Pages

Search This Blog

Sunday, October 23, 2011

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கண வாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரி விக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தை யும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்த வர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப் பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்-களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்-கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத் திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந் திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக் கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர் களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்-கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண் டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படு பாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளை-யடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்-கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவி டர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவி டர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழைமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திரா-விடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூ-தனர், பிசாசு, பூதம் என்று குறித்துள் ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர் கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந் துபவர். அசுரன் என்றால் மது அருந் தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்-கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்-துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்-பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டி-கை-கள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்-களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

- விடுதலை, 27.10.2005

திராவிடர் - தமிழர் - தந்தை பெரியார்

ஆரியர் பழக்க வழக்கமும் அவர்களது மதம், கடவுள் ஆகியவைகளும் அவை பற்றிய யோக்கியத் தன்மை, சக்தி, நடப்பு முதலியவைகளும் தமிழர்களாகிய நமக்குப் பெரிதும் பொருத்த மற்றவை என்பது நமது கருத்தாகும்.

இதை மறந்து அவற்றுள் எதையாவது நமக்கு பொருத்த முள்ளதென்றும் அவை நம்முடையவையே ஒழிய ஆரியருடைய தல்ல வென்றும் நம் சைவப் பண்டிதர்களைப் போல் தமிழர் யாராவது ஆதாரத்தோடு வழக்காடுவார்களேயானால், அப்படி இருந்தாலும் அவை அந்த (அதாவது மக்கள் இன்றைய அறிவுபெறாத அந்த) காலத்தில், அதுவும் ஒரு சமயம் அன்று இருந்த மக்களுக்குப் பொருத்தமாயிருந்தாலும் இருக்கலாமே ஒழிய இந்தக் காலத்திற்கு அவை கண்டிப்பாய் ஒதுக்கித் தள்ள வேண்டியவைகளோயாகும் என்பதும் நமது அபிப்பிராயம்.

அதற்காக வேண்டியே, அதாவது அவைகளை நம் மக்கள் உணரவேண்டு மென்பதற்கு ஆகவே, அவைகள் பற்றிய ஆதாரங்களை ஆரியர்களாலும், ஆரியர்களின் கொள்கைகளுக்கும் அவர்களது மதம், கடவுள்களுக்கும் அடிமைப்பட்ட நம் பண்டிதர்களாலும், கற்பிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்தே சில எடுத்து அடிக்கடி குடிஅரசுவில் எழுதி வரப்படுகிறது.

அந்தப்படி இவை சம்பந்தமாக குடிஅரசுவில் எழுதி வந்ததும் வருவதுமான சேதிகள் கண்டிப்பாக ஆரியர் களால் ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆதாரங்களி லிருந்தும், அவைகளை ஆரியர்களாலேயே மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்புகளிலிருந்தும், மற்றும் அவற்றை நம் தமிழ்ப் பண்டிதர்களால் மொழி பெயர்த்தோ அல்லது ஆரியர் மொழிபெயர்த்ததைக் கவிகளாகப் பாடிய கவிகளிலிருந்தோ எடுத்துக் கையாளப்படுபவைகளேயல்லாமல் கற்பனையாக எந்தச் சங்கதியும் குறிப்பிடப்படுவதில்லை என்பதை மறுபடியும் வாசகர்களுக்கு உணர்த்துகிறோம்.

பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ அவர்களது பழக்க வழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் அவர்களுக் குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை. அக்கால மானாபிமானத்துக்கும், இக்கால மானாபிமானத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே ஆரியர்கள் சகல துறைகளிலும் அக்காலத்திய ஆரியர் வாழ்வில் பூரண சுயேச்சையோடு எவ்விதக் கொள்கையும் இல்லாமல் அவரவர்கள் இச்சைப்படி விலங்குகள் போல் வாழ்ந்து வந்ததாகவே தெரிகிறது. அதனால்தான் வள்ளுவர்,

தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்

என்று பாடினார்போலும். (தேவர்-ஆரியர்)

நாளாவட்டத்தில் அவர்கள் இந்தக் கால தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எது மேன்மையாகக் கருதப்படுகிறதோ அதைத் தங்கள் பழக்கவழக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு வந்து இன்றைய நிலைமைக்கு அவர்கள் வந்திருக்கக்கூடும் என்றாலும் வேத புராண இதிகாச காலங்களில் அவர்கள் மிருகப் பிராயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதே அவற்றி-லிருந்து தெள்ளென விளங்குகின்றதாகும்.

நம் பண்டிதர்கள் பெரிதும் அவற்றை தங்கள் சமயத்திற்கும், தங்கள் கடவுள் நடப்புக்கும் பொருத்திக் கொண்டால் அந்தக் கேவலமான சேதிகளை வெறுக்க யோக்கியமற்றவர்களாகி மூடிவைத்துத் தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதனாலேயே அவை நம்மாலும் வெறுக்கப்படாமல் உயர் சமயமாகப் போய்விட்டதெனலாம்.
அந்தக் காலத்தில் கணவன் மனைவி என்கின்ற கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம் இன்று இருப்பதில் 100 இல் ஒரு பங்கு இருந்ததாகக்கூடத் தெரியவில்லை.

அந்தக் காலத்து நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, நல்லெண்ணம், பிறநலம் பேணுதல் முதலிய நற்குணங் களும் இக்காலத்தவைகளுக்கு மிகமிக மாறுபட்டதும் தாழ்ந்ததுமாகவே இருந்து வந்திருக்கிறது.

அந்தக்கால ஆரியர்களுக்கு ஏதாவது ஒரு சமயம் இருந்திருப்பதாகக்கூடத் தெரியக் காணுவதில்லை. அவர்களுக்கு அப்போது ஏதாவது ஒரு கடவுளோ, பல கடவுள்களோ இருந்திருந்ததாகவும் தெரிய முடியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச பூதங் களையும், சூரிய சந்திரன் முதலியவைகளையும் மனி தனைப் போல் உருவகப்படுத்திக் கொண்டு தங்களுக்கு வேண்டியதை நல்கும்படி வேண்டிக்கொண்டு இருந் திருக்கின்றார்கள். அப்படி வேண்டியிருப்பதாலும் ஒரு கவனிக்கத்தக்க சமயமென்ன வென்றால், தங்களுடைய ஒழுக்க ஈனங்களையும் மோசடிகளையும் அவைகளுக்கும் கற்பித்து இருக்கின்றார்கள்.

ஆரியர்களின் முதல் ஆதாரம் வேதம் என்பதாகத் தான் தெரிகிறது. அந்த வேதம் பெரிதும் விபசாரம், மது, மாம்சம் அருந்துதல், தாங்கள் அல்லாதவர்களை (ஆரியரல்லாதவர்கள்) இழிவாய் பேசுவதும், அவர்களை அடியோடு அழிக்கவும், தங்களுக்கு ஏவலாகக் கொள்ளவும், பழிவாங்கும் தன்மைபோல் கொடுமை செய்வதும் ஆன காரியங்களையே கொள்கையாகவும், பிரார்த்தனையாகவும் கொண்டிருக்கிறார்கள்.

வேதத்திலும் அதன்பின் ஏற்பட்ட வேதசாரமான புராணக் கதை, காவிய இதிகாசங்களிலும் பார்த்தால் தகப்பன்- மகள், அண்ணன்- தங்கை என்கின்ற பேத முறைகூட இல்லாமலும், மிருகம்- மக்கள் என்கின்ற இன பேதம்கூட இல்லாமலும், ஆணும் ஆணுமாகவும் இன்னமும் எத்தனையோ விதமாக இயற்கைக்கு விரோதமாக சேர்க்கையுடன் இருந்து வந்திருப்பதாகப் பல இடங்களில் காணப்படுகின்றன.

இவைகளையெல்லாம், ஏதோ காட்டுமிராண்டி காலத்துக் கொள்கை என்றும், எந்த சமூகத்திலும் மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்றும், ஒரு விதத்தில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றாலும், மேற்கண்ட விஷயங் களைக் கொண்ட ஆதாரங்களை இன்று ஆரியரும், தமிழரும், தங்கள் தங்கள் சமய ஆதாரங்கள் என்றும் தங்களால் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டிய புண்ணிய சரித்திரங்கள், புண்ணிய காரியங்களில் என்றும் பிரசங்கித்துப் பிரச்சாரம் செய்கின்றார்களே இதற்கு என்ன சமாதானம் என்பது நமக்கு விளங்கவில்லை.

சிவன், விஷ்ணு, பிரம்மா, சுப்பிரமணியன், இராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களைப் பற்றிப் பிறகு யோசிப்போம். அக்கினி, வாயு, வருணன் முதலிய பஞ்சபூதக் கடவுள்களைப் பற்றியும் பிறகு யோசிப்போம். இந்திரன் என்கின்ற கடவுளைப் பற்றி ஆரியர் கள்தானாகட்டும், தமிழர்கள் தானாகட்டும், அக் கடவுள்களின் கதைகளையும், பண்டிகைகளையும் எதற்கு ஆக கொண்டாட வேண்டும் என்று கேட் கின்றோம்.

இந்திர விழா சிலப்பதிகாரத்திலேயே கொண்டாடப் பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆரியர்கள் தவிர தமிழர்களும் ஆதி காலத்தில் இருந்தே இந்திர விழாவைக் கொண்டாடி இருக்கின்றார்கள் என்றும் ஆதிகாலத்திலிருந்தே தமிழர்கள் தன்மானமிழந்து ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்றும் தெரியவருகிறது. பழந்தமிழ் அரசர்கள் என்று சொல்லி உரிமை கொண்டாடப்படுபவர்களான மூவேந்தர் (சேர சோழ பாண்டியர்) எவருமே உண்மைத் தமிழனாக இருந்ததாகச் சொல்லுவதற்கு ஆதாரமே காண முடியவில்லை.

இன்றைய அரசியல் உலகத்தில் ஒரு முத்துரங்க முதலியாரும், பண்டிதர்கள் உலகத்தில் ஒரு கதிரேசன் செட்டியாரும், கலைவாணர்கள் உலகத்தில் ஒரு சிதம்பரநாத முதலியாரும், ஆகிய பெரியோர்கள் இன்று எப்படித் தமிழர்களாக இருந்து வருகிறார் களோ அப்படித்தான் பழங்கால தமிழர்கள் உலகத்திலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய இன்று தமிழர் களின் உள்ளத்தில் உதித்தெழுந்த உணர்ச்சிப்படி யான தமிழன் ஒருவனைக் கூட அக்காலத்தில் இருந்ததாகக் காணமுடியவே இல்லை.

தமிழர்களுக்கு ஆரியர்வேதம், கடவுள், சமயாதாரம் ஆகியவை தவிர்த்த தனித்தமிழ்க் கொள்கையோ முறையோ இருந்தும் இருந்ததாகச் சொல்லியும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லாமலே நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும் பழந்தமிழ் அரசர்களும் செய்து விட்டார்கள்.
பெரிய புராணத்தையும், பக்த சீலாமிர்தத்தையும், கந்தப் புராணத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் எவனாகட்டும் அவன் தனித்தமிழர் கொள்கைக்காக இதுவென எதையாவது காட்ட முடியுமா? என்றும் இப்படிப்பட்ட தமிழன் யாராய் இருந்தாலும் அவன் பண்டார சன்னிதியாயிருந்தாலும் அவன் நாஸ்தி கனல்லாமல் அதுவும் முழு முழு நாஸ்திகனே யல்லாமல் கடுகளவு நாஸ்திகனாகவாகிலும் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

அன்பே கடவுள், உண்மையே கடவுள், ஒழுக்கமே கடவுள், ஒப்பு நோக்கே (சமரசமே) கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தமிழ் ஆஸ்திகன் மேற் கண்ட பெரிய புராணாதிகளையும் அவற்றில் வரும் கடவுளர் களையும், அவர்களது செய்கைகளையும் பாராட்டி வழிபடுகிறவனாக இருந்தால் அவன் எப்படி தமிழ் ஆஸ்திகனாவான் என்று கேட்கிறோம்.

தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது? தீக்கை எங்கிருந்து வந்தது? பஞ்சாட்சரமேது? முத்திரஸ் தானம், (சமாரட்சனம்) ஏது? அஷ்டாட்சரம் ஏது? பஞ்சகச்சம், திருநீறு, திருநாமம் பூச்சுக்கள் ஏது? என்பன போன்ற எத்தனையோ விஷயங்களை கவனித் தால் உண்மைத் தமிழன் எவனாவது இருக்கிறானா என் பதும் விளங்காமல் போகாது.

தமிழனென்று தன்னை சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும் தமிழனுக்கு என்று தனிக் கொள்கைகள் அடையாளங்கள் ஒன்றும் இருக்க வேண் டியதில்லை என்றும் கருதிக் கொண்டு தமிழனெனில் பெரியவனாகத் தன்னைக் கருதவேண்டும் என்றிருப் பவர்கள் நம்மீது கோபித்துத்தான் தீருவார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம். இவர் கோபத்தை விட அதனால் ஏற்படும் கேட்டைவிட தமிழர்களின் மானம் பெரிது என்று எண்ணுவதால் இவர்கள் கோபத்தால் வந்தது வரட்டும் என்கின்ற துணிவு கொள்ள வேண்டி இருக்கிறது.
(குடிஅரசு, 13.11.1948)

தீபாவளி என்றால் என்ன? தந்தை பெரியார்

புராணம் கூறுவது

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா சுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந் தார்கள்.

10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.

பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவ னால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?

சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?

எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.

வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்து வதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவ தும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லு கிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

weather counter Site Meter