகள் பலர் சித்தமாக இருக்கின்றனர். இப்படி இருக்க இந்தியா தனி வட்டாரங்களை கொண்ட கூட்டாட்சி நாடாக இருப்பதை இவர்கள் ஏன் எதிர்க்கவேண்டும்? இந்த உரிமையை ஏன் மறுக்கின்றனர்...... வர்க்க வகுப்பு கலாச்சார மொழி வட்டார பிரிவினை செயற்கைக் கற்பனை சிருஷ்டியல்ல. (விடுதலை, 25.4.1941)

எம்.என்.ராய் எழுபது ஆண்டுகளுக்கு முன் பேசிய வரிகள், இன்றும் பொருந்தி வரும் சூழல்கள் நிலவுவதை, படம் பிடித்து காட்டுவதாய் உள்ளது.

காங்கிரஸ் இயக்கத்தில் எம்.என்.ராய் அவர்கள் இருந்தபொழுதும் சென்னைக்கு வந்துள்ளார். காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்பும் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு சூழல்களிலும், எம்.என்.ராய் பார்க்கப்பட்ட பார்வையினை விடுதலை நாளிதழின் (25.2.1941) தலையங்கம் விரிவாக வெளிப்படுத்துகிறது.

தோழர் ராய் அவர்கள் 2, 3 வருடங்களுக்குமுன் ஒரு தடவை இந்த நாட்டுக்கு வந்திருந்தாலும், அப்போது அவருக்கு இம்மாதிரியான ஆடம்பர வரவேற்பும் பெருங் கூட்டங்களும் நடக்கவில்லை. ஆனாலும், பார்ப்பன ஸ்தாபன மாகிய காங்கிரஸின் ஆளாக அப்போது வந்தபடியால் அவ ருக்கு பார்ப்பனப் பத்திரிகைள் ஏராளமான விளம்பரங்களும், உண்மைக்கு மாறான தடபுடல் செய்திகளும் பிரசுரித்து பயன் படுத்திக்கொண்டன. ஆனால், அதே பார்ப்பனர்கள் இப்போது ராய் அவர்கள் பார்ப்பன ஸ்தாபனமான காங்கிரஸை விட்டுப் பிரிந்து அதன் (காங்கிரஸின்) உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிற வராய் வந்ததால் பார்ப்பன பத்திரிகைகள் அவரது வரவைப் பற்றியும், வரவேற்பைப் பற்றியும் அவரது மீட்டிங்குகளை பற்றியும் திரித்தும், மக்கள் சாதாரணமாகவும் தப்பாகவும் நினைக்கும்படியும் பிரசுரிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பிரசுரித்து வந்தன - வருகின்றன. இந்த விபரத்தை தோழர் ராய் அவர்கள் உணர்ந்து இந்நாட்டு பத்திரிகைகள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று பேசியிருக்கின்றார்.

இந்தக் கஷ்டத்தை இந்தநாட்டில் ராய் ஒருவர் மாத்திரம் அனுபவிக்கவில்லை. ஒரு காலத்தில் பண்டிதர் ஜவகர்லால் அவர்கள் வந்தபொழுது, இந்த நாட்டு பார்ப்பனர்கள் காந்தியை அழுத்திவிட்டு சீனிவாச அய்யங்காரை தலைவ ராக்க கூலிப்பிரச்சாரங்கள் செய்கின்றன என்று குறைகூறிய காலத்தில் அவரது பேச்சையும், நடத்தையையும், திரித்துக்கூறி பிரசுரித்தன. அவரைப் பற்றியும் கேவலமாக எழுதின. பண்டித நேரு அவர்கள் ஒரு காங்கிரஸ் அறிக்கையில் கூட தென்னிந்திய பத்திரிகைகளைக் கண்டித்து குறிப்புக்காட்டி இருந்தார். தோழர் காந்தியாரைப் பற்றிக்கூட ஒரு காலத்தில் அவர் தென்னிந்திய பார்ப்பனர்களுக்கு அனுகூலம் இல்லாத விஷயங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்த காலத்தில் அவரையும் அவரது கொள்கையையும் திரித்துக்கூறி எழுதினார்கள். இதைப் பற்றியும் அவர் தென்னிந்தியாவில் ஒரு தடவைக்கு மேல் தென்னிந்திய பத்திரிகைகளை கண்டித்துப் பேசி இருக்கிறார்.

தோழர் ராய் அவர்களது முக்கியத் திட்டங்கள் இரண்டு ஒன்று, யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது. இரண்டு: காங்கிரஸ் பொது ஜனங்களுடைய ஸ்தாபனம் அல்ல என்பதையும் ஏழை மக்களுக்கு கேடானது என்பதையும் பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என்பது. இந்த இரண்டு விசயத்திலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வித அபிப்ராய பேதமும் இல்லை. தோழர் ராய் அவர்களுக்கு முன்னதாகவே நமது ஜஸ்டிஸ் கட்சி இக்கொள்கையை கொண்டிருந்து வருகிறது. தோழர் எம்.என்.ராய். வரவு எனும் தலைப்பில் வெளி வந்த தலையங்க மேற்குறிப்பிட்ட வரிகள், திராவிடர் இயக்கம் நூறாண்டு காணும் நிலையிலும் அன்று நிலவிய சில நாட்டு நடப்புகள் இன்றும் தொடர்கின்ற நிலைமைகளை வெளிப்படுத்து கின்றன. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் நீடிக்கின்ற நிலைமைகள் புதிய வடிவில் தொடர்கின்றன. தந்தை பெரியாரும் எம்.என்.ராயும் மானிடம் மேம்பட அரும்பாடுபட்ட உன்னதத் தலைவர்கள். அவர்களது சிந்தனை களையும், கருத்துப் பிரச்சாரங்களையும் மேலும் வலிமையாகப் பயன்படுத்த வேண்டிய சூழல்கள் உருவாகி வருகின்றன. அவர்களது நினைவுகளைப் போற்றுதல் என்பதைவிட அவர்களது கருத்துகளை மக்களிடையே பரப்புவதன் மூலம் அவர்கள் அமைத்திட நினைத்த புதிய சமுதாயத்தை முழுமையாகப் படைத்திட முடியும். சமத்துவ நிலை பெருகி மனிதநேயம், மக்களிடம் நிலவிட இயலும். புவியியல் எல்லைகள், அரசியல் தடுப்புகள், மொழி இடைஞ்சல்கள் இவைகளைத் தாண்டி மனிதஇனம் மாண்படைய உழைத்த அறிஞர்களை, தலைவர்களை பெரியார் இயக்கம் போற்றிடத் தவறியதில்லை. அவர்களது கருத்துகளை எடுத்துக்கூறிட தயங்கியதும் இல்லை. மனிதநேய கருத்துப்ப ரவலில் உலகலாவிய பரந்துபட்ட போக்கே பெரியார் இயக் கத்தின் அணுகுமுறையாக, அதன் இன்றைய தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் கடைப் பிடிக்கப்பட்டுவருகிறது.

மனித இனம் சிறிய உயிரினங்களிலிருந்து படிப்படியாக வளர்ந்து உருவாகியது எனும் பரிணாமக் கொள்கையினை நிறுவிய சார்லஸ் டார்வின் 200ஆவது பிறந்தநாள் விழா வினை தமிழ்நாடெங்கும் பெரியார் இயக்கம் கொண்டாடியது. அண்மையில் அமெரிக்க நாட்டில் காலமான, நாத்திகம் பேசிய சீரிய எழுத்தாளர் கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ் அவர்களுக்கும் படத்திறப்பு நடத்தி, அவர்தம் பெருமையினைப் போற்றியது. இந்நாட்டு நாத்திகர், மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி பிரேமானந்த் அவர்களுக்கும் இந்திய பகுத்தறிவாளர் சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தியது.

தந்தை பெரியார் உடன் இணைந்து பணியாற்றி மனிதநேய கருத்துகளைப் பரப்பிய எம்.என்.ராய். அவர்களின் 125ஆவது பிறந்தநாள் விழாவினையும் பெரியார் இயக்கத்தின் அங்க மான பகுத்தறிவாளர் கழகம் இன்று (21.3.2012) சென்னையில் நடத்துகிறது. பெரியாருடன் பணியாற்றிய எம்.என்.ராய் பற்றி பெரியாரின் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் கி.வீரமணி, பேருரையாற்றுகின்றார். பேராசிரியப் பெருமக்கள் பங்கேற்றிட உள்ளனர். மானிடம் மேம்பட பாடுபட்ட தலைவர் களின் கருத்துகளை மக்களிடம் கொண்டுச்செல்லும் பெரியார் இயக்கத்தின் பணி ஒருநாள் நிகழ்வல்ல; அது தொடர்பணி; தொய்வில்லா பணி; அந்த தொண்டறப் பணிகள் என்றும் தொடரும்!

வாழ்க தந்தை பெரியார்! வாழ்க எம்.என்.ராய்!

வளர்க அவர்தம் சிந்தனை நடைமுறைகள்!

பெருகிடுக மனிதநேயம்!

எம்.என்.ராய் சிறு குறிப்பு

மானேபேந்திர நாத் ராய் என அழைக்கப்படும் புரட்சிகர மனிதநேயர் எம்.என்.ராய் அவர்களின் இயற்பெயர் நரேந்திரநாத் பட்டாச்சார்யா. இந்திய தேசீய புரட்சியாளர் என அழைக்கப்படும் எம்.என்.ராய் பன்னாட்டு அளவில் அறிப்பட்ட புரட்சிகரப் போராளி மற்றும் அரசியல் கோட்பாட்டு வித்தகர் ஆவார். 1887 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆவது நாள் பிரிட்டிஷ் இந்தியாவின், வங்காளத்தில் சங்கிரிபோடா எனும் ஊரில் பிறந்த எம்.என்.ராய், 1954 ஆம் ஆண்டு ஜனவரி 25இல் டேராடூனில் மறைந்தார்.

66 ஆண்டு காலம் வாழ்ந்த எம்.என்.ராய் அவர்களது பொது வாழ்க்கைப் பணி மகத்தானது. மனிதநேயம் மக்களிடம் பல்கிப் பெருக பாடுபட்ட மாண்பாளராக திகழ்ந்தார். அவரது வாழ்க்கைப் பயணம் உலகளாவியது. தந்தை பெரியாரது வரிகளில் இதோ எம்.என்.ராய்: தோழர் ராய் சாமானியப்பட்டவர் அல்லர். அவர் ஒரு மாபெரும் உலக இயக்கத்தில் தொண்டாற்றியவர். உலகம் முழுவதும் பெயர் பெற்றவர். நல்ல அனுபவ சாலி. பலவித கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர். இன்றைய தேச பத்கர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எவரையும்விட அதிக காலம் தண்டனை அடைந்து சிறையில் அல்லல்பட்டவர்.

எம்.என்.ராய் அவர்களது அப்பழுக்கற்ற பொது வாழ்க்கைப் பணிக்கு தந்தை பெரியாரின் கூற்றே சரியான அடையாளமாகும்.http://viduthalai.in/page-6/30407.html

Sunday, March 18, 2012

நித்யானந்தாவே, ஓடாதே நில்

நித்யானந்தா, நித்யானந்தா என்ற ஒரு காஷாயதாரி சென்னைக்கு வந்து ஆடம்பரமான ஓட்டலில் தங்கி அட்டகாசமாக செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த அவசியம் அவருக்கு ஏன் வந்தது? தான் உத்தம புத்திரன் என்று நிரூபிக்க வேண்டிய அவசரமான நெருக்கடிப் பிரசவம் ஏன் ஏற்பட்டது?

திராவிடர் கழகத் தலைவரை ஏன் இப்படி விழுந்து பிராண்டுகிறார்?

திராவிடர் கழகம் இது போன்ற காஷாயதாரிகளின் கபட கபாலங்களை நொறுக்கி வருகிறதே என்ற ஆத்திரத்தால், ஆபாச ஆசாமியைக் கைது செய் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது அந்த ஆத்திரத்தால்தானே!

திராவிடர் கழகத் தலைவர் மீது விழுந்து சேற்றை வாரி இறைப்பதற்கு முன், முதலில் அவரின் சீடர்களுக்கு ஏற்பட்ட கோபத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

நடிகை ஒருவருடன் இவர் நடத்திய கோபால கிருஷ்ண லீலைக் காட்சியைத் தொலைக் காட்சியில் பார்த்த பக்தர்கள்தானே, சீடர்கள்தானே நித்யானந்தாவின் ஆசிரமங்களை நாடெங்கும் சூறையாடினார்கள்? தீவைத்துக் கொளுத்தினார்கள்? அதனைக் கண்டிக்கத் துப்பில்லை - ஆசிரியர் வீரமணி அவர்களின் மீது ஆக்ரோஷமாகப் பாய்வானேன்?

இவர் யோக்கிய சிகாமணி என்றால், குற்றமற்ற கோமான் என்றால், ஏன் வடக்கே ஓடித் தலைமறைவாக வேண்டும்?

கொலைகாரர்கள் கூட நாணயமாக நீதிமன்றத்தில் ஆஜராகும் ஒரு நிலையில், ஆண்டவனோடு நேரில் அளவளாவும் இந்த ஆசாமி ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

இவரது பரமார்த்த சீடர் ஒருவர் அமெரிக்கர். அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்தச் சாமியார்களின் வேட விளக்கில் விட்டில் பூச்சிகளாக வீழ்கிறார்கள்.

அந்த அமெரிக்க சீடர் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் நித்யானந்தா பற்றி புகார் கொடுத்துள்ளாரே - மறுக்க முடியுமா?

அறைகளில் நித்யானந்தா பெண்களுடன் இருக்கும் போது என்னைத்தான் பாதுகாவலாக நிறுத்தி வைப்பார்; நித்யானந்தா நடத்தும் யாக குண்டங்களில் காய்ந்த கஞ்சா விதைகளைப் போடுவார்.

2007 ஆம் ஆண்டு நித்யானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருவரை கலிபோர்னியாவுக்குக் கூட்டி வந்தாரு. அந்த நடிகை திருமணம் ஆனவர்தான். அந்த நடிகை கூட என் வீட்டில் 15 நாள் தங்கி இருந்தார். அந்த நடிகைக்கும், நித்யானந்தாவுக்கும் செக்ஷூவல் ரிலேஷன்ஷிப் இருந்ததை நான் புரிஞ்சிக்கிட்டேன். அதைப் பற்றி அவரிடமே கேட்டேன்.

கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்னு என்னிடம் சிரிச்சிக்கிட்டே சொன்னார் என்று எழுத்து வடிவத்திலேயே கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலிடம் கொடுத்துள்ளாரே அவரின் அமெரிக்க அந்தரங்க சீடர்.

ஆசிரமத்திற்கு வந்த பல பெண்களுடன் குரூப் செக்ஸ் வச்சுகிட்டதையும் என்னால் உணர முடிந்தது. பல பெண்களோடு சந்தோஷமாக அவர் இருந்ததை அவர் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை.

சனாதன கோவிலில் நித்யானந்தாவின் பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக் கிரகத்துக்குப் பக்கத்திலேயே சகல வசதிகளோடு கூடிய சொகுசு அறை இருக்கும். அவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக மான அறை அது என்று அவரின் சீடர்தானே விலா வாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகை நித்தியானந்தாவின் பல ஆபாச அணுகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறது. "நான் கிருஷ்ணன். நீ என்னோட கோபிகை!" என்ற வசனத்தைத்தான் பக்தைகளிடம் அடிக்கடி கூறுவாராம் இந்த நித்தியானந்தா. (அதாவது நித்யமும் ஆனந்தமாக இருக்கும் ஆசாமி என்றும் பொருள் கொள்ளலாம்).

பாலுறவு மூலம் மோட்சத்தை அடையமுடியும் என்ற நிபந்தனையை ஏற்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பெண்களிடம் லீலைகளை நடத்தினார் என்றால் இந்த ஆசாமி எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்க வேண்டும். இந்த ஆபாசமான தகவல்கள் கருநாடக் காவல்துறையின் 430 பக்கக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனவே!

இவையெல்லாம் தவறான தகவல்கள் என்று நீதி மன்றத்தில் நிரூபித்து நிரபராதி என்று வெளியில் வருவதுதான் யோக்கியர்க்கு அழகு. தேவையில்லாமல் ஆத்திரத்தின் அலை மோதலில் திராவிடர் கழகத் தலைவரைச் சீண்டுவது ஏன்? (பாவம்! ஆழம் தெரியாமல் காலை விட்டுப் பார்க்கிறார், புலி வாலை மிதிக்கப் பார்க்கிறார்.)

வீரமணியிடம் விவாதிக்கத் தயாரா என்ற கேள்விக்கு நெளிந்து வளைந்து ஏதேதோ வார்த்தைகளைப் போட்டுக் குதப்பி (அவர் பேட்டி . . பதிவு செய்யப்பட்டுள்ளது - நம்மிடம் உள்ளது.) கடைசி கடைசியாக ஆரோக்கிய மானதாக இருந்தால் தயார்தான். ஆனாலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விடுமே என்று அஞ்சுகிறாராம்.

நித்யானந்தா போன்றவர்களிடம் வாதிட திராவிடர் கழகத் தலைவரா வேண்டும்? தமிழ்நாட்டில் ஒரு தேதியையும் இடத்தையும் சொன்னால் திராவிடர் கழகத்தின் தொண்டர் ஒருவரை அனுப்பி வைக்கத் தயார்! தலைவர் வீரமணியின் பொதுவாழ்க்கை வயதுகூட உம் வயது கிடையாதே!

சங்கராச்சாரியார் போன்றவர்கள் விவாதத்துக்கு வந்தால் அப்போது வேண்டுமானால் திராவிடர் கழகத் தலைவர் நேரிடையாக விவாதிக்க வருவது பற்றி யோசிக்கலாம்.

கடைசியாக ஒன்று. நித்யானந்தா போன்ற காஷாய தாரிகள் அந்தராத்மாவோடு நேரடியாகப் பேசுபவர்கள் ஆயிற்றே!

(1) அத்தகையவர் எப்படி குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றார்?

(2) தன்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. பகவானே நீயே பார்த்துக் கொள் என்று சிவனே என்று இல்லாமல் எதற்காக வக்கீல்களைத் தேடுகிறார்? பத்திரிகையாளர் களுக்குப் பேட்டி கொடுக்கிறார்?

(3) ஏன் இமாச்சலப் பிரதேசத்துக்கு ஓடி ஒளிய வேண்டும்? (அங்குதான் கைது செய்யப்பட்டார்!)

(4) அப்படி என்றால் இவருக்கே, தான் நம்புவதாகக் கூறும் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று ஒப்புக் கொள்வாரா?

அய்ம்பொறிகளையும் மூடிக் கொண்டு ஒழுங்காக இருந்தால் வண்டவாளங்கள் எல்லாம் மறுபடி தண்ட வாளத்தில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காதே!

பணத்திமிரும், பாலியல் உணர்வில் திகட்டிப் போகாத வாலிபக் கொழுப்பும், நாட்டு அரசியல் மாற்றங்களும் மறுபடியும் வாலாட்ட வைத்துள்ளது - விளைவு வட்டியும் முதலுமாகக் கிடைக்கப் போவதுதான் மிச்சம் - சட்டம் தன் கடமையைச் செய்யுமே!

மின்சாரம் 
http://viduthalai.in/page-8/30211.html 

weather counter Site Meter